Published:Updated:

இனி, ஆபத்து இல்லை!

கட்டுரை, ஓவியங்கள்: பத்மவாசன்

பிரீமியம் ஸ்டோரி

ட்டுக்குப் பேர் போன ஆரணியில், சற்று உள்ளே 2 கி.மீட்டர் போனால், முள்ளிப்பட்டு என்று ஓர் இடம். இங்கேதான் வீற்றிருந்து அருள்கிறார் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்.

முள்ளிக்காடு என்பது மருவி 'முள்ளிப்பட்டு’ என்றாகியிருக்கக்கூடும் என்று பலரும் கூறினாலும், முள்ளிப்பட்டு என்பது மிகப் பொருத்தமான பெயராகத்தான் எனக்குப் படுகிறது. பட்டுக்குப் பேர் போன இடத்தில் அல்லவா இருக்கிறது முள்ளிப்பட்டு! முள்ளிச் செடிகள் நிறைந்த காடானாலும், 'பட்டு’ போன்ற மென்மை நிறை இறைவன் வீற்றிருப்பதால், அவரே ஏற்படுத்திக்கொண்ட பெயரோ என்று எண்ணத் தோன்றுகிறது. முள்ளிக்காடு என்பது முள்ளிக்கோடு, முள்ளிநாடு, முள்ளிப்பாடு என்றெல்லாம் மருவாமல், முள்ளிப்பட்டு என்று மருவியிருப்பது இறைவன் செயலே! இன்றும், இந்தத் திருக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ள பலரும் பட்டு நெசவில், பல்வேறு பிரிவு வேலைகளில் உள்ளவர்களே! முள்ளில் பட்டு விழுந்தால் சேதம் பட்டுக்குத்தானே அன்றி முள்ளுக்கு அல்ல. எந்த முள்ளில் பட்டாகிய நீ விழுந்தாலும், பட்டுப் போல மெல்ல ஏந்திக் காப்பேன்; ஏன், முள்ளில் விழாமலும் காப்பேன் என்று சொல்லாமல் சொல்கிறானோ அந்த ஆதிசிவன்!

இனி, ஆபத்து இல்லை!

மிகப் பழைமையான இந்தத் திருக்கோயில் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரவல்லது என்பது, உள்ளே அடியெடுத்து வைக்கும்போதே புரிந்துவிடுகிறது. கருவறையில் மேலே விமானத்தைக் கை கூப்பித் தொழுதபோது கண்ணில் பட்ட காட்சி, ஆச்சரி யத்தை அளித்தது. பொதுவாக, விமானம் முழுவதும் இறைவன் திருவுருவங்களே நிறைந்திருக்கும். இங்கேயும் இருக்கிறார்கள். ஆனாலும், வேறு எங்கும் காணமுடியாதபடி சித்த புருஷர்கள் இருக் கிறார்கள்.

சபதரிஷிகளும், அருந்ததி தேவியும் என்று கூறப்பட்டாலும், அது இல்லை என்றுதான் தோன்றுகிறது. சப்த ரிஷிகள், பெரும் ஞானிகள். அவர்கள் இறைவனில் பரிபூரண அருளில் திளைத்து, எல்லோருக்குமே வழிகாட்டும் தெய்வங்கள். அவர்களின் பூரண அருளோடும் வழிகாட்டுதலோடும் மண்ணுலகில் நமக்கு அருள்பவர்களே இந்த மகாபுருஷர்கள்.

ஒரு படம் வரையும்போது, அத்தனையும் ஒருவரே வரைவது என்பது ஒன்று; திறமையான சிஷ்யர்களை வைத்து முழுவதையும் முடித்த பின்பு, கண்களை மட்டும் தான் வந்து திறப்பது என்பது ஒன்று. குருமார்கள் அப்படியும் செய்வார்கள்.

வரைய வேண்டும் என்பதுகூட இல்லை; இறைவன் நினைத்த மாத்திரத்தில் சித்திரம் உருவாகிவிடும்.

அது போன்று, கண் திறக்கும் நிலையில் இருக்கும் இந்த சப்தரிஷிகளை, அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்பில் அமர்த்திவிட்டு, திறமையும், தபோவலிமையும், சிவசிந்தனையும் நிறைந்த அடுத்த கட்ட மகரிஷிகள் மற்றும் சித்த புருஷர்களை அருகில் அமர்த்திக்கொண்டு, இறைவன் கட்டளை இட்டுக் காரியமாற்றுவதே பொருத்தமாகும்.

கால காலமாய் கர்மாக்களைச் சேர்த்து, ஆபத்துக் காலத்தில் அபயம் என்று வருவோர்க்கு ஆபத்சகாயேஸ்வரன் தன்னைச் சூழ்ந்திருக்கும் தவசிரேஷ்டர்கள் மூலம் பரிகாரம், பிராயசித்தங்களை அருளி உய்விக்கிறான் என்பதே நான் அறிந்த உண்மை.

இனி, ஆபத்து இல்லை!
இனி, ஆபத்து இல்லை!

சிவனாரைச் சுற்றி அமர்ந்திருக்கும் இந்த சித்த மகா புருஷர்கள் இன்று ஆதிபராசக்தியாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அவதாரமாய் பொலியும் ஸ்ரீஆயுர் தேவியின் திருக்கரங்களில் வீற்றிருந்தபடி அருள்பாலிக்கிறார்கள்.

ஆயுர்தேவி என்னும் சக்தி வழிபாடு கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் மிகச் சிறப்போடு இருந்ததாக ஏடுகள் தெரிவிக்கின்றன. ஆதிசிவனின் விருப்பப்படி, ஆக்ஞைப்படி, ஒவ்வோர் யுகத்திலும் பல்வேறு தேவியர் அவதாரம் செய்துள்ளார்கள். அப்படி ஆயுர்தேவி அவதரிக்கும்போது, அதற்கு முன்பிருந்தே கடுந்தவம் புரிந்த இந்தச் சித்தர்களும் ரிஷிகளும், அம்பிகையின் எட்டுக் கரங்களிலும் அமரும் பாக்கியம் பெற்றிருப்பார்கள் என்றே சொல்லலாம்.

அனைத்துக்கும் மூலமானவன் இந்த ஆபத்காயேஸ்வரன். அப்படியானால் பலப்பல யுகங்களாக இருக்கும் திருக்கோயில் இது என்பதும் நமக்குப் புலனாகிறது. ஆபத்துக்களில் இருந்து காத்து, அதற்கான பிராயச்சித்தங்களையும் பரிகாரங்களையும் இந்த முனிபுங்கவர்கள் மூலம் அருளி, அவற்றைச் செய்யவைத்து வாழ்வில் உய்வித்துக் கடைத்தேற்றுவது எவ்வளவு பொருத்தம்!

தம் சித்தத்தில் ஆபத்சகாயேஸ்வரனின் சிந்தனையைப் பதித்து, எப்போதும் சிவசித்தத்திலேயே இருக்கும் இந்த மஹா புருஷர்களை வணங்கி மகிழும்போது, அவர்கள் மூலம் அருள்புரிந்து பேரானந்தம் கொள்ளும் ஆபத்சகாய ஈஸ்வரன் குருவழிபாடு என்பதையும் சேர்த்தே நடத்துகிறான்.

ஆயுர்தேவி அன்னைக்கு ஒன்பது திருக்கரங்கள். எட்டில் இந்த ரிஷிகளும் ஒன்பதாவதாக இருக்கும் அபய ஹஸ்தத்தில் சாட்சாத் அந்தப் பரமசிவனும் குடிகொண்டு அருள்வதாகச் சொல்கிறார் அகத்தியர்.

இனி, ஆபத்து இல்லை!

அருட்பெருந்தவம் புரியும் சித்தர்களும் ரிஷிகளும் மனிதர்களுக்கு வரும் துன்பங்களுக்கான பரிகார முறைகளைத் தந்தருளியிருக்கிறார்கள். தோஷ நிவர்த்திகளைக் கூறியிருக்கிறார்கள். அந்தப் பரிகாரங்களைச் செய்துவிட்டு ஆபத்சகாயேஸ்வரரையும், தெய்வநாயகி அம்மனையும் வழிபடுங்கள்.

இதை எடுத்துரைப்பதற்காகவே, நாம் சாதாரணமாகக் கோயில் தூண்களில் காணும் சித்தர்கள், ரிஷிகளின் திருஉருவங்களை இந்தக் கோயிலில் மட்டும் விமானத்திலேயே தரிசிக்கும் பேறு கிட்டுகிறது.

இன்று ஆயுர்தேவியின் எட்டுத் திருக்கரங்களிலும் அமர்ந்து சிவனாரைத் தியானித்து, அம்பிகையைப் பணிந்து கடமையாற்றும் இவர்களின் திருவுருவங்களும் விமானத்தில் உள்ள திருவுருவங்களும் பொருந்திப்போவது ஆச்சரியப்படுத்துகிறது.

ஆயுர்தேவி அன்னையின் திருக்கரங்களில் அமர்ந்திருக்கும் முனிசிரேஷ்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பரிகார பாப நிவர்த்திகளை அருளியிருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு சித்த புருஷரும் மக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தையும் துயரத்தையும் துடைக்கும் பொருட்டுத் தவம் புரிந்து, தங்களை இந்த மக்களுக்காகத் தியாகம் செய்து, வாழ்வை அர்ப்பணித்தார்கள்.

ஆயுர்தேவியின் வலது கரங்களில்... 1. கயாஸுர மஹரிஷி, 2. ஆணி மாண்டவ்யர், 3. அத்ரி மஹரிஷி, 4. குண்டலினி மஹரிஷி; இடது கரங்களில்... 5. அஹிர் பத்ன்ய மஹரிஷி, 6. சாரமா முனிவர், 7. அஸ்தீக சித்தர், 8. கார்க்கினி தேவி - சம்வர்த்தர் (இவர்களிருவரும் அமிர்த கலசத்துள் அமர்ந்து அருளுகிறார்கள்).

இனி, ஆபத்து இல்லை!
இனி, ஆபத்து இல்லை!

இதில், ஸ்ரீஆணி மாண்டவ்யர் குழந்தைகளுக்கான ஆபத்துக்களைப் போக்குவதற்கான பரிகாரங்களை அருளியிருக்கிறார். கயாஸுர மஹரிஷி, பித்ரு தோஷத்தால் விளையும் தோஷங்களுக்கும் ஆபத்துகளுக்கும் பரிகாரங்களையும் நிவர்த்திகளையும் அருளியிருக்கிறார். அஸ்தீக மகரிஷி, நாக தோஷங்களுக்காக பரிகாரங்களை அருளியதோடு, விழிப்போடு கண்காணித்துக்கொண்டும் இருக்கிறார். கார்க்கினி தேவியோ, பெண்களுக்கு ஏற்படும் அத்தனை துன்பங்களுக்கான நிவர்த்திகளையும் கடும் தவத்தால் பெற்று அருளுகிறாள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோஷத்துக்கான பரிகாரத்தை அருளியிருக்கிறார்கள்.

இசைக் கச்சேரி செய்யும் வித்வானைச் சுற்றி பக்கவாத்தியக்காரர்கள்தானே அமர்ந்திருக்க முடியும்? ரசிகர்கள் எதிரேதான் அமர்வார்கள்.

ஈசனின் திருப்பெயர் இங்கே ஆபத்சகாயேஸ்வரர் என்று அமையாமல், வேறு ஏதாவது திருப்பெயர் இருந்து, கோயில் விமானத்தில் இதுபோன்று ரிஷிபுங்கவர்களின் திருவுருவங்கள் இருப்பின், இது சப்த ரிஷிகளும் பூஜித்து வழிபட்ட தலம் என்று கூறிவிட்டுப் போய்விடலாம். இது அப்படியல்லவே..? தலைமை வைத்தியருக்குப் பக்கத்தில் சக உதவி வைத்தியர்கள்தானே சூழ்ந்திருப்பர், அல்லவா?

இனி, பிராகார வலம் வரலாம்.  

கோயிலுக்குள் அடியெடுத்து வைத்து, வியந்தபடி வலம் வந்தோம். முன்னதாக, கமண்டல நதியோரம் சென்று, கை கால்களைச் சுத்தி பண்ணிக்கொண்டு, படித்துறையில் கோயில்கொண்டு அழகாய் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி இருக்கிறார். கருவறையின் பின்னே ஸ்ரீமுருகன், வள்ளி- தேவசேனையோடு அருள்கிறார். ஸ்ரீதுர்கையும் ஸ்ரீமகாவிஷ்ணுவும், ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீகணபதியும் கோஷ்டங்களில் இருந்து அருள்கிறார்கள். நவகிரக சந்நிதியும் உண்டு. ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் இடும் கட்டளைகளை நிறைவேற்றக் காத்த வண்ணம் உள்ளவர்கள் போலக் காட்சி தருகிறார்கள்.

ஸ்ரீதெய்வநாயகி அம்மனும் ஈசனுக்கு இடப் பக்கமாகத் தனிச் சந்நதி கொண்டு, கிழக்குப் பார்த்தபடி அருள்வது தனிச் சிறப்பு.

நட்சத்திரம், ராசி என்று அமைந்து, அந்தக் கிரக பலன்களின் அடிப்படையில் நம் வாழ்க்கை செல்வது கண்கூடு. இந்த ராசி நட்சத்திரம் வக்கிரம், ஆட்சி என்று வந்து போவதும், அப்போது பலப் பல ஆபத்துக்கள் வருவதும், உச்சம்பெறும்போது நலம் பெறுவதுமாக இருக்கும் காலங்களில், ஜாதக அடிப்படையில் கணித்துப் பரிகாரங்கள் பண்ணுவதும் தொழுவதும் செய்கிறோம்.

இந்தக் கிரக நிலை அடிப்படையில், வாழ்க்கை எனும் சம்சார சாகரத்தில் எழுந்தும் விழுந்தும் உழலும்போது, நீச்சல் அடிக்கத் தெரியாமல் நீரில் விழுந்தவனைக் கை கொடுத்து ஆபத்தில் இருந்து காக்கும் கருணை கொண்ட சக மனிதனைப் போல 'நானிருக்கிறேன், வா!’ என்று அருள்பவரே ஆபத்சகாய ஈஸ்வரர்.

இனி, ஆபத்து இல்லை!

வாழ்க்கையை இலகுவாக அமைத்துக் கொடுப்பதில் வல்லவர்கள் நமது ரிஷிகளும் சித்த புருஷர்களும். ஆபத்சகாயேவரர் என்ற நாமத்தோடு தலைவன் இங்கு தோன்றிவிட்டதால், இங்கு இந்த நட்சத்திரம், இந்த ராசி என்று அதன் அடிப்படையில் தவிக்கும் மக்களுக்கும் இவர்தானே அருள முடியும்! அதன்படி, ஆற்றில் இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 எண்ணிக்கையில் அமைத்து, பக்கவாட்டில் ராகு-கேது சூரியன் - சந்திரன் என அனைத்தையும் அமைத்து, ஆற்றில் இறங்கிச் சுத்தம் பண்ணி, தலையில் நீர் தெளித்துக்கொண்டு, அதே 27 படிக்கட்டுகள் மூலம் மேலே ஏறி வருபவருக்கு அதன்பின் இறக்கம் என்பது ஏது? கோயில் உள்ளேயும் சுவரில், விதானத்தில் மீன், ஆமை, தேள் என ராசிகளின் குறியீடுகளையும் அமைத்து, அனைத்துக்கும் தீர்வு இங்கே உள்ளது எனப் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார் இறைவன்.

ராஜராஜ சோழனுக்கு 'ஜெயம்கொண்ட சோழன்’ என்றொரு பெயர் இருந்ததாகவும், அவனது அரசாட்சிக் காலத்தில் இது 'ஜெயங்கொண்ட சோழ மண்டலம்’ என்ற பெயரில் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை, அவன் இப்பகுதிக்கு வந்து, கமண்டல நதியில் நீராடி, அருகில் இருந்த இன்னுமொரு கோயிலில் (காமநகர்) அன்றிரவு அங்கேயே தங்கிய வேளையில், அந்தத் தலத்தையும் முள்ளிப்பட்டுத் தலத்தையும் புனருத்தாரணம் பண்ண வேண்டும் என்று ஆணையிட்டதாகவும், அதன்படி அவன் நடந்து உய்வுற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆதியில் முள்ளிக்காட்டில் சிவபெருமானை அகத்திய மாமுனி பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

அஸ்வினி முதல் ரேவதி வரையிலான அத்தனை நட்சத்திரங்களிலும் பிறந்த அத்தனைப் பேரும் தங்கள் கஷ்டங்கள் அகல வழிபட வேண்டிய தலம் இது. நவகிரக தோஷங்களுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலம் இது என்பதில் எந்த ஐயமுமில்லை.

வாராவாரம் பக்தி சுத்தியோடு தேவார திருவாசகங்களை ஓதி, கோயில் முழுவதும் தெய்வீக சக்தியைப் பெருக்கி வைத்திருக்கும் முள்ளிப்பட்டு சிவனடியார் திருக்கூட்டம், கும்பாபிஷேகத்திற்கான வேலைகளில் முழுமூச்சாய் ஈடுபட்டுள்ள இந்த வேளையில், ஸ்ரீதெய்வநாயகி சமேத ஸ்ரீஆபத்சகாயேஸ்வரனை மனதார வழிபட்டு அள்ளிக் கொடுங்கள்; அவன் உங்களை அள்ளி அணைத்துக் காப்பான். இது சத்தியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு