Published:Updated:

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!
மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

கண்காட்சி ஜி.எஸ்.எஸ்.

பிரீமியம் ஸ்டோரி
மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

தாய்லாந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களில் ஒன்று, காஞ்சனபுரி.  அங்குள்ள 'தாய் பாம்புக் காட்சி’ மிகப் பிரசித்தமானது. அந்தக் காட்சி பலவிதங்களில் மறக்கமுடியாததாக இருக்கும். அதுவும் முக்கியமாக, அந்த கிளைமாக்ஸ் காட்சி!

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!பாங்காக்கில் இருந்து மேற்குப்புறமாக உள்ளது காஞ்சனபுரி. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மினி வேன்களும் பேருந்துகளும் உள்ளன. காரில் சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் காஞ்சனபுரியை அடைந்துவிடலாம்.

சரி, பாம்புக் காட்சிக்கு வருவோம். 'பாம்பென்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். ஆனால், இங்கே பாம்புக் காட்சி நடைபெறும் இடமோ எந்தப் பரபரப்புமின்றி அமைதியாகக் காட்சி அளிக்கிறது. வாசலில், நீரின் நடுவில்  ஏழு தலை நாகச் சிலை காணப்படுகிறது. ஸ்ரீகண்ணனால் கொட்டம் அடக்கப்பட்ட காளிங்கனை இது நினைவுபடுத்துகிறது. சுவரின் மீது புடைவை பார்டர் போல பல நாட்டுக் கொடிகள். வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுக் கொடியை அடையாளம் கண்டு, சந்தோஷிக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 250 தாய் பத் (சுமார் 500 ரூபாய்). தாய் எழுத்துக்களில் எல்லா அறிவிப்புகளும் பாம்புகள் போலவே நெளிந்திருந்தன. காட்சி அரங்கத்துக்குச் செல்வதற்கு முன், பலவித பாம்புகளை கண்ணாடிக் கூண்டுகளில் காணமுடிகிறது.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

காட்சி அரங்கத்தில், முக்கால் வட்ட வடிவில் பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. நடுவில், தரை மட்டத்தில் அமைந்திருக்கிறது செயற்கைப் புல்வெளி போன்றதொரு பகுதி. இதில்தான் பாம்புகளைக் கொண்டு காட்சி நடத்துவார்கள் என்பதை யூகிக்கமுடிகிறது. இதற்கும் பார்வையாளர்கள் பகுதிக்கும் நடுவே வட்ட வடிவில் நீர்ப்பரப்பு (பாதுகாப்பு?).

பின்னணியில் உள்ள திரையில், விஷத்துக்கு எதிரான மருந்து தயாரிக்கும் முறை குறிக்கப்பட்டுள்ளது. குதிரையின் உடலில் பாம்பின் விஷத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குச் செலுத்துவார்களாம். இதன் காரணமாக, பின்னர் அதிக அளவு விஷம் அந்தக் குதிரையின் உடலில் ஏறினாலும், அதனால் பாதிப்பு இருக்காது. இப்படிப்பட்ட குதிரைகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் திரவம், பாம்பு விஷத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. ராஜதந்திரி சாணக்கியர்கூட மன்னன் சந்திரகுப்தனின் உடம்பில் மிகச் சிறிய அளவு விஷத்தைத் தொடர்ந்து செலுத்தியதாக ஒரு பேச்சு உண்டு. இதன் காரணமாகத்தான், பின்னர் விஷம் கலந்த உணவை எதிரிகள் அளித்தபோதும்கூட சந்திரகுப்தன் உயிர் பிழைத்துக்கொண்டான் என்பார்கள்.

சுற்றிலும் இருந்த பால்கனிப் படிகளில் பல்வேறு நாட்டினர் உட்கார்ந்துகொண்டிருந்தனர். பெரும்பாலானோர் கைகளில் கேமரா. அத்தனை பேர் மனத்திலும் திக் திக் உணர்வு! காலுக்குக் கீழே ஏதோ அசைவது போன்ற பிரமை!

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

கறுப்பு ட்ரவுஸர், நீலச் சட்டை, அதற்கு மேல் சிவப்பு வண்ணத்தில் கையில்லாத ஓவர் கோட் என்று கலர்ஃபுலாகக் காட்சியளித்த ஓர் ஊழியர், காட்சியைத் தொடங்கிவைத்தார். ஒரு ஜாடியில் இருந்து நீளமான ஒரு நாகப் பாம்பை வெளியே எடுத்து விட்டார். வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்பதைவிட நீளமாக இருந்தது அந்த நாகம். கீழே விட்டதும் விசுக்கென்று தலையை ஓராள் உயரத்துக்குத் தூக்கிப் பெரிதாகப் படமெடுத்தது. அவர் பாம்பின் கண்களையே உற்றுப் பார்த்தார். அந்த நாகமும் பதிலுக்கு அவரையே முறைத்துப் பார்த்தது. பாம்பைவிட அவர் முகத்தைப் பார்ப்பதுதான் அதிக பயமூட்டுவதாக இருந்தது.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

பாம்பின் வாலை விதவித கோணங்களில் அசைத்து, அது படமெடுப்பது பார்வையாளர்கள் அத்தனைப் பேருக்கும் தெளிவாகத் தெரியும்படி செய்தார் அவர். பிறகு, தன் இடது கையில் மெல்லிய துணியினால் மூடப்பட்ட கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொண்டார். வலது கையில் நல்ல பாம்பின் தலையின் இரண்டு பகுதிகளிலும் அவர் சற்றே அழுத்தம் கொடுக்க, அதன் வாயில் இருந்து விஷத்துளிகள் அந்தக் குடுவைக்குள் இறங்குவது நன்றாகத் தெரிந்தது.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

விஷம் எடுக்கப்பட்டவுடன், அந்தப் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்தபடி ஒவ்வொரு பார்வையாளரிடமும் அதைக் கொண்டுவருகிறார் அந்த ஊழியர். பலர் தங்கள் தைரியத்தை நிரூபிக்கும் வகையில், ஆனால் மனசுக்குள் கிலியோடு அந்தப் பாம்பைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

''பாம்பை எடுத்துட்டு வர்றாங்க. பயப்படாதே! ஒண்ணும் செய்யாது'' என்று ஓர் அம்மா தன் எட்டு வயது மகனைத் தயார்ப்படுத்த, ''ஹை! நான் பாம்பைத் தொடுவேனே!'' என்று உற்சாகமாகிறான் அந்தச் சிறுவன்.

''நல்ல பாம்பைத் தொட்டால் நல்லது என்று எங்கள் நாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால், காட்டுக்குள் நல்ல பாம்பைத் தொட்டால், அது நல்லது இல்லை!'' என்று தமாஷாகக் கூறி, சத்தம் போட்டுச் சிரித்தார் அந்த ஊழியர். அடுத்ததாக, விஷப் பாம்புக் கடிக்கான சிகிச்சையை விளக்கினார். ''கடிபட்ட இடத்துக்கு மேலே அழுத்தமாக ஒரு கட்டு போட வேண்டும். அதற்காக, வயிற்றில் கடித்தால், இதயப் பகுதியை இறுக்கிவிடக் கூடாது. நான் சொன்னது கால் அல்லது கையை. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அந்தக் கட்டைத் தளர்த்திவிட வேண்டும். விஷத்துக்கு எதிரான மருந்து அளிக்கப்படும் வரை இப்படிச் செய்யவேண்டும்'' என்றார்.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

அடுத்ததாக, ''இதோ... கீரிக்கும் பாம்புக்கும் சண்டை'' என்று மற்றொரு ஊழியர் சொல்ல, 'இங்கேயும் ஆரம்பிச்சுட்டாங்களா..? சரிதான்... இன்னும் அரை மணி நேரத்துக்கு இதைப் பற்றி பில்டப் கொடுத்தே ஓட்டிவிடப் போகிறார்கள்!’ என்று நாம் நினைத்திருக்க, டக்கென்று ஒரு நாகப் பாம்பை எடுத்து, கீரி இருக்கும் கூண்டுக்குள் போட்டுவிடுகிறார் அந்த ஊழியர். அந்தப் பெரிய சக்கரக் கண்ணாடிக் கூண்டில் உள்ள கீரி ரொம்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. தன் இருப்பிடத்தில் எதிரி ஒருவன் நுழைந்ததும், கீரி ஆக்ரோஷமாக முறைக்கிறது. குத்துச் சண்டை வீரர்கள் போன்று கீரியும் பாம்பும் ஒன்றை ஒன்று பயம் கலந்த எதிர்ப்புடனும் உற்றுப் பார்க்கின்றன.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

திடுமென எதிர்பாராத ஒரு நேரத்தில் கீரி பாய்ந்து, நாகப்பாம்பின் கழுத்தைப் பிடிக்க முயற்சிக்க, 'செத்தது பாம்பு’ என நாம் நினைத்துக்கொண்டிருந்தால்... இல்லை! பாம்பு சடாரென்று லாகவமாக வளைந்து தப்பிவிடுகிறது. அடுத்த சில நிமிடங்களுக்கு, அந்தச் சின்ன கண்ணாடிக் கூண்டுக்குள் பாம்பு- கீரி சண்டை நம் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கிறது. ஒவ்வொரு முறையும், 'இதோ, பாம்பின் கழுத்து

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

வெட்டுப்படப்போகிறது’ என்று நாம் எதிர்பார்ப்பும் பதைபதைப்புமாகப் பார்த்துக்கொண்டிருக்க... சுமார் ஆறு நிமிடங்களுக்குப் பிறகு எந்தவித சேதாரமும் இல்லாமல், பத்திரமாக அந்தப் பாம்பை வெளியே எடுத்துவிடுகிறார் ஊழியர். பாம்பு அவ்வளவு கில்லாடியா, அல்லது கீரி அத்தனை சோப்ளாங்கியா அல்லது எல்லாமே செட்டப்பா? புரியவே இல்லை. ஆனால், நிமிடங்கள் பரபரப்பாக நகர்வதென்னவோ நிஜம்!

அடுத்து இடம்பெறுவது, மலைப்பாம்பு காட்சி. அனகோண்டா அளவுக்கு இல்லை என்றாலும், அதில் அரைகோண்டா அளவுக்கு இருக்கிறது. மலைப்பாம்பைக் கீழே விட்ட சில நொடிகளில், நாகப்பாம்புக்கும் மலைப்பாம்புக்குமான வித்தியாசம் புரிகிறது. நாகத்தின் வாலைப் பிடித்தால், அப்படிப் பிடிப்பவரைத் தாக்குவதற்கு நாகம் முயற்சிக்கிறது. மலைப்பாம்போ எதிர் திசையில் நகர்ந்து, தன்னைச் சீண்டுபவரை சரியான கோணத்தில் கட்டி இறுக்க அணைத்துக்கொள்ள முடியுமா என்று நோட்டமிடுகிறது.

தொடக்கத்தில், சுமாரான ஒரு மலைப்பாம்பை 'டெமோ’ காட்டினார்கள். அடுத்ததாக, கனமான 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மூன்று பேர் சுமந்து வருகிறார்கள். பாம்பின் தலைப்பகுதியைச் சுமந்துகொண்டிருப்பவர் அதன் வாயைத் திறக்கவைத்துக் காண்பிக்கிறார். ''இத்தனை சின்ன வாய்க்குள்ளா ஆடு, மாடுகள் எல்லாம் போக முடியும்?!'' என்று வியப்பாக இருக்கிறது. அப்படி ஓர் எலாஸ்டிக் வாய்!

அடுத்து, மூன்று பாம்புகளுடன் ஒரே நேரத்தில் சாகசம் செய்கிறார் ஓர் ஊழியர். மஞ்சளும் கறுப்புமாகப் பளிச்சென்று உள்ள (சதுப்பு நிலக் காடுகளில் சகஜமாகக் காணக்கூடிய) நீளமான அந்தப் பாம்புகளை அவர் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் பல திசைகளில் வீசி எறிய, அவை அவரைத் தாக்குவதுபோல் மின்னல் வேகத்தில் சீறி வர... பார்வையாளர்கள் பயத்தில் அலறுகிறார்கள்.

மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!
மூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்? திகில் கிளைமாக்ஸ்!

காட்சியின் கிளைமாக்ஸ்! அவர் சீறிப் பாய்ந்து வரும் பாம்புகளில் ஒன்றை தன் வலது கையில் பிடிக்கிறார்; மறு பாம்பை தன் இடது கையில் பிடிக்கிறார்; மூன்றாவது பாம்பை எந்தக் கையில், எப்படிப் பிடிக்கப்போகிறார் என்ற சஸ்பென்ஸுடன் நாம் காத்திருக்க... அடுத்த சில நிமிடங்களில் அவர் அந்தப் பாம்பையும் பிடிக்கும்போது, தூக்கிவாரிப்போடுகிறது. காரணம், அவர் அதன் தலையைத் தன் வாயால் கவ்விப் பிடிக்கிறார்.

காட்சி முடிவில், நமக்கு மாலை மரியாதை தேவை என்றால், அதற்கான வசதியும் உண்டு. மலைப்பாம்பு மாலை! கட்டணம் அளித்துவிட்டுதான்!

''பாம்பின் மீது உங்களுக்கு இருக்கும் பயம் இப்போது குறைந்திருக்குமே?'' என்று காட்சி முடிந்து வெளியே வரும் ஓர் ஐரோப்பியப் பெண்மணியிடம் கேட்கிறார் ஒருவர்.

''குறைந்துவிட்டது. ஆனால், அந்தப் பாம்பைப் கையாள்பவவர்களின் முகங்கள்தான் இன்னமும் பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றன. பாம்புகளுடன் பழகிப் பழகி அவர்களின் முகம் சீரியஸாகவும் கொடூரமாகவும் ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது!'' என்று பதில் வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு