Published:Updated:

இமயத்தின் சக்தி

இமயத்தின் சக்தி
பிரீமியம் ஸ்டோரி
இமயத்தின் சக்தி

ஆன்மிகம்: ஜபல்பூர் நாகராஜசர்மா , படங்கள்/பொன்.காசிராஜன்,

இமயத்தின் சக்தி

ஆன்மிகம்: ஜபல்பூர் நாகராஜசர்மா , படங்கள்/பொன்.காசிராஜன்,

Published:Updated:
இமயத்தின் சக்தி
பிரீமியம் ஸ்டோரி
இமயத்தின் சக்தி

லகெங்கும், உயிர்களெங்கும் ஊடுருவியுள்ள ஆற்றலே பராசக்தி. இவள் எல்லாம் வல்லவள்; எங்கும் நிறைந்தவள். பிரம்மன் உலகைப் படைக்கும்போதும், நாராயணன் இந்த நானிலத்தைக் காக்கும்போதும், மகேஸ்வரன் காலாக்னியாக ஈரேழு உலகங்களை அழிக்கும்போதும்... இந்த பராசக்தியே ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கும் மூலமாகத் திகழ்கிறாள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவளது விளையாட்டுப் பொருட்களே. அந்த ஆதிசக்தியின் லீலைகளை விரிவாக விளக்குவதே தேவிபாகவதம். 

அந்த பாகவதத்தின்படி தட்ச யக்ஞத்தின் விபரீத முடிவுதான் சக்தி பீடங்கள் தோன்றுவதற்கு மூல காரணம். தட்ச யக்ஞத்தில் தன் உடலை அழித்துக்கொண்ட தாட்சாயினியின் உடல் பாகங்கள் இந்த பூமியில் 6,400 இடங்களில் விழ, அந்த இடங்களே சக்தி பீடங்கள். இமயத்தின் பல பாகங்களில் மகத்துவம் மிக்க சக்தி பீடங்கள் இருக்கின்றன. அவற்றில் சில தலங்களை வலம் வருவோம்.

மனம் கவரும் மனஸாதேவி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸதிதேவியின் திருமுகத்தின் ஒரு பாகம் வீழ்ந்த திருவிடம். இங்கே மனஸாதேவியாக அருள் பாலிக்கிறாள் தேவி.

இமயத்தின் சக்தி

பிரம்மனின் பேரர் காஸ்யபர். இவர் தேவர்களுக்கு மட்டுமின்றி, சர்ப்பங்களுக்கும் தந்தை. சர்ப்பங்களின் தொல்லையால் பயம் கொண்ட மனிதர்கள் ஒரு முறை, காஸ்யபரை சரணடைந்து, சர்ப்பங்களிடம் இருந்து தங்களைக் காக்கும்படி வேண்டினர். காஸ்யபரும் சம்மதித்தார். பிரம்மனின் உபதேசம் பெற்று, வேத பீஜங்களை அனுசரித்து, அதற்கான மந்திரங்களை உருவாக்கினார். தொடர்ந்து, மந்திர அனுஷ்டான தேவியையும் மனதில் உருவாக்கினார். இப்படி, மகரிஷியின் மனதில் உருவான அந்த தேவி, பரமாத்மாவையே அனுதினமும் தியானிப்பவள். ஆகவே, அவள் மனஸாதேவி என்று பெயர் பெற்றாள்.

இந்த தேவி கயிலாயம் சென்று, 1,000 தேவ ஆண்டுகள் சிவபெருமானை பூஜித்தாள். இதனால் மகிழ்ந்த ஈசன், அவளுக்கு மகா ஞானத்தை நல்கி, சாம வேதத்தையும் கற்பித்தார். மூவுலகங்களுக்கும் மங்கலம் அளிப்பதும், சத்ருக்களை அழிக்க வல் லதும், கேட்பதைக் கொடுக்கக்கூடியது மான ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தையும் அவளுக்கு உபதேசித்தார். பிறகு அவள் பரமேஸ்வரரின் கட்ட ளைப்படி, புஷ்கரம் எனும் தலத்தை அடைந்தாள். அங்கே மூன்று யுகங் களாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை தியானித்து தவம் இருந்தாள். அவளது தவத்தை மெச்சி காட்சி தந்தார் ஸ்ரீகிருஷ்ணர். தவத்தால் மெலிந்து சுருங்கிப் போன அவளை நோக்கி, 'உடல் மெலிந்து சுருங்கியவள்’ எனும் பொருள்படும்படி 'ஜரத்காரு’ என்று அழைத்து, 'இனி, உன்னை யாவரும் வந்து வணங்குவர்’ என்று அருளியதுடன், தானே முதல் பூஜையை செய்தார். இதன் பிறகு சிவன், காஷ்யபர், தேவர்கள், முனிவர்கள், மாந்தர்கள் அனைவரும் மனஸாதேவியை நாடிவந்து பூஜித்தனர்.

அபிமன்யுவின் மகனான பரீட்சித்து மகாராஜா, விதிவசத்தால் முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளாகி, தட்சகன் எனும் சர்ப்பம் தீண்டி இறந்தார். இதனால் கோபம்கொண்ட அவர் மகன் ஜனமேஜயன், சர்ப்ப குலத்தையே அழிக்கும் பொருட்டு சர்ப்ப யாகம் செய்தார். மந்திர சக்தியால் கவரப்பட்ட எண்ணற்ற சர்ப்பங்கள், யாகத்தில் வீழ்ந்து இறந்தன. யாகம் செய்த பெரி யோர்கள், தட்சகனையும் (பரீட்சித்து மன்னனை தீண்டிய சர்ப்பம்), அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இந்திரனையும் மாய்க்க, மந்திரப் பிரயோகம் செய்ய முற்பட்டனர்.

இமயத்தின் சக்தி

இந்திரனும் தட்சகனும் மனஸாதேவியை சரண டைந்தனர். மனஸாதேவியின் புத்திரன் ஆஸ்திகர், தன் தாயாரது கட்டளைப்படி ஜனமேஜயனை அணுகி, தேவேந்திரன், தட்சகன் இருவரின் உயிரையும் யாசித்தார். அதற்கு மன்னரும் சம்மதிக்கவே... இந்திரன், தட்சகன், அவனது நாகவம்சம் யாவும் அழிவிலிருந்து தப்பித்தனர்! பிறகு சர்ப்பங்கள், தட்சகன் தலைமையில் மனஸாதேவியிடம் வந்து வணங்கி, அவளது பக்தர்களை தங்கள் சுற்றத்தார் எவரும் தீண்டமாட்டார்கள் என்று சத்தியப் பிரமாணம் செய்தனவாம்!

இமயத்தின் சக்தி

ஒரு முறை தேவேந்திரன், தன் உடன்பிறப்பான மனஸாதேவியிடம் வந்து, ''ஆடி மாதப் பிறப்பு, ஆஷாட பஞ்சமி, ஆடி மாதம் முழுவதும் உன்னை பூஜிப்பவர்கள் பெருவாழ்வு அடைவார்கள். சர்ப்பங்களால் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது!'' என்று கூறினானாம்.

பஞ்சாப், ஹரியானா இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராகத் திகழும் சண்டிகரின் புறநகர் பகுதியில், மனிமாஜரா என்ற இடத்தில், மனஸாதேவியின் கோயில் அழகாகத் துவங்குகிறது. மிக அற்புதமாக அமைந்திருக்கும் அவளது கோயிலில், வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தன் கனவில் தோன்றிய மனஸாதேவியின் கட்டளைப்படி, பாட்டியலா மகாராஜ் இந்தக் கோயிலை நிர்மாணித்தார். இஸ்லாம், சீக்கிய மதங்கள் ஆகியவற்றின் சம்பிரதாயங்களையும் தன்னில் சேர்த்துக்கொண்டு, மத நல்லிணக்கத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது, இத்தேவியின் ஆலயம். கருவறையில் ஐந்து கரங்கள், மூன்று திருமுகங்களுடன் அருளோச்சுகிறாள் ஸ்ரீமனஸாதேவி. அவளின் கருவறைக்கு வலப்புறத்தில் ஸ்ரீசீதளதேவியின் சந்நிதியும், யாக சாலையும் உள்ளன. இடப்புறத்தில் சாமுண்டா, நாராயணன் ஆகியோரின் சந்நிதிகள் தென்படுகின்றன. பிராகாரச் சுவர்களில் பரிவாரத் தேவதைகள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றனர்.

நயனா தேவி திருக்கோயில்

இமயத்தின் சக்தி

நயனா தேவி

மனஸாதேவிக்கு பல்வேறு திருநாமங்கள் உண்டு. காஷ்யபரின் மனதில் தோற்றம் கொண்டதால் மனஸாதேவி; சிவபெருமானின் சிஷ்யை ஆனதால் சைவீ; ஈசனிடம் இருந்து சித்த யோகம் பெற்றதால் சித்தயோகினீ; விஷ்ணுவின் பக்தை ஆனதால் வைஷ்ணவீ; நாகர்களின் சகோதரி ஆனதால் நாகேஸ்வரீ அல்லது நாகபகனீ; விஷத்தை அழிக்கும் தேவியானதால் விஷஹரி; ஆஸ்தீக முனிவரின் அன்னை ஆனதால் ஆஸ்தீக மாதா; கிருஷ்ணபகவானே பெயரிட்டு அழைத்ததால் ஜரத்குரு; வெண்ணிறம் வாய்ந்தவள் ஆனதால் ஜகத்கௌரி; மூவுலகங்களிலும் வணங்கப்படுவதால் விச்வபூஜிதா என்று திருப்பெயர்கள்!

இவ்வளவு கீர்த்திகள் கொண்ட மனஸாதேவியை, மனதார பூஜிக்கும் பக்தர்களை விஷ ஜந்துகளும், சர்ப்பங்களும் தீண்டாது, அவர்களின் வம்சம் விருத்தி அடையும். பொன், பொருள் முதலான செல்வங்களும், ஞானமும், புகழும் வந்தடையும் என்கிறது தேவி பாகவதம்.

நலம் அருளும் நயனா தேவி...

நயன் என்றால் அழகான கண்கள் என்று அர்த்தம், தேவியின் கண்கள் விழுந்த தலம் இது என நம்பப்படுகிறது. அதனால் இங்கு கோயில் கொண்டிருக்கும் தேவியை நயனா தேவி எனப் போற்றுகிறார்கள். இந்தத் திருப்பெயருக்குக் காரணமான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.

சிந்தபூரணி ஆலயம் புறச்சுவற்றில் பொன்தகடுகள்...                    சிந்த பூரணி

இமயத்தின் சக்தி

இமாசல பிரதேசத்தில், சிவாலிக் மலைக்கு அருகில் ஒரு கிராமம் இருந்தது. கால்நடைகள் வளர்ப்பதும், பராமரிப்பதும்தான் இவ்வூரின் பிரதான தொழில். இங்கே, அம்பிகையின் மீது அதீத பக்தி கொண்ட நைநா என்றொரு சிறுவன் இருந்தான். இவன், தனது பசுக்களையும் எருமைகளையும் அருகிலுள்ள மலைக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். மந்தையில் உள்ள மாடுகளில் ஒரு பசு மட்டும் புற்களை மேயாமல் அங்குள்ள அரச மரத்தடியில் அசைவற்று நின்றுவிடும். வெகுநாட்களாக இந்த சம்பவம் தொடரவே, காரணம் புரியாமல் குழம்பினான் சிறுவன்.

ஒரு நாள், ஆர்வம் மேலிட பசு நிற்கும் இடத்தில் குவிந்திருந்த அரச இலைகளை அகற்றி னான். அந்த இடத்தில் உருண்டையாக ஒரு கல்லைக் கண்டான். அன்றிரவு அவன் கனவில் தோன்றிய அம்பிகை, பிண்டி (கூழாங்கல்) வடிவில் இருப்பது தான்தான் என்றும், அந்தக்கல்லை வைத்துக் கோயில் எழுப்பும்படியும் கட்டளை இட்டாள். விடிந்ததும் இந்தத் தகவலை ஊராரிடம் தெரிவித்தான் சிறுவன். ஊர் மக்களும்  ஒன்றுகூடி அம்மனுக்கு கோயில் எழுப்பத் திட்டமிட்டனர்.

அரச மரத்தடியில் கீற்றுக் கொட்டகை போடப்பட்டு, உருண்டைக் கல்லை பிரதிஷ்டை செய்து, தெய்வ ஆராதனைகள் துவங்கின. பக்தர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தனர். தேவி பக்தர்கள் அளித்த பெரும் காணிக்கைகளால் கோயிலும் மிகப்பெரிதாக நிர்மாணிக்கப்பட்டது. இதற்கு மூல காரணமான சிறுவனின் பெயராலேயே அம்மனுக்கு நயனா தேவி என்று திருப்பெயர் சூட்டப்பட்டது. கோயிலின் அருகில் உள்ள குகைக்கும் நயனா தேவி குகை என்றே பெயர்.

சிவாலிக் மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது இது. டெல்லியில் இருந்து சுமார் 350 கி.மீ. தூரம். இந்தத் தலத்துக்கு ரயில் பயணமே சிறந்தது. ஆனந்த்பூர் ஸாஹிப் ரயில் நிலையத்தை ஒட்டி சிவாலிக் மலை உள்ளது. அடிவாரத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் பாதை வழியாக மலையேற வேண்டும். சிறிது தூரம் நடந்து சென்று, அதன் பிறகு 'ரோப் வே’ மூலம் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் இறங்கி, படிக்கட்டுகளைக் கடந்து தேவியின் சந்நிதியை அடையவேண்டும். அங்கிருந்து கீழே பார்த்தால், நங்கல் ஏரியின் பரந்த நீர்ப்பரப்பு நம் மனதை பரவசப்படுத்துகிறது.

ஆலயத்தின் கட்டடக் கலை, அற்புதம்! கருவறையில் பிண்டி ரூபம் கொண்ட அம்மன் திருமுகம், குங்குமக் குவியலின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. அம்பாளுக்கு வேறு அலங்காரம் கிடையாது. பார்வைக் குறைபாடுகளால் அவதிப்படுவோர், வெள்ளியிலான கண்களை (நம்மூரில் கண் மலர் என்போம்) வாங்கி, அம்மனுக்கு சமர்ப்பித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். கோயிலுக்கு அருகிலேயே வெள்ளியிலான கண்களை வாங்கிக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாத அஷ்டமி, நவராத்திரி, தீபாவளி முதலான விழா காலங்களில், கோயிலில் கூட்டம் அதிகம் இருக்கும்.

சித்தி தரும் சிந்த பூரணி...

ஆலம் விழுது போன்றவள் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி. இவளிடமிருந்து தோன்றியதே தசமகா வித்தை. இதுகுறித்து சான்றோர்கள் பலரும் சிறப்பித்துள்ளனர். தக்ஷிணகாளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, ராஜமாதங்கி, கமலாத்மிகா... என அன்னையின் அழகிய ரூபம், விசித்திர ரூபம், மற்றும் கோர ரூபங்கள் இந்த தசமகா வித்தையில் அடங்கியுள்ளன.

காளியின் பயங்கரத்தையும் மிஞ்சும் கோர ரூபம் ஒன்று உண்டென்றால், அது சின்னமஸ்தா தேவியின் ஸ்வரூபமே. கால ரூபத்தில் நியதிக்கு உட்பட்டு, வெளி உருவை அழிக்கும் பிராண சக்தியே காளி. ஆனால், சின்னமஸ்தாவோ எதற்கும் கட்டுப் படாமல், அந்தக் கணத்திலேயே வெளியுருவை அழித்து, உள் அனுபவத்தை தரும் வித்யுத் சக்தி ஆவாள். இவளைப் பற்றி ஆராய்ந்தால்... நம் மகரிஷிகள் மின்சாரம் குறித்து எவ்வளவோ தகவல்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறிந்து வியக்கத் தோன்றும்.

சின்ன மஸ்தாவின் தோற்றம் ஆச்சர்யத் தையும், அச்சத்தையும் அளிக்கக்கூடியது. சின்னமஸ்தாதேவி, கோடி சூரியப் பிரகாசம் கொண்டவள். மன்மதன்-ரதி ஒன்றிணைந்து இருக்க, அவர்கள் மீது... இடக்காலை நீட்டி, வலக் காலை மடக்கி ஆடும் நிலையில் காட்சி தருகிறாள். தலைமுடி விரிந்து கிடக்கிறது. திறந்த வாயினள், மூன்று கண்களும், ஆடையற்ற உடலில் பருத்த தனங்களும் கொண்டவள். நீலோத்பல மலர்மாலையும், கபால மாலையும் அணிந்தவள். செந்நிற மேனியில் கருநாகம் ஒன்று பூணூலாகத் திகழ்கிறது. வலக் கையில் கோடரியையும் இடக் கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையையே ஏந்தியபடி... தன் கழுத்தி லிருந்து பீறிடும் ரத்தத்தைக் கையில் உள்ள தலைப் பகுதியால் பருகும் நிலையில், வித்தியாசமான கோலத்தில் காட்சி தருபவள். 16 வயது பருவப் பெண்ணான சின்னமஸ்தா தேவி, தனக்கு வலப்புறத்தில் வர்ணனி மற்றும் இடப்புறத்தில் டாகினி ஆகிய தோழிகளைக் கண்டு மகிழ்கிறாள்.

தோழிகளுடன் விசேஷ கோலத்தில் அருளும் சின்னமஸ்தா தேவி, இமாசல பிரதேசம், உனா மாவட்டத்தில், சிந்த பூரணி தலத்தில் கோயில் கொண்டிருக்கிறாள். இந்த தேவியும் பிண்டி (உருண்டைக் கல்) வடிவிலேயே காட்சி தருகிறாள்.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட் டத்தில், அடர்நாமி எனும் கிராமத்தில் வியாபாரி ஒருவன் வசித்தான். அவனுக்கு தேவிதாஸ், துர்காதாஸ், மாயிதாஸ் என்று மூன்று புதல்வர்கள். மகன்கள் இருவர் தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இளையவனான மாயிதாஸ், தேவி பக்தனாக திகழ்ந்தான்; வியாபாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. எனவே, மூத்த சகோதரர்களால் தனிமைப் படுத்தப்பட்டான். சதாசர்வ காலமும் அம்பாளே கதியென வாழ்ந்தான்.

ஒரு முறை மாயிதாஸ், தன் மாமனார் வீட்டுக்குச் செல்லவேண்டி வந்தது. வழியில், ஓய்வுக்காக ஓர் ஆலமரத்தடியில் தங்கி னான். களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கிவிட்டான். அப்போது அவனது கனவில் கண்ணைப் பறிக்கும் ஒளி வீச, தெய்வீகச் சிறுமி ஒருத்தி தோன்றி, அந்த ஆல மரத்தடியில் தனக்கு கோயில் கட்டி, தனக்கான வழிபாட்டையும் அவன் ஏற்று நடத்த வேண்டும் என உத்தரவிட்டாள். இதை, தேவியின் கட்டளையாகவே கருதி னான் மாயிதாஸ்.

மாமனார் வீட்டிலிருந்து திரும்பும் வழியில் மீண்டும் அதே ஆலமரத்தடியை அடைந்தான். அப்போது, இனம்புரியாத பயம் அவனைப் பற்றிக்கொண்டது. அங்கேயே அமர்ந்து அன்னையை துதிக்கலானான். சற்று நேரத்தில்... சிம்மவாஹினியாக காட்சி தந்தாள் மகேஸ்வரி. ''பக்தா! இந்த இடத்தில் பிண்டி ரூபத்தில் பல்லாண்டுகள் கவனிப்பாரற்று கிடக்கிறேன். எனது அத்யந்த பக்தனான நீ இங்கேயே தங்கி, என்னைக் கண்டெடுத்து, முறைப்படி பூஜித்து வா. இதுவரையிலும் என் பெயர் சின்ன மஸ்திகா என்றிருந்தது. உன் சிந்தையில் தோன்றிய குழப்பங்களை இப்போது தீர்த்து விட்டேன். ஆகவே, இனி என்னை சிந்த பூரணி தேவி என எல்லோரும் போற்றுவர்'' என்று அருள்புரிந்தாள்.

அதைக்கேட்டு மெய்சிலிர்த்த மாயிதாஸ், ''அன்னையே! தங்களின் கட்டளையால், நான் தன்யனானேன். ஆனால், இந்த இருண்ட வனத்தில் நான் எவ்வாறு தனித்து இருப்பேன்? உணவு, தண்ணீர், தங்குமிடம் என்று எந்த வசதியும் இல்லையே. பகலில் தங்கவே பயமாக உள்ளது. எனில் இரவுகளில் எப்படி தங்குவது'' என்று தேவியை நோக்கி வினயத்துடன் கேட்டான்.

''மாயிதாஸ்... கவலைப்படாதே! உனது பயத்தைப் போக்கும் மந்திரம் ஒன்றை உபதேசிக்கிறேன்...'' என்றவள் ஒரு மந்திரம் சொல்லி... ''இதை பன்முறை பயபக்தியோடு ஜபித்து வா. என்னை அர்ச்சிக்க மலர் வேண்டும் அல்லவா? அதற்கும் ஓர் மந்திரம் உள்ளது. அதையும் உனக்குச் சொல்கிறேன். இந்தக் காட்டில் ஏதாவது ஒரு பெருங்கல்லை புரட்டினால் அதனடியில் சுவையான நீர் கிடைக்கும். அந்த நீரால் எனக்கு அபிஷேகம் செய்யலாம். அந்த தீர்த்ததை அருந்துவோரின் கவலைகள் அடியோடு அகலும். ஆனால், அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் என் கோயில் திருப்பணியில் பங்கேற்க வேண்டும். இக்கோயிலில் அர்ப்பணிக்கப்படும் பிரசாதமே உனக்குப் போதுமானது. உன் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாதே! நானிருக்கிறேன்!'' என்று ஆசீர்வதித்து மறைந்தாள்.

தேவி அருளியபடியே எல்லாம் படிப்படி யாக நிறைவேறியது. அன்றேமாயிதாஸ் ஒரு பெரும்பாறையை அகற்ற, தண்ணீர் பீறிட்டது. அந்த ஊற்றே இன்று அழகிய திருக்குளமாக விளங்குகிறது.

இதன் நீரே இன்றும் இறைப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாயிதாஸ் தங்கியிருந்த ஆலமரத்தை இன்றும் தரிசிக்கலாம். இதை யொட்டி, சிந்த பூரணி தேவியின் ஆலயம் அழகுறத் திகழ்கிறது. கருவறை புறச்சுவற்றில் காணப்படும் கலைநயம் கொண்ட பொற்தகடுகள் நம்மை வசீகரிக்கின்றன. இங்கு வந்து அம்மனை தரிசிப்பதுடன், ஸ்ரீகாலபைரவரையும் கட்டாயம் வழிபடவேண்டும் என்பது விதி.

அன்னையின் ஆலயத்தை அடைய, முதலில் ஹோஷியாபூருக்குச் செல்லவேண்டும் டெல்லியில் இருந்து எளிதில் செல்லலாம். அங்கிருந்து பேருந்து மூலம் இரண்டு மணி நேரம் பயணித்தால், பர்வாயி என்ற ஊரை அடையலாம். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது சிந்த பூரணிஆலயம்.

இவ்வாறு இதயம் கவரும் இன்னும் பல தேவி ஆலயங்கள் இமயத்தில் உண்டு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism