Published:Updated:

மீடியா டார்லிங்!

கட்டுரை: சரோஜ் கண்பத், படம்: முகேஷ் அகர்வால்

பிரீமியம் ஸ்டோரி

சுபாஷ் சந்திர அகர்வால்! கடந்த 45 வருடங்களாக தனி மனித சுதந்திரத் துக்கும் மனித உரிமைக்கும் பொதுநலனுக்கும் குரல் கொடுத்து வருபவர். 17 வயதில் தொடங்கிய இந்தப் பழக்கம், 63 வயதிலும் தொடர்கிறது.

பொதுநலன் கருதி, மக்கள் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவதில் புகழ்பெற்ற சுபாஷ் அகர்வாலின் கடிதங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன. இதற்காக இவரது பெயர் கின்னஸ் ரெக்கார்டில் பதிவாகியிருக்கிறது. இவரது மனைவி மது அகர்வாலுக்கும் இதே போராட்ட குணம் தொற்றிக்கொள்ள, குறிப்பிட்ட காலத்துக்குள் அதிக அளவு பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதி ரெக்கார்ட் பிரேக் செய்து, தனது பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதித்துவிட்டார் மது.

இதுவரை எத்தனை வாசகர் கடிதங்கள் எழுதியுள்ளார் என்பதற்கான கணக்கு சுபாஷிடம் இல்லை. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கின்னஸ் ரெக்கார்டுக்காகக் கணக்கெடுத்தபோது, இவரின் 3,699 கடிதங்கள் வெளியாகியிருந்தது தெரிய வந்தது. இவை யாவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பத்திரிகைகளில் வெளியான கடிதங்கள் மட்டுமே!

மீடியா டார்லிங்!

மனைவியுடன் சுபாஷ் அகர்வால்

''இப்படி எழுதும் கடிதங்களை நான்கு விதமாக வகைப்படுத்தி, கின்னஸ் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இதில் மூன்று வகைக்கான விருதுகளை நான் பெற்றுள்ளேன். என் மனைவியும் ஒரு விருது பெற்றுள்ளார். இப்படிக் கடிதத்துக்காக விருது பெற்ற முதல் தம்பதி நாங்களாகவே இருக்க முடியும். எங்களுடைய கடிதங்கள் தேர்தல் கமிஷன் உள்பட, பல துறைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது!'' என்கிறார் சுபாஷ்.

''தூர்தர்ஷனில் 'ரஜினி’ என்னும் புகழ்பெற்ற சீரியல் ஒளிபரப்பானது பலருக்கும் தெரிந்திருக்கும். நுகர்வோர் விழிப்பு உணர்வு குறித்த சீரியல் இது. ஆரம்பத்தில், மாதம் ஒருமுறை இது ஒளிபரப்பானது. இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பைப் பார்த்து, பின்னர் நாள்தோறும் ஒளிபரப்பினார்கள். பிறகு, திடீரெனச் சம்பந்தமே இல்லாமல் 15 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றினார்கள். இதுகுறித்து விளக்கம் கேட்டு, நான் வாசகர் கடிதம் எழுதினேன். அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தியே என்னுடைய கடிதத்தைப் படித்துவிட்டு, என்னை அழைத்துப் பேசுமாறு ஓர் அதிகாரிக்கு உத்தரவிட்டார். அந்த அதிகாரி வேறு யாரும் இல்லை;  இப்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளராக இருக்கும் புலோக் சாட்டர்ஜிதான். பத்திரிகைகளுக்கு  நானும் என் மனைவியும் மேலும் மேலும் உற்சாகத்துடன் கடிதங்கள் எழுத, இதுபோன்ற நிகழ்வுகள்தான் காரணம்!'' என்கிறார் சுபாஷ் சந்திர அகர்வால்.

தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் அஞ்சலட்டை மூலம் புரட்சி செய்த இந்தத் தம்பதி இப்போது இணையத்தில் கலக்குகின்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு