இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களில் பலவகையினர் உண்டு. பாசுரங்கள் பாடி அவன் புகழைப் பரப்புவார்கள் சிலர்; நாம சங்கீர்த்தனங்கள் இசைத்து அவனைப் போற்றிப் பரவுவார்கள் சிலர்; இசைப் பேருரை நிகழ்த்தி, மக்களிடையே அவன் பெருமையைப் பறைசாற்றுவார்கள் சிலர்; சிலர் தெய்விக நாடகங்கள் நடத்துவதன் மூலமாகவும், இன்னும் சிலர் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமாகவும், வேறு சிலர் உழவாரப் பணி போன்ற ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவதன் மூலமாகவும் இறைவனுக்குத் தொண்டு செய்வார்கள்.

இறைவனின் திருவுருவங்களைக் கல்லில் வடிக்கும் சிற்பிகளும், அழகிய சித்திரங்களாய்த் தீட்டும் ஓவியர்களும்கூட இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள்தான் அல்லவா!

இறை ஓவியங்கள் என்றதுமே சட்டென நம் நினைவுக்கு வருபவர், உலகப் புகழ்பெற்ற அற்புத ஓவியர் ராஜா ரவிவர்மாதான்! அவரின் பாணியைப் பின்பற்றி, அழகிய தெய்விக ஓவியங்களைத் தீட்டி, ஓவிய உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர் கொண்டைய ராஜு.

‘காலண்டர் ஓவியங்களின் பிதாமகர்’ என்று இவரைச் சொல்லலாம். காரணம், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, சிவகாசியில் அச்சிடப்பட்டு, வீட்டுக்கு வீடு தொங்கிய பெரிய பெரிய காலண்டர்களில் எல்லாம் தரிசனம் தந்த கடவுளர்கள் பலரும் கொண்டைய ராஜுவின் கைவண்ணத்தால் உருவானவர்களே! அந்நாளில், காலையில் கண்விழித்து எழுந்ததும், முதல் வேலையாக நம் பெரியோர்களின் கண்கள் தேடியது காலண்டரைத்தான். அதில் அற்புதக் கோலம் கொண்டு அருள்மழை பொழியும் இறைவன், இறைவியின் திருவுருவங்களைக் கையால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்ட பின்புதான், அந்த நாளே தொடங்கும் அவர்களுக்கு. பூஜையறை வழிபாடெல்லாம் அப்புறம்தான்! அந்த வகையில், இன்றைய சீனியர் சிட்டிசன்களிடம் கேட்டுப் பாருங்கள், ஓவியர் கொண்டைய ராஜுவைப் பற்றிச் சிலாகித்துச் சொல்வார்கள்.

சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர் கொண்டைய ராஜு. 1918-ம் ஆண்டு நடந்த ஓவியத் தேர்வில், மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர், தனிமையை நாடி, திருவண்ணாமலை சென்றவர், ரமண மகரிஷியிடம் சீடராகச் சேர்ந்து, அவருக்குத் தொண்டுகள் செய்து, அவரின் ஆசிரமத்திலேயே தங்கினார்.

மகான் ரமணரைச் சந்தித்து அருளாசி பெறுவதற்காக அன்பர்கள் பலர் வந்து செல்வதுண்டு. அப்படி வந்தவர்களில் ஓர் அன்பர், ரமணரின் முழு உருவப் படத்தை வரைந்து எடுத்துக்கொண்டு வந்து ரமணரிடம் கொடுத்து, ஆசி வேண்டி நின்றார். அவரின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து அவருக்கு ஆசி வழங்கிய ரமணர், ஒரு புன்னகையோடு, “இந்தப் படத்தில் ஒரு குறை இருக்கிறதே!” என்றார். உடனே, அருகில் இருந்த கொண்டைய ராஜு, “சுவாமிகள் அனுமதித்தால், நான் அதைச் சரிசெய்யட்டுமா?” என்று விநயத்துடன் கேட்டார். “அடடே! உனக்கு ஓவியமெல்லாம்கூட வரையத் தெரியுமா?” என்று மகரிஷி கேட்க, “ஏதோ ஓரளவுக்குத் தெரியும் சுவாமி!” என்று பவ்வியமாகச் சொன்ன கொண்டைய ராஜு, மகானின் அனுமதியின்பேரில் அந்த ஓவியத்தைத் திருத்தி எழுதினார். அதைக் கண்டு வியப்புற்ற மகரிஷி, “இத்தனை திறமையை வைத்திருக்கும் உனக்கு இங்கே ஆசிரமத்தில் என்ன வேலை? உன் ஓவியக் கலையால் உலகம் பயனடைய வேண்டாமா?” என்று கேட்டு, அவரை உள்ளன்போடு ஆசீர்வதித்து, அந்நாளில் ஆசிரமத்தோடு தொடர்பில் இருந்த ராமசாமி ஐயர் என்பவரிடம் கொண்டைய ராஜுவின் கலைத் திறமை பற்றிச் சொல்லி, அவரின் திறமையை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும்படி சொன்னார்.

அவரும் அதன்படியே, மதுரையில் இருந்த தனது நண்பரும், நாடக சபை உரிமையாளருமான டி.என்.பழனியப்பப் பிள்ளையிடம் கொண்டைய ராஜுவை அறிமுகப்படுத்தி, அவரின் ஓவியத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பழனியப்பப் பிள்ளையின் நாடகக் கம்பெனி தமிழகத்தில் மட்டுமல்லாது, இலங்கைக்கும் அடிக்கடி சென்று நாடகங்கள் நடத்தியது. அந்த நாடகக் காட்சிகளுக்கேற்ற பின்னணி திரைச்சீலை ஓவியங்கள் வரையும் பணியை கொண்டைய ராஜுவுக்குக் கொடுத்தார் அவர்.

பின்னர் 1942-ம் ஆண்டில், கோவில் பட்டியில் வந்து தங்கிய கொண்டைய ராஜு, அங்கே ‘தேவி ஆர்ட் ஸ்டுடியோ’ என்னும் கலைக்கூடத்தைத் தொடங்கி, உள்ளூர் கோயில்களில் உள்ள அம்மன் திருவுருவங்களை வரைந்து வெளியிடலானார். மதுரை, சிவகாசி ஆகிய ஊர்களில் இவருடைய படங்கள் அச்சிடப்பட்டன. வார இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும் இவரின் அற்புத ஓவியங்கள் பிரசுரமாயின.

ஆரம்ப காலத்தில், பல்வேறு நிறுவனங் களுக்காக சிவகாசி அச்சகத்தார் காலண்டர்கள் வெளியிட்டபோது, அவற்றில் வடக்கத்திய ஓவியர்கள் வரைந்த தெய்விகப் படங்கள்தான் அச்சாகின. கொண்டைய ராஜுவின் வருகைக்குப் பின்பு, அவரின் ஓவியங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெறத் தொடங்கின.

இந்துப் புராண காவிய மரபையொட்டி இறை உருவங்களை வரைந்த ஓவிய மேதை ராஜா ரவிவர்மாவின் பாணியைப் பின்பற்றியே ஓவியங்கள் வரைந்தார் கொண்டைய ராஜு. குறிப்பாக, இவரின் லமி, சரஸ்வதி ஓவியங்களில் ரவிவர்மாவின் பாணி பளிச்செனத் தெரியும். ஆனாலும், இவரின் புதுமைப் படைப்புகளான பாலமுருகன், மீனாட்சி கல்யாணம், கஜேந்திர மோட்சம் ஆகிய ஓவியங்களும் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரின் இறை ஓவியங்களைப் பார்த்தவர்கள், சாட்சாத் அந்தக் கடவுளர்களே நேரில் தரிசனம் தந்தது போன்ற சிலிர்ப்பையும் பரவசத்தையும் அடைந்தார்கள்.

நாளடைவில் இவரிடம் பலர் சீடர்களாக வந்து சேர்ந்து, ஆர்வத்தோடு ஓவியம் பயின்று, இவரின் பாணியிலேயே ஓவியங்கள் வரையத் தொடங்கினர். குரு மீதிருந்த பக்தியின் காரணமாக, இவர்கள் தாங்கள் வரையும் படங்களின் அடியிலும் கொண்டைய ராஜு எனத் தங்கள் குருவின் பெயரை எழுதி, அதன் கீழ் தன் பெயரைச் சேர்த்துக் கையெழுத்திடுவதை வழக் கமாகக் கொண்டார்கள். அத்தகைய சீடர்களில் முக்கியமானவர்கள் டி.எம்.ராமலிங்கம், டி.எஸ்.சுப்பையா, டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், டி.எஸ்.அருணாசலம், செண்பகராமன், சீனிவாசன் எனப் பலரைச் சொல்லலாம்.

“எங்களின் குரு திரு.கொண்டைய ராஜு அவர்கள், ஒருபோதும் பணம் சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர் அல்லர். காலண்டருக்காக இறையுருவங்களை வரைந்தாலும், அதை இறைவனுக்குச் செய்யும் சேவையாகத்தான் கருதி, அதற்கேற்ற உள்ளத் தூய்மையோடும் புனிதத்தோடும் வரைந்தார். அதன்மூலம் தான் ஈட்டிய பணத்தைத் தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்தான் பகிர்ந்து வழங்கினார். கடைசி வரை திருமணமே செய்துகொள்ளாமல், தீவிர பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்து, ஓர் எளிய துறவு வாழ்க்கைதான் வாழ்ந்தார்.

உடல் ஊனமுற்ற பிள்ளைகளின்பேரில் மிகுந்த வாஞ்சையுடன் இருப்பார். அவர்களுக்கு அக்கறையோடு ஓவியக் கலையைக் கற்றுக் கொடுப்பார். அவர்களுக்கெல்லாம் தன் செலவிலேயே தங்க இடமும் உண்ண உணவும் கொடுத்தார். ‘பிரம்மசாரியான எனக்கு இவர்கள்தான் பிள்ளைகள்’ என மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகச் சொல்வார்.

நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். பல்வேறு இன நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். கிட்டத்தட்ட 12 நாய்கள் அவரிடம் இருந்தன. அனைத்துக்கும் தானே உணவு கொடுப்பார். அவையும் அவரிடம் மிகுந்த அன்பைச் செலுத்தின. ஆனால், ஒருகட்டத் தில் அவை ஒன்றன்பின் ஒன்றாக இறந்துபோக, அவர் துடித்த துடிப்பும், அழுத அழுகையும் மறக்க முடியாது. அதன்பின், அவர் நாய் வளர்ப்பதை விட்டுவிட்டார்” என்று தம் குருநாதர் பற்றிய நினைவுகளை ஒருமுறை பகிர்ந்து கொண்டுள்ளார் அவரின் சீடர் டி.எம்.ராமலிங்கம்.

1980-களில், கொண்டைய ராஜுவின் ஓவியங்களை ஆய்வுசெய்தவர் ஸ்டீவன் எஸ்.இங்கிலீஷ் என்னும் கனடா நாட்டுக்காரர். சிவகாசியில் அச்சிட்டுத் தயாரான, கொண்டைய ராஜுவின் ஓவியங்களைக் கொண்ட பழைய காலத்துக் காலண்டர்களையெல்லாம் சேகரித்து எடுத்துச் சென்று, கனடா நாட்டு அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார் இவர்.

வெறுமே பணத்துக்காகவோ, பொழுது போக்குக்காகவோ, விற்பனைக்காகவோ வரையாமல், தமது ஆத்ம திருப்திக்காக வரைந்தவர் கொண்டைய ராஜு. இறைத் தொண்டாக நினைத்து இறையுருவங்களை வரைந்த காரணத்தால்தான் இன்றளவும் அவர் நம் நெஞ்சில் நிறைந்திருக்கிறார். இறை நம்பிக்கையும், இறை வழிபாடுகளும் எப்படி நம் மக்களிடம் இன்னும் பன்னெடுங்காலத்துக்கு நீடித்திருக்குமோ அதுபோலவே, அற்புதமான இறையுருவங்களை அழகழகாக வரைந்து, தூரிகையால் ஒரு வேள்வி நடத்திவிட்டுச் சென்றுள்ள இறையருள் ஓவியர் கொண்டைய ராஜுவின் புகழும் இன்னும் பல்லாண்டு காலம் இப்பூவுலகில் நீடித்திருக்கும்!