Published:Updated:

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
மனமிருந்தால் மார்க்கமுண்டு!

தன்னம்பிக்கைகாம்கேர் கே.புவனேஸ்வரி - ஓவியம் பாரதிராஜா

பிரீமியம் ஸ்டோரி
மனமிருந்தால் மார்க்கமுண்டு!

லர் கற்றறிந்த ஞானிகளாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லித் தருகின்ற ஆற்றல் இருக்காது. கற்பித்தல் என்பது ஒரு கலை. மாபெரும் ஆற்றல். தான் கற்றதை மற்றவர்களுக்குப் புரியும்படி கற்றுத் தருவதும், மாணவர்கள் மெச்சும் குருவாக இருப்பதும் அனைவருக்கும் கை வந்த கலையாக வந்துவிடாது.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையிலும், இதுபோன்ற கற்றறிந்த பண்டிதர் ஒருவரைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  

சுவாமிஜி ஜெய்ப்பூரில் தங்கியிருந்தபோது, ஒரு பெரிய இலக்கணப் பண்டிதரைச் சந்தித்தார். சுவாமிஜிக்கு அவரிடம் சமஸ்கிருத இலக்கணம் கற்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால், மகா பண்டிதராக இருந்தும் அவருக்குக் கற்பிக்கும் திறமை இல்லை. முதல் சூத்திரத்துக்கான உரையையே அவர் தொடர்ந்து மூன்று நாட்களாக சுவாமிஜிக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ஆனாலும், சுவாமிஜியால் எதையும் கற்க முடியவில்லை; எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான்காவது நாள் அந்தப் பண்டிதர் எரிச்சலடைந்து, ''மூன்று நாள் முயன்றும் என்னால் இந்த முதல் சூத்திரத்தின் உரையையே உனக்குப் புரியவைக்க முடியவில்லை. என்னிடம் பாடம் கேட்பதால் உனக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றே நினைக்கிறேன்'' என்றார்.

இதைக் கேட்டதும், சுவாமிஜிக்குத் தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. திட சங்கல்பம் செய்துகொண்டு, அந்த முதல் சூத்திரத்தின் உரையை தானே தனியாக அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஆழ்ந்து படித்தார். மூன்று மணி நேரத்தில் அந்த உரையின் கருத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார் சுவாமிஜி. பின்னர் பண்டிதரிடம் சென்று, அந்த உரை முழுவதன் பொருளையும் சொன்னார். இதைக் கேட்ட பண்டிதர் மிகவும் வியந்து, ''மூன்று நாட்கள் விளக்கியும் என்னால் உனக்குப் புரியவைக்க முடியாத இந்த உரையின் கருத்தை, மூன்றே மணி நேரத்தில் நீ எப்படி இவ்வளவு தெளிவாகப் புரிந்துகொண்டாய்?'' என்று கேட்டார். அதற்குப் புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்தார் சுவாமிஜி.

அதன் பிறகு, தினந்தோறும் ஒவ்வோர் அத்தியாயமாக சுவாமிஜி அந்த நூலை எளிதில் படித்து முடித்தார். இந்த நிகழ்வை 'விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்’ என்ற நூலில் தன் அனுபவமாகக் கூறியுள்ளார் விவேகானந்தர். மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும், மலைகளைக்கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையை அதில் பதிவுசெய்துள்ளார்.

இதையே மகாபாரதத்தில் ஏகலைவன் நிரூபித்திருக்கிறான். நாம் நம் மனத்தை ஒருமுகப்படுத்தி எந்த ஒரு பிரச்னையையும் ஆழ்ந்து சிந்தித்தால், அதற்கு தீர்க்கமான முடிவு கிடைக்கும் என்பதற்கு, ஏகலைவனின் முயற்சி மிகச் சிறந்த உதாரணம். குரு துரோணாச்சாரியார் தனக்கு வில் வித்தை கற்றுத் தர மறுத்ததால், அவரைப் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ முயற்சிக்காமல், அவரிடம் உள்ள வித்தையை எப்படிக் கற்பது என்று மட்டுமே ஆழமாகச் சிந்தித்து, மனத்தை ஒருமுகப்படுத்திச் செயலாற்றியதால்தான், குருவே வியக்கும்படி வில்வித்தையில் சிறப்புற்றான் ஏகலைவன் என்பதே உண்மை.

நூலகங்கள், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என எந்த வசதியுமே இல்லாத காலத்தில் விரும்பியதைக் கற்கவும், அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் இவர்களால் முடிந்திருக்கும்போது, நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் அத்தனையும் நமக்குக் கிடைக்கும்படியான தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்ற இந்தக் காலத்தில் நம்மால் நாம் விரும்பிய ஒன்றைச் செய்யமுடியவில்லை என்றால், அதற்கு முயற்சி செய்ய மறுக்கும் சோம்பலான மனநிலைதான் மிக முக்கியக் காரணமாகும்.

மனத்தை ஒருமுகப்படுத்துவோம். எண்ணியதை முடிப்போம். வெற்றி நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு