Published:Updated:

இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!

இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!

தொழில் ரகசியம் ச.ஜெ.ரவி - படங்கள் தி.விஜய்

இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!

”அந்த ஸ்வீட் கடையில என்ன அவ்வளவு கூட்டம்?''

''அதுவா... அந்தக் கடையில ஒரு கிலோ மைசூர்பாகு வாங்கினா, ஒரு சுத்தியல் இலவசமா தர்றாங்களாம். அதான்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மைசூர்பாகு என்றாலே, இதுபோன்ற சிரிப்புகள்தான் நினைவுக்கு வரும். காரணம், வீடுகளிலும் சில ஸ்வீட் ஸ்டால்களிலும் கல் போன்ற பதத்தில் மைசூர்பாகு தயாரிக்கப்பட்டு வந்ததுதான்.  

உண்மையில், மைசூர்பாகு எப்படி இருக்க வேண்டும் என்கிற சிதம்பர ரகசியத்தை அறிந்து, அதில் மிகப் பிரமாண்டமான வெற்றியும் பெற்றிருக்கிறது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். மேலே சொன்னது போன்ற மைசூர்பாகு குறித்த நகைச்சுவைகள் இன்றைய தினம் வழக்கொழிந்து போனதற்கு, இந்த நிறுவனமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தனது பெயரில் பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள மைசூரின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் மைசூர்பாகு. 'பார்ப்பதற்குக் கட்டியாகவும், சாப்பிடும்போது பற்களுக்கு வேலை இல்லாமல் கரையவும் செய்ய«வண்டும்!’ - இதுதான் மைசூர்பாகின் அடிப்படைத் தத்துவம். இதனை முழுமையாக அறிந்து, நாவில் கரையும் மைசூர்பாகுக்குத் தமிழகம் மட்டுமல்லாது, கடல் தாண்டியும் ஏராளமானோரை அடிமைப்படுத்தியுள்ளது ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

1948-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்த 65 ஆண்டுகளில் 100 கிளைகளை நோக்கி வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலும் தனது கிளைகளைப் பரப்பி வருகிறது. தந்தை மகாதேவ அய்யரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை மகன்கள் கிருஷ்ணன், முரளி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸின் 65 ஆண்டுக் கால சாதனைப் பயணம் குறித்து கிருஷ்ணனிடம் பேசினோம்.

''1948-ல் கோயம்புத்தூர் கடைவீதியில் 'ஸ்ரீகிருஷ்ணபவன்’ எனும் சிறிய ஹோட்டலைத் தொடங்கினார் அப்பா. ஹோட்டலின் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஸ்வீட் ஸ்டால் இருந்துச்சு. அங்கே எல்லா வகையான இனிப்புகளையும் தயார் செஞ்சு வித்தோம். ஆனா, அதுல மைசூர்பாகோட விற்பனை மட்டும் அதிக அளவில் இருந்தது. மக்கள்கிட்ட கிடைச்ச ஆதரவால தனியா ஸ்வீட்ஸ் ஸ்டாலும் தொடங்கினார் அப்பா.

இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!

அந்தக் காலத்துல ஹோட்டல், ஸ்வீட்ஸ் கடைகள்ல எல்லாம், 'எங்கள் கடையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்படுபவை அல்ல’ அப்படினுனு எழுதி போட்டிருப்பாங்க. ஏன்னா, இனிப்புகள் எண்ணெயால் தயாரிக்கப்பட்டதா, நெய்யினால் தயாரிக்கப்பட்டதாங்கிற அறிவிப்பா எழுதி வைக்கணும்கிறது முனிசிபல் ரூல்! ஆனா, நாங்க சுத்தமான நெய்யினால் எல்லா ஸ்வீட்ஸும் தயாரிச்சதால 'எங்கள் கடையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் நெய்யினால் தயாரிக்கப்படுபவை’னு அறிவிப்பு போட்டே விற்கத் தொடங்கினோம்.

அப்புறம், ஸ்வீட்ஸ் கடையின் வடிவமைப்பை மாத்தினோம். நாங்க பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கடைவீதி பகுதியில்தான். ஸ்கூலுக்குப் போறப்ப வர்றப்ப எல்லாம் நகைக்கடை, துணிக்கடைகளைப் பார்த்துட்டே போவோம்; வருவோம். அப்ப எல்லாம் ஸ்வீட்ஸ் ஸ்டால்கள் ரோட்டுல வெளிப்படையாகத்தான் இருக்கும். நகைக்கடைகள் மாதிரி உள் அலங்காரம் செஞ்ச கடையில கண்ணாடி கூண்டுக்குள்ள வெச்சு ஸ்வீட்ஸ் விக்கலாமேனு தோணுச்சு. உடனே அதைச் செயல்படுத்தினோம் மைசூர்பாகு என்பதை மைசூர்பா என மாத்தினோம். பொருட்கள் தயாரிப்பிலயும் கவனம் செலுத்தினோம். இந்த வித்தியாசமான முயற்சிகள் எல்லாம் ரொம்பவே கைகொடுத்துது. மக்களை திரும்பிப் பார்க்க வெச்சுது. மைசூர்பாவின் விற்பனை உச்சத்தை எட்டியது. கோவையின் அடையாளமாக எங்களின் மைசூர்பா மாறியது. உண்மையில் எங்களின் வளர்ச்சி எங்களுக்கே தெரியாமல் நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய நேர்மறையான முயற்சிகள், நேர்த்தி, ஒழுக்கம் மற்றும் சுத்தமான தயாரிப்பு ஆகியவற்றுக்கு மக்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. எனவே, எங்களின் இனிப்புகளைக் கடைப் பொருளாகப் பார்க்காமல், தங்கள் வீட்டிலேயே தயாரித்த பொருளாகப் பார்க்கத் தொடங்கினார்கள் மக்கள். இதுதான் எங்கள் வெற்றி!'' என்றார் கிருஷ்ணன் அழுத்தம்திருத்தமாக.

''மைசூர்பாகு தயாரிப்பில் அந்தப் பக்குவத்தை எப்படிப் பிடிச்சீங்க? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்?'' என்றதும்,

''இதில் ரகசியமெல்லாம் ஏதுமில்லை. மைசூர்பாகு தயாரிப்பில் எல்லோரும் கையாளும் அதே முறையைத்தான் நாங்களும் கையாளுகிறோம். மற்றபடி, பக்குவம் மற்றும் தரத்தில் மிகவும் கவனம் செலுத்துகிறோம்'' என்று சொல்லிப் புன்னகைத்த கிருஷ்ணன் தொடர்ந்து பேசினார்...

''எந்த ஒரு தொழிலிலும் ரகசியம் காக்கப்படவில்லை என்றால், தொழிலாளர்கள் மாற்றம், தொழிலில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் எங்களுக்கும் சில பிரச்னைகள் இதுபோன்று ஏற்பட்டன. உடனே, அதில் கவனம் செலுத்தினோம். தயாரிப்புக்கான உட்பொருட்கள் இடுவது, அதன் செய்முறை மற்றும் பக்குவமாகச் சமைப்பது என மூன்று பிரிவுகளையும் வெவ்வேறு ஷிஃப்ட்களாக மாற்றினோம். உட்பொருட்களுக்கான உள்ளீட்டு வரையறை பதிவு செய்யப்பட்டு மொத்தமும் சிஸ்டம் கன்ட்ரோலில் கொண்டுவரப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக எல்லாவற்றையும் கவனித்து, உட்பொருட்கள் கலவையில் அதிக கவனம் செலுத்தி, இந்த முறையைச் செயல்படுத்தினோம்.

இனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு!

உட்பொருட்களை இடுபவர்களுக்கு அதை எந்த ஸ்வீட்டுக்குப் போடுகிறார்கள் என்பது தெரியாது. சமையல்காரருக்குக் கலவை தெரியாது. இதனால் சமையல்காரருக்கு உட்பொருட்கள் குறித்த அறிவு தேவை இல்லை. இதனால் மிக்ஸிங்கில் பிரச்னை வரவே வராது. எனவே, அந்தப் பக்குவம் ரகசியம்'' என்றார்.

''உங்க கடையில் மைசூர்பாகு மட்டும் தயாரிப்பது இல்லையே... நிறைய ஸ்வீட்ஸும் விக்கிறீங்களே?'' என்று கேட்டால், அதற்கும் வருகிறது அசத்தல் பதில்.

''எங்க கடைக்கு வர்ற மக்களில் 90 சதவிகிதம் பேர் மைசூர்பாகுக்காகத்தான் வர்றாங்க. மற்ற ஸ்வீட் வகைகளை எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸுக்காக வெச்சிருக்கோம். நாம வாங்கப்போறது ஒரே ஒரு புடவைதான்னாலும், பத்து புடவைகள் இருக்கிற கடையில் போய் புடவை எடுக்கறதைவிட, 100 புடவைகள் இருக்கிற கடையில் போய் புடவை எடுக்கறதைதான் எல்லோரும் விரும்பறோம். 99 புடவையை ரிஜெக்ட் பண்ணி, ஒரு புடவை எடுக்கறதில் கிடைக்கிற மனத் திருப்தி அலாதி! அதனாலதான் நிறைய பொருட்களைத் தயாரிக்கிறோம். ஆனா, எல்லாப் பொருட்களுமே 100 சதவிகிதம் தரத்துடன் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!'' என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, கோவையில் தொடங்கி இப்போது வெளிநாடுகளுக்கும் பயணித்து வருகிறது. யார் கண்டார்கள்... கிருஷ்ணா ஸ்வீட்ஸாரின் புண்ணியத்தில், வருங்காலத்தில் மைசூர்பாகு என்பதற்குப் பதில் கோவைபாகு என்றுகூட அதன் பெயர் மாறக்கூடும்!