Published:Updated:

“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”
“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”

இசை எஸ்.ரஜத், படங்கள்: சு.குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி

ர்னாடக சாஸ்திரிய சங்கீத பாடகியான சுதா ரகுநாதன், தனது தனித்தன்மை கொண்ட குரலாலும் இசை ஞானத்தாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

 மத்திய அரசு அளித்த பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட 50-க்கும் மேலான விருதுகள், பட்டங்களுக்குச் சொந்தக்காரர் இந்த இசைவாணி. பழம்பெரும் கர்னாடக இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியின் புகழ் பரப்பும் பிரதான சிஷ்யை. பாரம்பரியம் மிக்க மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி’ விருது பெற இருக்கும் சுதா ரகுநாதனை சந்தித்தோம்.

''எனக்குக் கிடைக்கும் எந்தப் புகழும் சிறப்பும் என் குருநாதர் எம்.எல்.வி-யையே சேரும்'' என சொல்லும் சுதா தான் கட்டியிருக்கும் வீட்டுக்கு தன் குரு நினைவாக 'வசந்தம்’ என பெயர் வைத்திருக்கிறார். ''தாய்- மகள் உறவைவிட ஆழமான உறவு எங்களிடையே இருந்தது. அதில் பாசம் இருக்கும்; கருணை இருக்கும்; கண்டிப்பும் இருக்கும். பல நாட்கள் காலையிலேயே அவர் வீட்டுக்குச் சென்று, அங்கேயே இருந்து சாப்பிட்டு, அவருடன் மாலையில் கச்சேரிக்கு சென்றுவிட்டு, இரவுதான் என் வீட்டுக்கு வருவேன். நிஜமான குருகுலம் அது. இப்போதைய சூழ்நிலையில் அதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. எதையும் அவர் தனியாகச் சொல்லிக் கொடுத்ததில்லை. நாமாக உணர்ந்து உள்வாங்கி கிரகித்துக்கொள்ள வேண்டும். சங்கீதத்தையும் தாண்டி, வாழ்க்கையையும் அவரிடம் இருந்துதான் படித்தேன். 1980-ம் ஆண்டு எம்.எல்.வி-யுடன் நான் அமெரிக்கா சென்று, பல இசை நிகழ்ச்சிகளில் அவரோடு பங்குபெற்றேன். எனது முதல் வெளிநாட்டு ட்ரிப் அதுதான்!

“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”

எனது இசை வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்பதில் எம்.எல்.வி. மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். என்னை மணக்க விரும்புபவரை தான் கட்டாயம் சந்தித்துப் பேச வேண்டும் என்று சொன்னார். கிருஷ்ண கான சபாவில் நடந்த ஒரு கச்சேரியில், ரகுநாதனைச் சந்திப்பது என்று முடிவாயிற்று!'' என்று சுதா ரகுநாதன் சொல்லி நிறுத்த, அந்த சந்திப்பு பற்றி ரகுநாதனே தொடர்ந்தார்...

''என்னை ஏன் எம்.எல்.வி. அம்மா சந்திக்க விரும்புகிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தாலும், மாபெரும் சங்கீத மேதை அழைக்கும்போது கேள்வி கேட்காமல் சென்று அவரைச் சந்திப்பதே சரி என்று சென்றேன். நான் அரங்குக்குள் நுழைந்தபோது மேடையில் எம்.எல்.வி-யுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்த சுதா, நான் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் ரகசியமாகக் கூறினார். அவர்கள் பாடிக்கொண்டிருந்த பாடலை முடித்ததும், பந்துவராளி ராகத்தில், 'ரகுவரா நன்னு’ என்ற தியாகராஜர் பாடலை சிரித்துக்கொண்டே ஆரம்பித்தார் எம்.எல்.வி. எனக்காக அவர் ஸ்பெஷலாகப் பாடும் பாட்டு அது என்பதை நான் உணர்ந்தேன். கச்சேரி முடிந்ததும், ஏராளமான ரசிகர்கள் அவரைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் என்னைப் பார்த்த எம்.எல்.வி., 'அவரோடு கொஞ்சம் தனியாகப் பேசணும்; கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, நேராக என்னிடம் வந்தார். 'சுதா ரொம்பத் திறமைசாலி பொண்ணு! அற்புதமான பாடகி. வைரம் மாதிரி பொக்கிஷம். அதை ஜாக்கிரதையா பாதுகாத்து, பிரகாசிக்க வைக்கிறது உங்களிடம்தான் இருக்கிறது’ என்றார். 'கண்டிப்பாக அப்படியே செய்வேன்’ என்று அவருக்கு உத்தரவாதம் கொடுத்தேன்'' என ரகுநாதன் முடிப்பதற்குள், சுதா செல்லமாக அவரைத் தட்டிக் கொடுத்து, ''எம்.எல்.வி. அம்மா கிட்ட கொடுத்த ப்ராமிஸை ரகு காப்பாற்றிவிட்டார்'' என்றார்.

சுதா ரகுநாதனுக்குப் பெயர் வைத்தது, அக்ஷராப்யாசம் செய்தது எல்லாமே புட்டபர்த்தி சாயிபாபாதான்! அவர் வைத்த பெயர் கீத சுதா. ''எனக்கு இவள் கீதா. உலகத்துக்கு சுதா'' என்று சொல்லி ஆசீர்வதித்தாராம். சுதாவின் பெற்றோர் சாயிபாபாவின் தீவிர பக்தர்கள். ஒருமுறை புட்டபர்த்தியில் பாபாவை சந்தித்துவிட்டு, பெங்களூருக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, இரண்டு வயது சுதாவுக்கு திடீரென்று ஏதோ ஆகிவிட்டது. மூச்சுப் பேச்சு காணோம். உடம்பு எல்லாம் நீலம் பாரித்துப் போய்விட்டது. யாருமே இல்லாத வனாந்தரப் பகுதியில் காரை நிறுத்தி, என்ன செய்வது என்று அவர்கள் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தபோது, கிராமத்து ஆட்கள் போன்ற வயதான ஆசாமிகள் மூன்று பேர் அங்கு வந்தார்கள்.அவர்கள், சாயிபாபா கொடுத்த திருநீற்றைக் குழந்தைக்குப் பூசும்படி சொல்ல, இவர்களும் அப்படியே செய்ய... அதிசயம் போல நீல நிறம் உடனே மளமளவென்று குறைந்து, குழந்தை கை, காலை அசைத்தது. பாபாதான் வயதானவர்கள் உருவத்தில் வந்து சுதாவைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்ந்து, நெகிழ்ந்தார்கள் பெற்றோர். ஊருக்கு வந்த பின்பு, பாபாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார்கள். ''சாகக் கிடந்த என்னைக் காப்பாற்றி, எனக்கு உயிர்ப் பிச்சை அளித்தவரே பகவான் பாபாதான்!'' என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார் சுதா. இரண்டு வயது சுதாவை பகவான் பாபா கைகளில் தூக்கிக்கொண்டி ருக்கும் படம், வீட்டில் இருக்கிறது. பகவான் ஆசீர்வதித்து அளித்த நெக்லஸை சுதா இப்போதும் அணிந்து கொண்டிருக்கிறார்.

“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”

இசைத் துறையில் ஏராளமான வியப்பூட்டும் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் சுதா, அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, சிறப்பான சாதனை ஒன்றைச் செய்திருக்கிறார். கல்லூரியில் சிறந்த மாணவியாக- படிப்பு, விளையாட்டு, கலைகள் என எல்லாத் தகுதிகளும் பெற்றிருக்கும் சிறந்த மாணவியாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு சுதாவே பரிசை வென்றிருக்கிறார். இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனை இது!

பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஆங்கிலத்தில் சுதாவுக்கு நிறைய ஆர்வம். பத்து வயதில் ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, டீன் ஏஜ் பருவத்தில் மில்ஸ் அண்ட் பூன்ஸ், எனிட் ப்ளைடன் புத்தகங்களும் பின்னர்... சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், டான் ப்ரௌன், டேனியல் ஸ்டீல் போன்ற நாவலாசிரியர்களின் எல்லா புத்தகங்களை யும் சுதா ரசித்துப் படித்து அனுபவித்திருக்கிறார். இசைப் பயிற்சி, பயணம், இசை நிகழ்ச்சிகள் என மிகவும் பிஸியாகிவிட்டபோதும், புத்தகங்கள் படிப்பதற்கான நேரத்தை எப்படியோ கண்டுபிடித்துக்கொள்கிறார். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவது, சுதாவுக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி நாட்களில் ஆரம்பித்த இந்த ஈடுபாடு இன்றும் தொடர்கிறது.

இசை நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக பளிச்சென்று உடை அணிந்து செல்ல வேண்டும் என்பது எம்.எல்.வி. எப்போதும் கடைப்பிடித்த பழக்கம். அதையே சுதாவும் பின்பற்றுகிறார். தான் வாங்கும் புடவைகளில் பெரும்பாலானவை உயர்ந்த ரக காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்தான் என்கிறார் சுதா. அவற்றை மட்டுமே தனது இசை நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்கிறார். இவர் அணிந்து வரும் புடவையைப் பார்த்து ரசித்துப் பாராட்டவே ரசிகர் வட்டம் ஒன்று இருக்கிறது.

சினிமாவிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் சுதா. 'பார்த்திபன் கனவு’ படத்தில் வித்யாசாகர் இசையில் 'ஆலங்குயிலே’, 'இவன்’ படத்தில் 'என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே’, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'வாரணம் ஆயிரம்’ படத்தில் 'அனல் மேலே பனித்துளி’ போன்ற நினைவில் நிற்கும் பல பாடல்களைத் திரைப்படங்களுக்காகப் பாடியிருக்கும் சுதா, 'சமுதாயா’ என்னும் சேவை அமைப்பை உருவாக்கி, நடத்திவருகிறார்.

''ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி எனப் பல உதவிகள் செய்கிறோம். அதற்கு 'ஃபவுண்டர் அண்ட் மேனேஜிங் டிரஸ்டி’யாக நான் செயல்படுகிறேன். இதுவரை இந்த டிரஸ்ட் மூலமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவில், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்திருக்கோம். தொடர்ந்து இன்னும் பெரிய அளவில் செய்யவும் திட்டமிட்டிருக்கோம். எல்லோருடைய ஆதரவும் 'சமுதாயா’வுக்கு வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் சுதா.

பேச்சு மீண்டும் கர்னாடக இசை பற்றித் திரும்பியது.

''25, 30 ஆண்டுகளுக்கு முன்பு குரு- சிஷ்யை இடையே மிகவும் ஆழமான, நெருக்கமான உறவு இருந்தது. அந்த அளவு ஆழமான பிணைப்பு இப்போது இருக்கிறதா என்பது கேள்விக் குறிதான்! மற்றபடி, எந்தப் பாடகருக்கும் பாடகிக்கும் சாதகம்தான் முதலீடு மாதிரி! நிறைய பாடி பிராக்டீஸ் செய்யவேண்டும். சீனியர், ஜூனியர், கற்று வருபவர் என்ற பாகுபாடே வேண்டாம். நிறையச் சாதகம் செய்யச் செய்யத்தான் பாடுபவருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வருகிறது. இது ரொம்ப முக்கியம்.

'உங்கள் குரலை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். குரல் வளம் என்பது தனிப்பட்ட விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. குரல் வளமும் உடல் நலமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. சரியான சாப்பாடு, சரியான எடை, தேவையான தூக்கம் இவை மூன்றும் உடல் நலத்துக்கும் குரல் வளத்துக்கும் முக்கியமானவை. சாப்பாடு விஷயத்தில் ஓரளவு கட்டுப்பாடு தேவை. நான் பொதுவாகவே எப்போதும் வெந்நீரை மட்டும்தான் குடிக்கிறேன். சூடான ஹாட் கிரீன் டீ, பால் சேர்க்காத டீ அருந்துகிறேன். மிளகு, ஜீரகம் தண்ணீர் குடிப்பேன். ஐஸ்கிரீம், குளிர்ந்த பானங்களைத் தவிர்க்கிறேன். உடலை ட்ரிம்மாக வைத்துக் கொள்ள மாதத்துக்கு பத்து நாட்களாவது ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிறேன்'' என்றவர், மறக்க முடியாத இசை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

''குடியரசு தினத்தின் 50-வது ஆண்டு விழாவில் ஏஆர்.ரஹ்மான் இசையில் பல கலைஞர்களுடன் கலந்து கொண்டதும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எல்லா நாடாளுமன்ற அங்கத்தினர்கள் முன் 'வந்தே மாதரம்’ பாடலை பார்லிமென்ட் மைய மண்டபத்தில் பாடியதும் மறக்கமுடியாத அனுபவங்கள்!

லக்ஸம்பர்க்கில் ஒரு பழைய தேவாலயத்தில் எனது இசை நிகழ்ச்சி. நான் கண்களை மூடியவாறு, மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருந்தேன். மூன்று நிமிடங்கள் கழித்து நான் கண் விழித்தபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், மின்சார சப்ளை தடைப்பட்டிருந்தது. ஆனால், ஆடியன்ஸ் மொத்தப் பேரும் எந்த ஒரு சத்தமோ சலசலப்போ இன்றி, கையில் மெழுகுவத்தி ஏற்றி வைத்துக்கொண்டு என் பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார்கள். மறக்கமுடியாத அனுபவம் இது.

“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”

சென்ற ஆண்டு ஜூலை மாதம், ஃபிரான்ஸில் மார்ஸேல்ஸ் நகரில், 13-வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் 'வேர்ல்ட் மியூஸிக் ஃபெஸ்டிவல்’ நடைபெற்றது. அங்கே இரவு 9:45 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை எனது கச்சேரி. 500 பேர் கொண்ட ஆடியன்ஸில் இரண்டே பேர் மட்டும் இந்தியர்கள். மீதி அனைவரும் ஃபிரெஞ்சுக்காரர்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக, உன்னிப்பாக என் இசையைக் கேட்டு ரசித்தார்கள். சாஸ்திரிய சங்கீதத்துக்கு அவர்களிடம் அவ்வளவு பெரிய வரவேற்பு!

அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் நடைபெற்ற எனது கச்சேரி மறக்க முடியாதது. 800 பேர் கொண்ட ஆடியன்ஸில் சில அமெரிக்க ரசிகர்கள், மற்றவர்கள் இந்தியர்கள். மிகவும் ரசித்து கேட்டார்கள். நானும் நேரம் தெரியாமல் பாடிக்கொண்டிருந்தேன். சில பாடல்களைப் பாடும்படி நேயர் விருப்பம் வேறு. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் என் அருகே வந்து சொன்னபோதுதான், ஐந்து மணி 59 நிமிடங்கள்... கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பாடியிருக்கிறேன் என்பது தெரியவந்தது. சிறு சலசலப்பு, தும்மல் கூட இல்லாமல் ஆடியன்ஸ் அனைவரும் ஆறு மணி நேரம் கச்சேரியை ரசித்தனர். இட்ஸ் எ ரியல் மாரத்தான் கச்சேரி!

பல நாடுகளுக்கு இசை நிகழ்ச்சிக் க£கப் பயணம் செய்வதில் ஒரு சிறந்த பலன் கிடைக்கிறது. ஜெரூஸலேம், ஹெல்ஸிங்கி, டூனிஸ், மொராக்கோ என மாறுபட்ட பல கலாசாரங்களை நேரில் பார்த்துப் புரிந்துகொள்ள முடிகிறது. பல நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தும்போது, நமது இசைக்கு அங்கெல்லாம் அங்கீகாரம் கிடைப்பதும், மொழி, தேசம், கலாசாரம் எல்லாம் தாண்டி நமது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி பாடல்களை அவர்கள் ரசிப்பதும் பாராட்டுவதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக அளவில் ஏராளமான ரசிகர்களின் அன்பைப் பெற்றிருப்பதுதான் எனக்குப் பெரிய பொக்கிஷம்!'' என்கிறார் சுதா ரகுநாதன் நெகிழ்ச்சியாக. 

சுதா ரகுநாதன் கவிதைகள்

A DIMENSION OF LOVE
Love is ethereal...
Like an unexpected bright sliver of
sunlight in an overcast sky;
Like the toothless grin of the baby
in a crowded street;
Like the intoxicating smell of rain
on dry earth...
A moment untarnished by life's
    tribulations!

SHARING
The rains were unkind -
Water what little was left
Rather than touch my lips
Quench my thirst,
I poured it over the little boy
Waiting by the water pump
Through which came by air,
     not water

“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்!”
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு