Published:Updated:

நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!
நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!

கலை த.ஜெயக்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

பிரீமியம் ஸ்டோரி

தாம்ததாம் தைததை...’ என்று குரல் ஒலிக்க... மிருதங்கமும் தபேலாவும் படபடக்க... அரங்கின் ஒளி குறைந்து இரண்டு உருவங்களின் காவிய நிழல் தெரிகிறது. உடனே, ரசிகர்களின் கையொலி நம் காதைப் பிளக்கிறது. அரங்கத்தில் சந்தோஷ ஆரவாரம்! அடுத்து, என்ன தாள லயத்தில் தொடங்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு, அனைவரின் முகங்களிலும் கோடிட்டு நிற்கிறது. இப்படி, மூன்று மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட அற்புதம், சமீபத்தில் நாரத கான சபாவில் அரங்கேறியது. கலை உலகின் இரண்டு பிதாமகர்கள், நாட்டிய சிகரங்கள் இணைந்து நடனமாடியது, கலை உலகின் குறிஞ்சி மலர் பூக்கும் அதிசயம்!

அப்படி அரும்பியதுதான் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யமும், கதக் கலைஞர் பிர்ஜு மகராஜும் இணைந்து அரங்கேற்றிய நாட்டிய நடனம். இந்த நடனத்தின் சலங்கையின் ஓசை ரசிகர்களின் மனதில் இருந்து அகல்வதற்கு வெகு நாட்கள் ஆகும். கமல் நடித்த 'விஸ்வரூபம்’ படத்துக்கு 'கதக்’ நடனம் அமைத்து தேசிய விருதும் பெற்றவர்தான்  பிர்ஜு மகராஜ்.

நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!

பிர்ஜு மகராஜுடன் நடனமாடிய அனுபவங்களை விகடன் தீபாவளி மலருக்காக பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம் பகிர்ந்துகொண்டார்.

''பிற மாநிலக் கலைஞர்களுடன் இணைந்து ஆடி 25 வருடங்கள் ஆகுது. ஒடிசி நடனக் கலைஞர் சம்யுக்தாவுடன் ஆடியதே கடைசி. அதன் பிறகு யாருடனும் இணைந்து ஆடியதில்லை. யாருடனும் ஆடக்கூடாது என்பதில்லை; அதற்கான சந்தர்ப்பம் அமைய வில்லை. அவ்வளவுதான்! பிப்ரவரி மாதம் பிர்ஜு மகராஜின் மாணவி சாஸ்வதி சென்னுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. என் கையால்தான் விருது வழங்கப்பட்டது. அப்போ, பிர்ஜுவும் அங்கு வந்திருந்தார். அங்கு நாங்கள் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.

அதன் பிறகு, பிர்ஜு மகராஜோடு சேர்ந்து 'ஜுகல்பந்தி’ போல ஒரு நடனம் பண்ண வேண்டும் என்று கிருஷ்ண கான சபா செயலாளர் பிரபு கேட்டுக் கொண்டார். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். முதலில் கிருஷ்ண கான சபாவிலேயே இந்த நடனத்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அங்கே இருக்கைகள் போதாது என்பதால், நாரத கான சபாவில் நடத்துவது என முடிவு செய்து, தேதியும் குறித்தாயிற்று.

நான் பிர்ஜு மகராஜின் நடனங்களைப் பார்த்ததோடு சரி. மற்றபடி அவரோடு பேசிய தோ பழகியதோ இல்லை. என்னைவிட சீனியர் அவர். என்னைப் போலவே கலை உலகில் இருந்து வந்தவர். 'கதக்’ நடனத்தில் பெரும்புகழ் பெற்றவர். எப்படி அவரை அணுகிப் பேசப் போகிறோம்னு என்று உள்ளூர தயக்கமாகவே இருந்தது. ஆனால், அவர் குழந்தை மாதிரி பழகினார். அதுவே, ஒரு நம்பிக்கையை அளித்தது.

அரங்கேற்றம் 7-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. பிர்ஜு ஜூலை 5-ம் தேதிதான் வந்தார். என்ன பண்ணலாம்னு பேசிக்கிட்டோமே தவிர, ஒத்திகை எதுவும் பார்க்கவில்லை. சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பூமாதேவிக்கும் கங்காதேவிக்கும் வணக்கம் தெரிவிக்கும் பாடலோடு கூடிய நடனம் ஆட வேண்டும் என்று சொன்னேன். அவர் உடனே ஒப்புக்கொண்டார். பிறகு, ஒத்திகை இல்லாமலே மேடை ஏறிவிட்டோம். என்னதான் நாங்கள் அனுபவசாலிகளாக இருந்தாலும், இத்தனை ரசிகர்கள் அமர்ந்திருக்கிற அரங்கில் எப்படி செய்யப்போறோம்னு ஒரு பயம் இருந்தது.

நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!

இரண்டு பேரும் இணைந்து அரங்கத்தில் தோன்ற, பிர்ஜுவின் தபேலா குழுவும், நமது மிருதங்கக் குழுவும் இணைந்து இசையை எழுப்பின. தாள லயங்களுக்கு ஏற்ப நடனம் ஆடினோம். என்னுடைய கை அசைவுகளை அவரும், அவருடைய கை அசைவுகள நானும் கவனித்து நடனம் ஆடினோம். தபேலாவில் இருந்து வரும் இசையும் சரி, மிருதங்கத்தில் இருந்து வரும் இசையும் சரி... இரண்டும் கண்ணனைத்தான் பாடுகின்றன. எங்கள் நடன அசைவுகளும் அந்தக் கண்ணனை நோக்கியே இருந்தன. அவர்களுக்குக் கிருஷ்ணர் என்றால், நமக்கு கண்ணன்; அவ்வளவுதான்!

பாவங்கள் மாறுபட்டாலும், நடனம் காட்டும் விஷயம் அந்தக் கண்ணனைப் பற்றித்தான். அதுதான் எங்களை இணைத்தது. அதனால், ரசிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.  

இன்னொன்று... எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ இல்லை. தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இது போன்ற குணங்கள் வராது. இயல்பாக ஆடினோம். அடுத்து, தனித்தனியாய் வந்து ஆடினோம். அதற்கடுத்து, அவருடைய சிஷ்யை சாஸ்வதி சென்னும் என்னுடைய மாணவி காயத்ரியும் ஆடினார்கள். ரசிகர்களுக்கே கட்டாயம் இது புதிதான ஒரு அனுபவமாக இருந்திருக்கும். அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே, இருவரும் நுழைந்து அவர்களோடு சேர்ந்து ஆடினோம். நான்கு பேரும் சுருதி, தாள லயங்களுக்கு ஏற்ப மாறி மாறி, மேடையை வலம் வந்தோம். நான்கு பேரும் ஒரே மேடையில் இருந்ததால், சலங்கை ஒலி அனைவரின் கவனத்தையும் கட்டிப் போட்டுவிட்டது!'' என்றவரிடம்,

''பரந்த அளவில் பரதநாட்டியத்தைக் கொண்டுபோவதற்கான தளங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?'' என்று கேட்டோம்.

''இங்கிருக்கும் இசைக் கல்லூரிகளே அதற்கு சாட்சி! அதைக் கற்றுக்கொள்வதற்கு நிறைய இடம் இருக்கிறது. ஆனால், நம்மைத்தான் வெளிநாட்டு மோகம் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது. பாரம்பரியமான நம்முடைய கலைகளை ஒழுங்காகக் கற்றாலே போதும்; பிற நாட்டுக் கலைகளைப் பார்த்து காப்பி அடித்து இங்கே வெளிப்படுத்துவதால் என்ன பயன்? வெளிநாட்டுக்காரர்களே நம்முடைய கலைகளில் இன்னும் என்ன புதிதாக வரப்போகிறது என்பதைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். நாம்தான் அதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை.''

''புதிதாக நாட்டியம் கற்றுக்கொள்ள வருகிறவர்களுக்கு என்ன அறிவுரை சொல்கிறீர்கள்?''

''இன்றைக்கு இருக்கிற தலைமுறை ரொம்பத் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். நல்லதைச் சொன்னாலும் உடனே பிடித்துக் கொள்கிறார் கள்; கெட்டதைச் சொன்னாலும் பிடித்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்களுக்கு நாம்தான் நல்ல வழி காட்ட வேண்டும். நல்ல கலைத் தன்மையை, ரசிப்புத் தன்மையை, சுவையுணர்வைக் கொடுத்து வழிகாட்டினால் போதும்; அவர்கள் ஓஹோ என்று வந்துவிடு வார்கள். மற்றபடி, அவர்களின் ஆர்வத்துக்குத் தடை போடாமல், இருந்தாலே போதுமானது!''

நெருப்புக்கோழி பறக்குது!

நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி!

நெருப்புக்கோழியால் பறக்கமுடியாது என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால், நம்புங்கள்... உண்மையிலேயே ஒரு நெருப்புக்கோழி பறக்கிறது. இது எப்படிச் சாத்தியம் என்று திகைக்கிறீர்களா? டச்சு நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் ஜான்சன் (Jansen), அர்ஜென் பெல்ட்மேன்(Arjen Beltman) என்ற இருவர், இறந்த நெருப்புக்கோழியை உபயோகித்து ஒரு ஹெலிகாப்டரைத் தயாரித்துள்ளனர். அதற்கு 'ஆஸ்ட்ரிச்காப்டர்' (Ostrichcopter) என்று பெயரும் சூட்டிவிட்டார்கள். இதைப் பறக்கவிட்டு அனைவரின் பார்வையையும் தாங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள் இந்த விசித்திர நண்பர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு