‘பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் பிடித்து முந்திவந்து நிற்பவனின் யாசிப்பு அது. எந்த நெருக்கடியையும் சின்னச் சலுகையான நிலைப்பாட்டின் மூலம் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின்றி வேறல்ல. அதாவது 100 கோடி ரூபாய் வங்கிக்கு வாராக்கடன், தேறாக்கடன் வைத்துவிட்டு `எட்டுக் கோடி ரூபாய் தருகிறோம், கணக்கை சமன் செய்துகொள்ளலாம்’ எனக் கேட்பதைப்போன்று.

நாஞ்சில் நாட்டுக் கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப் பந்தி நடக்கும் காமண வாசலில், தீவட்டித் தடியர்போல் இருவர் நின்றுகொண்டிருப்பார்கள். நான் சொல்வது 60 ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். தாலி கட்டி, நாதசுரக்காரர்கள் கெட்டிமேளம் வாசிப்பு நடந்தவுடன், அமர்ந்திருக்கும் ஆடவரில் பெரும் பங்கு எழுந்து, ஆக்குப்புறையை அடுத்து அமைக்கப்பட்டிருக்கும் பந்தி வைக்கப்படும் இடம் நோக்கி நகர்வார்கள், சரசரவென சாரைப்பாம்புபோல. இதைத்தான் `பந்திக்கு முந்துதல்’ என்பார் போலும்.

இலை போட்டு, இலை முழுக்க உப்பு முதல் உப்பேரி ஈறாகப் பரிமாறிவைத்துவிட்டுப் பந்திக்கு ஆள் அனுப்பும் பழக்கம் அன்று நடைமுறையில் இல்லை. இலையில் விளம்பி வைத்த பந்தியில் அமர்வதை, குறைச்சல் என்று நினைத்தார்கள். இன்று அனைத்துக் கல்யாண மண்டபங்களிலும் முதல் பந்தி பரிமாறி வைத்துவிட்டுத்தான் ஆள் அனுமதிக்கிறார்கள். மலையாளிகளின் ‘புடவிட’ அல்லது ‘தாலிகெட்டு’ முடிந்த கல்யாண சத்யாக்களில் அன்றும் இன்றும் அதுவே நடைமுறை.

பந்தியில் உட்கார ஆள் அனுமதிக்கும்போது, நுழைவாசலில் நிற்கும் இரு இடி தடியர்களும் - இன்றைய மொழியில் Punch Men - முகம் பார்த்துத்தான் அனுமதிப்பார்கள். முதல் பந்தியில் சாப்பிடுவது என்பது ஒரு கௌரவம். ஊர்க்கோயிலில் முதல் மரியாதை பெறுவதைப்போல அவசர சோலிக்காரர் சாப்பிட்டுவிட்டு அலுவலகமோ, பள்ளிக்கூடமோ போகிறவர், அடுத்த முகூர்த்தக் கல்யாணத்தில் முகம்காட்ட விரும்புகிறவர், கல்யாணக் கூட்டம் அதிகம் என்பதைப் பார்த்து இரண்டாம் பந்தியில் `பருப்பில் சாம்பாரில் வெள்ளம் சேர்த்துவிடுவார்கள்’ என்ற ‘தள்ளப் பயம்’ கொண்டவர், ‘வந்தசோலி முடியட்டும்’ என்று நினைப்பவர், ‘வயல்ல களை பறிக்க ஆள் விட்டிருக்கேன். போயி என்னான்னு பார்க்கணும்’ என்று கருதுபவர்...

மணமகன் முதல் முடிச்சும் மணமகளின் தாயோ, சகோதரியோ மற்ற இரண்டு முடிச்சுக்களும் இட்டு முடியும் முன்னரே முதல் பந்தியில் ஆள் நிரந்துவிடும் என்றாலும் இடி தடியர்கள் உள் நுழைவோரைக் கண்காணித்து நிற்பார்கள். அழுக்கு வேட்டிக்காரன், அந்தஸ்தில் குறைந்தவன் நுழைய முயன்றால் கை தடுக்கும். வாய், `உனக்கெல்லாம் அடுத்த பந்தியிலே சாப்பிட்டாப் போராதா? அப்பிடி என்ன வெப்ராளம், கிடைக்குமோ கிடைக்காதோனு’ என்று எகத்தாளம் பேசும்.

மாற்றுச் சாதியினர் என்றாலும், அவர்கள் தராதரம் பார்த்து அனுமதி உண்டு. தென்னந்தோப்பு வைத்திருக்கும் புகையிலைக் கடைக்காரர், வயற்காடு பயிர் வைத்திருக்கும் பாத்திரக் கடைக்காரர், கருப்பட்டிக் கடை வைத்து, சிப்பம் சிப்பமாய் மொத்த வியாபாரம் செய்வோரைத் தடுப்பதில்லை. ஆனால், சொந்தச் சமூகத்தினராயினும் இல்லாப்பட்டவர், ஏழை பாழைகள், இராப்பட்டினிக்காரருக்கு இடம் இருக்காது. இதில் தலித்துகள் நிலைமை எண்ணிப் பார்க்கத் தாங்காது.

வில் வண்டி பூட்டி, கல்யாணத்துக்கு வந்த பண்ணையார் முதல் பந்தியில் உண்ணப் போவார். கை கழுவி, வெற்றிலை போட்டதும் வண்டியைப் பூட்டச் சொல்வார். `நாமும் சாப்பிட்டுவிடலாம்’ என்று வண்டியடிப்பவன் பந்தியில் போய் அமர்ந்துவிட முடியாது. அடுத்த பந்திக்குக் காத்திருக்க இயலுமா? ‘எண்ணேன் இழிஞ்ச எல போதும்’ என்றால் விடுவார்களா?

நெருக்கடி ஏற்படும் தருணங்களில் பலபோதும், கந்தக் கிழிந்த இலை போதும் என்பதுதான் நமது மனோபாவமும். பள்ளிகள், கல்லூரிகள், தேவ தூதர்கள் வேலைபார்க்கும் அரசு அலுவலகங்களின் விடுமுறை நாட்களாக இல்லாமல், வாரக் கடைசிகளாகவும் இல்லாத சராசரி நாட்களில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணம் போக வேண்டுமானால் எனது பேருந்து, இருக்கைத் தேர்வு நூதனமாக இருக்கும்.

புதிய, பாட்டுப் போடாத பேருந்தாக, சன்னல் ஓர இருக்கையாக, பேருந்தின் ஓட்டுநரின் பக்கம் இல்லாததாக, பத்துப் பரோட்டாவும் பாதிக்குப்பி மதுவும் அருந்திய பக்கத்து இருக்கைக்காரன் வராதபடி கவனத்துடன்... சொகுசுப் பேருந்து ஒன்றின் கடைசி வரிசையானால் ஏறவே மாட்டேன். காற்றும் வராது, தூக்கித் தூக்கிப் போடும் என்ற அனுபவ அறிவு உண்டு.

பண்டிகை நாட்களில் மக்கள் திரள் அலைமோதும்; விடுமுறை தினம் என்றால், கடைசியிலும் கடைசியான இருக்கையானாலும் போதும்; ஓட்டை, உடைசல் வண்டியானாலும் குற்றம் இல்லை. காதுகிழியும் பாட்டுச் சத்தம் என்றாலும் பாதகமில்லை. பத்து பரோட்டா தின்றவர் பக்கத்தில் அமர்ந்து, தோளில் சாய்ந்து உறங்கிவிழுந்தாலும் மோசமில்லை. `ஊர் போய்ச் சேர்ந்தால் போதும்’ என்று ஏறிவிடுவோம். இதைத்தான் `கிழிந்த இலையே போதும்’ என்று பந்தியில் உட்காரும் மனோபாவம் என்கிறேன்.

தமிழ்த் திரைப்படத்தில் `தருமி' என்ற வரலாற்றுக் கதாபாத்திரம் கோமாளிபோலக் காட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் தருமி ஒரு கோமாளி அல்ல. ‘முப்போதும் திருமேனி தீண்டுவார்’ எனும் உரிமை பெற்ற இனம். `திருவிளையாடல்’ எனும் திரைப்படத்தில் நாமெல்லாம் பார்த்தோம், தருமியின் கதையை. பாடலில் பொருட் குற்றம் உண்டென்று கூறி, பந்தியில் இடம் மறுக்கப்பட்ட கதை அது - அதுவே. `நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று மொழிந்த நக்கீரன் கதை. ‘சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம்’ என்று கேட்ட தமிழ்ப் புலவரின் கதை. இங்கு சங்கு என்பதற்கு கடற்சங்கு என்று பொருள்கொள்ள வேண்டும். கழுத்து என்று பொருள்கொள்ளல் ஆகாது.

நக்கீரன் பேசும் சங்கு, திருவிதாங்கூர் மன்னர்களின் அரச சின்னம்; `சங்கு முத்திரை’ என்பார்கள்.

நின்ற கோலத்தில் அமைந்த சங்குக்கு இரண்டு களிற்று யானைகள் துதிக்கை உயர்த்தி, வணக்கம் செய்வது போன்ற சின்னம். கேரளத்தினுள் பயணம் செய்தால், அந்தச் சின்னத்தை இன்றும் காணலாம். சங்கு, திருமாலின் அடையாளம். இந்தியப் பண்பாட்டில் மங்கலப் பொருள். வங்காளப் பெண்கள் திருமணத்தின்போது சங்கு வளை அணிகிறார்கள். தமிழர் மரபில் தாலிபோல, வடநாட்டுப் பெண்டிரின் வகிட்டுக் குங்குமம்போல, வங்காள மரபில் சங்கு வளை. வடநாட்டில் `கங்கண்’ என்பார்கள். கங்கண் என்றால் கங்கணம்.

1,008 சங்குகளில், புண்ணிய நதிகளின் தீர்த்தம் நிறைத்து சங்கு அபிஷேகம் செய்வது சில கோயில்களின் தொல் மரபு. பழைய வீடுகளில் வாசல்படிதோறும் சங்கு பதிக்கப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். நக்கீரன், சங்கு அறுப்பது தனது குலத்தொழில் என்கிறார்.

சின்ன வயதில் பெண் குழந்தைகள், கை விரல்களை நிலத்தில் பரத்திவைத்துக்கொண்டு உட்கார எண்ணுவதுபோல் தொட்டு விளையாடும் விளையாட்டு ஒன்று உண்டு. அப்போது, சங்கு, சக்கரம், இந்திரம், நாகம், பால் என்று எண்ணுவார்கள். ஏன் சங்கில் இருந்து எண்ணத் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. ‘சங்கே முழங்கு’ என்று புரட்சிக்கவிஞரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றுண்டு. சங்கின் ஒலி என்பது ‘பொம், பொம், பொம்’ எனும் முழக்கம்.

இன்று, ‘சங்கு ஊதியாச்சு’ என்றொரு பிரயோகம் இருக்கிறது, `செத்துப்போனான்’ அல்லது `அழிந்தொழிந்து போனான்’ என்பதற்கு. முன்பெல்லாம் பஞ்சாலைகளில் நேரம் அறிவிக்க சங்கு ஊதுவார்கள். நாகர்கோவில் நகரத்துச் சங்கு, காலை, மதியம், மாலை, இரவு என்று மூன்று மணிக்கு ஒரு தரம் ஊதப்படும். மூத்தார் இறந்துபோனால், தேர்ப்பாடை கட்டி, கொட்டு முழக்கோடு, சுடுகாட்டுக்கு தூக்கிப் போவார்கள், எரியூட்ட. அந்த ஊர்வலத்தில், பாடையின் முன்னால் ஒருவர் சங்கு ஊதிக்கொண்டு போவார். வெள்ளை நிறச் சங்கின் வாய்ப்பகுதியில் வெள்ளி அல்லது பித்தளையால் பூண் கட்டி இருப்பார்கள். கழுத்து நரம்பு புடைக்க, மூச்சுப்பிடித்து ஊதுவதைக் காண சங்கடமாக இருக்கும்.

சங்கு, ஒரு வாத்தியம், இசைக்கருவி. சிலர் வாயில் இரண்டு சங்கு வைத்து ஊதுவார்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ‘ரெட்டைச் சங்கு’ என்ற முன்னொட்டு சேர்த்து அடையாளப்படுத்தி விளிப்பார்கள். சங்கு பற்றி ஆண்டாள் பல இடத்தும் பாடுகிறார். ‘ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து’ என்றும் ‘வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?’ என்கிறாள்.

இந்துக் கோயில்களில் இறைப்பணி புரிவோரில் `பண்டாரம்’ என்றொரு வகுப்பு உண்டு. கொங்கு நாட்டில், பாரம்பர்யமான கோயில் பூசைகளைப் பண்டாரங்களே செய்கிறார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் கண்ணன் கூட்டத்துக் கோயில் அது. அங்கு பண்டாரங்களே பூசை செய்கிறார்கள். எங்களூரில் பூக்கட்டிப் பண்டாரம், சங்கு ஊதிப் பண்டாரம் எனப் பிரிவுகள் உண்டு.

நாட்டார் சிறு தெய்வங்களின் கோயில் கொடைகளின்போது, நள்ளிரவில் மும்முரமான படப்பெடுப்பு அல்லது ஊட்டெடுப்பு நேரங்களில், முரசு, தவில், பம்பை, உடுக்கு மேளங்களுடன் சங்கும் ஊதுவதுண்டு. எனவே, சங்கு இறைவழிபாட்டின் இசைக்கருவியுமாம்.

சுவையான தமிழ்ப்பாடல் ஒன்றுண்டு, சங்கு அல்லது சங்கம் குறித்து‘முதற் சங்கு அமுதூட்டும் மொய் குழலாரொடுஇடைச்சங்கம் இல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்ஆம்போது அனல் ஊதும் அம்மட்டோ இம்மட்டோநாம் பூமி வாழ்ந்த நலம்’என்பது பாடல்.

தனிப்பாடல் திரட்டில் என் கண்ணில்படவில்லை இந்தப் பாடல். மூதறிஞர் ச.வே.சுப்ரமணியன் தொகுத்த ‘தனிப்பாடல் களஞ்சியம்’ என்ற 7,159 பாடல்கள் தொகையிலும் காணோம். பார்வைக்கோளாறோ அல்லது இருக்கும் இடம்விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறேனோ?

பாடலின் பொருளாவது: மனித வாழ்க்கையில் முதன்முதலாக, கைக்குழந்தைக்குப் பால் புகட்ட சங்கு பயன்படுத்தினார்கள். உரைத்த, அரைத்த, கரைத்த மருந்துகளை அதைக்கொண்டே புகட்டினார்கள். பின்பு சங்கு வடிவத்தில் பொன்னில், வெள்ளியில், அலுமினியத்தில்...

அவரவர் வசதிக்குத் தகுந்தாற்போல. தலைப்பிள்ளையான எனக்கு அம்மா புகட்டிய அலுமினியச் சங்கு இன்றும் என் வீட்டில் கிடக்கிறது... என் பேரன்களுக்கு உரை மருந்துகள் புகட்ட. பாடல் சொல்கிறது, முதல் சங்கு அமுது ஊட்டியது. இரண்டாவது சங்கு திருமணத்தின்போது முழங்கப்பட்டது. ஏனெனில், அது மங்கல வாத்தியம். விலை உயர்ந்த வலம்புரிச்சங்கு எளிதாகக் கிடைக்காது என்பார்கள். அஃதோர் பூசைப்பொருள். தேனீக்கள் மொய்க்கும் நறும்பூக்கள் சூடிய, நீளக் கூந்தலையுடைய இளம்பெண்ணை வதுவை செய்யும்போது, இடைச்சங்கு ஊதி இல்வாழ்க்கை என்னும் விலங்கு பூட்டப்பெறும். கடைசியாக ஊதப்படும் சங்கு ஈமத்தீயை ஊதும். அம்மட்டோ, இம்மட்டோ நாம் பூமியில் வாழ்ந்த நலம்? ஆக, வாழ்க்கையின் முக்கியமான மூன்று கட்டங்களிலும் சங்கு சாட்சியாக நிற்கிறது.

பண்டு போர்களையே சங்கு முழங்கித்தான் தொடங்கி இருக்கிறார்கள். பகவத்கீதை, கண்ணனும் பாண்டவர்களும் பயன்படுத்திய சங்குகளுக்கு பெயர்கள் தருகின்றது. கண்ணன் - பாஞ்சஜன்யம், பார்த்தன் - தேவதத்தம், வீமன் - பௌண்ட்ரம், தருமன் - அனந்த விஜயம், நகுலன் - ஸூ கோஷம், சகாதேவன் - மணி புட்பகம் என.

வடிவத்துக்கு ஏற்ப கழுத்துக்கும் சங்கு எனப் பெயர் வந்திருக்கும்போல. பெண்களின் அழகைப்பேசும் புலவர்கள், `சங்குக் கழுத்து’ என்றார்கள். ‘சங்கை அறுத்திருவேன்’, ‘சங்கைக் கடிச்சு உறிஞ்சிடுவேன்’, ‘சங்கை நெரிச்சுக் கொன்னுடுவேன்’, ‘சங்கு பொட்டிச் செத்தான்’, ‘சங்குலே சமுண்டீடுவேன்’ என்பன கோபத்தின் உச்சகட்ட வசவுகள்.

சங்கு போன்ற வடிவமுடைய மலரை `சங்கு புஷ்பம்’ அல்லது `சங்கு புட்பம்’ என்றோம். நீல நிறம், வெள்ளை நிறம் எனப் பூக்கும் கொடி அந்தத் தாவரம். நாட்டுவழக்கில் `காக்காட்டான்’, `காக்கணம் பூ’ என்றனர். நீல, வெள்ளை நிறச் சங்கு புட்பங்களை, `கருவிளை’, `செருவிளை’ என்கிறது சங்க இலக்கியம், கபிலரின் குறிஞ்சிப்பாட்டில்,‘வடவனம், வாகை, வான் பூங் குடசம்எருவை, செருவிளை, மணிப்பூங்கருவிளைபயினி, வானி, பல்விணர்க் குருவம்’என்று 99 மலர்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார்கள்.

காதலரைப் பிரிந்துவரும் மகளிர் கண்ணீர் சோரும் கண்களுக்கு கருவிளை மலர் உவமையாகப் பேசப்பட்டிருக்கிறது. சரி! சங்குபுட்பம்தான் கருவிளை என்பது எப்படித் தெரியும் என்பீர்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை பேராசிரியராக இருந்த முதுமுனைவர் கு.சீனிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ (1987) உங்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அந்த நூல் அச்சில் இல்லை. பல்கலைக்கழகத்தில் பணம் இல்லையாம். 800 பக்க நூலை மறு அச்சு செய்ய எப்படியும் 100 கோடி ரூபாயாவது வேண்டாமா?

தருமியையும் தருமிக்கு ஆதரவாக ராம்ஜெத்மெலானி போல நேரில் ஆஜரான சிவபெருமானையும் முகத்துக்கு எதிரே விரல்நீட்டிச் சொல்கிறார் நக்கீரர், `சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று. மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. நக்கீரர் எனும் புலவர் எட்டுத்தொகை நூல்களான அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள் மற்றும் புறநானூற்றில் 3 பாடல்கள் என 35 பாடல்கள் இயற்றியவர். பத்துப் பாட்டு நூல்களினுள் திருமுருகாற்றுப் பாடலும் (317 அடி) நெடுநல்வாடையும் (188 அடிகள்) இயற்றியவர். இவரது இயற்பெயர் கீரன் என்றும் ‘ந’ சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல் என்றும் முழுப்பெயர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்றும் எழுதுகிறார் உ.வே.சா.

நம்பியாண்டார் நம்பி தொகுத்த பதினோராம் சைவத் திருமுறையில் மொத்தம் 40 நூற்கள். அவற்றுள் 9 நூல்களை இயற்றியவர் நக்கீர தேவ நாயனார். இருவரும் ஒருவரே என்றும் ஒருவரல்ல என்றும் ஆய்வாளர்களுக்கிடையே வாதங்கள் உண்டு.

பாண்டியன் அரசவையில் தருமிக்கும் நக்கீரனுக்கும்தான் வாதம். பாடலில் பொருட் குற்றம் உண்டு என்பது நக்கீரன் குற்றச்சாட்டு. அந்தப் பாடலை மண்டபத்தில், தருமிக்கு எழுதிக்கொடுத்தது சாட்சாத் சோமசுந்தரக் கடவுளே என்பது தருமியின் கூற்று. இன்றும் நவீனக் கவிஞர்களில் சிலருக்கு மண்டபத்தில்வைத்து கவிதைகள் எழுதித் தரப்படுகின்றன என வதந்தி உண்டு.

தருமி திருமணம் செய்துகொண்ட பின்னரே, முப்போதும் திருமேனி தீண்டி இறைவழிபாடு செய்ய இயலும். அதற்குத் தருமியிடம் காசில்லை. எனவே, பாண்டிய மன்னன் மனதில் எழுந்த ஐயம் தீர்த்தால் பொற்கிழி கிடைக்கும் என்று ஏங்குகிறான். அவனுக்கு இரங்கி, இறையனார் என்று அழைக்கப்பட்ட சிவபெருமானே பாட்டெழுதிக் கொடுத்தார் என்பது நம்பிக்கை. திருநாவுக்கரசர் பாடுகிறார், தேவாரத்தில், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறிநற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்’என்று.

சோமசுந்தரக் கடவுள் தருமிக்கு எழுதிக் கொடுத்து, பொற்கிழி பெற உதவியதாகச் சொல்லப்படுவது குறுந்தொகைப் பாடல். ‘சங்க காலப் புலவர்கள்’ என்ற ஆய்வு நூல் எழுதிய உ.வே.சாமிநாதய்யர், இறையனார் எனும் புலவர் பற்றிய வரலாற்றுக் குறிப்பில், ‘மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள், இறையனார் என்ற பெயரில் வழங்கப் பெறுவர்’ என்பர். இவரது வரலாறு குறுந்தொகையில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் செய்யுளின் இறுதியில் விரிவாக உள்ளது. ஆனால், அந்தப் பாடல் இயற்றியது இறையனார் எனும் புலவரா, சோமசுந்தரக் கடவுளா என்பதை என்னால் தீர்மானிக்க இயலாது.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ?
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?’
என்பது பாடல்.

கொங்கு எனில் பூந்தாது அல்லது தேன். தும்பி எனில் வண்டு. தேனைத் தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கையை நேர்ந்த அழகியச் சிறகுகளை உடைய வண்டே! நீ உன் விருப்பத்தைச் சொல்லாமல் கண்ட உண்மையைச் சொல்வாயா? மயில் போன்ற சாயலையும், அழகிய வரிசையான பற்களையும், என்னுடன் நெருங்கிப் பழகும் நட்பையும் உடைய காதலியின் கூந்தலைவிட நறுமணம் உடைய பூ ஒன்றை அறிந்ததுண்டா நீயுன் அனுபவத்தில்?

‘காமம் செப்பாது கண்டது மொழிமோ?’ என்பது மிகச் செறிவான மொழிப் பயன்பாடு. மயில் இயல் என்பதோர் கவிச் சொல்லாட்சி. கம்பன் வரிகளைப் பயன்படுத்தினால்,‘மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்டஎயிலுடை இலங்கை வேந்தன் இதயமாம் சிறையில் வைத்தான்.’ மயில்போன்ற சாயலை உடைய சீதையைக் கவர்ந்து சிறை எடுக்கும் முன் நீண்ட கோட்டையை உடைய இலங்கை வேந்தன் இதயமாகிய சிறையில் வைத்தான் என்பது பொருள்.

இறையனார் பாடலில், நக்கீரர் தரப்பு, உயர்குடிப் பெண்களின் கூந்தலே ஆனாலும் அதற்கு இயற்கை மணம் கிடையாது. எனவே, செய்யுளில் பொருட் குற்றம் என்பது மெய்யாக இருக்கலாம். கவிதையின் அறிவுபூர்வமான ஆய்வினைச் சுமத்துவது, அந்தக் காலத்தில் பின் நவீனத்துவப்பாணிக் கட்டுடைப்பு. ரசனா பூர்வமாகக் கவிதையை அணுகுவதன் எதிர்த்திசைப் பயணம். தற்கால மார்க்சிய மெய்யியல்வாதிகள் புதுமைப்பித்தனைப் பார்த்ததைப்போல படைப்பு அவர்களுக்கு அர்த்தம் ஆகாததைப்போல காதல் பித்தில் ஆழ்ந்துகிடக்கும் ஒருவனின் மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் அது; கவிதையின் பண்பைப் புரிந்துகொள்ளாமல், பொருட் குற்றம் காண்பது. ஒரு சினிமா நடிகன் எழுந்து நின்றால் அது இமயமலைக்கு ஒப்பானது என்கிறான் சினிமாக் கவிஞன் இன்று.

ஈண்டு நான் கூறத் துணிவது, எந்தக் கவிதையையும் அதற்குரிய இலக்கிய நயம், மொழியழகு, அலங்காரங்கள், வெளியீட்டுத் திறம், கவித்துவம், கருப்பொருள் கொண்டே அளக்க வேண்டும். மாறாக, பரிசோதனைக் குழாயில் போட்டுக் குலுக்கிப் பார்ப்பது இலக்கியத்துக்கு முரணானது, எதிரானது, தாழ்ப்புடையது. ‘ஆயிரம் கால் கொண்டெழும் புரவி’ என்கிறார் ஜெயமோகன். `உலகில் எந்தக் குதிரைக்காவது ஆயிரம் கால்கள் உண்டா? எனில் காட்டுங்கள்’ என்று கேட்பது அறிவீனம். அந்தக் கேள்விக்கும் இலக்கியத்துக்கும் சற்றும் பந்தமில்லை.

பொருட்குற்றம் எனும் முற்போக்கு, பகுத்தறிவு, கட்டுடைப்புக் கேள்வியை எதிர் கொள்ளும் தருமி, நாம் முன்பு சொன்னதுபோல், சினிமாக் கோமாளி அல்ல. எனவே, அறிவார்த்தமாகக் கேட்கிறான், `பிழைக்கான மதிப்பெண்களைக் குறைத்துக்கொண்டு, மீதிப் பொன் தாருங்கள்’ என்று அடிபட்ட பூசணிக்காயைச் சந்தையில் அரைவிலைக்குக் கேட்பது போல. அது அவனது அன்றைய நிலைமை தந்த நெருக்கடி.

நக்கீரன், `பந்தியில் இடமில்லை’ என்றான். தருமியோ, `கிழிந்த இலைகூடப் போதும்’ என்றான்.