Published:Updated:

விழிக்கலாம் வாங்க!

விழிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
விழிக்கலாம் வாங்க!

பயணம்: பொன்.செந்தில்குமார், படங்கள்/தி.விஜய்

விழிக்கலாம் வாங்க!

பயணம்: பொன்.செந்தில்குமார், படங்கள்/தி.விஜய்

Published:Updated:
விழிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
விழிக்கலாம் வாங்க!
விழிக்கலாம் வாங்க!

கோவை மாவட்டம், அவிநாசி, அருகே கந்தம்பாளையத்தில் உள்ளது 'ஓஷோ சாஸ்வதம்’. அது ஏதோ ஒரு புது உலகம் போல் இருக்கிறது. ஒரு சிலர் தோட்ட வேலை செய்கிறார்கள். வேறு சிலர் ஓவியம் வரைகிறார்கள். இன்னும் சிலர் ராகத்துடன் பாடுகிறார்கள். மற்றொரு புறத்தில் சிலர் துணி துவைக்கிறார்கள். வேறொரு பகுதியில் சுவையான தேநீர் தயாரிக்கிறார் ஒருவர். புகை பிடிப்பதைக் கொண்டாட்டமாகச் செய்கிறார்கள் ஒரு சாரார். இடையிடையே, வெடிச்சிரிப்பில் அந்தப் பகுதியே அதிர்கிறது. 

இங்கே ஓஷோ பற்றிக் கொஞ்சம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1980-களில் ஐந்து கண்டங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆன்மிகவாதி, ஓஷோ. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குச்சவடா என்ற குக்கிராமத்தில் பிறந்தார், ரஜனீஷ் சந்திர மோகன். தத்துவப் பேராசிரியரான இவர், வேலையைத் துறந்துவிட்டு, முழு நேர ஆன்மிகத்துக்கு வந்தார். 'இந்த உடலே புத்தர்... இந்த பூமியே சொர்க்கம். வாழ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாடு!'' என்று புதிதாக ஆன்மிக சிந்தனையை விதைத்தவர் இவர்.

செக்ஸ், ஓரினச் சேர்க்கை, போதை என்று சாமியார்கள் பேசத் தயங்கிய விஷயங்களை எல்லாம் விலாவாரியாகப் பேசத் தொடங்கவே, இவரைத் தேடி உலகெங்கும் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். முதுகு வலிக்காக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே இருந்த சில மாதங்களுக்குள், தரிசாகக் கிடந்த நிலத்தை, பொன் விளையும் பூமியாக மாற்றி... ரஜனீஷ்புரம் என்று பெயரும் கொடுத்தார்கள். உடல்நிலை சரியானதும், மீண்டும் சிங்கம் போல முழங்கத் தொடங்கினார். போப்பாண்டவர் தொடங்கி சங்கராச்சாரியர் வரை அவரின் விமர்சனத்துக்கு ஆளாகாத ஆட்களே கிடையாது. அமெரிக்காவில் அவருக்கு அதிகரித்த செல்வாக்கைக் கண்டு அதிர்ந்த அரசு, அவரை காரணமின்றி கைது செய்து, 'உபசரித்து’ நாடு கடத்தியது.

அந்த உபசரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் விஷம் இருந்தது என்கிறார்கள், அதனால் 1990-ம் ஆண்டு உடலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் என்கிறது கடந்த காலம்.

ஓஷோ உருவாக்கிய, பூனா கம்யூனில் வாழ்ந்த தியான் சித்தார்த் என்பவர்தான், இந்த ஓஷோ சாஸ்வதம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார்.

அவரை சந்தித்தோம். ''ஓஷோவின் 'புதிய மனிதன்’ என்ற கருத்தாக்கத்தை வடிவமைப்பதற்காக நாடு முழுவதும் இப்படி சின்னச் சின்ன கம்யூன்களைத் தொடங்கச் சொன்னார். கம்யூன் என்றால், எல்லோரும் சுதந்திரமாக, பகிர்தலுடன் வாழ்தல் என்று பொருள். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல், இனிமையாகச் சிரித்துக் கொண்டே வாழ்வதற்கு மனிதர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். கடுமையான மன உளைச்சலுடன், வரும் நபர்களையும் அடுத்த, 24 மணி நேரத்தில், குழந்தையைப் போல சிரிக்க வைக்கிறோம்...'' என்று தாடியைத் தடவியபடி பேசுகிறார் தியான் சித்தார்த். அவரே ஓஷோவைப் பற்றி பேசினார்.

''செக்ஸ் என்பது, பசி, தூக்கத்தைப் போல இயல்பான ஒன்றுதான். அதனால் உடல் உறவை முழுமையாக அனுபவியுங்கள். அது, உங்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். காமத்தில் இருந்துதான் கடவுளுக்குச் செல்ல முடியும் என்று முழங்கினார் ஓஷோ. அன்று ஓஷோவை எதிர்த்தவர்கள்கூட இப்போது இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

விழிக்கலாம் வாங்க!

வாழ்க்கை சிக்கல் இன்றி அன்புடன் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள், ஆனால், தோல்வி, மனக்கசப்பு, போட்டி, பொறாமை போன்றவை அவர்களை நிம்மதியாக வாழ விடுவதில்லை. இவர்கள்தான் ஓஷோவைத் தேடி வருகிறார்கள். இளைஞர்களும், பெண்களும் எப்படி வாழ்வை சந்திப்பது என்பதில் தடுமாறுவதை நான் பார்க்கிறேன். ஓஷோ கூறும் உண்மையைக் கண்டுகொண்டு, வாழ விரும்புகிறார்கள்.

குடும்பத்தையும், கல்வி முறையையும், அரசியல் அமைப்பையும், உறவுகளையும், சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் ஓஷோ கண்டிப்பதைப் பார்த்து, அவரைக் கலகக்காரர் என்று எண்ணவேண்டியது இல்லை. ஓஷோ கண்டிப்பது அமைப்பு இயந்திரத்தைத்தான்.

காலத்துக்குத் தகுந்தாற்போல, மனித வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல உலகின் இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல.... இவையெல்லாம் புதிதாக உண்டாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் ஓஷோ.

மனிதனுக்காகத்தான் நாடு, மொழி, இனம், சமூகம், மற்றும் அதன் சிந்தனைகளேயன்றி... ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்காக மனிதர்கள் மடிவது மடத்தனம் என்பதுதான் ஓஷோவின் பார்வை.

விழிக்கலாம் வாங்க!

மேலும் ஓஷோ ஓரிடத்தில் கூறும்போது, 'இந்த சமூகம், இந்த உலகம், இந்த அமைப்புகள், இங்கு எனக்குமுன் வாழ்ந்த ஞானிகள், கயவர்கள், இதற்குப் பின் பிறக்கப் போகும் புதிய மனிதன் ஆகிய எல்லாமே எனது பாகம்தான் அல்லது என்னைச் சேர்ந்ததுதான். ஆகவேதான் உரிமையோடு எல்லாவற்றையும் மிக மோசமாகவும் மிக உயர்வாகவும் என்னால் விமர்சிக்க முடிகிறது. நான் விலகி நின்று யாரையும், எதையும் விமர்சிப்பதில்லை. நான் திட்டினாலும், புகழ்ந்தாலும் அது என்னை நானே விமர்சனம் செய்து கொள்வதே. ஏனெனில், நான் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்தவனல்ல’ என்கிறார்.

எனவே, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஓஷோ அன்பர்கள் தங்களது சக்தியை, புரிதலை, தியான அனுபவத்தை, தன்னுணர்வுச் சுவையை தங்களது வாழ்வின் உரமாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய, அவசரப்பட்டு அள்ளி வீசக் கூடாது.

உங்கள் புரிதலில் நீங்கள் வேர்விட்டு வளருங்கள். வளர்ந்து மலருங்கள். மணம் பரப்புங்கள். அந்த மலரும், மணமும், ஒரு புதிய உலகை, புதிய சூழலை, புதிய புரிதலை, புதிய உணர்வை உங்களைச் சுற்றிலும் கொண்டுவரும். அப்போது அனைவரும் புரிந்துகொள்வார்கள். அதற்குமுன் அவசரப்பட்டு அமைப்பின் எதிரியாக, உறவுகளின் எதிரியாக, சாதி, மதம், சமூகம் ஆகியவற்றின் விரோதியாக மாறி கஷ்டத்துக்கு உள்ளாகாதீர்கள்.

விழிக்கலாம் வாங்க!

நீங்கள் வளர்ந்து வலிமை பெற்றபின், மலர்ந்து மணம் பரப்பும்போது, உங்களைச் சுற்றிலும் எல்லோரையும் எல்லாவற்றையும் பாதிப்பீர்கள், மாற்றுவீர்கள். ஆனால் அது வேறு. ஆகவே அதுவரை பொறுமையுடன் இருங்கள். உங்கள் வளர்ச்சி எதனாலும் பாதிக்கப்படாதவாறு மிக கவனமாகச் செயல்பட்டு, புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

கடந்த 2,500 ஆண்டுகளாக, புத்தருக்குப் பின் ஒரு புதிய வழியை ஓஷோதான் முழுமையாக உருவாக்கியுள்ளார். அதோடு அந்த புதிய வழியில் கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எந்தவித மத அமைப்பும், எந்த வித பூசாரியும், எந்தவிதக் கட்டாயமான விதிமுறைகளும் ஏற்பட முடியாதபடியும், அதனால் மனிதனில் உயர்வு தாழ்வும், அடிமைத்தனமும், குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்த முடியாமலும், தனது வழியின் அடிப்படையை மிக எளிதான ஓரே சொல்லில் வைக்கிறார். அதுதான் விழிப்பு உணர்வு.

விழிப்பு உணர்வோடு எனது முறைகளைச் செய்து பார்,

விழிப்பு உணர்வோடு எனது கருத்துகளை சிந்தித்துப்பார்,

விழிப்பு உணர்வோடு உனது வாழ்வை ஆராய்ந்து பார்.

அப்போது சரியான முறையும், சரியான புரிதலும் சரியான நிலையும் நமக்கே தெரியும். நமக்கு அப்படி தெரிவதுதான் சரி. மற்றவர்கள் நம்மைப் பற்றி சொல்வதோ, கற்றுக்கொடுப்பதோ சரியல்ல. நாம் தவறுகள் செய்தாலும், விழிப்பு உணர்வோடு இருந்து தவறுகள் மூலம் வளர்வதுதான் வாழ்க்கை என்கிறார்.

மனிதனைத் தவிர இயற்கையிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தவறு செய்யும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே அப்படிப் பலதையும் செய்து பார்த்து அடுத்த பரிணாம வளர்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே, நமக்கு அடிப்படைத் தேவையாக அவர் வலியுறுத்தும் ஒரே ஒழுக்கம் விழிப்பு உணர்வோடு இருப்பதுதான். அதனால் அவரது தியானமுறைகளின் ஓரே நோக்கம் விழிப்பு உணர்வைத் தட்டி எழுப்புவதே.

இன்றைய மனிதன் உடலில், புலன்களில், உணர்வில் வாழ்வது மிகக் குறைவு. மனதுக்காக, மனஆசைகளுக்காக, மன அழுத்தம், குற்றவுணர்வு, ஆணவம், அவமானம், நிறைவு, பெருமை, அந்தஸ்து, கௌரவம் என வாழ்கிறான். அதற்காகவே பெரும்பகுதி சக்தியை செலவழிக்கிறான். இப்படிப்பட்ட மனிதன் அவனுடைய மிக வேகமான அவனது மன ஓட்டத்தை விட்டு ஒரு கணமேனும் வெளியேறி விழிப்பு உணர்வும், தன்னுணர்வும் பெறச் செய்வதே அவரது தியான முறைகளின் நோக்கம்.

விழிக்கலாம் வாங்க!

பழமையான யோகா, தந்த்ரா, விபாசனா முறைகளைத் தூசிதட்டி தூய்மைப்படுத்தி அதை இன்றைய மனிதன் புரிந்துகொண்டு முயற்சித்துப் பார்ப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளார்.

ஓஷோ பல்வேறு தியான முறைகளையும், பயிற்சிகளையும், விளக்கங்களையும், கொடுத்துள்ளார். இன்றைய நவீன காலத்து மக்களுக்கும் எதிர்காலத்தினருக்கும் சேர்த்தேதான் சொல்லி வைத்துச் சென்றுள்ளார்...'' என்றவர், ''பென்சில் சீவினாலும் சரி, அணுகுண்டு தயாரித்தாலும் சரி... விழிப்பு உணர்வுடன் வாழ்வதே, வாழ்க்கை!'' என்றார் சிரித்தபடி.

ஓஷோ சாஸ்வதம் பற்றி...

* ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் தியானப் பட்டறை நிகழ்கிறது. கட்டணம் உண்டு என்றாலும் கட்டாயம் இல்லை. தியான ஆர்வமே கட்டாயம்.

* ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே தங்கும் வசதியுடன் சுகாதாரமான வீட்டுச் சாப்பாடும் கிடைக்கிறது.

* காலை டைனமிக் தியானம், மாலை குண்டலினி தியானம், இரவு சங்கமிப்பு தியானம் என தினசரி மூன்று தியானங்களும், மற்றும் விரும்புவோர் தேவைக்கேற்ப பல்வேறு தியானங்களும் நடைபெறுகின்றன.

1975 முதல் ஓஷோவை அறிந்தவர் தியான் சித்தார்த். இவர் தனது மனைவி தியான் ப்ரியா மற்றும் மகன் தேவ பாகலுடன் வசிக்கிறார். இவர் ஓஷோ வாழ்ந்து மறைந்த பூனே ஆசிரமத்தில் 1995 முதல் 2005 வரை வாழ்ந்தவர். ஓஷோவின் பல்வேறு நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism