Published:Updated:

சிரிக்காத ராஜா!

சிரிக்காத ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
சிரிக்காத ராஜா!

சந்திப்பு : மு.செய்யது முகம்மது ஆசாத், படங்கள்/கே.ராஜசேகரன்

சிரிக்காத ராஜா!

சந்திப்பு : மு.செய்யது முகம்மது ஆசாத், படங்கள்/கே.ராஜசேகரன்

Published:Updated:
சிரிக்காத ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
சிரிக்காத ராஜா!
சிரிக்காத ராஜா!

ல்லூர்... நல்லூர்... சோழிங்கநல்லூர்... 

கானத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு கூவிக் கொண்டிருந்த அந்த ஷேர் ஆட்டோ டிரைவரைப் பார்த்ததும் மூளைக்குள் பல்பு எரிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சார், உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...?'' என்று தயக்கத்துடன் கேட்க...

''வி.ஜி.பி-யில் பார்த்திருப்பீங்க...'' என்று சுரத்தில்லாமல் சொன்னார்.

''அட... சிரிக்காத சிலை மனிதர்தானே!'' என்று துள்ளியதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை அவர்.

''எப்ப இருந்து இந்த டிரைவர் வேஷம் சார்?''

''இது வேஷமில்லப்பா... கொஞ்ச வருஷமா ஷேர் ஆட்டோதான் ஓட்டுறேன்...'' என்று மென்மையாகச் சிரித்தார்.

''அட, உங்களுக்கு சிரிக்கவும் தெரியுமா?'' என்றபடி ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து அவர் கதையைக் கேட்டோம்.

''என் பேரு முகமது ரஃபி. வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் 1984-ல் செக்யூரிட்டி வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப எனக்கு இருபது வயசு. எந்த வேலை கொடுத்தாலும் செய்வியான்னு கேட்டுத்தான், வேலை கொடுத்தாங்க. நான் வாட்டசாட்டமா இருந்ததால, என்னை சிலை மனிதனா நிக்க வைக்கலாமேன்னு முதலாளி பன்னீர்தாஸ் அண்ணாச்சி சொன்னாங்க. அப்போ வி.ஜி.பி. சிலை மனிதன்னா அவ்வளவு பெருமை...'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார்.

''இப்பவும் சிலை மனிதன்னா பெருமைதானே... எப்படி சிரிக்காம இருப்பீங்க?'' என்று கேட்டதும் மீண்டும் தொடர்ந்தார்.

சிரிக்காத ராஜா!

''உலகச் சுற்றுப்பயணம் போன வி.ஜி.பி. அண்ணாச்சிகள் லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்குப் போயிருக்காங்க. அங்கே மன்னர் காலத்து உடையில் காவல் பணியில் இருந்தவங்களைப் பார்த்ததும், நம்ம நிறுவனத்திலேயும் இப்படி ஒரு ஆளை வைக்கலாமேன்னு அண்ணாச்சிகளுக்கு ஐடியா வந்திருக்கு. ஆரம்பத்துல பன்னீர்தாஸ் அண்ணாச்சியே நேரடியா டிரெயினிங் கொடுத்திருக்கார். அப்போது பரமசிவம், சுப்பிரமணியம்னு ரெண்டு பேர் சிலை மனிதரா இருந்தாங்க. அவங்கத்தான் எனக்கு டிரெய்னிங் கொடுத்தாங்க. டிரெய்னிங்னா சும்மா இல்லை... இரண்டு மணி நேரம் ஆடாமல், அசையாமல், மூச்சு விடுவது கூட வெளியே தெரியாமல் சிலையாக நிற்கவேண்டும். கண் இமைகளையும் தட்டி முழிக்கக்கூடாது. கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரும் வரக்கூடாது. உடம்பில் ஏதாவது பூச்சி ஊர்ந்தால் கூட அதைக் கண்டு கொள்ளக்கூடாது. டிரெயினிங் டைம்ல, கூட வேலை பார்க்கிறவங்களே சிரிக்க வைக்கவும், கோபத்தை வரவைக்கிற மாதிரியும் பேசுவாங்க. ஆனா எல்லாத்தையும் காதால கேட்டுட்டே சிலையாட்டம் இருக்கணும். எந்த வித உணர்ச்சிகளையும் காட்டக்கூடாது...''

''ஜடப் பொருள் மாதிரி...''

''உயிருள்ள ஜடப் பொருள்னு திருத்திக்கங்க சார். கண்ணை அசைக்காம இருக்கிறதால கண்ணு பயங்கரமா வலிக்கும். ஆரம்பத்தில் வி.ஜி.பி. தங்கக் கடற்கரை வாசலில் நின்றோம். எங்க வேஷம் ஹிட்டானதும், எங்களுக்குத் தனி மண்டபம் கட்டிக் கொடுத்தாங்க. ராஜா டிரெஸ் கொடுத்தாங்க. சிரிக்காத சிலை மனிதன், கல் ராஜான்னு மக்கள் சொல்வதைக் கேட்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும்...'' என்றார்.

''ஏதாவது வித்தியாசமான அனுபவம்...''

''அது இருக்குது சார் ஏராளமா. எங்களைத் தொடாமல் சிரிக்க வெச்சா 25 ஆயிரம் பரிசுன்னு கம்பெனி அறிவிச்சதும், நான், நீன்னு போட்டி போட்டு ஏராளமான பேர் வந்து என்னவெல்லாமோ செஞ்சு பார்த் தாங்க. அவங்களால முடியலை. சினிமா ஷூட்டிங்குக்காக வந்த நடிகர்கள் சிலரும் முயற்சி பண்ணிப் பார்த்தாங்க.

சிரிக்காத ராஜா!

ஒரு தடவை ஏதோ ஒரு காலேஜ்ல இருந்து பொண்ணுங்க நிறையப் பேர் வந்தாங்க. அரை மணி நேரத்துக்கும் மேல நம்ம முன்னாடி டான்ஸ், ஜோக்குன்னு சொல்லி கலக்கிட்டாங்க. அதுல ஒரு பொண்ணு 'கண்ணா வா... ஓடிப் போயிரலாம்’னு கூட கூப்பிட்டுச்சு. கடைசியில 'அடேங்கப்பா... இது சரியான கல்லுதாம்பா’னு எல்லாப் பொண்ணுகளும் போயிடுச்சு.

குடும்பத்தோட வர்றவங்க நல்ல விதமா சிரிக்க வைப்பாங்க. சிலர் தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவாங்க. நல்லதும், பொல்லாததும் இந்தக் காதுல விழத்தான் செய்யும். ஆனாலும் என்னுடைய வேலையில் முழுக்கவனத்தையும் வெச்சி, அதைப் பொருட்படுத்துவதில்லை. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஓய்வு எடுக்கும்போது, எங்கள் முன்பு நடந்த வேடிக்கைகளுக்கு மனம் விட்டு சிரித்துக் கொள்வோம். இதுவரை நான் ஒரு முறைகூட டியூட்டியில் சிரித்ததே இல்லை...''

''இப்ப ஆட்டோ ஓட்டிக்கிட்டே சிலை மனிதன் வேலையும் பார்க்கிறீங்களா?''

''வி.ஜி.பி-யை விட்டு வெளியில் வந்ததும் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன். ஆனா லும் பண்டிகைக் காலங்களில் ஜவுளிக் கடை களிலும், சில தனியார் அமைப்புகள் நடத்துற கண்காட்சியிலும் சிலை மனிதன் வேஷம் போடச் சொல்லுவாங்க. அங்கே போனா நாள் முழுசும் நிற்க வேண்டியிருக்கும். சில இடங்களில் 'சிலை மனிதனை சிரிக்க வைச்சா பரிசு’ன்னு அறிவிப்பாங்க. கடைக்குக் கூட்டம் வர்றதால அவங்களுக்கும் வியாபாரம் நடக்குது.

துபாய்க்கு கூட என்னை கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்க தொழில் பொருட்காட்சிக்காக எனக்கு விசா, விமான டிக்கெட் எல்லாம் எடுத்துக் கூட்டிட்டுப் போய் நிக்க வெச்சாங்க. என்னை சிரிக்க வைத்தால், கார் பரிசுன்னு அறிவிச்சதால் ஏகப்பட்ட கூட்டம். ஒரு பாகிஸ்தான்காரர் என்னை சிரிக்க வைக்க என்னவெல்லாமோ செஞ்சார், அவரால் முடியவில்லை. திடீர்னு ஒரு கல் எடுத்து எம்மேல எறிஞ்சிட்டார். நான் சட்டுன்னு குனிஞ்சிட்டு, பழையபடியே சிலையா நிமிர்ந்து நின்னுட்டேன். கல்லு பட்டு என் தொப்பி மட்டும் கீழே விழுந்துடுச்சு. அங்க நின்ன போலீஸ்காரங்க இதைப் பார்த்துட்டு அந்த ஆளை பிடிச்சி கையில விலங்கு போட்டுட்டாங்க. 'எதுவும் நடவடிக்கை வேண்டாம்’னு சொன்னதும் விட்டுட்டாங்க. அடுத்த நாளும் அதே பாகிஸ் தானியர் வந்தார். அந்தப் பொருட்காட்சி முடியுறவரைக்கும் தினமும் வந்து என்னை பார்த்துட்டுப் போனார்...'' என்றவரிடம்,

''அப்படின்னா இது சந்தோஷமான வேலைன்னு சொல்லுங்க...'' என்றதும் மறுக்கவும் செய்யாமல் ஆமோதிக்கவும் செய்யாமல் சிரித்தார்.

அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism