Published:Updated:

துங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!
துங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்!

ஆன்மிகம் பாரதிமித்ரன் - படங்கள் க்ளிக் ரவி

பிரீமியம் ஸ்டோரி

றைவனை நேசிப்பவர்கள் இயற்கையை நேசிக்காமல் இருக்க முடியாது. மலைகள், நதிகள், பெரும் சமுத்திரங்கள், மரம், செடி- கொடிகள் என ஒவ்வொன்றும் இறையுடனான நமது பந்தத்தை- உறவை உறுதிப்படுத்தும் சக்திகளாகவே திகழ்கின்றன. யுகம் யுகமாய் இந்த மண்ணில் உதித்த மகான்களும், ரிஷிகளும், சித்த புருஷர்கள் பலரும் இந்த சூட்சுமத்தை அறிந்தவர்களே!

துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!

இயற்கையை இறையாக உணர்ந்த அந்த உத்தமர்கள், ஸ்தூல உடம்புடன் இந்தப் பூவுலகில் வாழும் காலத்திலும், ஸ்தூலம் விடுத்து சூட்சுமமாய் ஓரிடத்தில் நிலைகொள்ள நினைத்தபோதும்... இயற்கை எழிலார்ந்த பகுதிகளையே தங்களின் இடமாகத் தேர்ந்தெடுத்தார்கள். சித்தர் பீடங்களாகவும் பிருந்தாவனங்களாகவும் போற்றப்படும் அந்த இடங்களில் ஏற்கெனவே இறையருள் மிகுந்திருக்க, இந்த மகான்களின் அதிஷ்டானங்களால் குருவருளும் சேர்ந்து, ஒட்டு மொத்த பூமியின் செழிப்புக்கும் ஆதாரமாக விளங்குகின்றன.

இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது நவபிருந்தாவனம்!

கர்நாடக மாநிலம்- கொப்பல் மாவட்டம், கங்காவுதி தாலுக்காவில் (ஹம்பிக்கு அருகே), துங்கபத்ரா நதியின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ளது நவ பிருந்தாவனம். சென்னையிலிருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து ஹோஸ்பேட் எனும் ஊருக்கு ரயிலில் பயணிக்க வேண்டும். ஹோஸ்பேட் ரயில் நிலையத்தில் இருந்து துங்கபத்ரா நதிக்கரைக்குச் செல்வதற்கு வாகன வசதிகள் நிறைய உள்ளன (ஆனேகுந்தி எனும் இடத்துக்குச் சென்று அங்கிருந்தும் நவபிருந்தாவனம் செல்லலாம்).  நதிக்கரையில் இருந்து பரிசலில் பயணிக்க வேண்டும்.

துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!

பரிசல் பயணம்... பரவச பயணம்! நதியின் கரைகளில் இருந்து சிறிது தூரத்துக்குப் பச்சைப்பட்டு போர்த்தியதுபோன்று பசுமை செழித்திருக்க, அதைத் தொடர்ந்து கற்களும் பாறைகளுமாக எழுந்து நிற்கின்றன சிறு சிறு குன்றுகள். ஆமை வடிவத்தில் ஒன்று, யானை உருவில் ஒன்று என வெவ்வேறு வடிவத்திலும், பழுப்பு, கறுப்பு என வெவ்வேறு வண்ணங்களிலும் காட்சி தரும் பாறைகள் நதியின் நடுவிலும் உண்டு. அவற்றை வலமாகவும் இடமாகவும் சுற்றிக் கடந்து பாய்கிறது துங்கபத்ரா. அந்தப் புண்ணிய நதியில் பயணிக்கும் ஒவ்வொரு கணமும், இறையின் பரிபூரணத்தை அனுபவிக்க முடியும். பரிசல் ஓட்டி மிக லாகவமாக துடுப்பு போடுகிறார். அரைமணி நேரப் பயணத்துக்குப் பிறகு, மெள்ள ஒரு சுற்று சுற்றியபடி, அந்தத் திட்டுப் பகுதியில் கரை சேர்கிறது பரிசல்.

தீவில் நவபிருந்தாவனத்தைத் தவிர, வேறொன்றும் இல்லை. அதுவே இந்த இடத்தின் அழகு- சிறப்பு! வீடுகளோ, கடைகளோ எதுவும் இல்லாத காரணத்தால், நம்மைச் சுற்றி மலைகள், பசுமைக் காடுகள், நீல நிற ஆகாயம், ஆகாயத்தைப் பிரதிபலிக்கும்  துங்கபத்ரா நீர் ஆகியவை மட்டுமே நம்மை சூழ்ந்திருக்கின்றன. நகரத்தின் ஜனத்திரளில் அவஸ்தைப்படும் வாழ்க்கை ஒரு நொடி நம் மனத்தில் நிழலாட, 'இந்த இயற்கைச் சூழலில் இங்கேயே ஆயுளுக்கும் இருந்துவிடமாட்டோமா?’ என ஏங்குகிறது மனது.

இந்த அழகும் அமைதியும்தான், மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர

ஸ்வாமிகளுக்கும் முன்னதாக ஸ்ரீமத்வ பீடத்தை அலங்கரித்த மகான்கள் பலரும் பிருந்தாவனம் கொள்ள இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

பரிசலில் இருந்து இறங்கியதும், முதலில் துங்கபத்ரா நதியில் ஸ்நானம். ஆற்றுக்குள் இறங்கும்போது கவனம் அவசியம். பாசி படர்ந்த பாறைகள் வழுக்குகின்றன. மெள்ள அடியெடுத்து தண்ணீரில் கவனமாகக் கால் பதித்தால், நீரின் ஜில்லிப்பு சிலிர்க்க வைக்கிறது.  கலங்காத தெளிவான நீர். ஒட்டுமொத்தமாக மூழ்கி எழும்போது உடல் மட்டுமல்ல, உள்ளமும் குளிர்ந்துபோகிறது. துங்கபத்ராவின் ஸ்பரிசமும், பிருந்தாவனத்தில் இருந்து காற்று சுமந்துவரும் துளசியின் வாசமும்... அடடா! மெய்ம்மறக்கச் செய்கிறது அந்த அனுபவம்.

துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!

குளித்து முடித்துக் கரை ஏறி, வேட்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து, நவபிருந்தாவனத்துக்குள் நுழைகிறோம். முதலில் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயம். நிழல் தரும் மரங்களும் மலைகளும் சூழ அமைந்துள்ளது இந்த ஆலயம். அருகிலேயே வலப் புறத்தில் 'ஜாக்கிரதை ஆஞ்சநேயர்’ ஆலயம். இரண்டுமே மிகச் சிறியதாக, எளிமையாக அமைந்துள்ளன. திருவடி அருகில் தேவி நிற்க, பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கிறார் ஸ்ரீஅரங்கநாதர். இவர் கோயிலில் 9 நெய்விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆஞ்சநேயர் கோயிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். தீவில் அகல் விளக்குகளோ, நெய்யோ, திரியோ எதுவும் கிடைக்காது. முன்னேற்பாடாக ஆனேகுந்தி அல்லது ஹம்பியில் இருந்து வாங்கிச் செல்வது நல்லது.

ஸ்ரீஅரங்கநாதரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் சேவித்த பிறகு, நவபிருந்தாவனத்தை வலம் வர வேண்டும். நவபிருந்தாவனத்தைச் சுற்றிலும் மஞ்சள் நிறத்தால் வட்டமாகக் கோடு வரைந்திருக்கிறார்கள். அந்தக் கோட்டுக்குள் அங்கே பூஜை செய்பவர்களைத் தவிர வேறு எவரும் செல்லக் கூடாது. ஒரு புறம் சுவரில், இங்கு எழுந்தருளியுள்ள தீர்த்தர்களின் திருநாமங்கள் ஒரு ஸ்லோகமாய் எழுதப்பட்டிருக்கிறது. 

'பத்ம நாபம் கவீந்த்ரம் சா வாகீசம் வ்யாசராஜம்

ரகுவர்யம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ சா

ஸ்ரீ சுதீந்த்ரம் சா கோவிந்தம் நவபிருந்தாவனம் பஜே'


பிருந்தாவனத்தை வலம் வரும் அத்தனை அன்பர்களும் இந்த ஸ்லோகத்தை மனத்துக்குள் உச்சரித்தபடி வரவேண்டும் என்பதால், வலம் முடிவதற்குள் ஸ்லோகம் மனனமாகிவிடுகிறது. இதனால் சஞ்சலப்படும் மனத்துக்கும் இங்கே சமநிலை வாய்த்துவிடுகிறது. மகான்களின் திருநாமங்களுக்குத்தான் எத்தனை மகிமை!

நாமும் மகான்களின் திவ்விய திருநாமத்தை மனத்தில் ஏற்றியபடி வலம் வருவோமா?

ஸ்ரீபத்மநாப தீர்த்தர்:

சோபன பட்டர் என்ற பெயருடன் காகதீயராஜாவின் அவையில் அமைச்சராக இருந்தவர். சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். பண்டிதர்கள் பலரிடமும் வாதம் புரிந்து வெற்றி பெற்ற இவர், ஸ்ரீமத்வரிடம் வாதிட்டுத் தோல்வியுற்றார். அதன் பிறகு, ஸ்ரீமத்வரையே குருவாக ஏற்று சந்நியாஸமும் பெற்றார். பின்னர், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஆணைப்படி, கிஷ்கிந்தையில் பக்திப் பணியைத் தொடர்ந்தார். இவரே இங்கு முதல் பிருந்தாவனஸ்தர்.

ஸ்ரீஜயதீர்த்தர்:


இளவரசராக இருந்து தீட்சை பெற்றவர் இந்த மகான். ரகுநாத பக்த என்ற மன்னனின் புதல்வனான இவர், இளமையில்  குதிரையேற்றம், வாள்போர் முதலான அனைத்து போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஒருநாள், காட்டுக்குச் சென்றவர் அங்கே ஒரு நீர்நிலையில் கரையில் படுத்தபடி நீர் அருந்த முற்படும்போது, மகான் அக்ஷே£ப்ய தீர்த்தரைத் தரிசித்தார். முற்பிறவியில் தான் ஒரு பசுவாக இருந்ததை அந்த மகான் மூலம் அறிந்தார் இளவரசர். அதன் பிறகு சந்நியாஸ கோலம் ஏற்று, பக்தி மார்க்கத்தில் கவனம் செலுத்தினார். ஸ்ரீமத்வரின் பாஷ்யங்களுக்கு விளக்கம் அளிக்கும் ப்ரமேய தீபிகை, ந்யாய தீபிகை ஆகிய நூல்களை அருளினார். நவ பிருந்தாவனத்தில் சங்கமமான இரண்டாவது மகான் இவர்.

ஸ்ரீவியாச ராஜ தீர்த்தர்:

நவபிருந்தாவனத்தில் நடுநாயகமாகத் திகழ்கிறது இவரது பிருந்தாவனம். பக்த பிரகலாதனின் அவதாரமாகக்

கருதப்படுகிறார். நரஸப்பன், வீர நரசிம்மன், கிருஷ்ணதேவ ராயர் ஆகிய விஜயநகரப் பேரரசர்களுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர் இவர் என்கிறது வரலாறு. ஒருமுறை, கிருஷ்ண தேவராயருக்கு 'குஹ யோகம்’ (மரண ஆபத்து)  ஏற்பட்டது. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அரியணையில் அமர்ந்திருக் கும்போது மரணம் சம்பவிக்கலாம் என்பது ஜோதிடர்களின் கணிப்பு.

ஆனால், வியாச ராஜர் தானே முன் வந்து ஆபத்தை எதிர்கொள்ளச்

சம்மதித்தார். குஹ யோக காலத்தில் அரசனின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். சர்ப்பம் ஒன்று படமெடுத்து அவரைத் தீண்ட வரும்போது, தன்னுடைய மேல் அங்கவஸ்திரத்தை அதன் மீது வீசியெறிய, அது தீயாகப் படர்ந்து அந்த நாகத்தை அழித்தொழித்தது. இவர் ராஜ குருவானதால், அரசனுக்கு இருப்பதைப் போலவே ஒரு குறிப்பிட்ட நாளில் அத்தனை கௌரவமும் அளிக்கப்படுகிறது.

நவபிருந்தாவனத்தில் எழுந்தருளியிருக்கும் மகான் ஸ்ரீகோவிந்த ஓடயரும் ஸ்ரீவியாசராஜரும் சமகாலத்தவர்கள்.

துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!

ஸ்ரீசுசீந்திர தீர்த்தர்:

நவபிருந்தாவனத்தில் 8-வது தீர்த்தராக எழுந்தருளியிருக்கும் மகான் இவர். உலகமே போற்றி வணங்கும் மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரருக்கு சந்நியாஸம் வழங்கி, குருவாகத் திகழ்ந்தது இவர்தான்.

மேலும், இங்கே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரகுவர்யர், ஸ்ரீகவீந்த்ர தீர்த்தர், ஸ்ரீவாகீச தீர்த்தர், ஸ்ரீநிவாஸ தீர்த்தர், ஸ்ரீராம தீர்த்தர் ஆகியோரது வரலாறுகள் தெளிவாகக் கிடைக்கப்பெறவில்லை. தவிர, இங்கு மகான்கள் சித்தியடைந்த காலகட்டம் குறித்து வேறுபட்ட கருத்துக்களும் உண்டு.

இந்த நவபிருந்தாவனத்துக்கு வந்து, ஒன்பது மகான்களையும் வணங்கி வழிபட்டு, விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், வேண்டு தல்கள் நிறைவேறுவது உறுதி. துங்கபத்ரா நதியில் தீர்த்தமாடி, பக்தியுடன் சங்கல்பம் எடுத்துக்கொண்டு நவபிருந்தாவனத்தை வலம் வந்து வணங்கிட, நம் மனோ பலம் அதிகரிக்கும்; சித்தம் தெளி வாகும்; செயல்களில் உறுதி பிறக்கும்; குருவருளால் நம் வாழ்க்கை வளமா கும் என்பது நிச்சயம்.

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி, பாதாமி, நவபிருந்தாவனம் போன்ற தலங்களை இயற்கைக்கு பங்கம் விளையாமல் பாதுகாக்கின்றனர். பாறைகளில் விளம்பரங்கள், திருப் பணி என்ற பெயரில் புதிய பாணி கட்டுமானங்கள் என திருத்தலங் களின் புராதனத்தை இங்கே குலைப் பது இல்லை. அதற்காக இங்குள்ள மக்களை எவ்வளவு பாராட்டி னாலும் தகும்.

துங்கபத்ரா நதிக்கரையில்... -  நவபிருந்தாவன தரிசனம்!

நவபிருந்தாவன தரிசனம் முடிந்து, மீண்டும் படகில் ஏறி, ஆனே குந்தியை அடைந்து, ஸ்ரீராகவேந்திர மடத்துக்குச் செல்லலாம். முன்பே சொல்லி வைத்துவிட்டால், ஸ்ரீராகவேந்திர மடத்தில் பிரசாதத்துடன் மதியச் சாப்பாடும் கிடைக்கிறது. மடத்துக்கு எதிரில்  உள்ள துளசி உணவு விடுதியிலும் எளிய சுவையான சாப்பாடு கிடைக்கும்.

அற்புதமான நவபிருந்தாவன பயணம், குருவருள் கைகூடினால் மட்டுமே வாய்க்கும். அப்படி ஒருமுறை சென்று வந்துவிட்டால், ஆயுள்பரியந்தம் அந்தத் தலம் குறித்த எண்ணங்களும், மகான்களின் ஆசியும் நம்மை நீங்காதிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு