Published:Updated:

மனிதக்காட்சி சாலை!

பயணக் கட்டுரை - படங்கள் பொன்.காசிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

வாழ்க்கைப் பயணத்தின் சுவையே வழிப் பயணங்களில்தானே இருக்கிறது! அதிலும், கேமராதான் வாழ்க்கை எனும் புகைப்படக்கலைஞர்களுக்கு உலகம் முழுக்க ஒருமுறையேனும் சுற்றிவருவது வாழ்நாளின் பெருங்கனவு. அந்தக் கனவை சமயம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நனவாக்க முயற்சிப்பேன். அந்த முயற்சியில் ஒன்றுதான் 'மசாய் மாரா’ பயணம்.

மனிதக்காட்சி சாலை!

மேற்கு ஆப்பிரிக்கா, தான்சானியாவில் சுமார் 15,000 சதுர கி.மீட்டர் பரப்பளவுள்ள செரங்கெட்டி என்னும் தேசிய உயிரியல் பூங்கா இருக்கிறது. அதில் பத்தில் ஒரு பகுதி, அதாவது, 1,500 சதுர கி.மீட்டர் கென்யா பகுதியில் இணைந்திருக்கிறது. அந்த இடம்தான், 'மசாய் மாரா’ தேசிய உயிரியல் பூங்கா. மாரா என்பது ஆறு. அதையும் அங்கு வசிக்கும் மசாய் இன மக்களையும் இணைத்து - மசாய் மாரா.

மனிதக்காட்சி சாலை!

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து தென்மேற்கில் 270 கி.மீட்டர் தொலைவில் நரோக் மாகாணத்தில் இருக்கிறது இந்த மசாய் மாரா. பெயரை வைத்து, அங்கு நிறைய மரங்கள் இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஜீரோ மதிப்பெண். அங்கொன்றும் இங்கொன்றுமாக உடை மரங்கள் (ணீநீணீநீவீணீ tக்ஷீமீமீ) மட்டுமே தென்படுகின்றன. அவ்வளவு ஏன்..? காடே அத்தனைப் பச்சையாக இல்லை. மஞ்சள் புல் அடர்த்தியாக வளர்ந்து படர்ந்திருப்பதால், அதனை மஞ்சள் நிறக் காடு என்று அழைக்கலாம்.

மனிதக்காட்சி சாலை!

வன விலங்குகள் சர்வ சுதந்திரமாக உலவும் இடம் என்பதுதான் மசாய் மாராவின் ஸ்பெஷல்! சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்பார்களே, அதைப்போல அந்த வன விலங்குகளை அவை சுதந்திரமாக உலவும் இடத்திலேயே பார்க்க விரும்பி, ஆறு பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் பயணமானேன்.

மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய் சில மிருகங்களை ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு வந்தால், அந்த இடம் மிருகக்காட்சி சாலை; எனில், கூட்டம் கூட்டமான மிருகங்கள் தங்களைத் தேடி வரும் சில மனிதர்களை வியப்போடு பார்த்தால், அதை 'மனிதக்காட்சி சாலை’ என்று சொல்லலாம்தானே?

மனிதக்காட்சி சாலை!

அது, ஒரு வார சுற்றுலா. சென்னையில் இருந்து அபுதாபி; அபுதாபியில் இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி; பின்பு, அங்கிருந்து பிரத்யேக வேனில் மசாய் மாரா என எங்கள் பயணம் நீண்டது. காட்டுக்குள் விலங்குகளின் அருகே செல்வதற்கென்றே கூரைப் பகுதியில் திறந்தவெளியாக அமைக்கப்பட்ட அந்த வேனை 'கோம்பி’ என்கிறார்கள். நாலாப்புறமும் திரும்பி போட்டோ எடுக்க வசதியாக இருக்கிறது.

மனிதக்காட்சி சாலை!

நைரோபியில் இருந்து 270 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் மசாய் மாராவை அடைய ஆறு மணி நேரப் பயணம் அவசியம். சற்றே நெடும் பயணம். தவிர, அந்தப் பயண வழிச் சாலை அத்தனைச் சிறப்பாக இல்லை என்றாலும், அது ஒரு பெரிய விஷயமாக நமக்குத் தோன்றாது. காரணம், மிகப் பெரிய விருந்துக்கு முன் பசியைத் தூண்ட ஒரு ஸ்டார்ட்டர் கொடுப்பார்களே, அதைப்போல அந்த மிகப் பெரிய காட்டைத் தொடுவதற்கு முன்பே, வழியில் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் நடமாடும் 'வைல்ட் பீஸ்ட்’ என்ற வெண் தாடி மாடுகளும் வரிக்குதிரைகளும் நம் கவனத்தை மொத்தமாகத் தங்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. நம் ஊர் நாய்களைப்போல அங்கே வழியெங்கும் வரிக்குதிரைகள் திரிகின்ற காட்சி இருக்கிறதே... அது கலக்கல்!

மனிதக்காட்சி சாலை!

காட்டில் நுழைய ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 70 டாலர் கட்டணம். நம்ம ஊர் மதிப்பில் 4,200 ரூபாய். உள்ளேயே தங்கும் வசதிகளோடு ரிசார்ட்கள் உண்டு. அதற்கு நாள் ஒன்றுக்கு வாடகை கிட்டத்தட்ட 10,000 ரூபாய். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நான்கு மாதங்கள் இந்தக் காட்டைச் சுற்றிப் பார்க்க ஏற்ற காலம். ரசீது பெற்றுக் காட்டில் நுழைந்தோம்.

மனிதக்காட்சி சாலை!

வனம், ஐந்தறிவு ஜீவன்களின் வீடு. நாம் அங்கே பார்வையாளர்கள்தான். அதனால் சப்தம் கூடாது, கேமரா வெளிச்சம் விலங்குகள் மீது விழக் கூடாது என்று நிறைய 'ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்’. அந்தக் கட்டுப்பாடுகளைக் கடக்காதவரை அருமையான காட்சிகள் காணக் கிடைக்கும் என்பதை அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்.

மனிதக்காட்சி சாலை!

பெரும்பாலும் டிரைவர்தான் கைடு வேலையும் பார்க்கிறார். வேனை ஓட்டியபடியே காட்டு ஜீவன்கள் பற்றி வாய் ஓயாமல் குறிப்பு கொடுத்துக்கொண்டே வருகிறார். மசாய் மக்களுக்கு ஸ்வாஹிலி (sஷ்ணீலீவீறீவீ) என்ற பிரத்யேக மொழி இருந்தாலும், ஆங்கிலமும் சரளமாகப் பேசுகிறார்கள். அதனால், அங்கே மொழி ஒரு பிரச்னை இல்லை.

காட்டை எட்டித்தொடும் கிட்டத்தில் சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்தேன். அலட்சியப் பார்வையை வீசி 'அவ்வ்வ்...’ என ஏப்பமிட்டுச் சென்றது ஒரு நரி. வன விலங்குகள் அப்பிராணிகளாகச் சுற்றுவது இங்கே ஆச்சர்ய காட்சி! அசைவ விலங்குகளே இத்தனைச் சாந்தமாக இருக்கின்றன என்றால், சைவப் பிராணிகளை என்ன சொல்வது?! மஞ்சள் புல்லை மேயும் ஆயிரக்கணகான மான்கள் கூட்டம், வேனின் மேலே வெளியே தலை நீட்டி நிற்கும் நம்மை அருகில் வந்து தலைகுனிந்து பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி, செல்லமாகச் சண்டையிடும் மான்கள், மரத்தில் தாவி ஏறுவதும் குதித்து இறங்குவதுமாக சாப்பிட்டதை ஜீரணிக்க முயற்சிசெய்யும் சிறுத்தைக்குட்டி, திடீரென மணல் பொந்துகளில் இருந்து புறப்படும் காட்டுப்பன்றி, இடுப்பை ஆட்டி ஆட்டி அழகு நடை போடும் தீக்கோழி, எப்போதும் கூவிக்கொண்டே இருக்கும் மஞ்சள் குருவி, கழுகுபோல் அழகுடன் கம்பீர நடைபயிலும் செக்ரெட்டரி பறவை... என ஒவ்வொன்றும் தன் பங்குக்கு அந்தக் காட்டை அழகாக்குகின்றன. 

சிங்கம், சிறுத்தை போன்ற வேட்டை மிருகங்களுக்குப் பசி நேரத்தில் சரியான உணவும், வேட்கைத் தேவைகளுக்கு இணையும் கிடைத்துவிடுவதால், அவை எந்தத் தேடலும் இல்லாமல், எந்தக் கோப தாபமும் இல்லாமல் அமைதியாக ஓய்வெடுக்கின்றன. நம்மை அழைத்துச் செல்லும் டிரைவர்களுக்கு அவற்றின் பசி வேளை தெரிந்திருப்பதால், அதனைத் தவிர்த்து மற்ற சமயங்களில் அதன் அருகே கூட்டிப் போகிறார்கள். பயமில்லாமல் பார்க்க முடிகிறது.

மனிதக்காட்சி சாலை!

வழியில் ஓரிடத்தில் பெரிதான காட்டு எருமை ஒன்று சற்று நேரம் எங்கள் வண்டியை மறித்து நிறுத்தியது. கோபம் வந்தால் வண்டியைப் புரட்டித் தள்ளிவிடும் என்பதால், அதன் மூடு மாறும் வரை காத்திருந்தோம். அது சாந்தமாகி, 'போய்த் தொலையுங்கள்’ எனப் பெருந்தன்மையோடு எங்களை அனுமதித்து அங்கிருந்து அகன்ற பின்பே வேனை நகர்த்தினார் டிரைவர்.

பரந்து விரிந்த காதுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யானைகள், பிரமாண்டம் என்ற வார்த்தைக்குச் சரியான உருவம். குடும்பமும் குட்டிகளுமாக அவை கூட்டம் கூட்டமாக நகர்ந்து சென்றது அத்தனைப் பிரமாதம்!

அவற்றைத் தாண்டிச் சென்றால், கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வளைந்து நெளிந்துபோகும் மாரா நதி. மெல்லிய சலசலப்போடு ஓடும் நதியின் அமைதியைக் கிழிக்கும் அளவுக்குத் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் நீர் யானைகளின் சப்தம்... அப்பா! காது தாங்காது. நீரின் நடுவில் நீர்யானை; கரை ஓரத்தில் முதலைகள்! கரையில் ஓய்வெடுக்கும் முதலைகளைக் கண்டுகொள்ளாமல் தைரியமாகச் சற்றுத் தொலைவில் இருந்தபடியே நதியில் தண்ணீர் குடிக்கிறது மான்கள் கூட்டம். 

மனிதக்காட்சி சாலை!

விலங்குகள் மட்டுமல்ல... பரந்த இந்தப் புல்வெளிக்காட்டில் கிட்டத்தட்ட 570 இனப் பறவைகளும், அனைத்து வன விலங்குகளும் உயிர் வாழ்கின்றன. வருடத்துக்கு மூன்றரை கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் இந்தப் பசுமைக்காடுகளில், ஜூலை மாதத்தில் 15 லட்சம் காட்டு மாடுகளும், இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் ஒரே சமயத்தில் இடப்பெயர்ச்சி செய்வது உலகப் புகழ்பெற்ற ஒரு நிகழ்வாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி கென்யா, தான்சானியா ஆகிய இரு நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

மனிதக்காட்சி சாலை!

சற்றுத் தூரத்தில், காட்டுவாழ் மக்களின் மண் குடிசைகள். மசாய் இன மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்கின்றனர். அங்கே விவசாயம் இல்லை. மாடு வளர்ப்புதான் பிரதான தொழில். உணவும் அதுவே. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இன்னமும் புகை அடுப்பு. தற்காப்புக்காக, அவர்கள் வசிப்பிட ஏரியாவை சுற்றி முள் வேலி. மக்காச்சோள மாவுதான் அவர்களின் முக்கிய உணவுப் பொருள். உகாலி என்ற மக்காச்சோள மாவு உருண்டையும் அதே மாவில் செய்யும் கஞ்சியும் தினசரி உணவாக இருக்கிறது. கூடவே, கீரைப் பொரியல். அதை சுக்மா லிக்கி என்கிறார்கள். வசதியில் பின்தங்கியிருந்தாலும், இவர்கள்தான் வனக் காவலர்கள். காட்டு விலங்குகள் மனிதர்களின் வேட்டைக்குப் பலியாகாமல் பார்த்துக்கொள்ளும் காட்டு நேசர்கள் இவர்கள்!

மனிதக்காட்சி சாலை!

சூரிய உதயத்தில், இருளும் வெளிச்சமும் இணையும் நேரத்தில் யானைக் கூட்டம் வரிசையாக நகர்ந்த சில்-அவுட், ஒட்டகச்சிவிங்கிகள் இரண்டு கழுத்தால் பெருக்கல் குறி போட்ட கிராஸிங், சிங்கத்தின் இணைச் சேர்க்கை... இவை கேமராக் கண்களுக்கு அவ்வளவு சுலபத்தில் சிக்காத சிறப்புக் காட்சிகள். காட்டிலேயே முகாமிட்டுத் தங்கி, சில மாத காலம் காத்துக் கிடந்தால் எப்போதாவது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற இந்த அபூர்வக் காட்சிகள், மசாய் மாராவில் எனக்குப் போகிற போக்கில் கிடைத்தன. இந்த ஒரு விஷயம் போதாதா, நான் மசாய் மாராவின் ரசிகனாவதற்கு!

இயற்கை ஒரு காந்தம். அது எப்போதும் நம்மை ஈர்க்கவே செய்யும். அந்த ஈர்ப்பில் இருந்து நம்மை விடுவித்து விலகி நடப்பது அத்தனைச் சுலபம் அல்ல. மசாய் மாராவில் இருந்து கிளம்பும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு