Published:Updated:

அன்பிற்கினிய வாசகர்களே...

அன்பிற்கினிய வாசகர்களே...

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளிப் பண்டிகை இதோ நெருங்கி வந்துவிட்டது. பொதுவாகவே பண்டிகை என்பது, மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம் மனசுக்குள் விதைப்பதோடு, ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வதற்கு வழிவகை ஏற்படுத்தித் தரும் ஒரு திருநாள். அதிலும், தீபாவளி ரொம்பவே விசேஷம்!

அன்பிற்கினிய வாசகர்களே...

காலை நேர கங்கா ஸ்நானம், புத்தாடை அணிதல், இனிப்புகள், பலகாரங்களை உண்டு மகிழ்தல், பட்டாசு கொளுத்துதல்... இந்தக் கொண்டாட்டங்களோடு, ஒவ்வோர் ஆண்டும் ஆனந்த விகடன் தீபாவளி மலரும் தனது பங்குக்கு வாசகர்கள் மனத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரிமாறி வருகிறது. இந்த ஆண்டும் விகடன் தீபாவளி மலர், உங்களை ஆனந்தத்தில் திக்குமுக்காடச் செய்யும்வண்ணம் சுவையான பல விஷயங்களை உள்ளடக்கி வருகிறது.

விநாயகப் பெருமான் தொடங்கி ஆஞ்சநேயர் வரையில், முழுப்பக்கத் திருவுருவப் படங்கள் உங்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். கத்தரித்து ஃபிரேம் செய்துகொள்வதற்கு வசதியாக ஒவ்வொன்றையும் முழுப் பக்க அளவில் கண்கவர் வண்ணப்படங்களாக அச்சிட்டுள்ளோம்.

சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த ஸ்வாமிகளின் அருளாசியோடு தொடங்கும் இந்த மலரில் வெளியாகியுள்ள ஆன்மிகக் கட்டுரைகள் உங்கள் இதயத்தைக் குளிரவைக்கும்; குறிப்பாக, ஓவியர் பத்மவாசன் அற்புதமான ஓவியங்களோடு ஆலயக் கட்டுரை ஒன்றையும் படைத்துள்ளார். அது உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் ஆன்மிக விருந்தாக அமையும். அதேபோன்று நகைச்சுவை, கவித்துவம், சஸ்பென்ஸ் எனப் பலவித ரசனையோடு பிரபல எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான சிறுகதைகள், அருமையான இலக்கிய விருந்து!

அழகழகான வண்ணப் புகைப்படங்களோடு இந்த மலரில் இடம்பெற்றுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய கட்டுரைகள், 'அவசியம் நாமும் ஒருமுறை போயே ஆகவேண்டும்’ என்று உங்களைத் தூண்டும்.

இந்திய சினிமாவுக்கு வயது 100. இந்திய சினிமா குறித்து கலைவித்தகர் ஆரூர்தாஸ் எழுதியுள்ள கட்டுரை, பல புதிய செய்திகளை உங்களுக்குச் சொல்லும். எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழ்த் திரையுலகின் இரண்டு முக்கிய திலகங்கள் பற்றிய கட்டுரைகள் உங்கள் உள்ளத்தைக் குளிரவைக்கும்.

நாட்டியத் தாரகைகள் பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா, வயலின் மேதை லால்குடி ஜெயராமன், சங்கீத கலாநிதி விருது பெறவிருக்கும் கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பற்றிய கட்டுரைகள், கலை ஆர்வலர்களுக்குத் தலைவாழை விருந்து!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியின் தலைதீபாவளி, ஹன்சிகா மோத்வானியின் இன்னொரு முகம், புதுமுக நாயகிகள் பற்றிய அறிமுகம்... என இளைஞர்களைக் கவரும் விஷயங்களும் ஏராளம்.

படியுங்கள். ரசியுங்கள். இந்த மலர் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாசகர்கள் அனைவருக்கும் விகடன் குழுமத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்து!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு