Published:Updated:

அட நம்புங்க சார்!

அட நம்புங்க சார்!
பிரீமியம் ஸ்டோரி
அட நம்புங்க சார்!

நிஜம்: பி.என். பரசுராமன், ஓவியம்: கண்ணா

அட நம்புங்க சார்!

நிஜம்: பி.என். பரசுராமன், ஓவியம்: கண்ணா

Published:Updated:
அட நம்புங்க சார்!
பிரீமியம் ஸ்டோரி
அட நம்புங்க சார்!

ற்பனையை விட நிஜம், பல நேரங்களில் நம்ப முடியாத அளவுக்கு இருப்பது உண்டு. உலகெங்கிலும் நம்ப முடியாத நிகழ்வுகள் எத்தனையோ நடந்துள்ளன. உதவி கேட்டு யாராவது வருவது தெரிந்தாலே காததூரம் ஓடுபவர்கள்... இலவசம் என்றால் அடித்துப்பிடித்து ஓடுபவர்கள்... உணவுப் பொருட்களை அலட்சியம் செய்பவர்கள் எல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய 'நிஜ’ மனிதர்கள் இவர்கள்...

இவர்தான், 'தர்மவான்’ 

1897-ம் ஆண்டு. சேலம் மாவட்டத்தில் இருக்கும் வேளுக்குறிச்சி என்ற ஊரில் வாழ்ந்த வேலப்பக் கவுண்டர் பெரும்பணக்காரர். ஏராளமான நிலம் அவருக்கு சொந்தமாக இருந்தது. விவசாயம் செய்து வந்த வேலப்பர் ஏழைகளுக்கு மனப்பூர்வமாக உதவி செய்வார். பசி என்று வந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவு வழங்குவார். வேலப்பரின் இந்த அருங்குணம் பற்றிய தகவல் வெளியூர்களிலும் பரவி இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட நம்புங்க சார்!

ஒரு நாள் இரவு 10 மணி. பழநிக்குப் பாதயாத்திரை செல்லும் ஒரு குழு வந்தது. அந்தக் குழுவில் 50 பேர் இருந்தனர். வேளுக்குறிச்சியை அடைந்தது. வேலப்பர் வீட்டில் சாப்பிட்டுத் தங்கிவிட்டு, மறுநாள் காலை பயணத்தைத் தொடரலாம் என்று திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால், ஊருக்கு வர இரவு நெடு நேரமாகி விட்டது. அந்த நேரத்தில் வேலப்பர் வீட்டுக்குப் போய், ''உணவு கிடைக்குமா?'' என்று கேட்டனர்.

அங்கிருந்த சமையல்காரர், ''நேரம் ஆகி விட் டதால், எதுவும் இல்லை... கிளம்புங்கள்!'' என்று சொல்லி விட்டார். பாதயாத்திரை குழுவினருக்கு அகோரப் பசி. உணவு இல்லை என்றவுடன் ஏமாற்றம் அடைந்தனர். 'சரி நமக்கு விதித்தது இன்று பசிதான்’ என்று நினைத்துக் கொண்டு, 'அரோகரா...’ போட்டுக் கிளம்பினார்கள்.  தூங்கிக் கொண்டிருந்த வேலப்பர் சத்தம் கேட்டு எழுந்து வந்து விட்டார். நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சமையல்காரரைக் கோபமாகப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சமையல்காரர், ''என்மேல் கோபித்துக் கொள்ளக்கூடாது. வீட்டில் குழந்தை களுக்கு அம்மை வார்த்து இருப்பதால், பிறருக்கு உணவு இடக்கூடாது என அம்மா உத்தரவிட்டு இருக்கிறார். அதனால்தான்...'' என மெதுவாகச் சொன்னார்.

அதைக் கேட்டதும் வேலப்பரின் முகம் மாறியது. ''சற்று நேரம் பொறுத்து இருங்கள்...'' என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார். கணவர் கோபமாக வரு வதைப் பார்த்து அதிர்ந்து நின்றார், மனைவி.

''என்னம்மா இது? நீ இப்படிச் செய்யலாமா? குழந்தைகளுக்கு அம்மை வார்த்து இருப்பதால், நான் சாப் பிடவில்லையா? நீ சாப்பிடவில்லையா? நம் உறவினர்கள்... நம் சமையல் ஆட்கள்... நம் வேலைக்காரர்கள் அவ்வளவு பேரும் சாப்பிட்டபோது கோபம் கொள்ளாத வைசூரிதேவி, நம்மை நம்பி வந்தவர்களுக்கு உணவு இட்டால்மட்டும் கோபித்துக் கொள்வாளா? தர்மம் செய்வதைப் பார்த்துக் கோபம் கொள்ளும் தெய்வம் இருக்குமா? என்ன அறியாமை... இந்த ஊரில் இந்த நேரத்தில் பணம் கொடுத்தாலும் உணவு கிடைக்குமா? அந்த யாத்ரீகர்கள் பசியாற வேண்டும். அதனால் ஒரு மணி நேரத்துக்குள் உணவு தயாராக வேண்டும். அவர்கள் உண்டு திருப்தி அடைந்த பிறகே நான் உறங்கச் செல்வேன்!'' என்றார்.

அப்புறம் என்ன..? சமையல் வேலை உடனே தொடங்கியது. யாத் ரீகர்கள் வயிறார உண்டு, மனமார வாழ்த்தினார்கள். 

இவர்தான் மானஸ்தன்! 

1956-ம் ஆண்டு. ஜெர்மனியில் வெஸ்ட் பேலியா நகரில் என்ரிச்டிகர் என்ற விவசாயி வசித்து வந்தார். அவருக்கு எட்டு குழந்தைகள். பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகக் கடுமையாக உழைத்து வந்தார்.

விவசாயியின் கஷ்டத்தைக் கண்ட அந்த ஊர் நிர்வாகம், அவருக்கு உதவ முன்வந்தது. ஆனால், தன்மானம் மிக்க என்ரிச்டிகர், 'என் குடும்பத்தைக் காப் பாற்ற வேண்டியது என் கடமை, இதில் யாருடைய உதவியும் தேவை இல்லை’ என்று மறுத்துவிட்டார். ஆனாலும் நிர்வாகம் தன் முயற்சியைக் கைவி டவில்லை. சமூகத் தொண்டு செய்யும் இரு பெண்களை அழைத்து, 'நீங்கள் நேரில் பேசி அவரை உதவி பெற்றுக்கொள்ள சம்மதிக்க வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டது. அதன்படி அந்தப் பெண்களும் என்ரிச்டிகர் வீட்டுக்கு வந்தனர். எவ்வளவோ பேசிப் பார்த்தார்கள். ஆனால், பலன் கிடைக் கவில்லை.

அட நம்புங்க சார்!

ஊர் நிர்வாகத்துக்கு ஆச்சர்யம். 'என்ன சொல்லியும் அந்த விவ சாயி கேட்கமறுத்துக் கடுமையாக உழைக்கிறாரே. ஒரு வேளை, அவருக்கு மன நலம் இயல்பாக இல்லையோ...?’ என்று சந்தேகித்து மனோதத்துவ நிபுணரை அனுப்பி வைத்தார்கள்.

மனோதத்துவ நிபுணர், என்ரிச்டிகரை பரிசோதித்துப் பார்த்தார். 'விவசாயி நல்ல மனநிலையில் இருக்கிறார். எந்தக் கோளாறும் இல்லை. அவரால் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளமுடியும்’ என்று அறிக்கை அளித்தார்.

பல வழிகளிலும் முயற்சி செய்து தோற்றுப்போன ஊர் நிர்வாகம் ஒரு பாதுகாப்பு அதிகாரியை நியமித்து, நீதிமன்றத்தில் பணத்தைச் செலுத்தியது. மாதந்தோறும் நீதிமன்றத்தில் இருந்து விவசாயிக்கு உதவிப் பணம் அனுப்பப்பட்டது.

அதைக் கண்டு என்ரிச்டிகர் கொதித்து விட்டார். ''வேண்டாம் என்று நான் மறுத்த பணத்¬ஆத, என்மீது திணிக்க அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது!'' என்று அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டார்.

'அரசு வழங்கும் பணத்தை மறுக்க டிகருக்கு உரிமை உண்டு. தான் தேடாத பணத்தைப் பெற அவர் விரும்பவில்லை. இன்றைய உலகில் இந்தப் போக்கு புதுமையானதுதான்! ஆனால், அவருடைய இந்தப் போக்கு நீதிமன்றத்துக்கும் உடன்பாடானது. இதுவே, நேர்மையான போக்கு’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ரிச்டிகர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். 

இவர்தான் வள்ளல்! 

புகழ் பெற்ற தமிழ்ப் புலவர்களில் ஒருவரான மதுரகவி என்பவர், உதவி வேண்டி புதுச்சேரியில் இருந்த ஆனந் தரங்கம் பிள்ளையைப் பார்க்கப் போனார். புலவர் போன நேரத்தில், பிள்ளை வீட்டில் இல்லை. அவர் வயலுக்குப் போயிருந்தார். புலவருக்கு அவசரம். அதனால் அவர், ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்க்க வயலுக்கே போய் விட்டார்.

அங்கே சென்றவருக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. ஏனென்றால் தரையில் உதிர்ந்திருந்த நெல்மணிகளை ஆனந்தரங்கம் பிள்ளை பொறுக்கிக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்ததும் புலவர், 'என்னடா இது? இவரிடம் உதவி கேட்கலாம் என்று வந்தால், இவர் உதிர்ந்து போன நெல்லைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாரே’ என நினைத்துப் பின்வாங்கினார்.

அட நம்புங்க சார்!

ஆனால், அதற்குள் தன்னைத் தேடி வந்த புலவரை, ஆனந்தரங்கம் பிள்ளை பார்த்து விட்டார். நெல் பொறுக்குவதை நிறுத் தாமலே, ''வாருங்கள் புலவரே, வரப்பின் மீது உட்காருங்கள்! இதோ வந்து விடுகிறேன்...'' என்று சொல்லிவிட்டு, நெல் பொறுக்குவதைத் தொடர்ந்தார்.

சற்று நேரத்தில் வேலையை முடித்துக் கொண்ட ஆனந்தரங்கம் பிள்ளை, புலவருடன் வீடு திரும்பினார். புலவருக்கு உணவு அளிக்க ஏற்பாடானது. ஆனந்தரங்கம் பிள்ளை, தானே புலவரை மிகுந்த மரியாதையுடன் உட்கார வைத்து தலை வாழை இலை போட்டார். ஒரு வெள்ளித் தட்டு நிறைய தங்கக் காசுகளைக் கொண்டு வந்து இலையில் குவித்தார், ''புலவரே! சாப்பிடுங்கள்!'' என்றார்.

வயல்வெளியில் அலைந்து மிகுந்த பசியோடு இருந்த புலவர் அதிர்ச்சி அடைந்தார். ''பிள்ளை அவர்களே! மிகுந்த பசியோடு இருக்கும் என்னை இப்படி அவமானப்படுத்தலாமா? தமிழ் அறிந்த புலவர்களுக்கு நீங்கள் மிகுந்த மரியாதை கொடுப்பதாகக் கேள்விப்பட்டு அல்லவா இங்கு வந்தேன்!'' என்று கேட்டார்.

உடனே, வேறு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. புலவர் சாப்பிட்டு முடித்தவுடன், ''புலவரே நான் உங்களை அவமானப்படுத்தவில்லை. வயலில் நான் நெல்மணிகளைப் பொறுக்கியதைப் பார்த்து, நீங்கள் என்னை அற்பமாக நினைத்தீர்கள் அல்லவா? அது நெல்மணிகள் அல்ல. மக்களின் பசிப்பிணி போக்கும் மருந்து. எத்தனை காசுகள் தங்கம் தந்தாலும், பசியைப் போக்க நெல்மணிகள்தான் வேண்டும். எனவே, அதை துளியும் வீணாக்கக் கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்படிச் செய்தேன். என்னை மன்னியுங்கள்!'' என்றார் ஆனந்தரங்கம் பிள்ளை.

நெகிழ்ந்து நின்ற புலவருக்கு தங்கக் காசுகளைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார் ஆனந்தரங்கம் பிள்ளை.

(இந்த சம்பவம் 'ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism