Published:Updated:

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா
‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

சினிமா எஸ்.ரஜத் - படங்கள் சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

யார் அழகி என்பதற்குப் பல அளவுகோல்கள் இருக்கலாம். ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொருவர் அழகாகத் தெரியலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி அனைவரும் ஒப்புக்கொள்ளும் சிறந்த அழகியாகத் திரையுலகில் வலம் வந்தவர் நடிகை வைஜெயந்திமாலா. தமிழில் இருந்து இந்தித் திரைப்பட உலகுக்குச் சென்ற முதல் பெண் சூப்பர் ஸ்டாராகவும், அன்றைய இந்திய இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர்; சிறந்த நடிகை, புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தவர். அவருடன் பேசியபோது...

''சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?''

''சர்ச் பார்க்கில் படிக்கும்போது சென்னை கோகலே ஹாலில் எனது பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஏவி.எம். அவர்களும், இயக்குநர் எம்.வி.ராமன் அவர்களும் வந்திருந்தனர். இருவருக்கும் எனது நடனம் பிடித்திருந்தது. என் தந்தை இன்ஜினீயர் எம்.டி.ராமனும் இயக்குநர் எம்.வி.ராமனும் நல்ல நண்பர்கள். 'ஏவி.எம். எடுக்கவிருக்கும் படத்துக்கு புதுமுகம் தேடுகிறோம். நம்ம பாப்பு குட்டியை (என் செல்லப் பெயர்களில் ஒன்று) நடிக்க வைக்கலாமா?’ என்று கேட்டார். அனைவரும் தயங்க, என் பாட்டி யக்கம்மா (யதுகிரிதேவி) மட்டும் 'சரி’ என்று சொல்லவே, 'வாழ்க்கை’ படத்தில் நான் நடிப்பதற்கு மற்றவர்களும் ஒப்புக்கொண்டார்கள். டி.ஆர்.ராமச்சந்திரன்தான் ஹீரோ. ஒரு வருடத்தில் 'வாழ்க்கை’ படம் முடிந்தது. படத்துக்கு நல்ல வரவேற்பு! நூறு நாட்களைக் கடந்து ஓடியது. 1951-ம் ஆண்டு 'வாழ்க்கை’ படத்தை, 'பஹார்’ என்று இந்தியில் எடுத்தார்கள். தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நான் இந்தி கற்றுக் கொண்டேன். எனவே, எனது முதல் இந்திப் படத்தில் இருந்தே நானே டப்பிங் பேசினேன். வேகமான கால் அசைவுகள், கை முத்திரைகள், முகபாவங்கள்கொண்ட பரதநாட்டியத்தை வட இந்தியாவில் அன்றைக்கு அதிகம் பேர் பார்த்தது இல்லை. எனவே, அவர்களுக்கு இந்த டான்ஸ் எல்லாம் புதுமையாக இருந்தது. அந்தப் படம் வட இந்தியாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக, 'வாழ்க்கை’ எனக்குத் தந்த வாழ்க்கை இது!''

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

''வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் நடிகை பத்மினிக்கும் உங்களுக்கும் நடக்கும் டான்ஸ் போட்டி இன்று வரைக்கும் மிகவும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்தக் காட்சியை எப்படிப் படமாக்கினார்கள்?''

''ஜெமினி ஸ்டுடியோ அதிபரும் பிரபல வெற்றிப் படங்களின் இயக்குநருமான எஸ்.எஸ்.வாசன் அவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான குடும்ப நண்பர். காட்ஃபாதர் என்றே சொல்லலாம். பரதநாட்டியம் நன்றாக ஆடக்கூடிய திறமை பெற்ற இரு நடிகைகளிடையே 'ஜுகல்பந்தி’ மாதிரி காட்சியை, இதுவரை எந்தப் படத்திலும் வராத மாதிரி எடுக்கவேண்டும் என்பது வாசனின் ஐடியா. அந்த நடனப் போட்டிக் காட்சியை பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹீராலால்தான் அமைத்துக் கொடுத்தார்.

நான் நடனமாடும் காட்சிகளை இரண்டு நாட்கள் தனியாகப் படமாக்கினார்கள். பத்மினி நடனமாடும் காட்சிகளை இரண்டு நாட்கள் படமாக்கினார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து நடனமாடியதை மேலும் இரண்டு நாட்கள் படமாக்கினார்கள். பத்மினிக்கும் சரி... எனக்கும் சரி, எங்கள் பரத நாட்டியத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அற்புதமான வாய்ப்பாக அந்தக் காட்சி அமைந்தது. இந்தப் படம் 1958-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய ஹிட்டானது. அதுபோன்ற நடனக் காட்சியை மீண்டும் எடுக்கமுடியாது என்றே தோன்றுகிறது.''

''எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று பெரிய ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?''

''எம்.ஜி.ஆருடன் 'பாக்தாத் திருடன்’ படத்தில் நடித்தேன். மிகப் பெரிய ஹீரோ. ஆனால், அந்த பந்தா இல்லாமல் ரொம்ப எளிமையாக, ரொம்ப மரியாதையாகப் பழகுவார். ஒரு காட்சியில் என்னைத் தூக்கிச் சென்று படுக்கையில் போடவேண்டும். டைரக்டரிடம், 'வைஜெயந்தியின் அம்மாவிடம் சென்று இந்தக் காட்சியை விளக்கி அனுமதி பெற்று வாருங்கள். பிறகு எடுக்கலாம்’ என்று கூறிவிட்டார். அம்மா வந்து பார்த்து, 'எவ்வளவு உயரத்தில் இருந்து பாப்பாவை (என்னை) போடுவார், அடிபடாதா?’ என்றெல்லாம் பார்த்த பிறகு, தயக்கத்தோடு அனுமதித்தார். மிகவும் ஜென்டிலாக பூ மாதிரி என்னைத் தூக்கி மெதுவாகப் போட்டார் எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆரும் குந்தவையாக நானும் நடிக்க, கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்குவதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ அந்த யோசனை கைவிடப்பட்டது.

சிவாஜியுடன் 'சித்தூர் ராணி பத்மினி’யில் நடித்தேன். அவரது நடிப்புத் திறமை நம்மை வியக்கவைக்கும். 'பாப்பா’ என்றுதான் என்னை அழைப்பார். எப்படி நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்வார். தொடர்ந்து, ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த 'இரும்புத்திரை’ படத்திலும் அவரோடு நடித்தேன். ஒரே நேரத்தில் 'இரும்புத்திரை’ என்று தமிழிலும், 'பைகாம்’ என்று இந்தியிலும் வாசன் எடுத்தார். ஒரு காட்சியில் சிவாஜியுடன் தமிழில் பேசி நடிக்கவேண்டும். உடனேயே, அதே காட்சியை இந்தியில் திலீப்குமாருடன் நடிக்கவேண்டும். மகிழ்ச்சியாக இருந்தது; அதே நேரம், சவாலாகவும் இருந்தது. இரு படங்களும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

ஜெமினி கணேசனைப் பொறுத்தவரை எனக்கு எந்த டென்ஷனும் இருக்கவில்லை. குடும்ப நண்பர். அவருடன் நான் நடித்த 'பார்த்திபன் கனவு’ கிளாஸிக் படம். அப்போதைய தமிழ்ப் படங்களின் டிரெண்டையே முழுவதுமாக மாற்றி, டைரக்டர் ஸ்ரீதர் வித்தியாசமாக எடுத்த இனிமையான காதல் காமெடி படம் 'தேன் நிலவு’. இந்தப் படத்துக்காகப் பல நாட்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்ரீநகரில், தால் ஏரியில் ஜெமினியும் நானும் மோட்டார் படகில் இருந்து வரும் இரும்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் ஸ்கீயிங் பண்ணும் காட்சியை ஸ்ரீதர் படமாக்கினார். எதிர்பாராத வகையில் அந்தக் கயிறு தளர்ந்து, நான் தால் ஏரியில் விழுந்துவிட்டேன். எல்லோரும் பயந்துவிட்டார்கள். நல்லவேளை, கேமராமேன் வின்சென்ட் தண்ணீரில் குதித்து, என்னைக் காப்பாற்றினார். அதற்குள் அந்த ஏரியில் இருந்த அழுக்குத் தண்ணீரை நிறையக் குடித்துவிட்டேன். பெரிய பிரச்னை ஆகிவிட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பம்பாய்க்கு அழைத்துச் சென்று எனக்குச் சிகிச்சை அளித்தார்கள். ஒரு மாதம் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தேன். பாராடைபாய்டு வேறு வந்துவிட்டது. அந்த விபத்து பிரச்னையிலும் ஒரு பெரிய நன்மை நடந்தது. அது

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

பற்றிப் பிறகு சொல்கிறேன்.''

''இந்தி ஹீரோக்கள் பற்றியும் சொல்லுங்களேன்?''

''திலீப்குமார், அசோக்குமார், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார், கிஷோர்குமார் என எல்லா குமார்களுடன் நான் நடித்துவிட்டேன்.

திலீப்குமாருடன் நான் நடித்து வெளியான எல்லாப் படங்களுமே பெரிய வெற்றி அடைந்தன. 'கங்கா ஜமுனா’ நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படம். எனக்கு மிகவும் பிடித்தமான படம். இந்தி மட்டுமன்றி, போஜ்பூரி மொழியிலும் அதில் பேசி நடித்தேன். தவறு இல்லாமல், தென்னிந்திய உச்சரிப்பு இல்லாமல் இந்திக்காரர்கள் பேசுவதுபோல இந்தியை என்னால் பேச முடிந்தது என்னுடைய ப்ளஸ் பாயின்ட் ஆனது.

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

ராஜ்கபூர், ராஜேந்திரகுமார் இரு ஹீரோக்களுடன் நான் நடித்த 'சங்கம்’ படம், பல வகைகளில் சாதனை புரிந்தது. முதல் டெக்னிக் கலர் படம் அதுதான். அப்போது இந்தியாவில் கலர் லேப்கள் இல்லை என்பதால், லண்டனில் பிராசஸிங் செய்தார்கள். மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடும் படம். முதல்முறையாக ஒரு படத்துக்கு இரண்டு இடைவேளை. முதல் முறை வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திய இந்தியப் படமும் 'சங்கம்’தான். பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டாம், வெனிஸ், ஆல்ப்ஸ் மலைகள் எனப் பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது. இந்தியின் மிகப் பெரிய ஷோமேன் என்று அழைக்கப்படும் ராஜ்கபூர்தான் படத்தை இயக்கினார். பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த படம். இந்திய திரைப்பட வரலாற்றில் 'சங்கம்’ ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது!

ஐக்கிய நாடுகள் சபையில் பரத நாட்டிய நிகழ்ச்சி அளித்த முதல் டான்ஸர் என்ற பெருமை எனக்கு  உண்டு. மனித உரிமை தினத்தின் இருபதாவது ஆண்டு விழாவை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நியூயார்க்கில் நான் அளித்த பரத நாட்டிய நிகழ்ச்சியை உலகின் 130 நாடுகளின் பிரதிநிதி கள் பார்த்து மெய்ம்மறந்து, வியந்து ரசித்தார்கள். அனைவரும் எழுந்து நின்று கை தட்டித் தங்களின் பாராட்டுதலைத் தெரிவித்தது என்னால் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி!''.

''தேனிலவு படத்தில் ஏற்பட்ட விபத்தால் நடந்த நன்மை என்று சஸ்பென்ஸ் வைத்தீர்களே, அது என்ன?'' என்று வைஜெயந்திமாலாவிடம் ஞாபகமாகக் கேட்டோம்.

''அந்த விபத்தின்போது, மும்பை குர்லா பகுதியில் இருந்த ஒரு டாக்டரின் கிளினிக்குக்கு என்னை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள். அங்கே எனக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் பாலி. அவர்தான் பிற்காலத்தில் என் வாழ்க்கைத் துணையாக ஆகப் போகிறார் என்று அப்போது எனக்குத்  தெரியாது. என் மீது மிகுந்த அக்கறையும் பாசமும் கொண்டவர். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். எல்லா விஷயங்களிலும் சிறந்தவர்; மேன்மையானவர். அவரின் தூண்டுதலால்தான் கோல்ஃப் ஆட்டத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். கோல்ஃப் ஆட்டத்தில் பல போட்டிகளில் வென்று நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன். டெல்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்தபோது, இந்திய கோல்ஃப் அணியில் இடம்பெற்றதோடு, தொடக்க விழாவில் இந்திய குழுவினருக்கு முதல்வராக அணிவகுப்பிலும் கலந்துகொண்டேன்.

1968 மார்ச் 10-ம் தேதி, இதே ஹாலில் (சென்னை ஆழ்வார்பேட்டை பங்களாவில் முதல் மாடியில் உள்ள பெரிய ஹால்) எனக்கும் டாக்டர் பாலிக்கும் தென்னிந்திய முறைப்படி திருமணம் நடந்தது. எனது நெருங்கிய உறவினரும் பிரபல நடிகருமான ஒய்.ஜி பார்த்தசாரதியும், அவரது மனைவியும் எங்கள் திருமணத்தை நடத்திவைத்தார்கள். பி.ஆர்.சோப்ரா, சிவாஜி, திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் போன்ற பல பிரமுகர்கள் எங்கள் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர். திருமணத்துக்குப் பிறகு டாக்டர் பாலி எனக்காக முழு சைவத்துக்கு மாறிவிட்டார். திருமணம் முடிந்த பிறகு, புதுப் படங்கள் ஏதும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.''

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

''இந்திய பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் உங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது அல்லவா?''

''என் தந்தை எம்.டி.ராமனுக்கு நேருவுடன் நல்ல தொடர்பு இருந்தது. நேருவின் வீட்டுக்கு மதிய உணவுக்குப் பலமுறை போயிருக்கிறோம். ராஜீவ், சஞ்சய் இருவரும் அப்போது சிறுவர்கள்.

இந்திரா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கும் என் மீது பாசம் அதிகம். டெல்லி போகும்போதெல்லாம் அவரைச் சந்திக்க எப்போது நேரம் கேட்டாலும், உடனே ஒப்புதல் அளிப்பார். புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மஹிளா காங்கிரஸ் மாநாட்டில் 45 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி கொடுத்தேன். நிகழ்ச்சி முழுவதும் இருந்து, பார்த்து ரசித்தார். என்னை ராஜ்ய சபா அங்கத்தினராக ஆக்கவேண்டும் என்ற எண்ணம் இந்திரா காந்திக்கு இருந்தது என்று பின்னர் அறிந்தேன்.

ராஜீவ் காந்தியிடம் எனக்கு அதே அன்பு இருந்தது. நூறு ஆண்டு காங்கிரஸின் சரித்திரத்தை 'ஏக்தா’ என்ற 100 நிமிட நாட்டிய நாடகமாகத் தயாரித்து அளித்தேன். ராஜீவ் காந்தி ஆர்வமாக ரசித்த படைப்பு அது. சென்னைக்கு ராஜீவ் காந்தி வந்திருந்தபோது, அவரை சென்னை ராஜ்பவனில் சந்தித்தேன். திடீரென்று என்னிடம், 'தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?’என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படிச் செய்கிறேன்’ என்றேன். தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவாயிற்று. அதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியில் ஒரு வருடம் கட்சிப் பணியில் ஈடுபட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரா.செழியன், 'அவருக்கு என்ன தெரியும்? மேப்-அப் போட்டு நடிக்கத்தானே தெரியும்?’ என்று பேசினார். என்னால் முடிந்தவரை, தொகுதி மக்களை நேரில் சென்று சந்தித்தேன். தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். மக்களவையில் எனது கன்னிப் பேச்சில், 'நம் நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். எந்த மாநிலமும் எந்த நதிக்கும் சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று பேசினேன். பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை எதிர்த்துப் பேசினேன். எனது பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்! நான் அன்று பேசிய விஷயங்கள் இன்றைக்கும் அவசியமானவையாகத்தானே இருக்கின்றன?'' என்று கேட்டார் வைஜயந்திமாலா.

உண்மைதானே!

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

யானைப் பாகி

பெரிய பெரிய யானைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பெண்களால் முடியுமா? நேபாளம் நாட்டில் உள்ளது 'சித்வான் தேசிய பூங்கா (சிலீவீtஷ்ணீஸீ ழிணீtவீஷீஸீணீறீ றிணீக்ஷீளீ). இங்கே யானைப் பாகனாகப் பயிற்சி எடுக்க வந்தார் 33 வயதான மீனா சௌத்ரி. பயிற்சியை ஒழுங்காக முடித்து, இப்போது யானைப் பாகன் வேலையைக் கச்சிதமாகச் செய்துவருகிறார் இவர். அந்தப் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை யானைமீது ஏற்றிக்கொண்டு, அந்தப் பூங்காவைச் சுற்றிக் காண்பிக்கிறார். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நேபாள அரசாங்கம் யானைப் பாகனாக ஒரு பெண்ணை நியமித்திருப்பது ஆசியாவிலேயே இதுதான் முதல் தடவை!

‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது! - வைஜெயந்திமாலா

டி.வி.எஸ். தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகரான டி.வி.சுந்தரம் அய்யங்காரின் பேத்தி சுசீலா பத்மநாபன், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக வைஜெயந்திமாலாவின் மிகவும் நெருங்கிய தோழி. இருவரின் தந்தைகளான எஸ்.துரைசாமி மற்றும் எம்.டி.ராமன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஸ்டூடியோக்களிலும் அவுட்டோரிலும் நடக்கும் வைஜெயந்தியின் ஷூட்டிங்களுக்கெல்லாம் அதிகமாக வந்திருப்பவர் சுசீலா பத்மநாபன்தான். விழாக்களுக்கும் விடுமு¬றகளுக்கும்கூட இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.

''வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்ற வைஜெயந்தி, டி.கே.பட்டம்மாளிடம் வாய்ப்பாட்டும் முறையாக பயின்றார். 'பரத நாட்டியத்திலே வைஜெயந்தி அதிகமாக இறங்கிட்டா. இல்லேன்னா, மிகச் சிறந்த கர்னாடக சங்கீத பாடகியா அவ ஆகியிருப்பா. அவ இசையில் முழு மூச்சா இறங்காதது சங்கீத உலகத்துக்குதான் நஷ்டம்!’ என்பது டி.கே.பட்டம்மாள், எம்.எஸ் சுப்புலட்சுமி இருவரின் ஆதங்கம்'' என்கிறார் சுசீலா பத்மநாபன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு