Published:Updated:

ஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...
ஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...

சுற்றுலா - ஜில் ஜில் பரளிக்காடு!ச.ஜெ.ரவி - படங்கள் தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி
ஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...

ங்கும் குவிந்து கிடந்த இயற்கை வளங்கள், இப்போதெல்லாம் அரிதாய்க் கிடைக்கும் பொக்கிஷங்களாக மாறிவிட்டன. அப்படி ஒரு பொக்கிஷம்தான் பரளிக்காடு. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் மலைக் கிராமம்.

கொஞ்சும் இயற்கை எழில், சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, பளிங்கு நீரில் பரவிக்கிடக்கும் கற்கள், மண் மணம் மாறாத மக்கள்... என முற்றிலும் இயற்கை அழகால் நிரம்பி உள்ளது பரளிக்காடு. உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நீங்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், பரளிக்காடு உங்களுக்கான சரியான சாய்ஸ்! இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டேன் என்கிற வாக்குறுதியுடன், சில கட்டுப்பாடுகளுக்கும் செவிசாய்தால் நீங்கள் உடனே அங்கு புறப்படலாம்.

பரளிக்காடுக்கு எப்படிச் செல்வது?

பரளிக்காடு செல்ல, ஒரு வாரத்துக்கு முன்பே அந்தப் பகுதி வன அலுவலரிடம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். இங்கு செல்ல சனி, ஞாயிறுகளில் மட்டுமே அனுமதி!

தமிழக- கேரள எல்லையில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது பரளிக்காடு. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 35 கிலோ மீட்டர் பில்லூர் சாலையில் பயணித்தால், பரளிக்காடு உங்களை இனிதே வரவேற்கும்.

பரிசல் பயணத்துக்கு காலை 10 மணிக்கு முன்பாக அங்கு இருக்க வேண்டும் என்பதால், காலை 7 மணிக்கெல்லாம் கோவையில் இருந்து புறப்பட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் செல்லும் வழிகளில் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே செல்ல முடியும்.

காரமடையில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர்களைக் கடந்துவிட்டாலே, நகரங்களின் அடையாளங்கள் மறைந்து, அழகிய கிராமிய அடையாளங்கள் நம்மை வசீகரிக்கத் தொடங்குகின்றன. சில கிலோ மீட்டர்களைக் கடந்தால் வருகிறது, வெள்ளியங்காடு. இதுதான் மலையடிவாரத்தில் உள்ள கடைசி கிராமம்.

வெள்ளியங்காட்டைக் கடந்துவிட்டால், காட்டுக்கு நடுவே பயணிக்கிறது சாலை. சுற்றிலும் மலைகள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, பறவைகளின் வினோதக் கூச்சல்கள், அழகிய நீரோடைகள் எனக் கொட்டிக்கிடக்கும் எழில் நம் பயணத்தை ரம்மியமாக்குகிறது. கொண்டை ஊசி வளைவுகளிடையே வாகனத்தை நிறுத்தி மலைகளையும், பறவைகள், விலங்குகளின் சத்தத்தையும் ரசிக்கலாம். மலைப்பாதை என்பதால் பொறுமையாகவும் கவனத்துடனும் பயணிப்பது நல்லது.

செல்லும் வழிகளில் ஆங்கங்கே சில சிறிய மலைக் கிராமங்கள் உள்ளன. அவற்றைக் கடந்து சென்றால் அடர்ந்த காடுகளுக்குள் நுழைகிறது சாலை. அங்கிருந்து சில கிலோமீட்டர் கடந்து சென்றால், பரளிக்காடு. வழியில் நீங்கள் வனத் துறையின் இரண்டு செக்போஸ்ட்களைக் கடந்து வர வேண்டும். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

ஆளை மயக்கும் பரிசல் பயணம்!

பில்லூர் அணைக்குப் பின்பகுதியில், பரளிக்காடு கிராமத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிக்கு அருகில், ஆலமரத்தடியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, சுக்குக் காபியுடன் வரவேற்கின்றனர் அங்குள்ள பழங்குடியின மக்களும் வனத்துறையினரும். சுக்குக் காபி குடித்துவிட்டு, பயணத்தின் களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், பரிசல் பயணம் தொடங்குகிறது.  

மொத்தம் 16 பரிசல்கள் உள்ளன. 18 ஓட்டுநர்கள் உள்ளனர். ஒரு பரிசலில் நான்கு பேர்தான் செல்லமுடியும். மூங்கில் பரிசல்களுக்குப் பதிலாக, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஃபைபர் பரிசல்கள்தான் பயணத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பயணிகள் அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் கட்டாயம்.

பரிசலை இயக்குபவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள். பரிசலை இயக்கிக்கொண்டே ஏரி, காடு, மலைவாழ் கிராமங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். நம் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சளைக்காமல் விடை தருகிறார்கள். 'இந்த ஏரி எவ்ளோ ஆழம் இருக்கும்?'' என மிதமான பயத்துடன் நம்மிடம் இருந்து வந்த கேள்விக்கு, ''அதுவா... 50 அடியில இருந்து 60 அடி வரை இருக்கும்'' எனச் சாதாரணமாகப் பதிலளிக்கிறார்கள். ''என்னது..! 60 அடியா? ஒண்ணும் பயம் இல்லையே?'' என்று பதறினால், 'அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க! இங்கே 2007-ம் வருஷத்துல இருந்து பரிசல் சவாரி நடக்குது. ஒரு சின்ன அசம்பாவிதம்கூட நடந்தது இல்ல. நாங்க சின்ன வயசுல இருந்து இங்கதான் இருக்கோம். இந்த ஏரி, காடு எல்லாம் எங்களுக்கு நல்ல பரிச்சயம். வெறும் மரக்கட்டையிலேயே ஏரியில் இந்தப் பக்கத்துல இருந்து அந்தப் பக்கத்துக்குப் போவோம். அதனால பயம் எல்லாம் அவசியமே இல்லை. நீங்க சந்தோஷமா இருங்க!'' என தைரியம் கொடுக்கிறார்கள்.

சுமார் 30 நிமிடப் பயணத்துக்குப் பின்னர், வனத்தையொட்டி நிற்கிறது பரிசல். ''சும்மா காட்டுக்குள்ள ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க'' என்று பரிசல் ஓட்டிகள் கூற, இறங்கி நடந்தோம். வழியில், கொம்புடன் கிடந்த காட்டெருமையின் மண்டையோடு முதலில் பயமுறுத்தினாலும், பின்னர் அனைவரும் அதை எடுத்து விளையாடத் தொடங்கிவிட்டனர். வன விலங்குகள் உலவும் காடு என்பதால், சிறிது நேரம்தான் அனுமதி. அரிய பறவைகள், உடும்பு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பார்க்கலாம். மீண்டும் அங்கிருந்து பரிசல் பயணம். 10.30 மணிக்கு தொடங்கிய பயணம், தொடங்கிய இடத்திலேயே 12.30 மணிக்கு நிறைவுறுகிறது.

சுவை மிகுந்த மதிய உணவு!

மீண்டும் மர அடிவாரம். நாற்காலிகளில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினால், மதிய உணவு ரெடி! அந்தப் பகுதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரால் மதிய உணவு வழங்கப்படுகிறது. கேசரி, சப்பாத்தி, குருமா, ராகி களி உருண்டை, சிக்கன், கீரை, வெஜிடபிள் பிரியாணி, வெங்காய சட்னி, உருளைக் கிழங்கு சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய், வாழைப்பழம் ஆகிய உணவுகள் பரிமாறப்படுகின்றன. அனைத்தும் சுவையாக உள்ளன. ''சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் இளைப்பாறுங்கள்; 2 மணிக்கு ட்ரெக்கிங் செல்லலாம்'' என்றார்கள் வனத் துறையினர்.

ட்ரெக்கிங், மூலிகைக் குளியல்...

பரளிக்காட்டில் இருந்து சென்ற வழியிலேயே திரும்பி 10 கி.மீட்டர் தூரம் பயணித்தால், அத்திக்கடவு பாலம் வருகிறது. அங்கு உங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, அத்திக்கடவு ஆற்றையொட்டி ட்ரெக்கிங் செல்லலாம். பழங்குடியினத்தவர் ஒருவரும், வனத் துறையைச் சேர்ந்த ஒருவரும் உடன் வருகின்றனர். ஓரிரு கி.மீட்டர் ஆற்றையொட்டி நடந்து சென்றால், ஆளை மயக்கும் ரம்மியமான பகுதியில் ஆற்றில் குளிக்க அனுமதிக்கின்றனர். வெயில் நேரத்திலும்கூட மிகவும் குளிர்ந்தே இருக்கிறது ஆற்று நீர்.

ஆறு குறித்து உடன் வந்த பழங்குடியின மக்களிடம் கேட்டபோது. ''இது அத்திக்கடவு ஆறு. மலையில் இருந்து வருகிறது. இது மூலிகை நீர். குளித்தால் புத்துணர்வு கிடைக்கும்'' என்றனர். எல்லோரும் ஆனந்தமாகக் குளியல் போட்டுக்கொண்டிருக்க, ''மணி 5 ஆகப்போகுது. குளிச்சது போதும். எல்லோரும் கிளம்புங்க'' என வனத் துறையினரின் விரட்டினர். ஆனால், அதை யாருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆற்றை விட்டு எழ மனமில்லாமல், நீரில் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ''சீக்கிரம் கிளம்புங்க. யானைங்க எல்லாம் தண்ணி குடிக்க இங்கதான் வரும்'' என்று அறிவித்ததுதான் தாமதம், ஆற்றில் இருந்தவர்கள் எல்லாம் அடுத்த நிமிடம் மளமளவெனக் கரைக்கு வந்துவிட்டனர்.

மீண்டும் மலைப் பயணம்; சலசலக்கும் மரங்கள்; பறவைகள் ஒலி; விலங்குகளின் வினோதச் சத்தங்கள் என உங்களின் இந்தப் பயணம் கட்டாயம் சிறந்த அனுபவமாக இருக்கும்.

பழங்குடியின மக்களின் நலனுக்காக...

இந்தச் சுற்றுலா மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் பழங்குடியின மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பரிசல் ஓட்டுபவர்கள், மதிய உணவு தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் போக, மீதமுள்ள தொகை பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

''இது வர்த்தக ரீதியில், லாப நோக்கத்தில் தொடங்கப்படவில்லை. இந்தப் பயணத்துக்கு நீங்கள் வழங்கும் முழுத் தொகையும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இங்கு வந்துசென்றுள்ளனர். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு பல வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. இதுபோக 12 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பில் உள்ளது'' என்றார் வனச்சரகர் தேசப்பன்.

சூழல் சுற்றுலாத்தலமாக இந்த இடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தவும், புகைபிடிக்கவும் தடை உள்ளது. ஆவின் உட்பட பல நிறுவனங்கள் கடை அமைக்க அனுமதி கோரியும், அனுமதிக்கப்படவில்லை.

இந்தப் பயணம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. சென்னை ஐ,டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னா, ''நான் நிறைய சுற்றுலாத் தலங்களுக்குப் போயிருக்கிறேன். புதுசா ஏதாவது இடத்துக்குப் போகலாம்னு முடிவு பண்ணி இந்த முறை இங்கே வந்தோம். இந்த இடம் இயற்கை மாறாமல் இருக்கு. நகர வாழ்க்கையில் இருந்து விலகி, பரபரப்பு இல்லாம இப்படி அமைதியா இயற்கையோட ஒன்றியிருக்கறது ரொம்பப் பிடிச்சிருக்கு. இது நல்ல பிக்னிக் ஸ்பாட்'' எனச் சான்றிதழ் கொடுத்தார்.

உண்மைதான்! சுற்றிலும் மலைகள் சூழ, குளுமையான வானிலையில், சுத்தமான காற்றை சுவாசித்து இதமாய் இயற்கையை ரசிப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இருப்பதில்லை. நீங்களும் ஒருமுறை பரளிக்காடுக்கு வந்து பாருங்க!

பரளிக்காடு பயணத்துக்கு முன் கவனிக்க...

* பரிசல் பயணம், மதிய உணவு, ட்ரெக்கிங், மூலிகைக் குளியல் என அனைத்துக்கும் சேர்த்து பெரியவர்களுக்கு 400 ரூபாயும், 12 வயதுக்குக் குறைவானவர்களுக்கு 300 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.

* இந்தச் சூழல் சுற்றுலாவுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டுமே அனுமதி. வார நாட்களில் குறைந்தது 40 பேர் கொண்ட குழுவாகச் செல்ல விரும்பினால் அனுமதி வழங்கப்படும்.

*பயணத்துக்கு ஒரு வாரம் முன்னரே வன அலுவலரிடம் முன்பதிவு செய்ய வேண்டும்.

* 9047051011, 9443384892 எனும் எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

*கண்டிப்பாக மது அருந்த, புகைபிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை.

* பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் பேப்பர்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு