Published:Updated:

சலாம் மும்பை!

சலாம் மும்பை!
பிரீமியம் ஸ்டோரி
சலாம் மும்பை!

பயணம்: சார்லஸ், படங்கள்/கே.கார்த்திகேயன்

சலாம் மும்பை!

பயணம்: சார்லஸ், படங்கள்/கே.கார்த்திகேயன்

Published:Updated:
சலாம் மும்பை!
பிரீமியம் ஸ்டோரி
சலாம் மும்பை!

லகின் தூங்கா நகரம், மும்பை என்கிறார்கள். ஆம், மும்பை தூங்குவதும் இல்லை.... விழிப்பதும் இல்லை. உழைத்து ஜெயிக்கலாம் என்ற லட்சியத்துடன்...  பாலிவுட் கனவுடன்...  எப்படியும் வாழலாம் என்ற நம்பிக்கையுடன் தினந்தோறும் மும்பையைத் தேடி வந்துகொண்டே இருக்கிறது, பெரியதொரு மனிதக்கூட்டம். இன்றைய தேதியில் இரண்டு கோடி பேரின் கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறது மும்பை மாநகரம். 

சலாம் மும்பை!

'மும்பைக்கு வந்தவர் எவரும் பசியால் இறந்ததாக சரித்திரம் இல்லை’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள் மும்பைவாசிகள். வேலை தேடி, வாழ்விடம் தேடி, பணம் தேடி வந்தவர்களை, வருபவர்களை மும்பை அரவணைத்துக் கொள்கிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு என இந்தியப் பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, நேபாளம், வங்கதேசம் என எல்லைகள் கடந்தும் மும்பையில் சங்கமிக்கிறது மக்கள் கூட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மும்பையில் யாரும் நடக்கவே மாட்டார்கள், ஓடிக்கொண்டுதான் இருப்பார்கள்’ என்று சொல்வார்கள். மாநகருக்குள் இறங்கியதும் கண்ணில் படும் முதல் நிஜம் இது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள், மிகப் பரிதாபமான குடிசைவாசிகள், இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளை யாட்டு வீரர்கள், மாஃபியா கும்பல் என சகலரும் கலந்த நகரம் இது.

தீவுகளின் நகரம்!

கொலாபா, சிறிய கொலாபா, வொர்லி, பரேல், மாஸ்காவு(ன்), மும்பா தேவி மற்றும் மாஹி என ஏழு குட்டித் தீவுகளையும் உள்ளடக்கிய நகரம் தான் மும்பை. மும்பாதேவி என்ற கடவுள் மற்றும் மராத்தியில் அம்மாவைக் குறிக்கும் 'ஆய்’ - இந்த இரண்டும் இணைந்ததுதான் மும்பை என்கிற பெயர். நாளுக்கு நாள் எல்லை விரிவடைந்துகொண்டே போகிறது. கிட்டத் தட்ட இரண்டரை கோடி பேர் வாழும் மும்பை மாநகரம் உலகில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

எலிஃபண்டா குகை

சலாம் மும்பை!
சலாம் மும்பை!

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. தற்போது  ரூ. 1 லட்சம் கோடி  மும்பை வங்கிகளில் வைப்பு நிதியாக இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. தேசத்தின் பங்குச் சந்தை பரிமாற்றங்களில் 92 சதவிகிதப் பரிமாற்றங்கள் மும்பை தலால் தெருவில்தான் நடைபெறுகின்றன. மும்பை வங்கிகளில் ஒவ்வொரு நாளும் சுமார்

சலாம் மும்பை!

67 லட்சம் கோடிக்கு காசோலை பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்தியாவில் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பையின் பங்கு 60 சதவிகிதம். இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதமும், தொழில்துறை உற்பத்தியில் 25 சதவிகிதமும், மூலதன பரிமாற்றத்தில் 70 சதவிகிதமும் மும்பையின் பங்கு உள்ளது. உலகின் தலைசிறந்த வங்கிகள் பலவும் மும்பையில்தான் இயங்குகின்றன.

இத்தனை இருந்தும் மும்பையின் 60 சதவிகித மக்கள் இன்னமும் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள். குடிசைகளை இடித்து அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ஆண்டுதோறும் புதுப்புது குடிசைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

சலாம் மும்பை!

குடியிருப்பு பற்றாக்குறை, போக்கு வரத்து நெரிசல், சுற்றுசூழல் கேடு என்று ஏராளமான பிரச்னைகள் பல இருந்தாலும், இந்தியாவில் 24 மணி நேரமும் மின்சார வசதிக்கு உத்தரவாதம் உள்ள நகரம் மும்பைதான். இங்கு மின்வெட்டு என்பதே இல்லை. குடிநீர், தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகளை பிறநகரங் களோடு ஒப்பிடும்போது மும்பை பல படிகள் முன்னேறி நிற்கிறது!

சென்னையில் இரண்டு கிலோ மீட்டர் பயணத்துக்கு ரூ. 200 ஆட்டோ கட்டணம் கேட்கும் 'தனி நியாயம்' மும்பையில் கிடையாது. எல்லாமே மீட்டர்தான். மொழி தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி ஆட்டோ மீட்டரைத் தட்டிவிட்டு நீங்கள் போக வேண்டிய இடத்தை மட்டும் சொன்னால் போதும். பேரம் பேசி திறமையைக் காட்ட வேண்டிய அவசியமே இருக்காது. ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 16. டாக்ஸிகளில் ரூ. 20.

காலை 3 மணிக்கே நகரத்தில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. அதிகாலை 4 மணிக்கு வடா பாவ், பாஜி கடைகளில் கூட்டம் மொய்க்கிறது.

சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம் என்பது போல பலகாலமாக மும்பையை ஷாங்காய் ஆக்குவோம் என்று முழங்கி வருகிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால் ரோடு முழுக்க குப்பைக் கூளம், துர்நாற்றம், குண்டும் குழியுமான சாலைகள் என மும்பை சரியான பராமரிப்பு இல்லாமல் வாடுகிறது. எந்த சிக்னலில் நின்றாலும் பிச்சை எடுக்கத் தயாராக 'ஸ்லம்டாக்’ சினிமா பாணி குழந்தைகள். பொறுமையை சோதிக்கும் போக்குவரத்து நெரிசல் மும்பை மக்களை அலுப்படையச் செய்தாலும், மும்பை பெண்கள் என்னவோ சுவாரஸ்யமாகவே நடமாடுகிறார்கள்!

இந்தி படங்களின் நாயகிகளைப் போலவே குட்டை ஸ்கர்ட், ஸ்லீவ்லஸ் ஷர்ட்ஸ் என்று அமெரிக்க, ஐரோப்பிய உடைகளில் தெருக்களில் கேட்வாக் போகிறார்கள். மும்பையின் டாப் கல்லூரி வாசல்களில் பத்து நிமிடங்கள் நின்றால் போதும்... கோடம்பாக்கத்தின் தொடர் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்!

மும்பையில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். அதனால், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நானோ கார் முதல் ரூ. 2 கோடி மதிப்புள்ள மேபேக் கார்கள் வரை தெருக்களில் பார்க் செய்யப் பட்டிருக்கும் அதிசயத்தை இங்குதான் பார்க்க முடியும்!

எப்போதும் அங்கும் இங்கும் மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்தாலும், யாருக்காவது பிரச்னை என்றால் நின்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட்டே நகரும் மனிதாபிமானம் உள்ளவர்கள் மும்பைவாசிகள். யார் மராத்தி, யார் குஜாரத்தி, யார் பிஹாரி, யார் தமிழர் என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இணைந்தே வாழ்கிறார்கள். அதனால் மும்பையின் ஜனநெருக்கடி மிகுந்த தெருவுக்குள் நுழைந்தால் மராத்தி, இந்தி, குஜராத்தி, உருது, தமிழ், தெலுங்கு என இந்தியாவின் ஒட்டுமொத்த மொழிகளையும் கேட்கமுடியும்.

தாராவி

சலாம் மும்பை!

ரியல் எஸ்டேட் மதிப்பும், வாடகையும் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் உலகின் எட்டாவது இடத்தில் உள்ளது மும்பை. அதேசமயம் உலகில் வாழ்வதற்கு மிகவும் மலிவான செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் மும்பை உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை தாஜ் ஹோட்டலின் விலை உயர்ந்த அறையில் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை,ரூ. 1.5 லட்சம். அதேசமயம் பிளாட்பாரங்களில், ரயில் நிலையங்களில் காசு செலவில்லாமல் தூங்கி எழும்புகிறார்கள் பல லட்சம் மும்பை வாசிகள். மும்பையில் ஒற்றை அறை கொண்ட வீட்டின் வாடகை

சலாம் மும்பை!

10,000. மும்பை நகருக்குள் கோடீஸ்வரர்களால் மட்டுமே வீடு வாங்க முடியும். இதனால் புறநக ரங்களில்தான் பெரும்பாலான ஃபிளாட்டுகள் கட்டப்படுகின்றன. போதிய இடம் இல்லாத காரணத்தால் 40 முதல் 50 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கே சர்வசாதாரணம்.  

ஜுஹு பீச்

சலாம் மும்பை!

தமிழர்களின் தாராவி!

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய குடிசைப் பகுதி, தாராவி. இங்கு 60 லட்சம் பேருக்கும் மேல் வசிக் கிறார்கள். எக்கச்சக்க குடிசை வீடுகள் இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் வேட்டி - சட்டையில் மனிதர்கள், தமிழ் பாடல்களை சத்தமாக அலறவிடும் டீ கடைகள், தமிழ் விளம்பரங்கள் என தாரா வியில், 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று சொல்லும் அளவுக்கு தமிழர்கள் ஆதிக்கம். தாராவி குடிசைகள் நிறைந்த பகுதி என்றாலும் கோடிகள் புழங்கும் பிசினஸ் ஏரியாவாகவும் இருக்கிறது. அப்பளம் முதல் ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் வரை இங்கே தயாராகிறது. பிளாஸ்டிக் தயாரிப்பு கம்பெனிகள், ஜரிகை ஆலைகள் என பல்வேறு தொழிற்சாலைகளும் இங்கு இயங்குகின்றன. ஆனால் அரசால் குடிசைப்பகுதி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், புதிதாக தொழில் துவங்க எந்த வங்கிகளும் கடன் கொடுப்பது இல்லை. இதனால் இங்கு வசிக்கும் குடிசைவாழ் மக்களே ஒருங்கிணைந்து சமுதாய வங்கியை நடத்தி, அதன் மூலம் பல்வேறு உதவிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

மும்பையில் வடா பாவ், டீ கடை வைத்து பிழைப்பை நடத்துவோர் அதிகம். மும்பையில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இப்போது இல்லை. டெலி மார்க்கெட்டிங், பான் கார்டு, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என கமிஷனுக்கு வேலை செய்பவர்கள்தான் அதிகம். ஆன்லைன் ட்ரேடிங், ஆன்லைன் அட்வர்டைசிங் எனப் புதுப்புது தொழில்களும் முதலில் இங்குதான் அறிமுகமாகிறது.

சலாம் மும்பை!

டோடி கட்

சென்னைக்கு கூவம் போல மும்பைக்கு மித்தி ஆறு. போவாய் ஏரியில் தொடங்கி  நகருக்குள் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து, கழிவு நீராக அரபிக் கடலில் கலக்கிறது. மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு கோல்ஃப் மைதானங்களும், இரவு கிளப்புகளும் அமைக்கப்பட்டுவிட்டன. இப்போது நகரின் அடுக்குமாடி குடியுருப்புகளாக மாறியிருக்கும் வொர்ஸோவா, லோக்கண்ட்வாலா (இங்குதான் கரீனா கபூர், அசின், ஸ்ரீதேவி என பாலிவுட்டின் இந்நாள் - முன்னாள் கனவுக் கன்னிகள் வசிக்கிறார்கள்), கோரேகாவு(ன்) ஆகிய பகுதிகள் மாங்குரோவ் காடுகளாக இருந்தவைதான்.

பாலிவுட்டில் வருடத்துக்கு 170 முதல் 200 படங்கள் சராசரியாகத் தயாராகின்றன. இந்திய மார்க்கெட்டைவிட இப்போது இண்டர்நேஷனல் மார்க்கெட்டை வைத்தே இந்திப் படங்கள் தயாரிக்கப்படுவதால் வெளிநாட்டு நடிகைகள், துணை நடிகைகளின் ஆதிக்கம் இப்போது அதிகரித்துவிட்டது. பாலிவுட்டின் ராஜா என்று யாரும் இல்லை. இப்போதைய நிலையில் கான் நடிகர்களின் படங்களே அதிக அளவில் வசூலைக் குவிக்கின்றன. பாலிவுட்டிலும் வாரிசுகளின் ஆதிக்கம் உண்டு. கபூர்கள் துவங்கி ரோஷன், பச்சன்கள் வரை வாரிசுகள் சுலபத்தில் என்ட்ரி கொடுத்தாலும் படங்கள் பணால் என்றால், யாரானாலும் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான். பல சினிமா தயாரிப்பு கம்பெனிகளில் அண்டர்கிரவுண்ட் பார்ட்டிகளின் முதலீடுகளும் உண்டு! அதை வைத்தே வெளியான சினிமாக்கள் ஏராளம்.

விளம்பரம் இல்லாமல் இங்கே குண்டூசிகூட விற்க முடியாது என்கிற அளவுக்கு விளம்பர மோகம் தலைவிரித்து ஆடுகிறது.

சலாம் மும்பை!
சலாம் மும்பை!

உலகிலேயே மிகப்பெரிய ரெட் லைட் ஏரியா மும்பை யில்தான் உள்ளது. காமாத்திபுரா எனப்படும் இந்த ஏரியா  'சிவப்பு விளக்குப் பகுதி’யாக வரவேற்கும்... சிவப்பு விளக்குகள் எரியும் என்று  கற்பனை செய்யாதீர்கள். மும்பை நகரின் நடுநாயகமாக, பல அடுக்குமாடி குடியிருப்புகள் சூழ்ந்த இடத்தில் இருக்கிறது கமாத்திப்புரா. ஆங்கிலேயர்களின் பாலியல் தேவைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்ட இடம், இன்றும் அப்படியே தொடர்கிறது.  ஒருபக்கம் சாலைகளில் பெண்கள் வரிசைகட்டி நிற்க, அவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் புரோக்கர்கள் பிசியாக உலா வருகிறார்கள். ஆனால்  இன்னொரு பக்கம் சிறுவர்கள் இதில் எதையும் கண்டு கொள்ளாமல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்!

ஆங்கிலேயர்கள் மும்பையை விட்டு வெளியேறியபோது கட்டடக்கலை சின்னமாக நிறைய மாளிகைகளை, கோபுரங்களை, கட்டடங்களை விட்டுச் சென்றார்கள். அவற்றில் பலவும் இன்றளவும், அதன் தன்மை மாறாமல் காப்பாற்றப்படுவது மும்பையின் ஸ்பெஷல்.

டப்பாவாலா!

மும்பையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் வீடுகளில் இருந்து டிஃபன் பாக்ஸில் உணவு எடுத்துச் சென்று சேர்ப்பவர்கள்தான் டப் பாவாலாக்கள். மும்பையில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் டப்பாவாலாக்களாக இருக்கிறார்கள். ஒருநாளைக்கு இவர்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு துளிகூட குழப்பமில்லாமல் வெகுதூரம் வரை லஞ்ச் பைகள் பயணித்து, உணவு சப்ளை நடக்கிறது. கடந்த 120 வருடங்களாக டப்பாவாலாக்கள் மூலம் ஆச்சர்யமான தொழில் நேர்த்தியுடன் இந்த உணவுப் பரிமாற்றம் நடந்து வருகிறது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்

சலாம் மும்பை!
சலாம் மும்பை!

மும்பை பங்கு சந்தை

தீவிரவாதம்!

1992-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இங்கு கலவரமும், தீவிரவாதமும் தலைதூக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு நடைபெற்ற இந்து - முஸ்லிம் கலவரம்தான், மும்பையின் ஒற்றுமையைக் குலைத்தது. இந்த கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜவுளித் துறை. கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட இந்த கலவரத்தால் பல தொழில்கள் இடம்மாறின. 1993-ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள்தான் மும்பையில் நிகழ்ந்த முதல் தீவிரவாதத் தாக்குதல். அப்போதைய தொடர் குண்டு வெடிப்பில் மொத்தம் 270 பேர் கொல்லப்பட, 700 பேர் காயம் அடைந்தனர். 2006-ம் ஆண்டு ரயில்களில் வெடித்த ஏழு குண்டுகளில் 209 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 2008-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடந்த தீவிரத் தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.

சலாம் மும்பை!
சலாம் மும்பை!

டப்பாவாலா

ஆனாலும்  மக்களின் சுறுசுறு இயக்கம் குறையவில்லை. வெளிநாடுகளில் இருந்து சுற்றிப்பார்க்க வரும் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. மும்பைக்குப் போய் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தாலே, நமக்கும் சுறுசுறுப்பு வந்துவிடும்! இந்தியாவில் ஏராளமான கோடீஸ்வரர்களை உருவாக்கிய நகரம் என்பதால், இன்னமும் கனவுடன் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

 மும்பையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்

1. எலிஃபண்டா குகை, 2. கேட்வே ஆஃப் இந்தியா, 3. டோபி கட், 4. ஃபேஷன் வீதி, 5. ஜுஹு பீச், 6. மரீன் டிரைவ்,

7. மும்பை பங்குச் சந்தை, 8. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்,

9. குரேகாவு(ன்) ஃபிலிம் சிட்டி, 10. ஹாஜி அலி மசூதி,

11. சித்தி விநாயக் கோயில், 12. ஹோட்டல் தாஜ் பேலஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism