Published:Updated:

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!
பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

பயணம்பொன்.செந்தில்குமார் - படங்கள் பொன்.காசிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

ன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்டதுபோல பளிச் என்று இருக்கிறது பினாங்கு. மலேசிய நாட்டில் உள்ள குட்டி மாநிலம் இது. மாதம் மும்மாரி அல்ல; வாரம் மும்மாரி பெய்துகொண்டே இருக்கிறது. இதனால், எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சை பசேல்தான்! சின்னச் சின்ன மலைகளும் பசுமை போர்த்திய வயல்களும் கேரள மாநிலத்தை நினைவூட்டுகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பினாங்கு, சில பல ஸ்பெஷல் விஷயங்களால் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

இந்த மாநிலத்துக்கு இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று, பினாங்குத் தீவு; மற்றொன்று பட்டர்வொர்த் என்கிற நிலப்பரப்புப் பகுதி. மாநிலத்தின் தலைநகர் பெயர் ஜார்ஜ் டவுன். அழகிய கட்டடங்கள் உள்ள இந்த நகரை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் துறைமுகம் ஆவதற்கு முன்பே, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வரியில்லாத் துறைமுகமாக இருந்துள்ளது பினாங்கு. இதனால், பூகோள ரீதியில் முக்கியப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கிறது. 

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!பினாங்குத் தீவின் பெயரில் உள்ள 'பினாங்’ என்பது பாக்கைக் குறிக்கும் சொல். அங்கு பாக்கு மரங்களும் அதிகம்; பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது. பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான். ஒரு காலத்தில், 'பினாங்குத் தீவில் பாக்கு காயவைக்கும்போது, அங்கு வரும் காக்கைகளை விரட்டுவதற்கு ஆள் தேவைப்படுகிறது’ என்று சொல்லியே, தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் கூலி வேலைக்கு ஆள் கூட்டிவருவார்களாம். பாறையும் குன்றுமாகக் கிடந்த பகுதியை, வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களாகவும் செல்வம் கொழிக்கும் பூமியாகவும் மாற்றியதில் தமிழர்களின் பங்கு மகத்தானது.

ஊரைச் சுற்றிப் பார்க்கும் முன்பு, அதன் வரலாற்றுப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். மலேசியாவும் நம்மைப் போலவே ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துள்ளது. நமக்குச் சுதந்திரம் கொடுத்துப் பத்து ஆண்டுகள் கழித்துதான் மலேசியாவுக்கு 1957-ம் ஆண்டு, போனால் போகட்டும் என்று சுதந்திரம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கடாரம் பகுதியை வெற்றிகொண்டதை வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்போம். இப்போதும் அதற்கான ஆதாரங்கள் நிறையவே அங்கு உள்ளன. 1800-ம் ஆண்டுவாக்கில், தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளுக்குத் தோட்ட வேலைக்குத் தமிழர்களைக் கொண்டுசென்றுள்ளனர் ஆங்கிலேயர்கள். அந்தச் சமயத்தில் ஒரு கப்பல் மலேசியாவுக்கும் சென்றிருக்கிறது. அப்போது பாக்குக் காய்களைக் கொத்த வரும் காக்கைகளை விரட்டச் சென்ற தமிழர்களின் வம்சாவளியினர்தான் இப்போது அங்குள்ளார்கள். தமிழர், தெலுங்கர், கன்னடர், குஜராத்தியர் என இந்தியர்களின் எண்ணிக்கை இப்போது அதிகம்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

மலேசியா இஸ்லாம் சமய நாடு. ஆனாலும், தமிழ் மொழியைப் படிக்கவும், இந்துக் கோயில்களைக் கட்டிக்கொள்ளவும் தமிழர்களுக்கு அனுமதி அளித்துள்ளது மலேசிய அரசு. பூர்வீக மக்களான மலாய் மக்களுக்கு அடுத்தபடியாக சீனர் மற்றும் இந்தியர்தான் மக்கள் தொகையில் அதிகமாக உள்ளனர்.

பட்டர்வொர்த் பகுதியில் இருந்து பினாங்குத் தீவைப் பார்த்தால், கருவிழி பச்சையாக மாறிவிட்டதோ என ஐயமுறும் அளவுக்குக் கண்களில் பசுமை நிரம்பும். பினாங்குத் தீவையும் பட்டர்வொர்த் பகுதியையும் இணைக்கும் பாலம் ஒன்றை 1988-ல் கட்டியிருக்கிறார்கள். இதன் நீளம் 13 கி.மீ. மாலை நேரத்தில், பாலத்தில் காரை ஓரம் கட்டிவிட்டு கடல் அலைகளை நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!பட்டர்வொர்த்தில் இருந்து பினாங்கு தீவுக்கு வருவதற்கு ஃபெர்ரி (திமீக்ஷீக்ஷீஹ்) என்ற ஒரு வகைக் கப்பல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை இக்கரைக்கும் அக்கரைக்குமாகப் போய் வருகிறது. கார், பைக் என்று சகலத்தையும் அதில் ஏற்றி இறக்கிக்கொள்கிறார்கள்.

30 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம், வெகு சுவாரஸ்யம். கடலில் நீந்தும் 'ஜெல்லி’ மீன்களை ரசித்துக்கொண்டே கப்பலில் பயணிக்கலாம். மாலை நேரத்தில் குளிர்ந்த கடல் காற்றும் தூரத்தில் தெரியும் பசுமை போர்த்திய மலையும், பார்வைக்கும் மனதுக்கும் இதமும் இனிமையும் சேர்க்கின்றன.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

பினாங்கு பகுதிக்குச் சுற்றுலா செல்வதாக இருந்தால், ஜூலை முதல் அக்டோபர் வரை ஏற்ற நேரம். அதுவும், ஜூலை மாதத்தில் 'துரியன்’ பழ விழாவை அரசு சார்பில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். மலேசிய அரசின் அதிகாரபூர்வமான பழம் துரியன் என்பதால், அரசு சார்பில் ஒரு வாரம் விழா எடுக்கிறார்கள். பார்ப்பதற்குச் சிறிய பலாப் பழம் போல இருக்கிறது துரியன்.

இந்தப் பழம் நம் நாட்டிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக, கேரள பகுதிகளில் விளைகிறது. ஆனால், நம் ஊரில் இந்தப் பழத்தை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்பே பதிவு செய்துகொண்டால்தான் கிடைக்கும். யானை, விலை குதிரை விலை சொல்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள் இதைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்கிற சங்கதிதான் இதன் டிமாண்டுக்குக் காரணம். துரியன் பழத்தைச் சாப்பிட்டால் கருப்பை பலப்படும், ஆண்மை அதிகரிக்கும் என்று இதற்குச் சாதகமாக மருத்துவ ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால்தான் துரியன் பழத்துக்கு இவ்வளவு கிராக்கி! இந்தியாவில் துரியன் பழம் கிடைக்காதவர்கள் பினாங்கு சென்றால், குறைந்த விலையில் ஆசைத் தீர ருசித்துவிட்டு வரலாம். துரியன் பழம் சாப்பிட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் வாய் திறந்து சொல்லவேண்டாம். அடுத்த நான்கு நாட்களுக்கு உங்கள் உடல் முழுக்க துரியன் பழ வாசனை தூக்கி அடிக்கும். பினாங்குப் பகுதியில் சிலர் இதன் நெடி தாங்காமல், 'அய்யோ சாமி, ஆளை விடுங்க!’ என்று எகிறிக் குதித்து ஓடுகிறார்கள். என்ன இருந்தாலும், துரியன் பழத்தைச் சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

பினாங்கில் மட்டுமே இருக்கும் பிரத்யேக வாகனம், நம் ஊர் சைக்கிள் ரிக்ஷா போல இருக்கிறது. ஏறி உட்கார்ந்தால், ஆடாமல் குலுங்காமல் செல்கிறது. ஊரைச் சுற்றிப் பார்க்க ஏற்ற வாகனம்.

தண்ணீர் மலைக்குப் போகாமல் வந்தால், நாம் தமிழர்களே அல்ல. காரணம் அங்குதான் தமிழ்க் கடவுள் முருகன் குடிகொண்டுள்ளார். தைப்பூசம் அன்று, கடல் அலை போல மக்கள் கூடும் இடம் இது.

அடுத்து, கொடிமலை. சுற்றுலாத் தலமான இங்கு மதிய நேரத்திலும் ஜில்லென்ற குளிர் முகத்தை அறைகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள கோயிலில், கடல் கடந்து வந்து  புன்னகை புரிகிறார் புத்தர். இந்த புத்தர் ஆலயத்தில் பர்மா, தாய்லாந்து மற்றும் சீன வகை புத்த வழிபாட்டு பூஜைகள் தினமும் நடக்கின்றன. தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புத்த பீடம் மிக அற்புதம். பல பூஜை மண்டபங்களும் தியான அறைகளும் உள்ளன. இறந்தவர்களின் அஸ்தியை இந்தக் கோயிலில் வைத்தால் அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான அஸ்திகள் நிரம்பியுள்ளன. ஒரு அஸ்தி கலசத்தை இங்கே வைப்பதற்கு நமது மதிப்பில் ஐந்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இங்கு செல்ல, செங்குத்தான நீண்ட படிகளில் ஏற வேண்டும். இந்த புத்தர் கோயிலின் இன்னொரு சிறப்பு, இங்கிருக்கும் ஆமைக் குளம். நூற்றுக்கணக்கான ஆமைகளை இங்கு குளங்களில் வைத்து வளர்க்கிறார்கள். பெரிய பெரிய ஆமைகள் மிதக்கும் பாறைகள் போன்று இங்கும் அங்குமாக நகர்ந்துகொண்டிருக்கின்றன.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!அடுத்துப் பார்க்க வேண்டிய இடம் பட்டர்ஃபிளை பார்க். வண்ணத்துப் பூச்சிகளின் உடம்பில் இயற்கை விதம்விதமான ஓவியங்கள் வரைந்து வைத்திருப்பதை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். படபடக்கும் பட்டாம்பூச்சிகளின் அழகைப் படம் பிடிக்க, எந்நேரமும் கேமராக்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன.

மலேசியா செல்பவர்கள் அங்குள்ள தமிழர்கள் பேசுவதை ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். காரணம், 'என்னலா செய்றீங்க?, 'வாங்கலா போகலாம்!’ என்று எல்லாவற்றுக்கும் 'லா’ போடுகிறார்கள். ''மலாய் மொழியில் 'லா’ என்ற எழுத்தின் பயன்பாடு மிக முக்கியமானது. ஒரு வாக்கியத்துக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்கும், பேசுகிறவர்களுக்கு இடையே அன்னியோன்னியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த இணைப்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், தமிழ் மொழியுடனும் இந்த 'லா’ ஒட்டிக்கொண்டுள்ளது'' என்கிறார் பினாங்கில் வசிக்கும் பேராசிரியர் ரா.சிவக்குமார்.

மலேசியாவில் நமது பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு ரசிகர்கள் அதிகம். பினாங்கு நகரத்தின் முக்கியப் பகுதியில் உள்ள 'லிட்டில் இந்தியா’வில் ''மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...'' என்று தமிழின் பெருமையைக் காற்றலைகளில் ஓயாமல் பரப்பிக்கொண்டிருக்கிறார் டி.எம்.எஸ். நாம் இருப்பது தமிழ்நாடா, மலேசியாவா என்று குழம்பும் அளவுக்கு எங்கும் தமிழ், எதிலும் தமிழ்! கும்பகோணம் டிகிரி காபி, ஜில்ஜில் ஜிகிர்தண்டா... என தமிழ்நாட்டு விஷயங்கள் அத்தனையும் தெரு முழுக்கப் பரவிக்கிடக்கின்றன. அனிதா, ஹனீபா, உமையாள், குமரன்... எனக் கடை வாசலில் தமிழ் எழுத்துக்கள் மின்னுகின்றன. இந்தப் பகுதியை 'லிட்டில் இந்தியா’ என்று சொன்னாலும், தமிழ்நாட்டு உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கவரிங் கடைகள் எனத் தமிழ்வாசம்தான் அதிகம் வீசுகிறது. தெருவில் சிவப்புக் கலர் பாவாடை, பச்சைக் கலர் லுங்கி, சல்லிசான விலையில் நைட்டி... என சென்னை ரங்கநாதன் தெருவையும் ஞாபகப்படுத்துகிறார்கள்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

இங்குள்ள ஹோட்டல்களுக்குச் சென்றால், ''என்னண்ணே வேணும்? சைவக் கோழியா, சைவா ஆடாண்ணே?'' என்று கேட்கிறார்கள் தென் மாவட்ட சர்வர்கள். புதிதாக மலேசியா செல்பவர்கள் நிச்சயம் 'அதென்ன சைவக் கோழி?’ என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

''பினாங்கு பகுதியில் சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள். மீல்மேக்கர் மூலம் தயாரிக்கப்படும் மாவுப்பொருளைக் கொண்டு, கோழித் தொடை மற்றும் ஆட்டுக் கறித் துண்டு வடிவில் சைவக் கோழி, சைவ ஆடு என்ற பெயரில் சமைத்துக் கொடுக்கிறார்கள். அதில் அதிகமான மசாலா, ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகையால், அந்த உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பதுதான் உடலுக்கும் பணத்துக்கும் நல்லது!'' என்று எச்சரிக்கை விடுக்கிறார், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரியான  என்.வி.சுப்பாராவ்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!

தொடர்ந்து அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது. ''மலேசியாவில் உள்ள தமிழர்கள் கல்வி, தொழில், சேவை என சகல துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஆனால், சினிமாவும் தொலைக்காட்சியும் இளைய தலைமுறையைக் கெடுத்து வருகின்றன. ஆகையால், அதன் தாக்கத்தில் இருந்து இளைய சமுதாயத்தைக் காக்க, நண்பர்களுடன் சேர்ந்து 'சுய மெய்யறிவகம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் குழந்தைகளுக்குத் திருக்குறள் தொடங்கி சித்தர்களின் ஞான நெறி விளக்கம் வரை, தமிழர்களின் அறிவுப் பொக்கிஷத்தைப் பக்குவமாகப் பயிற்றுவிக்கிறோம். மொழி, கலாசாரம், வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் முதன்மையானது தமிழ்க் கலாசாரம். அதை, வரும் தலைமுறையினர் மறக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிற மாநிலங்களிலும் இதுபோல் தொடங்கச் சொல்லி அழைப்புகள் வருகின்றன'' என்றார் சுப்பாராவ்.

பினாங்கு சென்றுதான் லங்காவி தீவுக்குச் செல்ல வேண்டும். ஆகையால், சுற்றுலா செல்பவர்கள், பினாங்கில் இரண்டு நாள் சுற்றிவிட்டுத்தான் லங்காவிக்குப் பறக்கிறார்கள். அப்படி லங்காவி செல்வதற்குக் காத்துக்கொண்டிருந்தனர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர். ''எனக்குச் சொந்த ஊர் சென்னை. மாநகர பேருந்தில் கண்டக்டர் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆகிட்டேன். சின்ன வயசில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். கஷ்டம் அதிகமாகும்போதெல்லாம், 'வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி, மலேசியா, சிங்கப்பூர்னு உலகத்தைச் சுத்திப் பார்க்கணும்னு நினைப்பேன். இப்போ என் பசங்க படிச்சு நல்ல வேலையில் இருக்காங்க. சாதாரண டிரைவரா இருந்தாலும், உலகத்தைச் சுத்திப் பார்க்கணுங்கிற எண்ணம்தான், என்னை கஷ்டத்தைக் கடந்து வரவெச்சிருக்கு'' என்றார் சதாசிவம்.

பசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு!''சொன்னா நம்பமாட்டீங்க... இந்த வெளிநாட்டுப் பயணத்தில் என்னோட வயசே குறைஞ்சு போன மாதிரி இருக்கு. இன்னும் நிறையத் தெரிஞ்சுக்கணும், கத்துக்கணும்கிற ஆசையை உருவாக்கியிருக்கு. இப்படி உலகத்தைச் சுத்திக் கத்துக்கிறதுதான் மனுஷனுக்குப் பயனுள்ள கல்வி!'' என்று உணர்ச்சிவசப்பட்டார் செல்வராஜ். இவர் கர்நாடகாவில் இரும்பு வியாபாரம் செய்கிறாராம்.

உண்மைதான்! சுற்றுலாவும் கடல் பயணமும்தான் தமிழர்களின் பரந்த அறிவுக்கும் விரிந்த மனத்துக்கும் காரணம். அதனால்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’, 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’ என்று நமது முன்னோர் சொல்லிவைத்திருக்கிறார்களோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு