Published:Updated:

பரசுராம தரிசனம்!

ஆன்மிகம்ஜே.வி. நாதன் - படங்கள் ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
பரசுராம தரிசனம்!

ரசுராமர்- அதர்மம் அழித்து பூமித் தாயின் பாரம் குறைத்து தர்மம் காக்க வந்த ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் 6-வது அவதாரம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக் கும் மகனாகப் பிறந்தவர் ஸ்ரீபரசுராமர்.

 தந்தையின் மரணத்துக்காகப் பழிதீர்க்க... 21 தலைமுறை அரச வம்சத்தினரை அழிப்பதாக சபதமேற்ற இவரது திருக்கதையை பிரமாண்ட புராணம், ஹரிவம்சம், மகாபாரதம் முதலான ஞான நூல்கள் பலவும் விவரிக்கின்றன. ஸ்ரீராமனுக்கு விஷ்ணு தனுசை அளித்த பிறகு, வசிட்டரின் வேண்டுகோளுக்கு இணங்க, தான் வென்ற தேசங்களை எல்லாம் அவருக்கு தானம் தந்தார். பின்னர் தவமியற்ற விரும்பியவர், தனது பரசு (கோடரி) ஆயுதத்தால் சமுத்திரத்தை வற்றச் செய்து புதிய நிலப்பரப்பை உருவாக்கினார். அந்தப் பகுதி, ஸ்ரீபரசுராம க்ஷேத்திரம் என்று பெயர் பெற்றது. அதுவே இன்றைய கேரளம்.

இந்த மாநிலத்தில் ஸ்ரீபரசுராமருக்கு என்று தனிக்கோயில் அமைந்துள்ள திருத்தலம் திருவல்லம். 12-ம் நூற்றாண்டில் சேர மன்னன் அதியமான் பெருமாள் என்பவனால் கட்டப்பட்ட ஆலயம் இது. கரமானா நதி, கிள்ளி ஆறு, பார்வதி புத்தனாறு ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்துக்கு அருகில் ஆலயம் அமைந்திருப்பது விசேஷம். அதேபோன்று இந்தத் திருத்தலத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமான், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்வது கூடுதல் சிறப்பு!

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவல்லம். இந்தத் தலத்தில் கேரள தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீபரசுராமர் ஆலயம், முன்னோர் கடன் செய்வதற்கு உகந்த புனிதத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு செய்யப்படும் 'பலி தர்ப்பணம்’ மிகவும் உயர்ந்த சடங்காக மதிக்கப்படுகிறது. ஸ்ரீஆதிசங்கரர் இங்கு வந்து, தம் தாயாருக்கு 'பலி தர்ப் பணம்’ கொடுத்ததாக வரலாறு.

புராணத்தின்படி, திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலுக்கும் இந்தத் தலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலியுகத்தின் தொடக்கத்தில் திவாகர முனி என்பவர் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். தவம் ஆரம்பித்து 950-வது தினத்தில், ஒரு குழந்தையின் வடிவில் திவாகர முனிக்குக் காட்சி தந்தார் மகாவிஷ்ணு. எப்போதும் தன்னுடனேயே இருக்கும்படி அந்தக் குழந்தையை வேண்டினார் முனிவர். அவருக்கு, 'எனது மனம் கோணாமல் நடந்துகொண்டால் உங்களுடனேயே இருக்கிறேன்’ என்றது குழந்தை.

ஒரு நாள், பூஜையின்போது சாளக்கிராமத்தை எடுத்து வாயில் வைத்து கடித்தது குழந்தை. அதைக் கண்டு கோபம் அடைந்த முனிவர், குழந்தையை கடிந்துகொண்டார். குழந்தையும் கோபம் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. 'என்னைப் பார்க்க விரும்பினால், அனந்தன் காட்டுக்கு வா’ என்று முனிவரிடம் கூறிச் சென்றது. தனது தவற்றை உணர்ந்த முனிவர் குழந்தையைப் பின்தொடர்ந்து ஓடினார்.

பரசுராம தரிசனம்!

அனந்தன் காட்டுக்குள் சென்ற குழந்தை இலுப்பை மரத்தடியில் சென்று மறைந்தது. மறுகணம் அந்தக் குழந்தை... சுமார் 13 கி. மீட்டர் அளவுக்கு பிரமாண்டமாக சயனக் கோலத்தில் ஸ்ரீமகா விஷ்ணுவாகக் காட்சி தந்தது. அப்போது பெருமாளின் தலை இடம் இருந்த இடம்தான் திருவல்லம். பாதம் இருந்த இடம் - திருப்பாப்பூர்.

இவ்வளவு பிரமாண்ட உருவத்தினராய் பெருமாளைத் தரிசித்த முனிவர், எளிதில் தரிசிக்கவும் வழிபடவும் உகந்தபடி பேருருவைச் குறுக்கும்படி எம்பெருமானை வேண்டினார். ஸ்ரீமகாவிஷ்ணுவும் தன் உருவத்தை சுருக்கிக்கொண்டார். அந்த மூர்த்தம்தான் திருவனந்தபுரத்தில் அருளும் ஸ்ரீபத்மநாபஸ்வாமி. ஆக, திருவல்லம், திருவனந்தபுரம், திருப்பாப்பூர் மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவல்லம் ஆலயத்தில் ஸ்ரீகணபதி, வேத வியாசர், ஸ்ரீமகிஷாசுர மர்த்தினி, ஸ்ரீசுப்ரமணியர் மற்றும் மத்ஸய மூர்த்தி ஆகிய உப தெய்வங்களையும் தரிசிக்க முடிகிறது. தினமும் இங்கு ஐந்துகால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீபரசுராமர் இங்கு மூலவராகக் காட்சி அளிக்கிறார். இங்கு கணபதி ஹோமம் செய்து வழிபட்டால், விக்னங்கள் யாவும் அகலும்; கஷ்டங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள். திருமணம் செய்வதற்கு முன், இங்கு வந்து கணபதி ஹோமம் செய்த பின்பே, மற்ற வேலைகளில் இறங்குகிறார்கள் பெரும்பாலான கேரள மக்கள்.

பரசுராம தரிசனம்!

மலையாள கர்க்கடக மாதம் (ஜூலைஆகஸ்ட்) அமாவாசை நாளில் இந்தத் தலத்துக்கு வந்து 'கர்க்கடக வாவு பலி’ (வாவு பலி - தர்ப்பணம்) கொடுப்பதை, கேரள பக்தர்கள் மிக உயர்ந்த சடங்காக கருதுகிறார்கள். இந்தக் கோயிலில் விடியற்காலை 5:45 மணிக்கு தர்ப்பணம் தொடங்குகிறது. 75 நபர்கள் வரிசையாக அமர்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் வாழையிலை போடப்படுகிறது. சமைத்த உணவு (பிண்டம்), எள், சந்தனம், தர்ப்பையாலான பவித்திரம், புஷ்பம், நீர் எல்லாம் வழங்கப்பட்டு ஆச்சார்யர்களால் 30 நிமிடங்கள் தர்ப்பணம் நடத்தப்படுகிறது.

முதல் முறை தர்ப்பணம் கொடுப்பதாக இருந்தால் 50 ரூபாயும், அடுத்தடுத்த முறையாக இருப்பின் 23 ரூபாயும் கட்டணமாக ஆலயத்தில் செலுத்தினால் போதும். தர்ப்பணம் செய்வதற்கான எல்லாப் பொருட்களையும் ஆலய நிர்வாகமே வழங்குகிறது. காலை 5:45 மணி முதல் 11:30 மணி வரை, பத்து கட்டமாக சுமார் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இங்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். தர்ப்பணம் முடிந்ததும் அருகில் உள்ள கிள்ளி ஆற்றில் பிண்டத்தைப் போடுகிறார்கள். அது நதியில் பயணித்து கடலில் போய் கலக்கிறது. இங்குள்ள மேடைகளில் வைக்கப்படும் பிண்டச் சோற்றைச் சாப்பிடுவதற்கென்றே ஏராள காகங்களும் புறாக்களும் கோயில் வளாகத்தில் காத்திருக்கின்றன.

இந்த ஆலய மூலவர் ஸ்ரீபரசுராம ஸ்வாமிக்கு திருவோணம் ஆராட்டு, பரசுராமர் ஜெயந்தி என்று திருவிழாக்கள் அமர்க்களப்படுகின்றன. துலாம் மாதத்தில் (அக்டோபர்நவம்பர்) ஆண்டுத் திருவிழா 20 நாட்கள் கொண்டாடப்பட்டு, திருவோணம் அன்று முடிகிறது. ஆராட்டுத் திருவிழா கரமானா நதியில் நடத்தப்படுகிறது. ஸ்ரீபரசுராமரின் பிறந்தநாள், 'பரசுராமர் ஜெயந்தி’யாக பிராமண அர்ச்சகர் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் 'அட்சய திருதியை’ நாளுடன் ஸ்ரீபரசுராம ஜெயந்தியும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் தலை இருந்த திருத்தலமான திருவல்லத்தில் கோயில் கொண்டிருக்கும் பரசுராமர் கோயிலுக்குப் போய் அவரை வணங்கியும், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தும், இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீகணபதிக்கு கணபதி ஹோமம் நிகழ்த்தியும் வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

என்ன, நீங்களும் திருவல்லம் ஸ்ரீபரசுராமஸ்வாமி ஆலயத்துக்குக் கிளம்பிவிட்டீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு