பிரீமியம் ஸ்டோரி

ந்துக்களுக்கு தீபாவளி ஒரு கோலாகலமான பண்டிகை. அன்றைய நாளில் புதிதாக உடுப்பதும், புதிய பண்டங்களைச் சமைத்து உண்பதும், உறவினருக்குக் கொடுப்பதும், வாண வேடிக்கைகள் செய்வதும், வாசலில் வரிசையாக விளக்கேற்றி வைப்பதும், உறவினர்களைப் போய்ப் பார்த்து நலம் விசாரிப்பதும், ஒருவரை ஒருவர் வணங்கி வாழ்த்துகள் சொல்வதும், ஏழைகளுக்கு உதவுவதும் வழக்கமாக இருக்கிறது.

அன்று, திருமகளுக்கு விசேஷமான நாள். ஸ்ரீகிருஷ்ணர், அசுரனை அழித்த தினம் அல்லவா? அதனால், திருமாலைப் பூஜிக்க உகந்த நாள். எந்தப் பெருமாளாக இருந்தாலும் போய் வணங்கி, பூமாலை சார்த்திவிட்டு வருவதுதான் இந்துக்களின் வழக்கம். ஆனால், தீபாவளி வெறுமே நண்பர்களோடு, உறவினர்களோடு கொண்டாடும் பண்டிகையாக மட்டும் இல்லை; அன்று அமாவாசையாக இருப்பதால், பித்ரு வணக்கமும் மிகவும் முக்கியம். உண்மையில், பித்ருக்களை வரவழைத்து அவர்களின் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு, நீர் வார்த்து அவர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லவேண்டும். நல்லவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

சீதா செய்த சிராத்தம்!

''இந்து மத சாஸ்திரத்தில் தர்ப்பணம் செய்கிற உரிமை மனைவிக்கு இல்லை. கணவன் செய்யும்போது அருகில் இருந்தும், இறந்துபோன தன் கணவனுக்கு மகன் தர்ப்பணம் செய்கிறபோது தொலைவில் இருந்தும் அவள் பார்க்கவேண்டும் என்றே விதித் திருக்கிறது. இது கொஞ்சம் சரியாக இல்லையே..?'' என்று கேட்டார் என் நண்பர் ஒருவர்.

எனக்குச் சட்டென்று சீதையின் ஞாபகம் வந்தது. ''பெண்கள் தாராளமாக திவசம் செய்யலாமே..!'' என்றேன்.

வனவாசத்தில் ஸ்ரீராமர், தன் தந்தை தசரதருக்குச் செய்ய வேண்டிய பித்ரு கடனுக்கான நாள் வந்ததும், அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். நடு வனாந்தரத்தில் இருந்தார்.

''லட்சுமணா, கிராமங்களுக்குப் போய் ஏதாவது தானியங்கள் வாங்கி வா. சிராத்தத்துக்கு உண்டான பொருள்களைச் சேகரித்து வா!'' என்று கட்டளை இட்டார்.

லட்சுமணன் விரைவாகப் போனார்.

''சீதா, நானும் இங்கே ரிஷிகளின் ஆஸ்ரமத்தில் உணவுப் பண்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன். அந்தத் தானியங்களைச் சமைத்து நம் பித்ருக்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்'' என்று ஸ்ரீராமரும் நகர்ந்து போனார்.

சீதா செய்த சிராத்தம்!

சிராத்தம் செய்யவேண்டிய நேரம் நெருங்கியது. கணவனும் வரவில்லை, கொழுந்தனும் வரவில்லையே என்று கவலைப்பட்டாள் சீதாபிராட்டி. சிராத்த காலம் முடியும் நேரம் நெருங்குகையில் எழுந்தாள். மனம் குவித்தாள். சில பழங்களைச் சுட்டு மணல் மேட்டின் மீது வைத்தாள். கையில் இருந்த சிறிது மாவைப் பிடித்துக் கெட்டியாக்கி, அருகில் இருந்த மரத்தில் இருந்து தேன் சேகரித்து, அதைப் பிசைந்து இலையில் வைத்து, மனம் உருகி, தன் மாமனாரை வேண்டினாள்.

'இந்த வனாந்தரத்தில் உங்களுக்குக் கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தயவுசெய்து வந்து எடுத்துக்கொள்ளவேண்டும். நேரே வந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் என் மனம் சாந்தி அடையும்’ என்று சொல்ல, அங்கு சில உருவங்கள் தோன்றின. அந்த மாவுப் பிண்டத்தின் மீதும், பழங்கள் மீதும் தங்கள் கையை வைத்து எடுத்துக்கொண்டது போல சுவீகரித்தன.

'நீங்களெல்லாம் யார்?’ - திகைப்புடன் சீதாபிராட்டி கேட்டாள்.

''நான் தசரதன். உன்னுடைய மாமனார். இவர்களெல்லாம் நம் முன்னோர்கள். இவர்களை வணங்கி, வாழ்த்தைப் பெற்றுக்கொள். நீ தேனும் மாவும் கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. சுட்ட பழம் சுவையாக இருந்தது. மனம் உருகியும், முழுமனத்தோடும், நல்ல அழைப்போடும் நீ கொடுத்த இந்தப் பண்டங்களை நான் எடுத்துக்கொண்டேன். நீ மிகவும் சிரத்தையாக சிராத்தம் செய்திருக்கிறாய். அன்பும், அடக்கமும் கலந்த இந்த சிரத்தை என்னைச் சந்தோஷப்படுத்தியது'' என்று வாழ்த்தினார்.

''நீங்களெல்லாம் வந்திருப்பது தெரிந்தால் என் கணவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! நான் சிராத்தம் செய்தேன், அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று நான் சொன்னால், அவர் என்னை நம்புவாரா?''

''நிச்சயம் நம்புவார். அதற்கு உண்டான சாட்சிகளைத் தயார் செய்துகொள்!'' என்று தசரதர் கட்டளை இட்டார்.

''பசுவே, நீ தயவுசெய்து சாட்சியாக இருந்து, என் மாமனாரோடு நான் பேசியதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏ! தாழம்பூவே, என் மாமனார் வந்திருக்கிறார். அவருக்கு உன் அடிமடியில்தான் நான் தினைமாவு வைத்தேன். நீ சாட்சியாக இருக்கவேண்டும். ஏ! அக்கினியே, நீ விளக்காக இருந்து இந்த சிராத்தத்துக்கு நடுவே என் மாமனார் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாய். நீ சாட்சியாக இருக்க வேண்டும்.

ஏ! பல்குணி நதியே! உன்னுடைய நீரை எடுத்து வந்துதான் இங்கு சுத்தம் செய்தேன். இந்தப் பண்டங்களைச் சுற்றி உன் நீரால்தான் அவருக்கு நிவேதனம் செய்தேன். எனவே, நீராகிய நீயும் எனக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்'' என்று சொன்னாள்.

''இவர்களைச் சாட்சியாக வைத்து மறுபடியும் உங்களை வணங்குகிறேன். நீங்கள் என் சிராத்தத்தை ஏற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. நான் பாக்கியசாலி. நான் நலமோடு என் புருஷனோடு நீண்ட நெடுங்காலம் இருக்க என்னை ஆசீர்வதியுங்கள்'' என்று வணங்கினாள். தசரதரும், அவரின் முன்னோர்களும் சீதாபிராட்டியை ஆசிர்வதித்தார்கள்.

ஆனால், சீதாபிராட்டி திவசம் கொடுத்ததையோ, தசரதரும் அவரின் முன்னோர்களும் வந்து அதை ஏற்றுக் கொண்டதையோ ஸ்ரீராமர் நம்பவில்லை.

''நம்புங்கள். இந்தப் பசுவே சாட்சி. இந்தத் தாழம்பூ புதர் சாட்சி. இந்த அக்கினி விளக்கு சாட்சி. பல்குணி நதி சாட்சி!'' என்று சொன்னாள் சீதா. ஆனால், ''நாங்கள் எதையும் அறியோம்'' என்று அவை ஒரே குரலில் கூறின.

சீதை விக்கித்துப் போனாள். ஸ்ரீராமர் சட்டென்று தர்ப்பைப் பாயில் உட்கார்ந்தார். ஆசமனம் செய்தார். அருகில், தம்பியும் பாய் போட்டு உட்கார, அவரும் சிராத்தத்துக்குத் தயாரானார்.

சீதையின் மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஸ்ரீராமர், சூரியனை நோக்கி வணங்கி, ''சூரியனே! நீ இங்கு வந்து பிராமணனாக அமர்ந்து, இந்த சிராத்தத்தை என் தந்தையிடம் கொடுக்கும்படியாக வேண்டுகிறேன்'' என்றபோது ஓர் அசரீரி கேட்டது...

''சிராத்தம்தான் முடிந்துவிட்டதே!''

''என்னது?''

''உங்கள் தகப்பனாருக்கு இன்று நீங்கள் செய்யவேண்டிய சிராத்தத்தைச் செய்தாகிவிட்டதே!'' என்றபடி ஸ்ரீராமரின் எதிரே வந்து நின்றார் சூரியன். நடந்தவற்றை முழுமையாக விவரித்தார்.

''சீதையே! நீ மிகப் பெரிய புண்ணியசாலி! நான் மூன்று முறை சிராத்தம் செய்திருக்கிறேன். ஆனாலும் என் தகப்பனோ, பித்ருக்களோ நேரில் வரவில்லை. நான் சிரத்தையாகச் செய்யவில்லை போலும்! ஆனால், நீ சிரத்தையாகச் செய்து அவர்களின் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கிறாய். நீ என்னைவிட பாக்கியசாலி!'' என்று புகழ்ந்தார்.

அவர் விலகிச் சென்ற பிறகு, பல்குணி நதியைப் பார்த்தாள் சீதா. ''அட, பல்குணி நதியே! நீ இனி மேலே பிரவாகித்து என்ன பயன்? உன்னிடம் இருந்து நீர் கொண்டுவந்து செய்த சிராத்தத்தை இல்லையென்று சொல்லிவிட்டாயே... எனவே, நீ அந்தர் வாகினியாக பூமிக்கு அடியில் ஓடும் நதியாக இரு!'' என்று சாபமிட்டாள்.

சீதா செய்த சிராத்தம்!

'தாழம்பூ புதரே! எவ்வளவு அருமையான மணம், எத்தனை பெரிய மடல் என்று ஆசையாக உன்னைப் பறித்து, உன் மீது நைவேத்தியம் வைத்தேனே! இப்படி இல்லையென்று பொய் சொல்லிவிட்டாயே? நான் தினந்தோறும் பூஜிக்கின்ற சிவன் உனக்கு ஆசீர்வாதம் தரமாட் டார். நீ அவருக்குப் பிடிக்காத வஸ்துவாக, அவர் மீது சூடப்படும் பாக்கியத்தை இழக்கக் கடவாய்! உனக்கும் சிவனாருக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஏ பசுவே, நீயாவது வாய் திறந்து உண்மையைச் சொல்லியிருக்க வேண்டாமா? உன் வாய் எப்போதுமே கோணலாகவே கிடக்கட்டும். உன்னுடைய பின்பக்கம் நல்ல பாக்கியத்தைப் பெறட்டும். வாய் அபாக்கியவானாக ஆகட்டும்!'' என்று சபித்தாள்.

விளக்கு துடித்தது.

''அக்கினியே, உலகத்தில் எல்லோருக்கும், எதற்கும் சாட்சியாக இருக்கக்கூடியவன், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பாலமாக இருக்கக் கூடியவன் நீதானே? நீ பொய் சொல்லலாமா? நல்லது கெட்டது தெரியாத நீ, எல்லாவற்றையும் அழிப்பவனாக, எல்லாவற்றையும் உருக்குலைப்பவனாக இரு. உன்னால் நல்லவை கெட்டவை சகலமும் தீயட்டும். நல்லவற்றை அழித்த பாவம் கடைசி வரை உன் தலையில் விழுந்துகொண்டே இருக்கட்டும்'' என்று சபித்தாள்.

சீதை செய்த சிராத்தம் ஏற்கப் பட்டதோடு மட்டும் இல்லை; அந்த சிராத்தத்தை மறுதலித்த நான்கு பேருக்கும் கடும் தண்டனை கிடைத்தது.

புரிகிறதா? பெண்கள் சிராத்தம் செய்ய முடியாது, கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. எனவே, தீபாவளிக் குதூகலத்துக்கும் கொண்டாட்டத் துக்கும் நடுவே உங்கள் பித்ருக்களை விழுந்து வணங்கி, அவர்களையும் உபசரித்து, அவர்களுக்கும் தீபாவளிப் பண்டங்கள் கொடுங்கள். நீங்களும், உங்கள் குழந்தைகளும், உங்கள் குடும் பத்தில் உள்ள அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு