Published:Updated:

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

ரசனை ஆர்.குமரேசன் - படங்கள் எஸ்.சாய் தர்மராஜ்

பிரீமியம் ஸ்டோரி

'ஆன்ட்டிக் பஜார்’ என அமெரிக்கன் டைம்ஸ் பத்திரிகையால் புகழப்பட்ட காரைக்குடி முனீஸ்வரன் கோயில் தெரு மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. தெருவுக்குள் நுழைந்தவுடன் ஏதோ சினிமா செட்டுக்குள் நுழைந்த உணர்வு! வரிசையாக இருக்கும் கடைகளில் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்ட ஐம்பொன் சிலைகள் நிற்கின்றன. பழங்கால வீடுகளில் இருக்கும் முகப்புத் தூண்கள், வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்ட கதவுகள், கலைப்பொருட்கள், பழங்கால மரச் சாமான்கள், ஓவியங்கள்... என ஓர் அருங்காட்சியத்தில் இருக்கவேண்டிய அத்தனைப் பொருட்களும் வீதியில் விற்பனைக்கு இருக்கின்றன.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

தினமும் பார்த்துப் பார்த்துச் சலித்துபோனதாலோ என்னவோ, உள்ளூர் மக்கள் கண்டுகொள்ளாமல் நகர்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினர் ஒவ்வொரு கடையிலும் மணிக்கணக்கில் நின்று நிதானமாக ரசித்து, புகைப்படம் எடுத்து, பிடித்த பொருள் ஏதாவது ஒன்றையேனும் வாங்கிக்கொண்டுதான் நகர்கிறார்கள். பாரம்பரியம் மிக்க பிரமாண்டமான செட்டிநாட்டு வீடுகளை இப்போது பராமரிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா எனப் பெரும்பாலும் வெளிநாடுகளில் செட்டில் ஆனவர்கள், அதிக செலவுசெய்து இந்த வீடுகளைப் பராமரிக்க விரும்புவதில்லை. இன்றைய நிலையில் அந்த வீடுகளுக்கு வெள்ளையடிக்கவே பல லட்ச ரூபாய் செலவாகும்! அதனால், வீடுகளைப் பார்த்துக்கொள்ள வேலையாட்கள், சொந்த பந்தங்களை அமர்த்திவிட்டு, திரை கடலோடி திரவியம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் வாரிசுகள். வீட்டில் இருப்பவர்கள் அங்குள்ள பழைமையான பொருட்களை முனீஸ்வரன் கோயில் வியாபாரிகளிடம் வந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். சில வீடுகளில் உரிமையாளர்களே விற்பனை செய்துவிடுகிறார்கள். அவற்றை வாங்கும் வியாபாரிகள் அவற்றைத் துடைத்து சுத்தம் செய்து, பளபளப்பாக்கி, தங்களுக்குக் கணிசமான லாபம் வைத்து விற்கிறார்கள்.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

ஒரு கடையில் நுழைந்தோம். களிமண் ஜாடிகள், விதவிதமான தட்டுகள், வேலைப்பாட்டுடன் கூடிய சீப்புகள், தாயக்கட்டைகள், கைப்பிடிகள், கத்திகள், அந்தக் கால அண்டா, குண்டா, டம்ளர்... என விதவிதமான பொருட்கள் குவிந்து கிடந்தன. ஒரிஜினல் பர்மா தேக்கில் செய்த ஃபர்னிச்சர்கள், ஊஞ்சல் பலகைகள், தூண்கள் என அனைத்திலும் கலையம்சம் மிளிர்ந்தது.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

இந்தத் தெருவில் பல வருடங்களாகக் கடை வைத்திருக்கும் 'ஓல்ட் செட்டிநாடு கிராஃப்ட்’ உரிமையாளர் முருகேசனிடம் பேசினோம். விதவிதமான கலைப்பொருட்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவர், முனீஸ்வரன் கோவில் தெரு, 'ஆன்ட்டிக் பஜார்’ ஆக மாறிய கதையைச் சொல்லத் தொடங்கினார்.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

''ஒரு காலத்துல தனவணிகம் செய்யறதுக்காக நகரத்தார், உலகம் முழுக்கப் பல தேசங்களுக்குப் போனாங்க. அப்படிப் போனவங்க, அந்தந்த நாடுகள்ல இருக்கிற வித்தியாசமான கலைப்பொருட்களை வாங்கிட்டு வந்து, தங்களோட வீடுகளை அழகுபடுத்தினாங்க. பொதுவாகவே நகரத்தார்கள் தங்களோட வீடுகளை ரொம்ப அழகா பராமரிப்பாங்க. முற்றம் இல்லாத வீடுகளே இருக்காது. வீடுகளைப் பராமரிக்குறதுல நீ பெரியவனா, நான் பெரியவனான்னு ஒரு ஆரோக்கியமான போட்டியே நடக்கும்.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

பர்மாவுல இருந்து தேக்கு, பெல்ஜியத்துல இருந்து கண்ணாடி, சீனாவுல இருந்து களிமண் ஜாடிகள், பீங்கான் பொருட்கள்னு தொழில் பண்ணுன நாட்டின் பிரபலமான பொருள்களை வாங்கிட்டு வந்து வீடுகள்ல சேர்த்தாங்க. இன்னைக்குப் பெண்கள் தங்கம் அணியுறதை கௌரவமா நினைக்கிற மாதிரி, அந்தக் காலத்துல இப்படிப்பட்ட பொருள்கள் வீட்டுல இருக்குறதை கௌரவமா நினைச்சாங்க. தாயம் விளையாடுற கட்டை, சீக்கோலி, மரக்கரண்டினு சின்னச் சின்ன பொருள்லகூட கலையம்சத்தோட கூடிய வேலைப்பாடு இருக்கும்.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

இப்படிப் பல வீடுகள்ல ஏகப்பட்ட பொருட்கள் சேர்ந்துடுச்சு. அடுத்த தலைமுறை தலையெடுத்து, பாகப் பிரிவினை நடந்தப்ப, கலைப்பொருட்களோட அருமை தெரியாம, 'இது எதுக்கு இடத்தை அடைச்சுக்கிட்டு’னு நினைச்சு, வந்த விலைக்கு வித்தாங்க. ஒரு கட்டத்துல பழைய இரும்புக்குப் பேரீச்சம்பழம் வாங்குற மாதிரி, சில வீட்டுல இருந்த பொருளைக் கொடுத் துட்டு, அவங்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்புகளைக்கூட வாங்கினாங்க. அப்ப, முனீஸ்வரன் கோயில் தெருவுல எங்க முன்னோர்கள் கடை வெச்சிருந்தாங்க. அந்தக் கடைகள்ல நகரத்தார் வீடுகள்ல இருந்து வாங்கிட்டு வந்த பொருள்களை விற்பனைக்கு வெச்சாங்க. கோயிலுக்கு வந்துட்டு இந்தத் தெரு வழியா போனவங்க அதைப் பாத்துட்டு, தங்களோட வீடுகள்ல இருந்த சில பொருட்களையும் கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிச்சாங்க.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

இங்கே ஒரே இடத்துல இந்த மாதிரி கலைப்பொருட்கள் கிடைக்கிறதைக் கேள்விப்பட்டு, வெளிநாட்டுக்காரங்க வர ஆரம்பிச்சாங்க. இப்ப இந்தத் தெருவே மியூஸியம் மாதிரி இருக்கு. 50 ரூபாயில இருந்து பல லட்ச ரூபா மதிப்புள்ள பொருள்கள் விற்பனைக்கு இருக்கு.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

முன்ன மாதிரி இப்ப வீடுகள்ல பொருள்கள் கிடைக்கிறதில்ல. பழைமையான பொருள்கள் மாதிரியே வேணும்னு கேக்கறவங்களுக்கு புதுசா செஞ்சு, பழசு மாதிரி பெயின்ட் பண்ணிக் கொடுக்குறோம். இந்தத் தொழிலுக்கு விற்பனை வரியில் சலுகை கொடுத்தா இன்னும் அதிகமா வெளிநாட்டுக்காரங்க வந்து வாங்குவாங்க. அது மூலமா அந்நியச் செலவாணி அதிகரிக்கும்'' என்றார் முருகேசன்.

தெருவெல்லாம் பொக்கிஷங்கள்!

பழைமையான கிராஃப்ட் பொருள்களைச் சேகரித்துவரும் காரைக்குடியைச் சேர்ந்த மகாதேவன், ''செட்டிநாட்டுக்காரங்களோட ரசிப்புத் தன்மைக்கு உதாரணம்தான் இந்தக் கலைப்பொருட்கள். இன்னிக்கு இருக்குற தலைமுறைக்கு இதோட மதிப்பு தெரியல. நான் இது மாதிரி பொருட்களைச் சேகரிச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கும் காரைக்குடியைச் சுத்தியுள்ள கிராமங்களுக்குப் போயி, அங்கே இருக்குற ஆளுங்ககிட்ட பேசி பொருட்களை வாங்குறேன். வெளியே 5,000 ரூபாய்க்கு விக்குற பொருளை, நேரடியா போனா 100 ரூபாய்க்கு வாங்கிடலாம். இந்த மாதிரி கலைப்பொருட்களை சேகரிக்கிறதுக்கு அதிகப் பணம் தேவைப்படும்னு நினைக்குறாங்க. அதான் இல்லை. மனசும் ரசிப்புத் தன்மையும்தான் ரொம்ப முக்கியம்'' என்றார்.

உண்மைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு