Published:Updated:

பெருமைமிகு பழங்குடிகள்!

பெருமைமிகு பழங்குடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பெருமைமிகு பழங்குடிகள்!

பயணம்: ஏ.ஆர்.குமார்

பெருமைமிகு பழங்குடிகள்!

பயணம்: ஏ.ஆர்.குமார்

Published:Updated:
பெருமைமிகு பழங்குடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பெருமைமிகு பழங்குடிகள்!
பெருமைமிகு பழங்குடிகள்!

ந்தியா முழுக்க வசிக்கும் பழங்குடிகளிடம் பழகி, அவர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறை என பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து வருபவர்கள் ரெங்கய்யா முருகன் மற்றும் ஹரிசரவணன். ஆந்திரா தொடங்கி ஒடிசா,  ராஜஸ்தான் தார் பாலைவனம், விந்திய மலைத் தொடர், இமயமலைத் தொடர் என இவர்களின் பாதம் படாத இடங்கள் மிகக் குறைவு. இந்த இருவரும் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பழங்குடியினரும் பாப் மார்லியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகரிக புருஷர்கள் என்கிற நினைப்பில் இருக்கும் நம்மில் பலர், பழங்குடிகள் என்றாலே அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைக்கிறோம். ஆனால், நாங்கள் கள ஆய்வில் கண்ட வரை அவர்களது வாழ்வியல் மதிப்பீடுகள் மனிதத் தன்மை மிக்க தாகவும், அறவியல் சார்ந்ததாகவும் இருந்தது. தங்களது இயற்கைச் சூழலை ஒட்டிய வாழ்வை பாதுகாத்துக் கொண்டு வாழ்கிறார்கள் அவர்கள். ஆனால், அவர்களின் நவீன தலைமுறையின் வாழ்வியல் நிறைய மாற்றங்கள்.

ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வட கிழக்கு இந்தியாவில்... குறிப்பாக மிஜோரம், நாகா லாந்து, மேகாலயா பகுதிகளில் இந்தியாவின் எப்பகுதியிலும் காண முடியாத மேற்கத்திய வாழ்க்கை முறையின் தாக்கம் பாதித்துள்ளது. தெருவுக்கு ஒரு சிகை அலங்கார சலூன்... பாப் மார்லி, சானியா மிர்சா படம் பதிப்பித்த டீ ஷர்ட்டை அணிந்து கொண்டு சுற்றும் பழங் குடி இளைஞர் பட்டாளம்... பிங்பிளாய்ட் ராக், பாப் மார்லி ரெகே, மைக்கேல் ஜாக்சன் போன்ற மேற்கத்திய பாடகர்களின் பாடல்களை முணுமுணுக்கும் பழங்குடி இளைஞர்கள், இளை ஞிகள்... என ஏகத்துக்கும் மாறிவிட்டார்கள். அதிலும், அமெரிக்க புளூஸ் இசையின் பாதிப்பால் தங்களுக்கென்றே பிரத்யேகமான ஷில்லாங் புளூஸ் இசை (Shillong Blues) ஆல்பத்தை வெளியிட்டிருக்கும் வடகிழக்கு இந்தியப் பழங்குடி இளைஞர்களைக் கண்டபோது எங்களுக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்!

இன்னொரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், மேற்கத்திய தத்துவச் சிந்தனையாளர்களான நீட்சே, ஹைடேக்கர் போன்றோரின் படைப்புகளை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொண்ட பழங்குடி இளைஞர்களைக் கண்டபோது எங்களுக்கே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. மூத்த தலைமுறையினர் தங்களது மரபு சார்ந்த பாரம்பரியத்தை விடாமல் பின்பற்றி வருவதையும்... அதே சமயம் இளைய தலைமுறையினர் கலாசார அடையாளம் இழந்து வருவதையும் கண்கூடாகக் கண்டோம். இதை எப்படி எடுத் துக் கொள்வது? வருத்தப்படுவதா... அல்லது மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது என்று சமாதானப்படுத்திக் கொள்வதா என்று தெரியவில்லை!

பெருமைமிகு பழங்குடிகள்!

பிச்சைக்காரர்கள் இல்லை!

வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் பிச்சைக் காரர்களைக் காண முடியாது. தாங்கள் உற்பத்தி செய்யும் தானியங்களை தினசரி வாழ்க்கைக்குப் போக எஞ்சியதை கிட்டங்கியில் வைத்துவிடுவர். பழங்குடிகளின் ஒவ்வொரு முக்கியத் திருவிழாவின்போதும், கிட்டங்கியில் இருக்கும் தானியங்கள் அந்த கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். இதனால், தேவைக்கு அதிகமாக யாரிடமும் உணவுப் பொருள் தேங்கி வீணாவதும் இல்லை. பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் கையேந்துவதும் இல்லை!

விருந்தோம்பல்!

விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள் வட கிழக்கு இந்தியப் பழங்குடி மக்கள். நாங்கள் களப்பணிக்குச் செல்லும் போது எங்களுக்குத் தடபுடலாக விருந்து உபசரிப்பு நடக்கும். நாங்கள் உணவுக்காக அளிக்கும் பணத்தை எவ்வளவு கட்டாயப் படுத்தினாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். பதிலாக 'அதிதி தேவோ பவ’ என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம், விருந்தினர்கள் கடவுள் போன்றவர்கள் என்பதே. இந்திய கலாசா ரத்தின் மிக முக்கியமான சுலோகம் இது. இன்று வரை அந்த சுலோகத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் பழங்குடிகள் மட்டுமே. காட்டு எருமைக் கறியும் ரைஸ் பீரும்!

அருணாசல பிரதேசப் பகுதிகளில் வாழ்கிற மின்யோங் ஆதி பழங்குடிகள் காட்டு எருமையை பலியிட்டு, அதன் மாமிசத்தை சுமார் 5 முதல் 7 வருடங்கள் வரை வீட்டுப் பரணில் பதப் படுத்தி வைப்பார்கள். பனி மலையின் குளிர்ச்சியால் இது கெடாமல் இருக்கிறது. தினமும் அதிகாலை 4 மணிக்கு 'அபாங்’ என்றழைக்கப்படும் ரைஸ் பீரை அருந்தக் கொடுப்பார்கள். இதைக் குடித்ததும் உடம்பு கதகதப்பாகிவிடும். பின்பு கணப்பு அடுப்பில் நாய், கோழிகளோடு நாங்களும் குளிர் காய்வோம். தினசரி உணவில் காட்டெருமை இறைச்சி தவறாது இருக்கும்.

கைக்குத்தல் அரிசியை அரைப் பதத்தில் வேகவைத்து, முட்டைகோஸை நான்கு பாகமாக வெட்டி சிறிதளவு உப்பு, பச்சைமிளகாய் போட்டு ஐந்து நிமிடத்தில் குழம்பு செய்து கொடுத்தனர். நண்பர் ஹரி சரவணன் இந்த சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டார். ஆனால், நான் இறைச்சி சாப்பிடுவது இல்லை என்று எனது நிலையைக் கூறி வேறு ஏதாவது தயார் செய்து தரும்படி கேட்க, நூடுல்ஸ் கொண்டுவந்தார்கள்.

காலம் காலமாகக் காட்டெருமை மாமிசம் வேகவைத்த பாத்திரத்தில் அந்த நூடுல்ஸை வேகவைக்க, அதிலிருந்து கொழுப்பு கலந்த தண்ணீர் நுரைநுரையாக வந்து நூடுல்ஸும் சாப்பிட முடியாமல் போனது. வேறு வழி இல்லாமல் அந்த மலையில் ஆரஞ்சு பழங்களையும், ரைஸ் பீரையும் மட்டுமே குடித்து நாட்களை ஓட்டினேன்.

பெருமைமிகு பழங்குடிகள்!

நாய் பலி!

எல்லைப் பகுதிகளில் வாழ்கிற அபதானி  (Apatani)  பழங்குடிகள் இடையே நாய் பலி கொடுக்கப்படும் சடங்கைப் பார்த்தோம். விவசாயம் பொய்த்துப் போவது, நோய் வாய்ப்படுவது, வீடு இடிந்துவிழுவது போன்ற துரதிர்ஷ்டங்கள் நடந்தால் தீய சக்தியை சாந்தப்படுத்தப் புறாவை பலியிடுகிறார்கள். பின்பு முட்டைகளை உடைத்துக் கருவைக் கீழே கொட்டி, முட்டை ஓட்டை மூங்கில் குச்சியில் செருகி வைப்பார்கள். பின்பு நாயை அரிவாளால் வெட்டி பலியிடுவார்கள். மந்திரங்கள் ஓதப்படும். பலியிட்ட நாயை தீயில் வறுப்பர்கள். வறுத்தெடுக்கப்பட்ட நாய் இறைச்சியைக் கலந்துகொண்ட அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அதைச் சாப்பி டாதவர்களைத் தீய சக்தி விரட்டும் என்று சொன்னார்கள்.

'ரத்த வாந்தி எடுத்து செத்துப் போவே...’ என்கிற வடிவேலுவின் காமெடிதான் ஞாபகம் வந்தது. நாங்கள் திருதிருவென முழிக்க... தலைமைப் பூசாரியோ நாய் இறைச்சியை கையில் எடுத்து, 'சாப்பிடுங்கள்’ என்று அன்பொழுகக் கொடுத்தார். ஒரு வழியாக நாங்கள். 'உங்களது மரபுச் சடங்கை உதாசீனப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை. இதே இடத்தில் முட்டையை தீயில் வாட்டிக் கொடுங்கள்... சாப் பிடுகிறோம்’ என்றோம் கெஞ்சாத குறையாக. அரைமனதுடன் அவர்கள் ஏற்றுக் கொண்டதால், நாங்கள் தப்பித்தோம்!

எல்லைத் தொல்லை!

வட நாகாலாந்தில் இந்திய - பர்மிய எல்லைப் பகுதியில் 'லுங்க்வா’ (Lungwa)  என்ற இடத்தில் கொன்யாக் நாகா பழங்குடிகளின் குறுநில அரச பரம்பரையைச் சார்ந்த 'ஆங்’ என்பவருடைய வீட்டைக் கண்டோம். வீட்டின் முன்பகுதி இந்திய எல்லைப் பகுதியிலும், பின்பகுதி பர்மா எல்லையிலும் இருந்தது. இங்கு வெளியூர் ஆட்கள் யார் வந்தாலும் மரியாதை நிமித்தமாக 'ஆங்’ அரசனை முதலில் பார்க்க வேண்டும். நாங்கள் மன்னனுக்கு அன்ப ளிப்பாக கொடுக்க டீத் தூளும், ஓபியமும் வாங்கிக் கொண்டு போனோம். இந்த 'ஆங்’ மன்னன், ஆளுக்குத் தகுந்தவாறு தனக்கு 18 மனைவிகள் அல்லது 15 மனைவிகள் மற்றும் பல்வேறு மகன்கள் இருப்பதாகக் கூறுவார். பல நேரங்களில் எந்த மனைவிக்கு எந்த மகன் பிறந்தான் என்பதையும் தப்புத் தப்பாக சொல்வார். அப்போது அருகில் இருக்கும் நபர்கள் தவறை சரி செய்வார்கள்.

எல்லைப் பகுதி பிரச்னைகளை தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால், பர்மிய - இந்திய எல்லைப் பகுதியில் அடையாளத்துக்காக ஒரு கம்பம் மட்டுமே நட்டுள்ளனர். முள்வேலி எதுவும் கிடையாது. அவ்வளவு அமைதி. ஆனால், அஸ்ஸாம் துப்ரி பகுதியில் இந்திய - பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பயணித்தபோது எங்களை இந்திய ராணுவம் தீவிரமாகச் சோதனையிட்ட பிறகே அனுமதித்தனர். இப்பகுதி வழியாக பங்களாதேஷில் இருந்து தினசரி வேலைக்காக கள்ளத்தனமாக நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருவதே இதற்குக் காரணம்.

அருணாசல பிரதேச பகுதிகளில் வசிக்கிற அபதானி பழங்குடிகள் மற்றும் நிஷி (Nishi Tirbe)  பழங்குடிகளும் முக அமைப்பில் ஒரே தோற்றம் கொண்டவர்கள். அடிப்படையில் நிஷி பழங்குடிகள் முரட்டுத்தனம் மிக்கவர்கள். அபதானி பழங்குடிகள் வாழும் கிராமங்களுக்குச் சென்று அப்பெண்களைக் கடத்தி வந்துவிடுவார்கள். அபதானி பெண்கள் அழகாக இருப்பார்கள். அழகாக இருப் பதால்தானே நம்மைக் கடத்துகின்றனர் என்பதற்காக நெற்றியில் பச்சை குத்தியும், மூக்கு மற்றும் காதில் பெரிய துளையிட்ட மரக்கட்டையால் ஆன மூக்குத்தியும் அணிந்து கொள்கிறார்கள்.

ஒட்டகங்களின் நுண் உணர்வு!

ராஜஸ்தானின் தார் பாலை வனத்தில் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தோம். எங்களுடன் சுமார் 50 ஒட்டகங்களில் சுற்றுலாப் பயணிகளும் வந்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அனைத்து ஒட்டகங்களும் தலையைத் தூக்கி சத்தத்துடன் பிளிறத் தொடங்கின. சில நிமிடங்களில் மணல் மீது அப்படியே உட்கார்ந்துவிட்டன. பயணிகளான எங்களுக்கும், ஒட்டகம் மேய்ப்பவன் 'க்வலா’வுக்கும் குழப்பம். கால் மணி நேரம் கழித்து அனைத்து ஒட்டகங்களும் வழக்கம்போல் நடக்கத் தொடங்கின. மறுநாள் காலையில் பத்திரிகை செய்தியில் குஜராத் புஜ் பகுதியை பூகம்பம் தாக்கியதைப் படித்தோம். சரியாக ஒட்டகம் பிளிறிய நேரத்தில் பூகம்பம் ஏற்பட்டு இருந்தது!

கஜல் பாடும் பாணர்கள்!

கோண்டு மற்றும் பர்தான் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாழும் பர்தான்கள் தங்கள் குலத் தோற்றப் பாடல் மற்றும் வீரநாயகர் கதை படிப்பது போன்றவற்றை மறந்து விட்டனர். பர்தான்களிடம் பாடச் சொல்லி வற்புறு தினோம். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவர்களால் பாட முடியவில்லை.

பர்தான்கள் தங்களது எஜ மானர்களான கோண்டு இனத்தவர்களின் சுப சடங்கில் கலந்துகொண்டு தங்களது குலத் தோற்றம் குறித்துப் பாடி மகிழ்வித்து தானம் பெறுவர். தற்போது அந்த சடங்குகளுக்கு இவர்களுக்கு அழைப்பு இல்லை. இவர்களது பாடல் களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. அதற்கான 'பானா’ இசைக்கருவி மட்டும் அவர்களின் பூஜை அறையில் இருக்கிறது. ஆனால், இவர்கள் பங்கஜ் உதாவ், குலாம் அலி, மெஹ்திஹசன் ஆகியோரின் கஜல் பாடல்களை அச்சுப் பிசகாமல் பாடுகிறார்கள்.

பெருமைமிகு பழங்குடிகள்!

புனித சமையலறை!

சோனேபேடா பீடபூமி பகுதிகளில் வாழ்கிற பூஞ்சியா பழங்குடிகள் தங்கள் கிராம எல்லைகளைத் தாண்டி சுள்ளிகூட பொறுக்க மாட்டார்கள். அயலாட்கள் இப்பழங்குடிகளின் வீட்டின் சமையலறை சுவரை தெரியாமல் தொட்டுவிட்டால்கூட போதும்; வீட்டையே எரித்துவிடுவார்கள். தங்கள் இனப் பெண்ணை திருமணம் செய்துகொடுத்தால்கூட அவர்களைப் பொறுத்தமட்டில் அப்பெண்ணும் அந்நியர்தான். அவளையும் சமையலறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். இவர்களைப் பொறுத்த வரை சமையலறைப் பகுதி என்பது மிகவும் புனி தமானது.

மிரட்டிய உடையார் பூசாரி!

ஸ்ரீஸ்ரீ ஜெயச்சந்திரா உடையாரை முதன் முதலில் பார்த்தபோது சாதாரணப் பூசாரியாக மயிலாரா கோயில் பற்றி விளக்கினார். நான் அவரிடம் சாதாரணமாக எனது டைரியைக் கொடுத்து அவரது முகவரியை எழுதித் தரும்படி நீட்டினேன். உடன் இருந்த ஹரிசரவணன் மற்றும் குப்பம் திராவிட பல்கலைக்கழக பேராசிரியர் எம்.என்.வெங்கடேசா இருவரும் பதறிப்போய், அவரது  செல்வாக்கு பற்றி சொன்னார்கள்.

பூசாரியின் வீட்டுக்குச் சென்றபோது கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனிடம் இருந்து மீண்ட பிறகு இங்கு வந்து பூசாரியிடம் ஆசி வாங்கி பவ்யமாக நின்ற புகைப்படத்தை அங்கு கண்டேன்.

மயிலாரா திருவிழாவில் ஏழு லட்சம் மக்கள் கூட்டம் இவரது கண் அசைவுக்காகக் காத்திருந்தது. குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ராஜ அலங்காரத்துடன் இவர் பவனி வந்தார். அதிகாரிகள், அரசியல்வாதிகள் என முக்கியப் பிரமுகர்கள் இவரிடம் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி வாங்கினார்கள். இதை எல்லாம் பார்த்த பிறகு என்னை அறியாமல் பிரமித்துப் போய் அவரிடம் கொஞ்சம் எட்டியே நின்றேன். ஆனால், அவரோ என்னையும், ஹரிசரவணனையும் இயல்பாக அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism