Published:Updated:

இசை மேடையில் இனிய கீதங்கள்!

இசை மேடையில் இனிய கீதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இசை மேடையில் இனிய கீதங்கள்!

இசை: என்.விவேக்

இசை மேடையில் இனிய கீதங்கள்!

இசை: என்.விவேக்

Published:Updated:
இசை மேடையில் இனிய கீதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
இசை மேடையில் இனிய கீதங்கள்!
இசை மேடையில் இனிய கீதங்கள்!

ல்லூரியில் ஜாலியாகப் பாட்டுப்பாடி, மிமிக்ரி செய்து கலாய்த்த நண்பர்கள் குழு, இன்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட 'லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு’வாக உலா வருகிறது. வெள்ளிவிழா கொண்டாடும் அந்த இசைக்குழுவின் மறக்கமுடியாத 25 நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார் லஷ்மன். 

1. சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களான நாங்கள், முதன்முதலில் பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம். மண்டப வாடகை கொடுப் பதற்காக இரண்டு கடிகாரங்கள், ஒரு மோதிரத்தை அடகு வைத்து, அதை நடத்தினோம். எங்கள் முதல் முயற் சியே வெற்றி. அதனால் அடகு வைத்த கடிகாரத்தை மீட்கவே நான்கு மாதங்களானது. ஆம், அந்த அளவுக்கு வரிசையாக நிகழ்ச்சிகள். பெரும்பாலும் கோயில் வாசலில்தான் எங்கள் முதல் வருடம் கழிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. வாய்ப்பு கேட்டு எல்லா கோயில்களுக்கும் போனோம். எல்லோருமே தயங்கினார்கள். அதனால் எங்கள் குழுவின் விசிட்டிங் கார்டுகளை நிறையவே கோயில் உண்டியல்களில் போட்டுவிட்டு வந்தோம். உண்டியலைத் திறந்து பணம் எண்ணியபோது, எங்கள் விசிட்டிங் கார்டுகளைப் பார்த்து அழைப்பார்கள் என்று நினைத்தோம். அப்படியே நடந்தது.  

இசை மேடையில் இனிய கீதங்கள்!

3. 1988-ல் எங்கள் குழுவில் எல்லோரும் படிப்பை முடிச்சுட்டோம். அதற்குள் 200-வது நிகழ்ச்சிகளை நெருங்கிவிட்டோம். 200-வது நிகழ்ச்சிக்கு, கமல்ஹாசனை வரவழைக்க ஆசை. ரசிகர் மன்றத்தலைவர் நாகராஜன் உதவியால் நினைச்சபடியே கமல்கிட்டேயும் தேதி வாங்கிவிட்டோம். அதுவரை சின்னச்சின்ன மண்டபங்களில் மட்டுமே நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.கமல் வருகிறார் என்றதும், முதன் முதலாக மியூசிக் அகாடமியை புக் செய்தோம். எங்களுக்கு மண்டபம் தர மறுத்துவிட்டதால், ப்ரியா கல்ச்சுரல் அகாடமி மூர்த்தி பெயரில் புக் செஞ்சோம். நிகழ்ச்சிக்கு வந்த கமல், எங்கள் ஒய்ட் அண்ட் ஒய்ட் யூனிஃபார்மைப் பார்த்து பாராட்டி, '2,000-வது நிகழ்ச்சிக்கும் என்னைக் கூப்பிடணும்’ என்று வாழ்த்தினார். சொன் னபடியே எங்கள் 2,000-வது நிகழ்ச்சியில் 1994-ம் வருடம் கலந்துகொண்டார்.

4. சென்னையில எங்களைப் போன்று புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து ஊக்கப் படுத்தியவர், டென் ஸ்டார்ஸ் கல்ச்சுரல் அகாடமி ரவிச்சந்திரன். முதன் முதலாக, காலை 9 மணியில் இருந்து இரவு 10.30 வரைக்கும் தொடர்ந்து பாடும் நிகழ்ச்சிக்கு ஓகே சொன்னார். முழுக்கமுழுக்க எம்ஜிஆர்., சிவாஜி, கமல், ரஜினி, இளையராஜா என்று புதுப்புது ஐடியாக்களைப் புகுத்தினோம்.

இசை மேடையில் இனிய கீதங்கள்!

5. முன்பு சபாக்களில 25,000 வசூல் என்றாலே பெரிய சாதனை. அதை முறியடிக்க எங்களது 1,200-வது நிகழ்ச்சிக்கு விஜயகாந்த்தை வரவழைத்தோம். பிரமாண்டமாக ரங்கோலியில் விஜயகாந்த் படத்தை வரைந்து, அதன் பக்கத்தில் விஜயகாந்த்தை உட்காரவச்சோம். அவர் உட்கார்ந்ததும், 'கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டரே...’ பாட்டைத் தொடங்கினோம். அன்று விஜயகாந்த் சிரித்தது, இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறது. அன்று

இசை மேடையில் இனிய கீதங்கள்!

37,000 வசூல் சாதனை செய்தோம்.

6. காதல் சோகப் பாட்டுகளை மட்டும் பாட முடிவு செய்து, டி.ராஜேந்தரை சிறப்பு விருந்தினராகக் கூப்பிட்டோம். பலரும் இந்த முயற்சி வெற்றியடையாதுன்னு சொன்னாங்க. ஆனாலும் நம்பிக்கையோடு நடத்தினோம். நல்ல மழை பெய்தபோதும், அண்ணாமலை மன்றத்தில் செம கூட்டம். 950 பேர் உட்காரும் இடத்தில் 1,500 பேர், வெளி யேயும் 700 பேர் வந்து குவிந்து எங்களைப் புல்லரிக்க வைத்தார்கள்.

7. எங்க குழுவில் இருந்த சீலிமா என்ற பாடகிக்கு கல்லூரித் தேர்வு நடந்த நேரத்தில், வெளியில் இருந்து பாடுவதற்கு 1991-ம் வருடம் மாலதி வந்தாங்க. அவங்களே என் வாழ்க்கை முழுவதும் பாடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. திடீர்னு ஒரு நாள் எங்க குழு கீபோர்ட் ஆர்டிஸ்ட் கோபாலிடம், என்னைக் காதலிப் பதாகச் சொன்னாங்க. அப்புறம் என்ன, இரண்டு மாதங்களில் கல்யாணம்... கொண்டாட்டம்தான்.

இசை மேடையில் இனிய கீதங்கள்!

8. தேவா சார் கச்சேரியில் சங்கீதானு ஒரு பாடகி, கே.பி.சுந்தராம்பாளின், 'பழம் நீ அப்பா...’ பாடலை அருமையாகப் பாடியது எங்கள் மனதைக் கவர்ந்தது. எங்களது குழுவிலும் புகுத்தவேண்டும் என்று முடிவெடுத்துத்தான் மாலதிக்குப் பயிற்சி கொடுத்தோம். இப்போ, மாலதி எங்கே போனாலும், 'தகதகவென ஆடவா...’ காரைக்கால் அம்மையார் பாட்டை ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள்.

9. ரம்ஜான் ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து, 'இசைப் புயலே வருக’ என்று பிரமாண்டமான பேனர் வைத்தோம். அதுவே அவருக்குப் பட்டமாக அமைந்ததில் எங்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.

10. 90-களிலேயே கார்ட்லெஸ் மைக்கை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து, சென்னை, மடிப்பாக்கத்தில் கோயில் நிகழ்ச்சி செய்தோம். மூவ ரசம்பேட்டை கோயில் குளத்தின் நடுவில் மேடை போட்டு நாங்கள் பாட, கரையில் அமர்ந்து மக்கள் கேட்டார்கள். இடையிடையே படகில் கரைக்குப் போய் பாடகர் பாடுவது என்று அமர்க்களம் செய்தோம். அதில் ஒரு பாடகர் திடீரென தண்ணீருக்குள் விழுந்த நகைச்சுவையும் நடந்தது.

இசை மேடையில் இனிய கீதங்கள்!

11. கார்ட்லெஸ் மைக்கை அறிமுகப் படுத்தி மேடையில இருந்து கீழே இறங்கி, கூட்டத்தில் நடந்து கொண்டே பாடினோம். ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. திடீரென ஒரு போலீஸ்காரர், 'இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என்று அடம்பிடிக்கவே, அவருக்கும் புரியவைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம்.

12. ஏர்வாடிக்கு அருகே மாயாகுளம் என்ற ஊரில் ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தார்கள். அப்போது ஒரு ரசிகர் வேண்டு கோளுக்கு இணங்க, 'பழம் நீ அப்பா...’ பாடினோம். உடனே கூட்டத்தில கடுமையான எதிர்ப்பு. என்ன செய்வது என்று விழித்த நேரத்தில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜமால் என்பவர், 'சமய நல்லிணக்கம்’ என்ற ரீதியில் சமாளித்த பிறகு நிகழ்ச்சி நல்லபடியாகத் தொடர்ந்தது.

13. முதன் முதலாக 1999 தீபாவளிக்கு எங்கள் நிகழ்ச்சியை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளி பரப்பு செய்தோம். பல முன்னணிப் பாடகர்-பாடகியர்கள் கலந்துக்கிட்டாங்க. அரை மணி நேரம்தான் ஒளிபரப்ப அனுமதி. ஆனால், நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அந்த ஸ்பாட்லேயே 4 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சிக்கே அந்த அளவுக்கு வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

14. முன்பு படம் ரிலீஸ் ஆகிற அன்று ரிச்சி தெருவில் காலை 9 மணிக்கு கேசட் கிடைக்கும். அதை வாங்கிவந்து உடனே ரிகர்சலைத் தொடங்கி, அன்று மாலை கச்சேரியில் பாடுவோம். ரஜினியின் 'ராஜாதிராஜா’வும் கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்’ படமும் ஒரே நாளில் ரிலீஸ். நாங்கள் இரண்டு படப் பாடல்களையும் வண்ணாரப்பேட்டையில் பாடி பயங்கரமான க்ளாப்ஸ் வாங்கினோம்.

15. தொடர்ந்து 36 மணி நேர நிகழ்ச்சி நடத்திய சமயம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். அவர், ''ஒரு பாட்டுக்கு 10 முதல் 15 நாள் எடுத்து நான் மியூசிக் பண்றேன். எப்படி நீங்க எந்தத் தயாரிப்பும் இல்லாம, உடனே பண்றீங்களோ’ன்னு பாராட்டி எங்களைப் பெருமைப்படுத்தினார்.

16. இளையராஜாவுடன் பாட ஆசை. ஆனாலும் அவரைப் பிடிப்பது சாதாரணம் இல்லையே. திடீரென ஒரு நாள் கங்கை அமரன் போன் பண்ணி, 'ராஜா சாரோட சேர்ந்து நிகழ்ச்சி பண்ணலாம்’னு சொன்னதும், எங்களுக்குத் தாங்கமுடியாத சந்தோஷம். ராஜா சார் நாலஞ்சு பாட்டு பாடுவார்னு நினைச்சோம். ஆனா அவர் முழு நிகழ்ச்சியிலும் 34 பாடல்கள் பாடி எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவ்வளவு பெரிய இசையமைப்பாளர், எங்க குழுவினருடன் ஒரு நாள் முழுக்க ரிகர்சலிலும் கலந்துகொண்டது, எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்.

17. ஒரு காலத்துல எங்களைப் போன்று மேடைப் பாடகர் வேடத்தில் நடித்து உச்சத்துக்குப் போனவர் நடிகர் மோகன். ஒரு கட்டத்தில் அவர் வெளி உலகுக்கு வராமல் இருந்த நேரம். அவர் பாடிய பாடல்களை மட்டுமே வைத்து அவரை அழைத்துக் கச்சேரி நடத்தினோம். நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்குக் கூட்டம். பெங்களூருவில் ஒரு காலத்தில் அவரும் மேடைப் பாடகராக இருந்தவர்தானே, அதனால் மேடையேறி, 'என்னோடு பாட்டுப் பாடுங்கள்’ என்று பாடத் தொடங்கியதும், மொத்தக் கூட்டமும் எழுந்து ஆர்ப்பரித்தது.

இசை மேடையில் இனிய கீதங்கள்!

18. எங்கள் முதல் வெளிநாட்டுப் பயணம், இலங்கைக்குதான். இசைக்கும் பாடகர்களின் உச்சரிப்புக்கும் மிகுந்த வரவேற்பு. ரசனையான தமிழ் ரசிகர்களை அங்கேதான் கண்டு வியந்தோம்.

19. காஞ்சிபுரத்தில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் அவர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தினோம். 10,000 டிக்கெட் விற்று விட்டது. ஆனால், அன்று கடுமையான மழை. அதனால் மைதானத்தில் இடுப்பளவு தண்ணீர். மக்களை ஏமாற்றக்கூடாது என்று பேன்ட்டை நனைச்சுகிட்டு பாடுற மேடைக்கு வந்து சேர்ந்து விட்டார், எஸ்.பி.பி. அவர் வந்து நின்றதும் கலைந்த கூட்டம் அப்படியே நின்றது, தண்ணீரும் வடியத் தொடங்கியது. மின்சாரக் கசிவு காரணமாக அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று ஒவ்வொரு நொடியும் பயந்து கொண்டே நிகழ்ச்சி நடத்தியதை இன்றும் மறக்கமுடியாது!

20. கும்பகோணத்தில் கச்சேரி முடித்து ஓசூர் சென்றபோது, எங்கள் பஸ் மீன்சுருட்டி என்ற இடத்தில் விபத்தில் சிக்கி பலருக்குக் கடுமையான காயம். கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குப் போனால், அங்கே மின்சாரம் இல்லை. டாக்டரும் இல்லை. மருந்தும் இல்லை. அதுக்குப் பிறகு அடிபட்டவர்களை மட்டும் சென்னைக்கு அனுப்பி விட்டு, மற்றவர்கள் ஓசூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.

21. எங்கள் குழுவில் இருந்தவர்கள் வெளியேறி இதுவரை 25-க்கும் மேற்பட்ட இசைக் குழுக்களை ஏற்படுத்தி, வளர்ந்திருக்கிறார்கள் என்பதில் எங்களுக்குப் பெருமை.

22. ஒரு முறை ஆஸ்திரேலியா போயி ருந்தோம். பஸ்ஸில் பயணம் செய்த நேரத்தில் எங்களை இசைக்கலைஞர்கள் என்று அறிந்து கொண்ட டிரைவர், எங்களுக்கான கட்டணத்தை அவரே செலுத்தினார்.

அந்தப் பணம் பெரிது இல்லை என்றாலும், இசைக் கலைஞனுக்கு கிடைத்த மரியாதை, பூரிக்க வைத்தது!

23. ஏராளமான திரைப்படங்களில் எங்கள் குழுவின் இசை நிகழ்ச்சி இடம் பிடித்து உள்ளது.

24. தேவா அவர்களுடன் எங்கள் குழு சென்றபோது, ஐந்து நாட்களும் வெளியில் எங்கேயும் போக முடியாதபடி கச்சேரி நேரம் நெருக்கிப் பிடித்தது. தூங்குவதும் சாப்பிடுவதும் பெரும்பாலும் விமான நிலையங்களில்தான் என்றாலும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக எங்களுடன் கலந்துகொண்ட பெருந்தன்மையை மறக்க முடியாது.

25. கடந்த 1996-ம் ஆண்டு விகடனுடன் இணைந்து லேடீஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சி நடத்தினோம். 18 பெண் பாடகர்கள் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் ஆண்களுக்கு அனுமதி இல்லை.

அரங்கத்தில் உள்ளவர்கள் ஜாலியாக ஆடிப் பாடி ரசிக்கலாம் என மைக்கில் அறிவித்ததுதான் தாமதம், பறந்தது பெரிய விசில் சத்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism