Published:Updated:

தங்கச் சுரங்கம்

தங்கச் சுரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கச் சுரங்கம்

சுற்றுலா: ஆர்.ஷஃபிமுன்னா, படங்கள்/சஞ்சய்குமார்

தங்கச் சுரங்கம்

சுற்றுலா: ஆர்.ஷஃபிமுன்னா, படங்கள்/சஞ்சய்குமார்

Published:Updated:
தங்கச் சுரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கச் சுரங்கம்
தங்கச் சுரங்கம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் தங்கக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவே குலுங்கியது. பீகார் மாநிலத்திலும் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது என்று அறிந்து விசிட் அடித்தோம்!

தங்கச் சுரங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீகார் மாநில தென்கிழக்குப் பகுதியில் அழகான மலைத்தொடர் ஒன்று உள்ளது. வெபார்கிரி, விபுலகிரி ரத்னாகிரி, உதய்கிரி மற்றும் சோன்கிரி ஆகிய ஐந்து மலைகள் அடங்கிய இடத்தின் பெயர், ராஜ்கீர். இது, மாநிலத்தின் தலைநகரமான பாட்னாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில், நாளந்தா மாவட்டத்தில் உள்ளது. கி.மு. 6-ம் நூற்றாண்டில் மகதப் பேரரசின் தலைநகரம் இது. மகாவீரர் மற்றும் புத்தர் காலத்தைச் சேர்ந்த அரசு.

இப்பேரரசின் முதலாம் அரசரான பிம்பிசாரர் உருவாக்கிய நகரம் ராஜ்கீர். அவரது கொள்ளுப் பேரன் உதயன் ஆட்சிக்கு வந்தபின் தலைநகரை பாடலிபுத்ரத்துக்கு (தற்போதைய பாட்னா) மாற்றினார். பிறகு மெள்ள அரசியல் முக்கியத்துவத்தை இழக்கத் துவங்கிய ராஜ்கீர், இன்று இடிபாடுகள் நிறைந்த ஒரு முக்கியமான வரலாற்றுச் சின்னமாக மட்டுமே இருக்கிறது.

இங்கு புத்தர் தவம் செய்து வாழ்ந்த வேணுவனம், அஜாத சத்ரு ஸ்தூபா, மணியார் மடம், ரணபூமி, பிம்பிசாரர் ஜெயில், ஜீவகர்மா மோனாஸ்ட்ரி உட்பட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இங்கு உள்ள ஐம்பெரும் மலைகளில் ஒன்றான வெபாரா மலையில் சப்தபர்னி, பிப்லி மற்றும் சோன் பண்டார் எனப்படும் மூன்று குகைகள் உள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளன. இவற்றில் முக்கியமான சோன் பண்டார் குகையில்தான் தங்கச் சுரங்கம் இருப்பதாக நம்பிக்கை உலவுகிறது.

தங்கச் சுரங்கம்

வெபாரா மலையின் தென் பகுதி துவக்கத் திலேயே, கற்களால் வெட்டப்பட்டு இருக்கும் படிகளின் வழியாக 20 அடிகள் ஏறியவுடன், வடபுறம் சோன் பண்டார் குகை இருக்கிறது. இதை இந்திய தொல்பொருள் ஆய்வகம் சார்பில் 'ஸ்வர்ண பண்டார்’ எனவும், பீகார் அரசு சார்பில் 'சோன் பண்டார்’ எனவும் குகையின் முன்பாக பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளன. 'தங்கக் கருவூலம்’ என்று தமிழில் இதை மொழிபெயர்க்கலாம்.

இரட்டைக் குகையான இதன் முதல் குகையை ஒட்டியபடி மற்றொரு குகை உள்ளது. இதன் கூரை காலப்போக்கில் இடிந்து மேற்பகுதி இன்றி திறந்தவெளியாகக் காணப்படுகிறது. குகையினுள் வடபுற பாறைச் சுவரில், நுழைவு வாயிலுக்கு எதிரே ஒரு சுரங்க வழி இருந்ததற்கான சுவடு காணப்படுகிறது. அதை உற்று நோக்கினால், சுரங்க வழியை அடைத்ததுபோல் வாசலின் சரியான அளவுகளில் உள்புறமாக ஒரு பாறையை மிகவும் நெருக்கமாகச் செருகியது போலவும் தெரிகிறது. இந்த சுரங்க வழியின் உள்ளேதான் தங்கப் புதையல் இருப்பதாக பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்புகிறார்கள். நாள்தோறும் இதைக் காணவரும் ஆயிரக்கணக்கான பயணிகள், அடைக்கப்பட்டுள்ள சுரங்க வழியைத் தட்டிப் பார்க்கத் தவறுவதில்லை. சோன் பண்டார் குகையை 1812-ல் முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பிய சர்வேயரான பிரான்சிஸ் புச்சானன், தொல்பொருள் ஆய்வாளர்களான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், ஜேம்ஸ் பெக்லர், ஸ்டென், ஜான் மார்ஷல் மற்றும் பலரும் பொதுமக்களிடம் இருந்த இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளனர்.

தங்கச் சுரங்கம்

அந்த சுரங்க வழியின் வாயில் மீதும் இடதுபுறம் சற்று தள்ளியும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதே போல் சுரங்க வாயிலுக்கு அருகே இருக்கும் சிறிய ஜன்னல் துவாரத்தின் மேல்பகுதியிலும் இரு வரிகளிலான ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த இரண்டு வரிக் கல்வெட்டு பிராமி எழுத்துகளில் பாலி மொழியில் செதுக்கப்பட்டிருக்கிறது. மகதப் பேரரசின் காலத்தில் பேசப்பட்ட பாலி மொழி, புத்தர் மற்றும் மகாவீரர் காலங்களிலும் இருந்தது. அதன்படி, 'இது ஒரு சிறப்பு வாய்ந்த குகை. இங்கு வைரதேவா (ஜைனமுனி) தங்கி தியானம் செய்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், குகையின் உள்ளே பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டை இன்னும் யாராலும் படிக்க முடியவில்லை. காரணம், அது 'சங்லிபி’ எனப்படும் சங்கு எழுத்துகள் வகைக் கல்வெட்டாக இருக்கிறது. இந்த வகை கல்வெட்டுகள் வடஇந்தியாவில் மகதப் பேரரசு இருந்த பகுதிகளில் கிடைத்துள்ளன. இவை கி.மு. 5 முதல் 8-ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அங்கு 28 வருடங்களாக கைடு பணி செய்யும் ராம்ஜி வர்மாவிடம் பேசினோம். ''இந்த சங்கு எழுத்து களில்தான் தங்கச் சுரங்கத்தின் வாசல் திறக்கும் ரகசியம் இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒருவேளை அதை படித்துவிட்டால், சுரங்கம் திறந்து விடுமோ என்னவோ!

தங்கச் சுரங்கம்

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள், குகையின் வெளியில் இருக்கும் ஜன்ன லின் வழியாக பீரங்கியை நுழைத்து, அடைத்திருக்கும் தங்கச் சுரங்க வாசலை வெடிவைத்துத் தகர்த்துத் திறக்க முயன்று தோல்வி அடைந்தனர். இதனால் வாசலின் மேற்புறப் பாறை லேசாக உடைபட்ட அடையாளம் இன்னும் இருக்கிறது. இதே வெபாரா மலையின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள பிரம்ம குண்டம் கோயிலில் சுடுநீர் ஊற்று உள்ளது. இந்த மலையில் கந்தகம் அதிகம் இருப்பதால்தான் சுடுநீர் ஊற்றெடுக்கிறது என விஞ்ஞானி டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்துக் கூறினார். மேலும், கந்தகம் இருப்பதன் காரணமாக சோன் பண்டார் குகையில் வெடி வைத்தால், மலையின் பாறைகளில் உள்அழுத்தம் ஏற்பட்டு மலை முழுவதுமாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தார். இதனால்தான், வெடிகுண்டு வைத்து மலையைத் தகர்க்கும் முயற்சியை ஆங்கிலேயர்கள் கைவிட்டனர்.

தங்கச் சுரங்கம்

உள்ளே சிதைந்த நிலையில் சில சிற்பங்கள் தென்படுகின்றன. அவை, புத்தருடையதா அல்லது மகாவீர ருடையதா என்பதிலும் சர்ச்சைகள் உள்ளன.'' என தெரிவித்தார் அவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் ராஜீவ்குமாரிடம் குகையின் ரகசியம் குறித்துக் கேட்டோம். ''மகதப் பேரரசின் மன்னன் பிம்பிசாரரது ஆட்சியில் அரசர், இளவரசர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தங்க ரதங்களில் ராஜ்கீரின் முக்கிய சாலையில் பயணித்துள்ளார்கள். அந்த சமயங்களில் பொதுமக்களிடம் ஏராளமான பொற்காசுகள் இருந்திருக்கிறது. தம் வாழ்நாளில் அப்போது அனந்தபின்டக் எனும் ஒரு வியாபாரி, இங்கு வந்து 24 முறை தங்கிய புத்தருக்கு தியானம் செய்வதற்காக ஒரு பழத்தோட்டத்தைப் பரிசாக அளித்துள்ளார். அதேபோல் மன்னன் பிம்பிசாரர், புத்த பிக்குகளுக்காகவும், அவர் மகனான அஜாதசத்ரு ஜைன முனிகளுக்காகவும் அரசவைச் செல்வங்கள் காலியாகும் அளவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளதாகவும் வரலாற்று ஆய்வு களில் இருந்து தெரிய வந்துள்ளது. பிம்பிசாரருக்கு இருந்த 32 மனைவிகளும் ஒரு நாள் அணிந்த தங்க ஆபரணங்களை மறுநாள் அணியாமல் அவற்றை ஒரு கிணற்றில் வீசி எறிந்து விடுவார்கள் என ஆங்கிலேய சர்வேயரான புச்சானன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கிணறு அமைந்திருக்கும் மணியார் மடத்தில் தற்போது ஜைனக் கோயில் ஒன்று உள்ளது. அந்த மணியார் மடமும் ஒரு தங்கக் கிடங்கே என பொதுமக்கள் பேசியதை அடுத்து அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அந்தக் கிணற்றில் 21 அடி ஆழம் வரை தோண்டி அகழ்வராய்ச்சி செய்தார். ஆனால், அதில் மூன்று புத்தர் மற்றும் ஜைனர்களின் சிலைகள் கிடைத்தன. இதை வைத்துப் பார்க்கும்போது, பிற்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் அந்த நகைகளை எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அங்குள்ள குகையில் பிம்பிசாரர் தனது செல்வங்களை வைத்து வழியை மூடி விட்டார் என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. எனவே, அங்குள்ள குகையில் தங்கம் இருக்க வாய்ப்புள்ளது!'' என விவரித்தார்.

தங்கச் சுரங்கம்

இது குறித்து இந்தியத் தொல்பொருள் ஆய்வகத் தில் மகராஷ்டிராவின் ஒளரங்காபாத்தில் கண்காணிப்பாளராக இருக்கும் தமிழரான டாக்டர் டி.தயாளன், ''அந்த குகையின் பெயரே 'தங்கக் கருவூலம்’. ஒரு காலத்தில் அந்த குகை கருவூலமாக இருந்திருக்கிறது. அதில் தங்க நகைகளும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை பிற்காலத்தில் அவை கொள்ளை அடிக் கப்பட்டும் இருக்கலாம். உள்பக்க வாசல் அடைக் கப்பட்டிருக்கிறதா என நாம் எந்த ஆய்வும் நடத்தவில்லை. அதைத் திறப்பதற்கான முயற்சியும் செய்யவில்லை.

காரணம், வரலாற்றுச் சின்னங்களை அடை யாளம் கண்டு பாதுகாத்து, பராமரித்து வருவதுதான் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் முக்கியப் பணியாகும். இந்த குகை, ஒவ்வொரு கால கட்டத்திலும் தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக் கப்பட்டிருக்கிறது. ஏனெனில், வழக்கமாக குகைகள் என்பது குறுகிய வழியைக் கொண்டு நீண்டதாக வெளிச்சம் இன்றி இருக்கும். எனவே, மாற்றி அமைக்கும்போது அந்த குகை உள்வாயில் அடைக்கப் பட்டு இருக்கலாம். அந்தக் குகையினுள் பத்மநாப சுவாமி கோயிலில் கிடைத்தது போன்ற தங்கப் புதையல் இருக்கும் என்பதும் உறுதி இல்லாத தகவல்தான்!'' என்றார்.

இந்தக் குகையை நாம் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில் அங்கிருக்கும் கிராமத் தில் வசிக்கும் இளைஞர் ஜெயப்பிரகாஷ், ''எங்கள் முப்பாட்டனார் முதல் நேற்று பிறந்த குழந்தை வரை அங்கே தங்கப் புதையல் இருப்பதாக நம்புகிறோம். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாவாசிகளும் இதை நம்புகிறார்கள். நீங்கள் இங்கு தங்கப்புதையல் இல்லை என எழுதி விட வேண்டாம். பிறகு, இங்கு சுற்றுலாவாசிகள் வரவு மிகவும் குறைந்து, ராஜ்கீர்வாசிகளுக்கு பிழைப்பு இல்லாமல் போய்விடும்...'' என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது வளர்ந்துவிட்ட அறிவியல் மூலம், தொழில்நுட்பக் கருவிகளின் உதவியால் மலை களுக்கு உள்ளே இருப்பதைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். சோன் பண்டாரில் சுரங்கக் குகை யினுள் உண்மையிலேயே தங்கம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

தங்கச் சுரங்கம்

பிம்பிசாரர் ஜெயில்!

சோன் பண்டார் குகையின் அருகே முக்கியச் சாலையில் இருக்கும் பிம்பிசாரர் ஜெயில், பார்க்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம். புத்தரை முதன் முதலில் சந்தித்த பிம்பிசாரர், அவரை மீண்டும் அரசாட்சிக்கு திரும்பும்படி வற்புறுத்தினார். பிறகு அவரது கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீது கொண்ட பற்றால் தானும் புத்த மதத்தைப் பின்பற்றத் துவங்கினார். அதற்காக, தனது ஏராளமான செல்வத்தை அள்ளி செலவிட்டார்.

இதனால் அரசவை செல்வம் எங்கு காலியாகி விடுமோ எனப் பயந்த பிம்பிசாரரது மகன் அஜதாசத்ரு, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். இந்த சிறையைத்தான் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் தலைமை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், ராஜ்கீரில் அகழ்வாராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்தார். தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வகம் சார்பில் காம்பவுன்ட் சுவர் எழுப்பி இது பாதுகாக்கப்பட்டு வருகிறது!

மொகலாய மன்னன் ஷாஜகானை அவர் மகன் ஒளரங்கசீப் ஆக்ராகோட்டைச் சிறையில் அடைத்தபோது, 'அது தாஜ்மகாலை காணும்படி இருக்க வேண்டும்’ என கோரியிருந்தார் ஷாஜகான். அதுபோல், பிம்பிசாரர் தான் மிகவும் மதித்து வணங்கும் புத்தர், மலையில் நடமாடுவதைப் பார்ப்பது போல் சிறை இருக்க வேண்டும் எனக் கோரினாராம். அதன்படியே ஜன்னல் அமைத்துக் கட்டப்பட்டுள்ளது இந்த சிறை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism