Published:Updated:

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!
சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

விளையாட்டுசு.குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி
சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

யுவராஜ் சிங்... இந்தியாவின் பெஸ்ட் ஆல் ரவுண்டர். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே கேன்சர் நோயால் ஒரு வீரர் பாதிக்கப்பட்டு, மீண்டும் புத்துணர்வுடன் ஃபார்முக்கு வந்து கலக்கியது இல்லை. இந்திய வீரர் யுவராஜ் சிங் இந்த வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார். உண்மையிலேயே சிங் இஸ் கிங்!

''பலரும், இனி யுவி அம்புட்டுதான் என்றார்கள். கேன்சரின் கொடுமையைவிட, இந்த மாதிரியான விமர்சனங்கள்தான் என்னைக் கொடூரமாகத் தாக்கின. அப்படி இருந்தும், என் அம்மாவின் ஆசியாலும், ரசிகர்களின் தொடர் பிரார்த்தனையாலும் மறுபிறவி எடுத்தேன்!'' - விசாகப்பட்டினத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிவிட்டு வந்த யுவராஜ் உதிர்த்த வார்த்தைகள் இவை.

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

2000-மாவது ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், இந்திய அணி தோல்வியை நோக்கிப் பயணித்தபோதெல்லாம் வியர்க்க விறுவிறுக்க விளையாடி, அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். அதுவும் 'சேஸிங்’ என்றால், இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த சாய்ஸ் யுவராஜ்தான். பொதுவாக, வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள்  அவ்வளவாக சோபிக்க மாட்டார்கள் என்ற விமர்சகர்களின் வாசகத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டவர் யுவி. அதுவும், வெளிநாட்டு மண்ணில் எதிரிகளைத்

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

துவம்சம் செய்வதில் யுவி பெரிய கில்லாடி! 2007-ம் ஆண்டு 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றியபோதுதான் யுவராஜ் சிங் எனும் அசுர வீரன் அதிரடியாக வெடித்தான். அதிலிருந்து நம்பிக்கை நட்சத்திரமாக யுவி மாறினாலும், 'நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின்தான் எல்லாவற்றுக்கும் காரணம்’ எனப் பெருந்தன்மையாகச் சொல்லிச் சிரிப்பார் யுவராஜ்.

டெஸ்ட், ஒருநாள், 20-20 எனப் பல போட்டிகளிலும் கலக்கியவர் யுவராஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உலகக் கோப்பையை கடந்த ஆண்டு கைப்பற்றியது இந்திய அணி. 2011 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தும், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், அதிக கேட்சுகள் பிடித்தும் 'மேன் ஆஃப் தி டோர்னமென்ட்’ பட்டத்தைத் தட்டிச் சென்றார் யுவி. அதனால், யுவி-தான் உலக கோப்பை 2011-ன் ஹீரோ!

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

லாகவமான பேட்டிங், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னிங், ஃபீல்டிங்கில் புலி என உலகின் சிறந்த ஆல் ரவுண்டராகத் திகழ்வதால், உலகம் முழுவதும் யுவராஜுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இன்னும் ஒரு ஆச்சர்ய செய்தி என்னவென்றால், எதிரி நாடான பாகிஸ்தானிலும் அந்த நாட்டு வீரர்களைவிட யுவராஜ் சிங்குக்குதான் ரசிகர் பட்டாளம் அதிகம் என்கிறது இணையதள வட்டாரம்.

புகழின் உச்சியில் இருந்த யுவராஜ் சிங்குக்குப் பேரிடியாக, கடந்த ஆண்டு கேன்சர் நோய் தாக்கியது. 'இனி, இந்திய அணிக்காக விளையாடவே முடியாது’ என உடலளவிலும் மனதளவிலும் நொறுங்கிப்போனார் யுவராஜ் சிங். அவரது தாயார் ஷப்னம் சிங்தான் உடன் இருந்து, மகனுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லித் தேற்றி, தன்னம்பிக்கையூட்டி, கிட்டத்தட்ட மறுபிறப்பு அளித்தார் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அல்லும் பகலும் பத்து மாத காலம் மகனுடனேயே இருந்தார் ஷப்னம். ஜெம் செல் கேன்சர் நோயைக் குணமாக்க அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்.

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

''யுவராஜால் இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது. இதற்கு முன் சின்ன நோயால் பாதிக்கப்பட்டவர்களேகூட மீண்டு வந்து ஃபார்முக்குத் திரும்பியதாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே உதாரணம் இல்லை. அதுவும் கேன்சர் என்றால், கேட்கவே வேண்டாம்! நோ சான்ஸ்!'' என மூத்த கிரிக்கெட் வீரர்களில் ஆரம்பித்து, விமர்சகர்கள், ஊடகங்கள் எல்லாமே நம்பிக்கை இழந்துதான் சிந்தித்தன. ஆனால், யுவராஜ் கடுமையான சிகிச்சைகளை மேற்கொண்டு, நாடு திரும்பினார். ''கடவுள், அம்மா மற்றும் ரசிகர்களின் ஜெபம்தான் எனக்கு மறுபிறப்பு கொடுத்திருக்கிறது'' எனக் கடந்த மார்ச் 18-ம் தேதி அறிவித்தவர், ''மீண்டும் இந்திய நாட்டுக்காக விளையாடுவேன். அதற்காக என்னைத்

சிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்!

தயார்படுத்திக்கொண்டு வருவேன். அதுவரை கொஞ்சம் பொறுங்கள்!'' என்றார். அதன் பிறகு, ஆறு மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி, மனப்பயிற்சி, யோகா... எனத் தொடர்ச்சியாகச் செய்து, மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் காலடி வைத்தார். பெங்களூரு, சென்னை, டெல்லி, பஞ்சாப் எனத் தீவிர வலைப்பயிற்சி செய்தவர், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, விசாகப்பட்டினத்தில் நியூஸிலாந்துக்கு எதிராகக் களம் இறங்கினார். அப்போது உலகமே யுவராஜை ஆச்சர்யமாகப் பார்த்தது. முதல் போட்டியிலே இரண்டு ஓவர்கள் பந்து வீசி, ஒரு கேட்ச் பிடித்தது மட்டுமில்லாமல், 26 பந்துகளில் 34 ரன்களைக் குவித்து, தான் மீண்டு வந்துவிட்டதை உலகுக்குச் சொன்னார்.

''கேன்சரால் பாதிக்கப்பட்டபோது, இனி நாட்டுக்காக விளையாட முடியாதே என்று சோகமாக இருந்தது. இப்போது மீண்டும் விளையாட வந்ததற்குக் காரணம் அம்மாவும் ரசிகர்களும்தான். ஆனால், இன்னொருவரும் இருக்கிறார். அவர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங். சைக்கிளிங் விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற வீரரான ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, என்னைவிடச் சிக்கலில் இருந்தவர். தன்னுடைய விடாமுயற்சியால் போராடி, மீண்டும் சைக்கிளிங்கில் உலக சாம்பியனாகத் திகழ்ந்தார். நான்  நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது, தினமும் அவரின் பேச்சை வீடியோவில் போட்டுக் கேட்பேன். அவரின் தன்னம்பிக்கை மொழிகள் எனக்குள்ளும் ஊடுருவ, அவரைப் போலவே மீண்டெழ ஓயாமல் போராடினேன். இப்போது என் நாட்டுக்காக மீண்டும் விளையாடிக்கொண்டிருக்கிறேன்'' என்றார் யுவராஜ் சிங் பூரிப்புடன்.

தன்னம்பிக்கை என்பதன் இன்னொரு பெயர் யுவராஜ் சிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு