Published:Updated:

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க! - சுற்றுலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா
அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க! - சுற்றுலா

லதானந்த் - படங்கள் உதவி நீலகிரி தெற்கு வனக்கோட்ட அலுவலகம்

பிரீமியம் ஸ்டோரி

நீலகிரிக்குச் சுற்றுலா வந்தவர்களைப் பார்த்து, ''எங்கெல்லாம் போயிருந்தீர்கள்?'' என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலார், ''குன்னூர் சிம்ஸ் பார்க், ஊட்டி பொட்டானிக்கல் கார்டன், போட் ஹவுஸ், தொட்டபெட்டா...'' என்றுதான் பட்டியல் போடுவார்கள்.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

அவற்றையும் தாண்டி சில அற்புதமான இடங்கள் நீலகிரியில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அவலாஞ்சி.

அவலாஞ்சி எனப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் உண்டு. அவலாஞ்சி என்றால் நிலச்சரிவு என்று அர்த்தம். 1800-களில், அந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போதிருந்து அந்தப் பகுதி 'அவலாஞ்சி’ என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,036 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது இது. இங்கே இருக்கும் ஏரிக்கும் சுற்றுவட்டாரத்துக்கும் அவலாஞ்சி என்றே பெயர்.

ஊட்டி வழியாகவும் அவலாஞ்சி வரலாம். காரமடையில் இருந்து கிளை பிரிந்து கெத்தை, மஞ்சூர் வழியாகவும் வரலாம்.

உதகையில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அவலாஞ்சி. அவலாஞ்சிக்குப் பேருந்து வசதி ஏதும் கிடையாது. பயணிகள் தங்கள் சொந்தச் செலவிலேயே வாகனங்களை அமர்த்திக்கொள்ள வேண்டும். போகும் வழியெங்கும் ஆங்காங்கே சின்னச் சின்ன அருவிகளும் சிற்றோடைகளும் நம்மைத் தொடர்ந்து வருகின்றன.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

2,700-க்கும் அதிகமான பூக்கும் தாவர வகைகளும், எண்ணற்ற பூக்காத தாவர வகைகளும் இங்கே மண்டிக்கிடக்கின்றன. அவற்றுடன் பூஞ்சைகள், பாசிகள் போன்றவையும் ஏராளம்.

அரிய வகை ஆர்க்கிட் மலர்கள் போன்றவற்றால் நிரம்பி வழியும் பகுதி இது. ஏரியை ஒட்டி அமைந்திருக்கும் புல்வெளியிலும் குன்றுகளிலும் ஏறி மகிழலாம். அங்கேயே 'ட்ரவுட்’ வகை மீன்கள் செயற்கை முறையில் கருவூட்டப்பட்டு, குஞ்சுகளைப் பொரிக்கவைக்கும் ஹேட்ச்சரி (லீணீtநீலீமீக்ஷீஹ்) ஒன்றும் இருக்கிறது.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்பவர்களுக்கு அவலாஞ்சி ஒரு சொர்க்கபுரிதான். அப்பர் பவானி வரைகூட டிரெக்கிங் செல்லலாம். மேலும், குறுகிய நடைப்பயணங்களுக்கான பாதுகாப்பான ட்ரெக்கிங் பாதைகளையும் வனத் துறையினரே அமைத்திருக்கின்றனர். அவர்களின் துணையோடு அனைத்து வயதினரும் ட்ரெக்கிங் சென்று மகிழலாம்.

ஆங்கிலேயர்கள் தங்கள் குடும்பத்தாருடன் நீலகிரியில் தங்கிப் பலவிதமான பணிகளையும் மேற்கொண்டனர் அல்லவா? அப்போது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தாய்நாட்டைப் பிரிந்து இங்கே வந்து வசிக்கிறோமே என ஏக்கம் கொள்வதுண்டாம். அந்த 'ஹோம் சிக்’கைப் போக்குவதற்காக இங்கிலாந்தில் இருக்கும் தாவரங்கள், மீன், வளர்ப்புப் பிராணிகள் போன்றவற்றை இங்கே கொண்டுவந்து வளர்த்தனராம். இங்கிலாந்து நாட்டின் பல மர வகைகளையும் இங்கே அறிமுகப்படுத்தியதற்கு இதுவும் ஒரு காரணம். அவை ஓரளவுக்கு அவர்களின் தாய்நாட்டுப் பிரிவுத் துயரைத் தணித்தனவாம். அப்படி ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு செடிதான் 'யுலக்ஸ் யூரோப்பியன்ஸ்’. இப்போது இது பல்கிப் பெருகி நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான களையாக மண்டிக்கிடக்கிறது.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

இதேபோல, ஊட்டியில் இருக்கும் சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள சிலைகளையும் இங்கிலாந்தில் இருப்பதைப்போலவே அமைத்திருக்கிறார்கள். கோல்ஃப் மைதானம் இன்னொரு சான்று. இதற்கெல்லாம் மேலாக, அவர்களின் நாட்டு ஸ்பெஷல் மீனான 'ட்ரவுட்’ மீனையும் நீலகிரிக்குக் கொண்டுவந்து ஏரிகளில் விட்டுப் பெருகச் செய்திருக்கின்றனர். அவலாஞ்சி ஏரியில் ட்ரவுட் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன.

அவலாஞ்சி அருகில் இருக்கிறது பவானி அம்மன் ஆலயம். சிறிய ஆலயமாக இருந்தாலும் எழிலோடு விளங்குகிறது.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலாயானை, சிறுத்தை போன்ற விலங்குகளுடன் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாகத் தென்படுகின்றன. மலைப் பாறைகளுக்கு 'வரை’ என்று பெயர். அதனாலேயே அங்கு காணப்படும் இந்த ஆடுகளை 'வரையாடு’ என்கின்றனர். மலைகளின் உச்சிகளிலேயே நடமாடும் இயல்பு உடையவை இவை. அதனால், தங்களை வேட்டையாட வரும் புலி போன்றவற்றிடம் இருந்து எளிதில் இவை தப்பிவிடுகின்றன. பாறைகளின் உச்சியில் தொற்றித் தாவி ஏறுவதற்கு வசதியாக இவற்றின் குளம்புகளின் அமைப்பு இருக்கிறது.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

சிவப்பு வண்ணத்தில் எழிலோடு பூத்துக் குலுங்கும் பூக்களைக் கொண்ட 'ரோடோடெண்ட்ரான்’ என்று சொல்லப்படும் சோலை மரங்கள் அதிகமாக இருக்கின்றன. இமயமலையில் மட்டுமே இருக்கும் இந்த அரிய வகைத் தாவரம் இங்கும் இருக்கிறது. அந்த அழகை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அவலாஞ்சியின் அடர்ந்த வனங்கள் பலவற்றில் சூரிய ஒளியே உட்புக முடியாத அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக இருக்கின்றன. தரை எப்போதும் ஈரப்பதத்துடனேயே காணப்படுகிறது.

அவலாஞ்சியில் வனத்துறை ஓய்வு இல்லமும் இருக்கிறது. 1852-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வன ஓய்வு இல்லம்தான், தமிழகத்தில் இருக்கும் வன ஓய்வு இல்லங்களிலேயே மிகவும் பழைமையானது. இங்கே தங்க விரும்புபவர்கள், உதகையில் இருக்கும் தெற்கு வனக் கோட்டத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

அவலாஞ்சி சென்றால் காண வேண்டிய இன்னொரு முக்கியமான இடம், கொலரிபெட்டா. அடிவாரத்தில் இருந்து கொலரிபெட்டா சுமார் 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது. செங்குத்தான குறுகலான பாதையில் எக்ஸ்ட்ரா கியர் உள்ள ஜீப்களில் மட்டுமே செல்ல முடியும். டிரைவரும் மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த சாகசப் பயணத்தின் வழி நெடுகிலும் அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம். நடைப்பயணமாகவும் கொலரிபெட்டாவின் உச்சியை அடையலாம். ஆனால், அதற்கான உடல் வலு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அவலாஞ்சிக்கு அவசியம் வாங்க!  - சுற்றுலா

உதகை, தெற்கு வனக்கோட்ட அலுவலர் சி.பத்ரசாமியிடம் பேசியபோது, சுற்றுலாப் பயணிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார் அவர். ''அவலாஞ்சி போன்ற இயற்கையின் புனிதப் பகுதிகளுக்கு வெறும் சுற்றுலா நோக்கில் மட்டும் வராதீர்கள். இயற்கையின் பிரமாண்டத்தை மனப்பூர்வமாக அனுபவிக்க வாருங்கள். காடுகளின் பாடலைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அவற்றோடு மௌன மொழியில் உரையாடுங்கள். பிளாஸ்டிக் பொருட்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். உரத்த குரலில் ஒருபோதும் ஆரவாரம் எழுப்பாதீர்கள். கண்களை உறுத்தும் அழுத்தமான வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிய வேண்டாம். மூக்கைத் துளைக்கும் வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்த வேண்டாம். அவை, வனவிலங்குகளை உங்கள்பால் ஈர்க்கும். ட்ரெக்கிங் செல்பவர்கள் முன்கூட்டி வனத் துறையினரிடம் அனுமதிபெற்று, அவர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுங்கள்.''

என்ன... அவலாஞ்சி செல்லத் தயாராகிவிட்டீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு