Published:Updated:

சாக்லேட் பயணம்!

சாக்லேட் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
சாக்லேட் பயணம்!

பயணம்: ஜி.எஸ்.எஸ்.

சாக்லேட் பயணம்!

பயணம்: ஜி.எஸ்.எஸ்.

Published:Updated:
சாக்லேட் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
சாக்லேட் பயணம்!

ன்று பெரும் கோடீஸ்வரர்களைப் பார்த்து, 'அவருக்கென்ன, சுவிஸ் வங்கியிலே கணக்கு வெச்சிருக்கார்’ என்கிறோம். இதையே பழைய காலத்தில் வேறு மாதிரி குறிப்பிட்டார்கள். ஆம், 'அடேங்கப்பா, அவரா..! சாக்லேட்டே சாப்பிடுவார்!’ என்பார்கள். அந்தக் காலத்தில் அரச குடும்பத்தினரும் பெரும் செல்வந்தர்களாலும் மட்டுமே சாக்லேட் சாப்பிட முடிந்தது என்பதே இதற்குக் காரணம். 

சாக்லேட் பயணம்!

அந்த சாக்லேட்டுக்குப் புகழ் பெற்றது, சுவிட்சர்லாந்து.  1819-ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ப்ரூக் பகுதிக்கு சைக்கிளில் வந்தார் அலெக்சாண்டர் கெய்லெர். அங்கே இருந்த பசுமைப் புல்வெளிகளும், அங்கே மேய்ந்து கொண்டிருந்த புஷ்டியான மாடுகளும்தான் அவர் மனதைக் கிள்ளியது. உடனே, தான் புதிதாகத் துவக்கத் திட்டமிட்டுள்ள சாக்லெட் தொழிற்சாலையை அங்கேயே தொடங்க முடிவு செய்தார். அதுதான் கெய்லர் சாக்லேட் தொழிற்சாலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தத் தொழிற்சாலைக்குள் பயணிகளைச் சுற்றிப் பார்க்க சந்தோஷமாக அனுமதிக்கிறார்கள் என்று தெரிந்து, சமீபத்தில் சென்றேன். அந்தத் தொழிற்சாலையை நெருங்கும்போதே மணம் மூக்கை வருடுகிறது.

உள்ளே செல்வதற்கு டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த டோக்கனில் உள்ளே செல்வதற்கான நேரத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் சாக்லேட் காபி மற்றும் சாக்லேட் ஐஸ் க்ரீமை வாங்கி ருசிக்கலாம். உரிய நேரம் வந்ததும் 'டூர்’ தொடங்குகிறது. சாக்லேட் எப்படியெல்லாம் உலக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது என்பதை விளக்குகிறார், நிறுவனப் பிரதிநிதி ஒருவர். நாவில் சுவை அரும்புகள் ஓவர்டைம் செய்வதை, சுரந்த எச்சில் உணர்த்துகிறது.

முக்கால் இருட்டில் ஓர் அறைக்குள் அனுப்பப்படுகிறோம். 'தயவு செய்து சுவர்களில் சாயாதீர்கள்’ என்ற எச்சரிக்கை. ஏனென்றால் சுவர் என்று நாம் நினைப்பது கதவாகத் திறந்துகொள்கிறது. மீண்டும் வேறொரு அரையிருட்டு அரங்கினுள் அனுப்பப்படுகிறோம். அங்கே சாக்லேட் குறித்த குறும்படம், உருவச் சித்திரிப்புகள், தோல்கூத்து ஆகியவற்றை நடத்துகிறார்கள்.

ஒரு காலத்தில் எந்த அளவுக்கு சாக்லேட் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதையும் சுவைபடச் சொல்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் சாக்லேட்டின் முக்கிய அடிப்படைப் பொருளான கோக்கோ விதைகள் உலகின் பல பகுதிகளில் நாணயமாகவே பயன்படுத்தப்பட்டதாம். அந்தக் காலகட்டத்தில் பிற நாடுகளையும் உலகின் புதிய பகுதிகளைக் கண்டுபிடிப்பதிலும் ஆக்கிரமிப்பதிலும் தனிக் கவனம் செலுத்தியது ஸ்பெயின். கோக்கோவின் தாயகமாக விளங்கி வந்தது மெக்ஸிகோ. கோர்டெஸ் என்னும் ரசனைக்காரர்தான் 1528-ல் கோக்கோவை ஸ்பெயினுக்குக் கொண்டுசென்றார்.

அவ்வளவுதான், ஸ்பெயினில் சாக்லேட் அரச வையின் உடனடி அங்கீகாரத்தைப் பெற்றது. அன்றைய சாக்லேட்டுகள் திரவ வடிவில்தான் உட்கொள்ளப்பட்டன. கொஞ்சம் மிளகுத்தூள் கூட அதில் சேர்க்கப்பட்டது. சர்க்கரை மிகமிக விலை உயர்ந்த பொருளாக இருந்ததால், அதற்கு பதிலாகத் தேன். இந்த கோக்கோ திரவம் மிகவும் கெட்டியானதாக இருந்தததால் அதில் கொஞ்சம் தண்ணீர் அல்லது பால் மற்றும் ஒயின் கலக்கப்பட்டன.

சாக்லேட் பயணம்!

பாரிஸ் நகருக்கு சாக்லேட் பயணம் செய்யக் காரணமாக அமைந்தது ஒரு திருமணம். ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளவரசி அன்னா, ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் வளர்ந்தவர். தினசரி உணவில் சாக்லேட் நிச்சயம் உண்டு. 1615-ல் மன்னர் 13-ம் லூயியை திருமணம் செய்துகொண்டு பாரிஸுக்குப் பறந்தார். அப்படிச் சென்றபோது, தன்னுடன் சாக்லேட் பானத்தையும் எடுத்துச்சென்று பருகினார். மன்னருக்கும், அரசவை சீமான்களுக்கும் சாக்லேட் பிடித்துப் போக, சாக்லேட் குடிப்பது பிரான்ஸ் நாட்டின் ஓர் அந்தஸ்து சின்னமாக மாறிப் போனது. பின்னர் அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவியது.

19-ம் நூற்றாண்டில் காபியும் தேநீரும் பிரபலமாகத் தொடங்கவே, சாக்லேட் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டது. அதாவது திரவ வடிவில் இருந்து திட வடிவத்துக்கு மாறியது.  உலகில் எவ்வளவோ நாடுகள் இருக்க, சுவிட்சர்லாந்து எப்படி சாக்லேட் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது? வேறொன்றும் இல்லை... இடைவிடாத தரம் மட்டுமே காரணம். அதனால்தான் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, சுவிட்சர்லாந்து.

1912-ல் உலக சாக்லேட் ஏற்றுமதியில் 55 சதவிகிதத்தைப் பிடித்து முன்னணியில் நின்றது சுவிட்சர்லாந்து. இதனால், அந்த தேசத்தின் மாட்டுப் பண்ணைகளுக்கு டிமாண்டு ஏற்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு செல்வம் கொழித்தது. சுவிட்சர்லாந்தின் மற்றொரு பங்களிப்பு, மெல்ட் டிங் சாக்லேட். அதாவது உள்பகுதிக்குப் பதிலாக சாக்லேட்டின் மேல்பகுதியிலேயே நாக்கில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மை இருந்தது. தொழிற்சாலையில் சாக்லேட் எப்படி செய்யப்படுகிறது என்பதைக் காட்டுகிறார்கள். அதிர்ஷ்டமிருந்தால் உங்களையே ஒரு சாக்லேட் உருவாக்குவதில் பங்கு வகிக்க வைக்கிறார்கள்.

சுற்றிப் பார்த்து முடித்ததும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக சாக்லேட் ஒன்று கொடுக்கிறார்கள். இறுதி அரங்கில் தங்களது அத்தனை தயாரிப் புகளிலும் சின்ன சின்ன அளவில் சாம்பிள் வைத்திருக்கிறார்கள். அவற்றைச் சுவைத்துப் பார்த்து, தங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளை, தேவையான அளவுக்கு வாங்கிச் செல்லலாம்.

பல்லுக்குக் கெடுதல், ஒற்றைத் தலைவலி வரும், கொழுப்பு சத்து கூடும், நிக்கல் கலக்கப்படுகிறது என்றெல்லாம் கடும் விமர்சனங்களை சந்தித்தபோதும், சாக்லேட் தொழில் மட்டும் பாதிப்பு அடையவில்லை. காரணம் எளிமையானது. அதன் சுவை! சாக்லேட்டின் இன்னொரு பெயர் - தியோபுரோமாகாகோ. இதன் அர்த்தம், 'கடவுள்களின் உணவு’ என்பது. எத்தனை பொருத்தமான, ரசனையான பெயர்!

கடிக்க...

கோகோ வளர்வதற்கு சூரிய வெளிச்சம் தேவை என்றாலும், வெப்பம் அதன் மீது நேரடியாக ப்படக்கூடாது. அதனால் தென்னை, பனை, வாழை மரங்களின் நிழலில்தான் கோகோ மரம் வளர்கிறது.  

ஒரு வருடத்துக்கு ஒரு மரம் 20 முதல் 50 பழங்களை அளிக்கும். ஆனால் ஒவ்வொரு பழத்தின் எடையும் சுமார் அரை கிலோ. ஒவ்வொரு பழத்தின் உள்ளேயும் சுமார் 30 விதைகள்.  இவைதான் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.  கோகோ தயாரிப்பில் முன்னணியில் இருப்பது மேற்கு ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் தென்கிழக்கு ஆசியா.

ப்ரோக் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த மைஸன் கெய்லெர் சாக்லேட் தொழிற்சாலை, இப்போது நெஸ்லேவின் சகோதர நிறுவனம்!

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கோகோ இறக்குமதிக்கு பலவித தடைகள்.  அதனால் பாதாம்பருப்பு, சிறு பழங்கள் போன்றவற்றை சாக்லேட்டில் கலக்கத் துவங்கினார்கள்.  நாளடைவில் இதற்கென்றே ரசிகர் கூட்டம் உண்டானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism