தென் கன்னட நாட்டில் ஹளேபீடு, பேலூர் வரை சென்று வருவது எங்கள் பயணத் திட்டம். என்னுடைய ‘மாருதி ஜென்’ மகிழுந்திலேயே செல்வது என முடிவெடுத்திருந்தோம். நால்வர்க்கு அந்த வண்டியே போதும். மதிய உணவை முடித்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக திம்பம் வனப்பகுதியை நோக்கித் திருப்பினோம். வண்டிக்கு நான் மட்டுமே ஓட்டுநர். எப்போது திம்பம் வனப்பகுதியைக் கடக்க நேர்ந்தாலும், அடிவாரத்து அம்மன் பண்ணாரியம்மனை வணங்கிச்செல்லத் தவறுவதில்லை.

நெடுஞ்சாலையோரம் எழுந்தருளி இருக்கும் இத்தகைய பலிபெறு தெய்வங்களை எந்த வண்டி ஓட்டுநர் என்றாலும், விழுந்து வணங்கிச் செல்வதையே வழக்கமாகவைத்திருக்கிறார். பயணம் என்னும் நகர்ச்சியின் பாதுகாப்பு குறித்த பயம் தொன்றுதொட்டு மாறவே இல்லை. முன்பு நடைப் பயணங்களாக இருந்தபோதும் கொல்விலங்குகளால் ஒருவர்க்கு வீடு திரும்புவதில் உறுதியில்லை. இப்போதும் வண்டி விபத்துகளால் பாதுகாப்புக்கு அஞ்சவேண்டியிருக்கிறது.

பண்ணாரியம்மனின் திருநீற்றுத் திலகத்தோடு திம்ப வனத்தை ஏறினோம். தக்காணப் பீடபூமி ஒரு மலையிறக்கமாக முடிவடைந்து, கொங்குச் சமவெளி தொடங்கும் இடத்திற்கு இந்தத் திம்ப வனப்பகுதி அரணாக விளங்குகிறது. முற்காலத்திலிருந்தே மைசூரு, குடகுப் பகுதியிலிருந்து கொங்குநாட்டுக்கு நுழைய விரும்பினால் இந்த ஒரே வழிதான். இல்லையேல், கூடலூர் வழியாகப் பெருவனப்பகுதியைக் கடக்கவேண்டும் அல்லது பெங்களூரு வழியாகச் சென்று திரும்ப வேண்டும். இவையிரண்டுமே தோதில்லாத வழிகள். கொங்குச் சமவெளியில் இருந்து திம்ப வனப்பகுதியின் இரண்டு செங்குத்து ஏற்றங்களைக் கடந்தால், தக்காண பீடபூமியை அடைவது எளிது.

திம்பத்தை அடைந்து ஆசனூர்ச் சோதனைச் சாவடி அருகில் ஒரு தேநீர் மிடறு பருகிவிட்டு, அப்படியே மூங்கில் வனங்கள் வழியாக நஞ்சன்கூட்டை அடைந்தோம். கப்பினி ஆற்றுக்கரையில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றிய மாலையில் நல்ல அருட்காட்சி கிடைத்தது. கபினி ஆற்றை ஏன் `கப்பினி ஆறு' என்கிறேன் என்ற கேள்வி எழக்கூடும். கொங்கு நாட்டு வரலாற்றை ஆராய்ந்து நூல் எழுதிய மயிலை சீனி வேங்கடசாமியார் அந்த ஆற்றைக் `கப்பினி' என்றே குறிக்கிறார். ஆங்கிலத்தின் வழியாக நம் ஆற்றுப் பெயர்களை அறிந்து எழுதிக்கொண்டிருக்கும் நாம் இவ்வாறு நிறையவே தவறிழைக்கிறோம். `முல்லைப் பெரியார்’ என்று தவறாக அழைக்கிறோம். அது முல்லைப் பேரியாறு. ‘பேரியாற்றடைகரை’ என்கிறது சிலப்பதிகாரம்.

கப்பினி ஆற்றுக் கரைக்கு வந்தோம். ‘மிகுவெள்ளம் செல்வதால் மறந்தாற்போல் இந்த ஆற்றில் இறங்கிவிடாதீர். நேற்றுத்தான் இரண்டு சிறுவர்களை அடித்துச் சென்றுவிட்டது’ என்று பூக்கடைக்காரர் எச்சரித்தார். நீரைக் கண்டால், பாயும் புலியான எனக்கு அந்த எச்சரிக்கை சற்றே ஏமாற்றம்தான்.

கப்பினியில் வெள்ளம் பெரும்பரப்பாய் நகர்ந்துகொண்டிருந்தது. அரைக்கடல் என்னுமளவுக்கு இருந்த அந்த நீர்நகர்வு ஒரு சின்னச் சலனம்கூட இல்லாமல் நகர்ந்தது பயங்கரமாக இருந்தது. தண்ணீர்ப் பரப்பில் மஞ்சள் விளக்கொளி படர்ந்து மயக்கிற்று. படித்துறையில் அமர்ந்துவிட்டோம். கங்கை நதி தீரத்தில் பெரும் பாவங்களைக் கழுவ அமர்ந்திருக்கும் பெருவாழ்வினரோ என்னும்படி எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அதற்கும் மேல் அங்கிருக்கத் தகாது என்று கிளம்பிவிட்டோம். இருளும் ஒளியும் கலந்து களைகட்டியிருந்த மைசூரு எங்களை எதிர்கொண்டது.

பசுமையும் தூய்மையும் மிகுந்துள்ள இந்திய நகரங்களில் இரண்டாம் இடத்தை மைசூரு பெற்றிருக்கிறது. முதலிடம் சண்டிகர். மைசூரும் சண்டிகரும் இப்பட்டியலில் அடிக்கடி முதலிரண்டு இடங்களில் மாறி மாறி இடம்பிடிப்பன. மூன்றாமிடத்தில் திருச்சிராப்பள்ளி இருப்பது நமக்கு வியப்புத்தான். இந்தப் பட்டியலில் பாட்னா, மீரட், ராய்ப்பூர் ஆகிய பெருநகரங்கள் எழுபதாம் இடத்திற்கருகில் இருக்கின்றன. இன்றைக்கும் வரலாற்று அழகு குலையாமல் இருக்கின்ற எழிலார்ந்த நகரம் என்றால் அது மைசூருதான்.

இரவில் அறை எடுத்துத் தங்கிவிட்டு, மறுநாள் விடியலில் கிளம்பிவிட்டோம். வழியில் திப்புசுல்தான் ஆண்ட சீரங்கப்பட்டணமும் திரிவேணி சங்கமும் எதிர்கொண்டன.

காவிரி நதி மூன்று இடங்களில் இரண்டாகப் பிரிந்து தன்னால் சூழப்பட்ட தீவுகளை உருவாக்குகிறது. அந்த மூன்றிலும் அரங்கனுக்குக் கோயில்கள் இருக்கின்றன. முதலாவது ஆதிரங்கா… அதுதான் சீரங்கப் பட்டணம். காவிரி தன்னைச் சுற்றிச் செல்வதை அரணாகக்கொண்டே அந்தத் தீவுப் பகுதியில் ஐதர் அலி கோட்டை கட்டிக்கொண்டார். கோட்டைக்குள் பள்ளிவாசலும் உண்டு, ரங்கநாதரின் ஆலயமும் உண்டு. அவரே ஆதிரங்கன். அடுத்தது கொள்ளேகாலத்திற்கு அருகில், சிவசமுத்திர நீர்வீழ்ச்சி விழுவதற்கு முன்னே, காவிரி இரண்டாகப் பிரிந்து தீவு தோற்றுவிப்பது. அதற்கு `மத்திய ரங்கா’ என்று பெயர். மத்திய ரங்காவிலும் ரங்கநாதனுக்கு ஆலயம் உண்டு. ஆனால், இது சிறு கோயிலாக சிற்றூருக்குள் சிக்குண்டிருப்பதுபோல் தோன்றும். இன்றுள்ள பல வைணவ ஆலயங்களின் கேட்பாரற்ற நிலைமைக்கு மத்திய ரங்காவிலுள்ள ஆலயமே சான்று. அடுத்துள்ளது திருச்சிக்கருகில் உள்ள திருவரங்கம். இதுவே பாதரங்கா. இம்மூவாலயங்களில் பாதரங்க ஆலயமே மிகப்பெரிது; புகழ்பெற்றது.

திப்புக் கோட்டையின் உடைந்த மதிலுக்கு வெளியே காவிரித் தண்ணீர், விரட்டப்பட்டதுபோல் விரைந்து ஓடிக்கொண்டிருந்தது. இறங்கி நீராடினோம். சீரங்கப் பட்டணத்துக் காவிரி நல்ல சரிவான நிலப்பரப்பில் ஓடுவதால் தண்ணீர் தேங்கி நகராமல் நீரிவீழ்ச்சிப் பாறையில் குதித்தோடுவது போல் சுழன்று புரண்டு ஓடும். ஆழமென்னவோ கழுத்தளவுதான் இருக்கும். ஆனால் நீரின் நகர்விரைவு ஆளை அப்படியே இழுத்துப் புரட்டிக்கொண்டு சென்றுவிடும். நீச்சலும் நீரியல்பும் அறிந்தவர் என்றால் இறங்கிக் குளிக்கலாம். நான் அந்தப் படித்துறையில் முன்பே பன்முறை நீராடி மகிழ்ந்திருக்கிறேன் என்பதால் நீர்ப்போக்கு தெரியும். காலடியில் நல்ல பாறைக் குடைவு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நன்கு நீராடினேன். மறைந்தோர் கடன் தீர்ப்பவர்களும் துணி துவைப்பவர்களும் நீரடியில் காசு பொறுக்குபவர்களும் குளிப்பவர்களும் அயல்நாட்டுச் சுற்றுலா முகங்களும் மரந்தாவி இறங்கித் திரியும் குரங்குகளும் நாய்க்குட்டிகளுமாக அந்தப் படித்துறை காணற்கினிய காட்சியின் உயிர்ப்போடு இருந்தது. நீராடல் முடிந்து ஹளேபீடுவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

ஹளேபீடு என்றால் `பழைய வீடு’ என்பது பொருள். மேற்குத்தொடர்ச்சி மலைகள், மேற்கில் உயர்முகடுகளாய் நின்றுகொண்டிருப்பவை. அந்த உயரத்திலிருந்து கிழக்கில் மென்மையாகச் சரிந்து, தக்காணப் பீடபூமியில் மேடும் பள்ளங்களுமாக நெளிந்திறங்கி, கிழக்குக் கடலோரங்களில் பரந்த சமவெளியாய் விரிந்திருப்பதுதான் தீபகற்ப இந்தியா வின் நில அமைப்பு. ஹளேபீடு என்னுமிடம் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி நடுநிலப்பரப்பில் அமைந்திருப்பது. அதை நோக்கிய பயணத்தில் நாம் இருக்குமிடம் தக்காணப் பீடபூமியின் தென்முனையில்.

சீரங்கப் பட்டணக் காவிரியைக் கடந்து பெங்களூரு செல்லும் வழியில், அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர்களிலேயே பாண்டவபுரம் என்னும் ஊரை நோக்கி இடது பக்கம் திரும்பினோம். பாண்டவபுரத்திலிருந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறப்பூரும் இராமானுஜர் பத்தாண்டுகளுக்கு மேல் வந்திருந்து பெருமைசெய்த தலமுமான மேல்கோட்டையை அடைந்தோம். மேல்கோட்டையில் நாங்கள் தங்கியிருந்த இரண்டு நாள்களும் தனியாய் நூலெழுதத் தக்க இனிய நினைவுகள். அங்கிருந்து சென்னராயப் பட்டணத்திற்கு அருகிலுள்ள சமணத் தலமான சரவணபெலகோலா சென்றோம்.

சரவணபெலகோலா, ஹளேபீடு, பேலூர் ஆகிய ஊர்களில் பொதிந்துள்ள வரலாறு, இன்றளவும் வரலாற்றாய்வில் ஊக்கமுடையவர்க்குப் புதுப்புதுச் செய்திகளை வழங்குகின்றன.

சென்னராயப்பட்டணத்தைத் தாண்டி மேலும் நகர்ந்தால், மாவட்டத் தலைநகரான ஹாசன் என்று பேரூர் வருகிறது. ஹாசனைப் பார்க்கையில் எனக்குக் கோயம்புத்தூர் நினைவுதான் வரும்.

கோவையைப்போலவே மலைக்காற்றும் இதமான குளிரும் நிலவுகின்ற அழகிய நகரம். போர்த்துகீசிய நகரங்களில் ஒன்றைப்போல, மெல்லிய மலையடுக்கு மேடுகளில் ஏறியிறங்குவது போன்று ஹாசன் நகரம் எனக்குத் தோன்றியது.

ஹாசனிலிருந்து வெளியேறும் அழகிய ஊர்ப்புறச் சாலை நேராக ஹளேபீடுக்குச் செல்வது. `நான் பயணித்த அழகிற் சிறந்த சாலைகளில் ஒன்று’ என்று இதைக் குறிப்பிடுவேன். வழியெங்கும் பெரும்பரப்பிலான வேளாண்மை நிலங்கள் பச்சை போத்தியிருக்க, அவற்றுக்கிடையில் கறுப்புப் பாம்பின் முதுகுபோல் நீளும் சாலை. நான் முற்சொன்னது போலவே ஏற்ற இறக்கமான மேடு பள்ளங்களில் ஏறியிறங்கிச் செல்வது வானத்திலிருந்து தொங்கும் ஊஞ்சலில் ஏறியாடுவதைப் போன்ற கிளர்ச்சியான இன்பத்தைத் தந்தது. வழியில் இரண்டொரு இடங்களில் இறங்கி தேநீர் குடித்தோம்.

வழியில் எண்ணற்ற ஏரிகளும் நீர்த்தேக்கக் குளங்களும் நீர்வழிப்பாதைகளும் குறுக்கிட்டன. ஹளேபீடு என்பது அழகிய ஏரிக்கரையொன்றின் மீது தன்னிகரற்ற பேரெழில் சிவாலயம் அமைந்துள்ள ஊர். அந்த ஏரிக்குத் `துவாரசமுத்திரம்’ என்று பெயர். நாங்கள் செல்லும் சாலை துவாரசமுத்திர ஏரிக்கரையைத் தழுவி ஹளேபீட்டுக் கோயிலின் முகப்பை அடைவதாகும். துவாரசமுத்திர ஏரிக்கரையை அடைந்தபோது பகலும் இருளும் மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தன.

அந்நேரத்தில் அவ்வழியாக ஹளேபீட்டில் வசிக்கின்ற குடிமக்கள் பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்தனர். தாம் வசிக்கின்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் 900 ஆண்டுகளுக்கு முன்பு செல்வச் செழிப்புமிக்க ஒரு முடியரசின் தலைநகரம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால், வாழ்க்கைப் பாடுகளின் சுமைகளோடு ஓடிக்கொண்டி ருக்கும் அவர்களால் இதையெல்லாம் நின்று சிந்தித்து மகிழ்ச்சி யெய்தி வாழ முடியும் என்று தோன்றவில்லை. வாழ்க்கை ஈவிரக்கமற்றது.

தொலைவில் சூரியன் மேற்கில் இறங்கி மறைந்திருந்தான். நாங்கள் ஹளேபீட்டிலேயே அன்றிரவு தங்கிக்கொள்வது என்று முடிவெடுத்திருந்தோம். தங்குவதற்கு எண்ணற்ற விடுதிகள் உள்ள ஊரன்று அது. ஆனாலும், கர்நாடக அரசின் பயணியர் விடுதியொன்று கோயிலுக்கு நேர் பக்கவாட்டில் அமைந்திருக்கிறது. அதற்கு முன்பதிவும் உண்டு. சுற்றுலாப் பயணியரின் கூட்டமிருந்தால் அவ்விடுதி கிடைக்காது. அருள்நிலையாளராய் ஆட்சி செலுத்திய ஹொய்சாளர்களின் தலைநகரில் அன்றிரவு தங்க வாய்க்கட்டும் என்று வேண்டிக்கொண்டு ஹளேபீட்டில் நுழைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.

நாங்கள் அஞ்சியதைப்போல் அல்லாமல், அந்தத் தங்கும் விடுதி கேட்பாரற்றே கிடந்தது. பெரும்பாலும் உள்ளூர்க் கன்னடர்கள் ஹளேபீடுவைப் பார்க்க வருவதில்லை. நம்மைப்போல் நெடுந்தொலைவிலிருந்து வரும் பயணிகளே மிகுதி. அவர்கள் பல்வேறு ஊர்ச்சுற்றுலாத் திட்டங்களோடு வருவதால், அருகில் இருக்கும் நகரமான பேலூரிலேயே தங்கிக்கொள்கிறார்கள்.

ஓடு வேயப்பட்டிருந்த விடுதியறையில் கூரைக்கு அலங்காரம் செய்து அருமையாக வைத்திருக்கிறார்கள். இரவு உணவை அங்கேயே வாங்கி வரச்சொல்லி முடித்துக்கொண்டோம். நள்ளிரவு கனத்த இருளைக் கொட்டியபடி இருந்தது. நாங்கள் தங்கியிருந்த வளாகத்தின் சாலைக்கு அப்பால்தான் ஹொய்சாளேஸ்வரர் கோயில். இவ்விரவில் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை. கோயில் முழுக்கவும் தொல்லியல் காப்புத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பினால் காப்புச் செய்யப்படவேண்டிய தொல்பழஞ் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்தே காண்போம் என்று வெளிவந்தோம்.

மதிற்சுவரை ஒட்டி நடந்ததில் உள்ளே இரண்டொரு விளக்குகளின் ஒளியில் கோயில் கறுத்துத் தென்பட்டது. இதே கி.பி.1180 ஆக இருந்திருந்தால், இந்த வளாகத்தில் ஆயிரம் நெய்விளக்குகள் ஒளிர்ந்திருக்காதா என்ற கற்பனை பிறந்தது. ஹொய்சாளேஸ்வரர் கோயிலை நேரில் கண்டு விளக்கும் நாவலாசிரியர் கே.வி.ஐயர் அந்தக் காட்சியை, ‘அமரர் உலகிலிருந்து இப்பூவுலகிற்கு இழிந்து வந்ததைப் போலிருந்ததாக’ வியக்கிறார். மண்ணில் எழுகின்ற பேரெழில் நிலையங்கள் கலைகளின் வழியாகக் கோயிலில் நிலைகொண்டுள்ளதை கே.வி.ஐயரின் விவரிப்பில் படித்துத் துய்க்க வேண்டும். நடையை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். கே.வி.ஐயர் எழுதிய ‘சாந்தலை’ என்னும் புதினம் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. இக்கோயில் வரலாற்றை விவரித்து எழுதப்பட்ட அற்புதமான புதினம் அது.

ஹளேபீட்டுக் கோயிலை வைகறை முடிந்தவுடனே காலை ஆறு மணிக்குத் திறந்துவிடுகிறார்கள். காலை ஆறு மணி முதல் ஒன்பது பத்து வரை கோயிலுக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் அருகிலுள்ள பேலூரில் தங்கியிருக்கும் அவர்கள் கிளம்பி, உண்டு முடித்து வந்து சேர்வதற்குப் பத்து மணியாகிவிடும். நாங்களோ கோயிலுக்கு எதிரிலேயே தங்கியிருக்கிறோம். கோயில் வாயில் திறக்கப்பட்டவுடன் முதல் ஆளாகச் சென்று நுழைவது என்ற தீர்மானத்தோடுதான் உறங்கினோம். அவ்வாறே அதிகாலையில் எழுந்து ஆளாளுக்குக் கிளம்பிவிட்டோம்.

விரைவாய் நடந்து இரும்பு வாயிலை அடையவும் அவர்கள் திறந்துவிடவும் சரியாக இருந்தது. முன்னுள்ள பச்சைப் புல்வெளியைக் கடந்து பாதசாரிகளின் தடத்தில் ஏகினால் அந்தக் கல்லெழிற்கோலக் கோயில் பிரமாண்டமாய் வாய் திறந்து நிற்கிறது. கி.பி.1170-களில் ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனும் சாந்தலா தேவியும் அருள்செய் ஆண்டவனுக்குப் பக்திப் பெருக்கில் கட்டிமுடித்த கலைப்பெரும் கனகக் கூடம் அக்கோயில். பிற கோயில்களில் உள்ளதைப்போல் கருவறையில் கோபுரம் இருக்காது. கோயில் முழுக்கவே அழகிய கலைக்கூடம்போல் பெரும் மண்டபமாய் அமைத்து எழுப்பியிருக்கிறார்கள். ஹொய்சாளேஸ்வரர், சாந்தலேஸ்வரர் என்னும் இரண்டு இறைக்கருவறைகள் உள்ளே உள்ளன.

கருவறைக்கு நேரெதிரில் கோயிலின் நடுமத்தியில் வட்டக்கல் மேடைபோன்று ஒன்று இருக்கிறது. அந்த வட்டக் கல் மேடையில்தான் பக்திப்பெருக்கில் ஹொய்சாள அரசி ‘சாந்தலா’ தன் உடலை வருத்தி இறையருளை நோக்கி நடனமாடினாள். சுற்றிலும் கலைக்காக உயிரைத் தரும் பார்வையாளர்கள் குழுமியிருக்க, தேவி ஆடிய நடனத்தை அந்நாடே மெச்சியதாம். ‘எங்கேனும் கற்பரசிக்கென்று ஒரு கல்நடுவார்களேயானால் அது சாந்தலையின் உருவத்தில் தான் இருக்கவேண்டும்’ என்று கே.வி.ஐயர் உருகுகிறார். இறைபக்தியும் கலைவேட்கையும் ஒருங்கே கூடி உருவான அந்த ஆயிரமாண்டுப் பழம்பெருமையின் அதே நிழலில் நானும் நிற்கிறேன் என்பதை உணர்ந்தபோதே உடலெங்கும் சிலிர்த்தது.

இளங்காலையின் பொன்வெய்யில், கோயிலின் கிழக்குத் திக்கில் தங்கத் துகள்களைப் பூசியதுபோல் படிந்திருந்தது. கோயிலின் முகப்புக் கற்படிகள்மீது ஏறினோம். ஆனால், உண்மையில் அவை அசைவற்றிருக்கும் மலர்த்தளங்கள்.

கோயிலைச் சுற்றிலும் பல்முனையங்களால் ஆன நடைமேடை ஒன்று ஐந்தாறடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் பக்கவாட்டுச் சுவர்களில் சுண்டுவிரல் உயரத்திலிருந்து ஆறடி ஆள் உயரம் வரையிலான ஆயிரக்கணக்கான சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன. படை அணிவகுப்புகள் முதற்கொண்டு, புராண இதிகாசக் காட்சிகள் தொட்டு, குடிமக்கள் தோற்றங்களோடு, நாய், பூனைகள், பறவைகள், விலங்குகளின் ஆயிரமாயிரம் சிற்பங்களின் திரண்ட அணிவரிசை. இதைச் செய்த சிற்பிகள் ஓராயிரம் பேர் இருக்கக்கூடும். ஒரு கோயிலை ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒருங்குகூடிச் செதுக்குகிறார்கள் என்றால் அந்நாட்டின் செல்வ வளம் எத்தகையதாய் இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.

விஷ்ணுவர்த்தன், அரசாட்சியின் மீது ஆர்வமற்றிருக்கும் வேளையில் அவரைத் தேற்றும் ராஜமாதா. `குழந்தைகளைப் போன்ற நம் குடிமக்களை நாம்தான் கண்போல் காக்க வேண்டும். நாம் அவர்களை மறந்த நேரத்தில் கொடுங்கோலன் யாரேனும் ஒருவனின் ஆட்சிக்கு ஆட்படுவார்களேயானால், அந்த அறியாத மக்கள் படும்பாட்டை நினைத்துப் பாரப்பா...’ என்று தேற்றுகின்ற காட்சியை கே.வி.ஐயர் எழுதுகிறார். கொடுங்கோன்மையிடமிருந்து தம் மக்களைக் காக்கவே ஆட்சிக்கு வந்து ஆள்கின்ற அரசன் எத்தகைய அருளாளனாக இருக்க வேண்டும்..! அவனுடைய காலத்தில் கல்லில் கலை பூப்பதை யார் தடுக்க முடியும்?

சுற்று நடைமேடையின் ஒவ்வொரு சிற்பங்களாகக் கண்டுகொண்டே வந்தோம். கிழக்குப் பகுதியில் சிவன் கோயிலுக்கேயுரிய இரண்டு நந்தியுருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. நந்திகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. நந்தி மண்டபம் அமைக்கப்பட்டு அதன் ஓரங்களில் மக்கள் சாய்ந்தமர்வதற்கான கல் இருக்கைகளும் உள்ளன. விஷ்ணுவர்த்தனின் காலத்தில் அங்கே அரசர் அமர்ந்து சபை கூட்டியிருக்க வேண்டும். அத்தகைய உயர்வான சாய்வு இருக்கைகள். சாய்வு இருக்கையில் நான் தணிந்தமர்ந்து கொண்டேன். வரலாற்றின் அழகிய மீதத்தின்மீது இக்காலத்தின் சிறு துரும்புக்கும் இடம் உள்ளதை நினைத்துக் கொண்டேன்.

கோயிலைச் சுற்றிவந்து சிலைகளின் பேரெழிற்கோலத்தைக் கண்டோம். எங்களைத் தவிர, கோயிலில் யாருமே இல்லை. அந்தத் தனிமையே காலக்குழப்பத்தை ஏற்படுத்தப் போதுமானதாய் இருந்தது. கோயிலுக்குள் நுழைந்ததும் சாந்தலாதேவி இறைவனை எண்ணி நடனமிட்ட கலைத்தடம் பதிந்த வட்டக் கல்மேடையில் கையணைத்துப் படுத்துக்கொண்டேன். பேருருவப் பூவொன்றின் கறுத்த இதழ்போன்ற அக்கல்லின் குளுமை நரம்புக்குள் ஊடுருவிற்று. சுவரிலுள்ள பூவடிப்புகளில் நுழைந்த சூரியக் கதிர்கள் உள்ளழகுக்கு உயிரூட்டின. சுற்றிலுமிருந்த மேடைகளில் அமர்ந்து பார்த்தேன். காலத்தின் வேறொரு கட்டத்தில் இருக்கின்றோமோ என்ற மயக்கம்தான் மிகுந்தது.

தூண்கள் ஒவ்வொன்றையும் வட்ட வளையங்கள் வடிக்க எவ்வாறு கடைந்தெடுத்திருப்பார்கள்? அதுவே ஓர் அதிசயம்தான். பிரியவே மனமில்லாமல் கோயிலைவிட்டு வெளியே வந்தோம்.

புல்வெளியில் கைவிடப்பட்ட பாகுபலிச் சிற்பமொன்றை நிறுத்தியிருக்கிறார்கள். அருங்காட்சியகமும் உண்டு. இந்த மகத்தான கலைக்கோட்டம்தான் பதினான்காம் நூற்றாண்டில், மாலிக் கபூரினால் கொள்ளையடிக்கப்பட்டு சிலைகள் கோரமாக்கப்பட்டன என்பதும் வரலாறு. அதன்பிறகு இந்தக் கோயில் கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்த கற்குவியலாய் பன்னூறாண்டுகள் இழிந்திருந்தது. அந்நேரத்தில் உள்ளூராரும் அங்குள்ள சிற்பங்களின் அருமையுணராமல் மூளியாக்கினர் என்பதும் உண்மை.

ஹொய்சாளேஸ்வரர் கோயிலைவிட்டு நீங்கி வெளியே வந்தோம். அங்கிருந்து தென்புறமாக இரண்டு கிலோமீட்டர்கள் சென்றால் ஒரு சமணக் கோயில் இருக்கிறது. பர்சவநாதர், சாந்திநாதர் ஆகிய சமணர் திருவுருவங்கள் கோயிலுக்குள் உள்ளன. காதல் ஓவியம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இக்கோயில் இடம்பெற்றது என் நினைவுக்கு வந்தது. இந்தக் கோயிலை அறிந்தோர் தவிர்த்துப் பிறர் எட்டியே பார்ப்பதில்லை. கோயிலுக்கு நேரெதிரில் அழகிய சிற்றூர்க் குடியிருப்பு உள்ளது.

அங்கிருந்து சிறிது தொலைவு வேளாண்மை நிலங்களின் ஊடாகச் சென்றால் மற்றொரு சிவன் கோயில் இருக்கிறது. கேதாரேஸ்வரர் கோயில் எனப்படும் அது தனிமையிலும் தனிமையாய் வெய்யிலில் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா’ என்று பாரதிதாசன் கூறியதற்கொப்ப இருக்கிறது. நாங்கள் சென்றபோது வெள்ளைக்காரத் தம்பதி இருவர் வந்திருந்தனர். அவர்கள் அந்தக் கோயிலுக்குக் கால்நடையாகவே வந்திருந்தனர் என்பதுதான் எங்களை வெட்கமுறச் செய்தது.

அங்கிருந்து கிளம்பி பெலவாடி, பேலூர் ஆகிய ஊர்களின் அழகிய கோயில்களைக் கண்டு ஊர் திரும்பினோம்.

கண்களுக்குள் இன்றும் ஹளேபீடு கோயிற் சிற்பங்கள் களிநடம்புரிகின்றன. ஊழ்வினைப் பயனால்தான் கலைக்கோட்டத்தின் கல்லெழிற்கோலம் காண வாய்த்தது.