Published:Updated:

பழநியப்பா!

பழநியப்பா!
பிரீமியம் ஸ்டோரி
பழநியப்பா!

ஆன்மிகம் / வி.ராம்ஜி

பழநியப்பா!

ஆன்மிகம் / வி.ராம்ஜி

Published:Updated:
பழநியப்பா!
பிரீமியம் ஸ்டோரி
பழநியப்பா!

றுபடை வீடுகளில், பழநி மலை மீது தன் உயிரையே வைத்திருக்கிறார், ராதாகிருஷ்ணன். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா முருகா’ என்று உணர்ச்சி மேலிடச் சொல்லும் இவர் வசிப்பது சிங்கப்பூரில்! 

''மாயவரத்துக்குப் பக்கத்தில் மாணிக்கப்பங்கு எனது பூர்வீக கிராமம். சின்ன வயசுல கடவுள் மீது நம்பிக்கை வைக்காமல், 'கடவுள்னு ஒருத்தர் இருக்காரா, என்ன?’ என்று கேலி செய்தவன் நான். வறுமையும் அதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆற்றுநீர்ப் பாசனமாவே இருந்துட்ட சோழ தேசத்துல, நதி வத்திப் போக... பருவம் மொத்தமும் தப்பிப் போச்சு. விளைநிலங்கள் வெறும் நிலங்களா, வெட்டவெளியா, பொட்டல் பூமியா, தரிசாகிப் போச்சு. போக்கிடம் தெரியாம கலங்கித் தடுமாறிய நிலையில் கட்டிய மனைவியுடன் வெறுங்கையாக சிங்கப்பூருக்கு கப்பல் ஏறினேன்'' என்று வாழ்க்கையின் முன்னோட்டத்தைத் தருகிறார் பெரியவர் ராதாகிருஷ்ணன்.

பழநியப்பா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழநியப்பா!

சுத்தம் செய்யும் அடிப்டைத் தொழிலாளியாக சிங்கப்பூரில் தொடங்கிய இவருடைய வாழ்க்கை, சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ்க் குடும்பங்களில் ஒன்று என்ற உயரம் வரையில் வந்து நின்றிருக்கிறது. அன்றும் இன்றும் முருகன் கனவில் தோன்றி இவரை வழி நடத்துவதுதான் அதிசயம்!

அண்மையில் இவர் கனவில் வந்த கட்டளை - ''பாத யாத்திரையாக பல காத தூரம் நடந்தே என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு, மலை மீது என்னை அடைந்தபிறகு காலுக்கு இதம் வேண்டும். வேண்டியதைச் செய்'' என்பதாம். கைக்காரியங்களை எல்லாம் விட்டு, பழநி சந்நிதானத்தில் மூன்று கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து வழுவழு கிரானைட் பாதை அமைத்து வருகிறார் ராதாகிருஷ்ணன்.

''பிள்ளைச் செல்வம் இல்லை என்று நானும் என் மனைவி பழனியம்மாளும் ஏங்கித் தவித்தபோது இதே தண்டபாணிதான் என் கனவில் வந்தார். குழந்தையை எங்கள் கையில் கொடுத்துட்டு சட்டுனு மறைஞ்சிட்டார். விடிஞ்சும் விடியாததுமா மனைவிகிட்ட இதைச் சொன்னேன்.  'பழநிக்குப் போய் முருகனை வேண்டிட்டு வந்தப்பதான் நான் பொறந்தேன். பழனியம்மாள்னு பேரு வெச்சாங்க. இப்பவே கிளம்புங்க. பழநிக்குப் போய் வருவோம்’னு மனைவி சொன்னா.

அவன் சந்நிதியில் போய் நின்றபோது என் கனவுல வந்த அதே திருவுருவ அலங்காரம்!  எனக்கும் அந்த குன்றுக்கும் ஏதோ ஒரு ஜென்மாந்திரத் தொடர்பு இருக்கறதா உள்ளுணர்வு சிலிர்த்துச் சொன்னது. இன்று என் மகள் சண்முக மலரும் மகன் சண்முக ரத்தினமும் பழனியப்பனின் கட்டளையைக் கேட்காமல் எதுவுமே செய்வதில்லை!'' என்கிறார்.

இவர்! மனம் கசிய தினம் உருகும் சிவனடியாரும்கூட! தமிழ் மணம் கமழ அழகு தமிழ் ஆன்மிகப் பாடல்களை கணீர் குரலெடுத்து இவர் பாடும் அழகு, சீக்கிரமே ஒரு திரைப்படத்திலும் இடம் பெறப் போகிறதாம். சிங்கப்பூரில் வாழும் தமிழர் குடும்பங்களில் யாராவது மறைந்துவிட்டால், தன் செல்வ, செல்வாக்கையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு முதல் ஆளாகப் போய் நிற்பாராம் ராதாகிருஷ்ணன். மனமுருக தேவராமும் திருவாசகமும் பாடி, அந்த ஆன்மாவை அமைதியோடு இறைவனடிக்கு அனுப்பிவிட்டு வருவதை ஒரு இறை சேவையாக செய்து வருகிறார்.

பழநியப்பா!

''நம்ம தமிழோட தொன்மையும் மேன்மையும் கடல் கடந்து இருக்கற மக்களுக்குத் தெரியணும். தேவார, திருவாசக, திருப்புகழ்ப் பாடல்கள் அகிலமெல்லாம் எதிரொலிக்கணும்னு ஒரு ஆசை. எந்த தயக்கமும் இல்லாமல் ஒரு விசிட்டிங்கார்டு அடிச்சு, சிங்கப்பூர் தமிழ் மக்களுக்குச் சேரும்படி செய்தேன். 'எங்க வீட்ல இன்னார் தவறிப் போயிட்டாங்கனு போன் பண்ணி, அட்ரஸும் கொடுத்துட்டா... அடுத்த அரை மணி நேரத்துல அவங்க வீட்டுக்குப் போய், பாடல்களைப் பாடுறதை வழக்கமாக்கிக்கிட்டேன். அதேபோல் திருமண நிகழ்ச்சிகளிலும் தம்பதிகள் நீடுழி வாழணும்னு பிரார்த்தனைப் பதிகம் பாடுவேன். இறைவன் புகழ் பாடுவதைவிடவும்... கடல் கடந்த தேசத்தில் கொஞ்சும் தமிழ் காத்துல பரவட்டும்  என்ற ஆசைதான் இதில் அதிகம்'' என்று சொல்லி ஆச்சர்யப்பட வைக்கிறார்.

''இதுவரை சுமார் 350 பேரின் மரணங்களுக்குப் பாடியிருக்கேன். 'சுடுகாடு, இடுகாடுன்னு போய் பாடுறியே... நீயென்ன கோடீஸ்வர வெட்டியானா?’னு முகம்  சுளித்த நண்பர்களும் உண்டு. ஆனால், உலகம் முழுவதும் சுற்றி வரும் என் மகனுக்கு இதில் எப்போதுமே பெருமைதான்'' என்று சொல்லும் ராதாகிருஷ்ணன், சிங்கப்பூர் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரோட தாயார் இறந்த போதும், அந்த நாட்டின் பிரசிடென்ட் எஸ்.ஆர்.நாதன் ஐயாவின் உறவினர் இறந்த போதும் தேவார, திருவாசக பாடல்களை பாடியிருக்கிறார்!

பழநியப்பா!

''எனக்கு இப்ப 80 வயசாகுது. இத்தனை வருசமா என் எல்லா கஷ்டங்களுக்கும் உயர்வுகளுக்கும் சாட்சியாக துணை நின்ற மனைவி பழனியம்மாள் அண்மையில் காலமாயிட்டா. இறைவனின் திருநாமத்தை உச்சரித்து அவளருகில் நின்றபோது வெறுமையும் ஏக்கமும் ஒருசேர சூழ்ந்தது. அடுத்த சில நாளில் அந்தக் கனவு; அதே பழநி முருகப்பெருமானோட அற்புத தரிசனம். 'கல்லு கொடு... கல்லு கொடு’னு கேக்கறார். கனவு கலைஞ்சிருச்சு. விடிஞ்சதும் விளக்கம் கேக்கறதுக்கு மனைவி இல்லியே... அவளோட போட்டோவுக்கு முன்னாடி உக்கார்ந்து கண்ணீரோடு கலங்கினேன். சில வருஷங்களுக்கு முன்னால, மனைவியோட பழநி மலையில் மேல்பிராகாரம் சுத்தும்போது, கரடுமுரடா இருந்த பாதையைக் காட்டி, 'இதுலதான் தங்கத்தேர் போகும்; இதுலதான் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் பண்ணுவாங்க. பாதை முழுசுக்கும் வழுவழுனு கல்லு பதிச்சு, பளபளன்னு வைச்சா வர்றவங்க பாதத்துக்கு எத்தனை இதமா இருக்கும்’னு மனைவி சொன்னது ஞாபகம் வந்துச்சு.

பழநியப்பா!

உடனே பழநி கோயில் நிர்வாகத்திடம் பேசி, மேல் பிராகாரத்துல கிரானைட் கற்கள் பதிக்கற திருப்பணியைக் கேட்டு வாங்கி, அதை 99 சதவிகிதம் பண்ணியும் முடிச்சிட்டோம்!'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

''கடல் கடந்து வாழ்ந்தா என்ன... நம்ம கலாசாரம், பண்பாடு, ஆன்மிகம்னு மறக்காம இருக்கறவன்தான், உண்மையான மனுஷன்; பக்தன். இந்த என் உடம்புல உசுரு இருக்கற வரைக்கும், கூப்பிடற வங்களுக்காக, தேவாரமும் திருவாசகமும் பாடணும்; அது இந்த சிங்கப்பூர் காத்துல கலந்து எதிரொலிக்கணும். என் மூச்சு இருக்கற வரைக்கும் அப்பன் முருகப்பெருமானோட கோயில்களுக்கும் தென்னாடுடைய சிவபெருமானோட ஆலயங்களுக்கும் என்னாலான திருப்பணிகளைச் செய்யணும்..'' என்று மென்மையாகச் சிரித்துவிட்டு, 'அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழநியப்பன்!’ என்று உச்சஸ்தாயியில் பாட...  அந்த அறையில் நிறைகிறது 'முருகு' என்ற தமிழின் அழகு! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism