Published:Updated:

கைதி எண் 1579

கைதி எண் 1579
பிரீமியம் ஸ்டோரி
கைதி எண் 1579

அனுபவம் /எம்.பரக்கத் அலி , படங்கள்/ சு.குமரேசன்

கைதி எண் 1579

அனுபவம் /எம்.பரக்கத் அலி , படங்கள்/ சு.குமரேசன்

Published:Updated:
கைதி எண் 1579
பிரீமியம் ஸ்டோரி
கைதி எண் 1579
கைதி எண் 1579

ந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த மிசா சட்டத்தின் அடையா​ளமாக இன்றைக்கும் தமிழகத்தில் சுட்டிக் காட்டப்படுபவர் ஸ்டாலின். அவரை அரசிய​லுக்கு இழுத்து வந்ததும் மிசாதான். 

அந்தச் சிறை அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார், ஸ்டாலின்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்னை மத்தியச் சிறைச் சாலையில்தான் நான் அடைக்கப்பட்டு இருந்தேன். மிசா காலத்துக் கொடு மைகள், தலைவர் கலைஞர் சிறைப் பட்ட இடம், சிறைக் கலவரம் என எத்தனையோ ஞாபகங்கள் தேங்கிக் கிடந்த இடம் அது. 172 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தச் சிறை இப்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்புதான் புழலுக்கு மாற்றப்பட்டது. பழைய சிறைச்சாலை மூடப்படுவதற்கு முன்பு பொதுமக்கள் பார்வைக்காகக் கொஞ்ச காலம் திறந்துவிடப்பட்டது. நான் அடைக்கப்பட்டிருந்த சிறையைப் பார்க்க என் மனைவி துர்கா ரொம்ப ஆசைப்பட்டார். நான் சிறையில் இருந்த காலத்தில், என்னை நேர்காணலில் வந்து பார்த்துவிட்டுப் போனதோடு, கடிதங்களும் எழுதியிருந்தார் அவர்.

கைதி எண் 1579

நான் ஓர் ஆண்டுக் காலம் சிறைப்பட்டிருந்த இடம் பூமிக்குள் புதையுண்டு போவதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை அதைப் பார்த்துவிடவேண்டும் என்று எனக்குள்ளும் உணர்வலைகள் ஓடின. எனக்கு மட்டும் அல்ல, என் குடும்பத்தினருக்கும் அது மறக்கமுடியாத அனுபவம். எனவே, மத்திய சிறையைப் பார்க்க குடும்பத்தினரையும் அன்று அழைத்துப் போயிருந்தேன். தனியாகப் போய்ப் பார்த்திருந்தால்கூட இவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்பட்டு இருக்க மாட்டேன். உண்மையாகச் சொல்வது என்றால், அன்றைக்கு இரவு என் குடும்பத்தினர்களால் தூங்க முடியவில்லை...'' என்று சொல்லிவிட்டு, மிசா நாட்களை அசை போட்டார்.

கைதி எண் 1579

''இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, 1976-ம் ஆண்டு மிசா என்கிற நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு அதைக் கடுமையாக எதிர்த்ததால், மத்திய அரசுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதனால், 1976 ஜனவரி 31-ம் தேதி தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டான்பாஸ்கோ பள்ளி விழாவில் முதல்வர் கலைஞர் கலந்துகொண்டு வீடு திரும்பிய நேரத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வாபஸ் வாங்கப்பட்டன. இரவு 8 மணி வாக்கில் போலீஸ் அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்தனர். 'என்னைக் கைது செய்ய வந்திருக்கிறீகளா?’ என்று தலைவர் கேட்டார். 'உங்களை அல்ல; உங்கள் மகன் ஸ்டாலினை!’ என்று அவர்கள் சொன்னார்கள். 'அவன் வெளியூர் சென்றிருக்கிறான். நாளை வருவான்’ என்று தலைவர் சொல்லியும், போலீஸ் அதிகாரிகள் கேட்கவில்லை. வீட்டைச் சல்லடையாகச் சோதனை போட்டுவிட்டு, நான் இல்லை என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பின்னரே கிளம்பினர்.

கைதி எண் 1579
கைதி எண் 1579

சரியாக நினைவிருக்கிறது... அடுத்த நாள் பிப்ரவரி 1-ம் தேதி; வெளியூரில் இருந்து நான் வீடு திரும்பி இருந்தேன். அதற்குள் எல்லா விஷயத்தையும் கலைஞர் சொல்லி, 'சிறை செல்லத் தயாராக இரு!’ என்றார். குளித்துவிட்டுத் துணிகளைத் தயாராக வைத்துக்கொண்டேன். துர்காவைத் தேற்றிவிட்டு, தலைவர் காலில் விழுந்து, ஆசி பெற்றேன். நான் ஊரில் இருந்து திரும்பிய விஷயத்தை தலைவர்தான் போலீஸுக்குத் தெரிவித்தார். போலீஸ் வந்தார்கள்... மத்திய சிறைச்சாலைக்கு என்னைக் கொண்டுசென்றார்கள்.

கைதி எண் 1579

சிறையின் பிரமாண்டமான இரும்புக் கதவைப் பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கதவைத் தாண்டி உள்ளே போனால், ஜெயிலர் அறைதான் கைதிகளை முதலில் வரவேற்கும். கைதிகளுக்கு இங்குதான் முதலில் இன்டர்வியூ நடக்கும். மிசாவில் கைதானபோது, எனக்கும் நேர்காணல் நடந்தது. பொதுவாக அரசியல் கைதிகளை மற்ற கைதிகளைவிட கொஞ்சம் மரியாதையாக நடத்துவார்கள். ஆனால், மிசாவில் இந்த மரியாதை எல்லாம் காணாமல்போனது. ஜெயிலர் அறையைத் தாண்டி செக்யூரிட்டி பிளாக் 1-ல் இருந்த ஆறாவது செல்லுக்குள் என்னை முதலில் அடைத்தார்கள். அங்கு எனக்குக் கொடுக்கப்பட்ட எண்: 1579. மறுநாள் எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. நான் அடைக்கப்பட்ட அறை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறைப்பட்டிருந்த அறை என்று சொன்னார்கள். அதைக் கேள்விப்பட்டதும் ரொம்பப் பெருமையாக இருந்தது. அடுத்த அறையும் ஒரு பிரபலமான அறைதான். ஆம், அது தலைவர் கலைஞர் அடைக்கப்பட்டிருந்த அறை. அந்த அறையில் 1963-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவும் அடைக்கப்பட்டு இருந்தார். நான் இருந்த செல்லில்தான் சில ஆண்டுகள் கழித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அடைக்கப்பட்டார்.

சிறை அறைகளில் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேச முடியாது. சாப்பாடு நேரத்துக்குதான் கதவைத் திறப்பார்கள். மற்ற நேரங்களில், அறைக் கொட்டடியில்தான் பொழுதைக் கழிக்க வேண்டும். இப்போது இருக்கிற மாதிரி டாய்லெட் வசதி அப்போது இல்லை. மண் சட்டி ஒன்றைக் கொடுப்பார்கள். அதில்தான் டாய்லெட் போக வேண்டும்.

கைதி எண் 1579

செக்யூரிட்டி பிளாக் 1-ல் இருந்து சில நாட்களிலேயே 'டவர் பிளாக்’ ஏரியாவுக்கு மாற்றினார்கள். அங்குதான் அதிக நாட்கள் இருந்தேன். ஜெயில் பாஷையில்... 'டவர் பிளாக்குக்குக் கைதியைக் கொண்டு போறாங்க’ என்று சொன்னால், அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அந்த ஏரியாவில் 9-வது பிளாக்கில்தான் என்னை அடைத்தனர். இரண்டு நாட்கள் என்னை அடித்துத் துவைத்தனர். ரத்தக் கறை படிந்த பஞ்சுத் துணிகள், காலையில் அந்த அறையில் சிதறிக் கிடக்கும். அங்கே இருந்த மருத்துவமனையில் இரண்டு நாட்கள் இருந்தேன்.

இடிக்கப்பட்ட மத்தியச் சிறையின் எல்லா இடங்களும் எனக்குத் தெரியும். தி.மு.க-வின் போர்முனை வரலாற்றில், எனக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை எண்ணிப் பெருமைப்படக் கிடைத்த வாய்ப்பு அது. எனக்குத் திருமணம் ஆன ஐந்தாவது மாதமே மிசாவில் கைதாகி, சிறைக்குப் போய்விட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்தபோது, மாறன் மாமா என்னிடம், ''நீ சிறைக்குப் போன மறுநாளே நானும் உள்ளே வந்தேன். ஆனால், ரெண்டு பேரும் ஒண்ணா ரிலீஸ் ஆகி இருக்கோம். அதனால், அதிகமா சிறையில் இருந்ததில் நீதான் எனக்கு சீனியர்!’ என்று கிண்டலடித்தார்.

கைதி எண் 1579

மிசா சிறை நாட்களில் உப்பு அதிகம் உள்ள களி, வேப்பெண்ணெய் சேர்த்த சோறு, மண் கலந்த இட்லி... இவைதான் எங்களுக்குச் சாப்பாடு. இருட்டில்தான் அடித்து நொறுக்குவார்கள். யாரை அடிக்கிறார்கள் என்பது அலறலை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். எனக்கு விழுந்த அடியை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. ஓர் அதிகாரி பூட்ஸ் காலால் என் முகத்தில் மிதித்தார். இன்னொருவர் லத்தியால் தோள்பட்டையில் வெளுத்தார். வார்டன் என் கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல், சிட்டிபாபு என் மீது பாய்ந்து தடுத்தார். எனக்கு விழவேண்டிய அடிகள் அவருக்கு விழுந்தன. அதுதான் அவரது உயிரைப் பறித்தது'' என்று பழைய நினைவுகளை கரகரத்த குரலில் சொல்லி முடித்தார் ஸ்டாலின்.

கைதி எண் 1579

ஸ்டாலின் சிறையில் அடைபட்டிருந்த அந்த ஓர் ஆண்டுக் காலத்தில், சிறையில் இருந்து அவர் எழுதிய கடிதங்களையும், கழகத்தின் முக்கியப் பிரமுகர்களும், குடும்பத்தினரும் அவருக்கு எழுதிய கடிதங்களையும் இப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism