Published:Updated:

காமாக்யா

காமாக்யா
பிரீமியம் ஸ்டோரி
காமாக்யா

ஆன்மிகம்: ஆர். ஷஃபி முன்னா, படங்கள்/யூபி போட்டோஸ்

காமாக்யா

ஆன்மிகம்: ஆர். ஷஃபி முன்னா, படங்கள்/யூபி போட்டோஸ்

Published:Updated:
காமாக்யா
பிரீமியம் ஸ்டோரி
காமாக்யா

ந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரம் கவுகாத்தி. வன வளம் நிறைந்த மலைகளின் நகரமான இது, பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. கவுகாத்தியின் மேற்கில், நீல் பர்வதம் எனும் நீலாச்சல் மலையின் மீதுதான் அமைந்துள்ளது காமாக்யா கோயில். இதன் ஸ்தல புராணம் நாம் கேள்விப்பட்டதுதான். 

காமாக்யா

ஒரு சமயம் மகா யாகம் நடத்த முடிவு செய்த தட்சன், மருமகன் சிவனைத் தவிர அனைவரையும் அழைக்கிறார். இதைக் கேள்விப்பட்ட சக்தி, அழைப்பு இல்லை என்றாலும் கணவனின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் தந்தையின் யாகத்துக்குச் செல்கிறார். சிவனை தட்சன் அவதூறாகப் பேச, அதைத் தாங்க முடியாத சக்தி (இவர்கள் ஐதீகப்படி) தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் கோபமடைந்த சிவன், சக்தியின் உடலைத் தோளில் போட்டுக்கொண்டு கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பரமசிவனின் தோள் மீதுள்ள பார் வதியின் உடலை இறக்கினால்தான் ருத்ர தாண்டவத்தை நிறுத்த முடியும்’ என எண்ணிய விஷ்ணு, தனது சக்ராயுதத்துக்கு ஆணையிடுகிறார். அதன்படி, சக்ராயுதம் சிவனைப் பின் தொடர்ந்து, அவரது தோளில் இருந்த சக்தியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுகிறது. சிவன் நிதானத்துக்கு வருகிறார். வெட்டப்பட்ட சக்தியின் துண்டுகள் 51 இடங்களில் விழுகின்றன. அப்படி விழுந்த இடங்கள் எல்லாம் புண்ணிய ஸ்தலங்களானது.  

காமாக்யா

சக்தியின் உயிர் அங்கமான யோனி கவுகாத்தி மலையில் விழ, அங்கு உரு வானதுதான் இந்த காமாக்யா கோயில் என்கிறார்கள். அந்த உறுப்பு விழுந்தவுடன் மலை முழுவதும் நீல நிறமாக மாறியதாம். எனவே, அந்த மலைக்கு நீல்பர்வதம் அல்லது நீலாச்சல் என அழைக்கப்படுகிறது.

'இந்தக் கோயிலை விஸ்வகர்மா உதவியுடன் மன்மதன் கட்டியதாகவும், அதன் பிறகே அவனுக்கு மீண்டும் காம ரூபம் கிடைத்தது’ என்றும் அஸ்ஸாமிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

இன்னொரு கதையும் இருக்கிறது. ஒருநாள் மாலை வெயிலில், கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த சக்தியின் அழகை கண்டு மயங்கிய நரகாசுரன், அவரை மணமுடிக்க ஆசைப்படுகிறான். இதைக் கேட்டு அதிர்ந்த சக்தி, 'கோயிலுக்காக ஒரே இரவில், மலையின் நான்கு திசைகளில் படிகளைக் கட்டுவதுடன் ஓர் ஓய்வு மண்டபமும் அமைக்க வேண்டும்’ என்று கடினமான நிபந்தனை விதிக்கிறார். இதை சவாலாக ஏற்றுக்கொண்ட நரகாசுரனும் மளமளவெனக் கட்டி முடிக்கும் நிலைக்கு வரவே, பயந்துவிடுகிறார் சக்தி. உடனே விடியும் முன்னரே சேவலை கூவச்செய்கிறார். அந்த சேவல் மீது கோபம்கொண்ட நரகாசுரன், சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை துரத்திச் சென்று அதை வெட்டிக் கொல்கிறான்.

காமாக்யா
காமாக்யா

இதன் பிறகு, நரகாசுரன் அழிக்கப்பட்டு தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது நாமறிந்த கதை. நரகாசுரன் கட்டிய கோயிலின் படிகள் இன்னும் உள்ளன.

நரகாசுரனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் பாகதத்தாவுக்குப் பிறகு கோயிலுடன் சேர்ந்து இந்தப் பேரரசும் சிதைந்தது. மீண்டும், 15-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த கோச் வம்சத்தின் முதலாம் அரசன் பிஸ்வாஸ் சிங், காமாக்யா கோயிலைத் திரும்பவும் கட்டியதாக ஒரு வரலாறு உண்டு. மகாராஜா பிஸ்வாஸ் இங்கு படை எடுத்து வரும்போது வழி தவறிவிடுகிறார். அவர் நீலாச்சல் மலையில் தம் படைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது, இரவு நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பூஜை செய்வதைப் பார்க்கிறார். அவரிடம் பிஸ்வாஸ், 'எனது படைகளைத் திரும்பப் பெற்று வெற்றி கிடைக்க இந்தக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அது நிறைவேறினால் எப்படிக் கும்பிடுவது?’ எனக் கேட்டார். உடனே, ’குங்குமம், ஆடுகள், வாசனை திரவியம், மலர்கள், சிவப்பு ஆடை மற்றும் நகைகளை இந்தக் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்’ எனக் கூறுகிறார் மூதாட்டி. அதன் பிறகு படைகளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றார் பிஸ்வாஸ்.

பண்டிதர்களை அழைத்து, தான் சந்தித்த மூதாட்டியைப்பற்றி கூறி விளக்கம் கேட்டார். 'அதுதான் காமாக்யா தேவியின் இருப்பிடம்’ என்று தெரியவரவே, சிதைந்து கிடந்த அதை சீராகக் கட்டி முடிக்கிறார் பிஸ்வாஸ். இந்தக் கோயில் முஸ்லிம் மன்னர்களால் சிதைக்கப்படவே, கி.பி. 1565-ம் ஆண்டு பிஸ்வாஸின் மகனான மன்னன் நரநாராயண் மீண்டும் இதைக் கட்டினார். இந்தக் கட்டடம்தான் தற்போது இருக்கும் காமாக்யா கோயில். பிறகு மன்னர் ருத்ராசிங், தன் ஆட்சியில் சக்தி வழிபாட்டினரை மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து கோயில் நிர்வாகத்தை ஒப்படைத்தார். அந்த வம்சாவழியினர்தான், கோயில் நிர்வாகத்தை இன்று வரை தொடர்கின்றனர். அவர்களில் ஒரு மூத்த பண்டிதரான ஹேமந்த் சர்மா நமக்கு கோயிலைச் சுற்றிக் காட்டினார்.

மூன்று பெரிய கோபுரங்களும், அதைச் சுற்றி நான்கு சிறிய கோபுரங்களும் கம்பீரமாக நம்மை வரவேற்கின்றன. இந்தக் கோபுரங்களின் உச்சிகளில் மூன்று அடுக்குகள் கொண்ட கலசங்கள் தங்கத்தில் மினுமினுகின்றன. கோயிலின் மேற்குப் பகுதியில் பலிபீடம் உள்ளது.

கோயிலின் நாயகியான சக்திக்கு நாள் தோறும் விடியலில் ஓர் ஆண் ஆட்டை பலியாக்கி, அதன் தலையை கருவறையில் வைத்த பின்தான் நெய்வேத்யத்துடன் நித்யபூஜை துவங்குகிறது. தாந்திரீக வகை பூஜையான இதில் வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாநவமி அன்று எருமை பலியும் உண்டு. பலியாக்கப்பட்ட ஆட்டின் கறியை நாள்தோறும் சமைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். பிராமணர்கள் மற்றும் சைவர்களுக்காக பருப்பு, பாயாசப் பிரசாதமும் உண்டு. ஆடுகள் பலி கொடுப்பது அதிகம் என்றாலும், பலர் பலி கொடுக்க விரும்பாமல் நேர்ந்துவிட்டுச் செல்கிறார்கள். இன்னும் சிலர், புறாக்களை நேர்ந்து விடுகிறார்கள். பூஜைக்கு உரிய சாமான்களான தேங்காய், பழம், பூ, சிவப்புத் துணி மற்றும் ஊதுவர்த்திகளை ஒரு தட்டில் ஏந்திக்கொண்டு உள்ளே நுழைந்தவுடன் நம் கண்களில் படுவது, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தேவிகளின் சிலைகள். மேலும் பிரம்மன், சிவன், விஷ்ணு, கணேசன், ரதிதேவி - மன்மதனும் சிற்பங்களாக சித்திரிக்கப்பட்டு உள்ளன.  இதன் இடதுபுற பரிகார வழியின் ஒரு சிறு மண்டபத்தில் சீதா மாதாவின் சிலையும்,  வலதுபுற பரிஹார ஓரத் தில், முதன் முதலில் காமாக்யா கோயிலைக் கட் டிய விஸ்வகர்மாவின் சிலையும் உள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் நுழைந்து நான்காவது கட்டடத்தில் சென்றால் வருவது, மலைக் குகைபோல் இருக்கும் கோயிலின் கருவறை. இங்கு அனைவரும் எதிர்பார்க்கும் சக்தியின் சிலை இருக்காது. மாறாக, நீலாச்சல் மலையின் சிறிய ஊற்றில் நீர் வழிந்து ஓடியபடி இருக்க... அதில், சக்தியின் உடலில் துண்டாகி விழுந்ததாகச்  சொல்லப்படும் உடல் பாகத்தின் சிற்ப வடிவம் இருக்கிறது. அதை சிவப்புத் துணி சுற்றிய மலர்களால் மூடிவைத்து இருக்கிறார்கள்.

காமாக்யா

பலி பீடம்

காமாக்யா

லட்சுமி மற்றும் சரஸ்வதியின் சிறிய உருவச் சிலைகள் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பக்தர்கள் வணங்குகிறார்கள். அதிக வெளிச்சம் இன்றி அமைந்திருக்கும் கருவறையில், இயற்கையின் ஒளி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய முறை குறித்து பண்டிதர் ஹேமந்த் சர்மா, ''கோயிலில் நுழையும் பக்தர்கள், முதலில் வலதுபுறத்தில் அமைந்துள்ள சௌபாக்ய குண்டத்தில் முகம், கை, கால்களைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள். பிறகு, அங்கு உள்ள கணேசனின் ஆசிகளுடன் சக்தி தரிசனத்தைத் தொடர வேண்டும். உடைத்த தேங்காயின் நீரை சீதா தேவியின் மீது அபிஷேகம் செய்தபின், முக்கியக் கோயிலின் குகைபோன்ற வாயிலில் நுழைகிறார்கள். அங்கு தேவியை தரிசனம் செய்துவிட்டு, கோயிலைச் சுற்றி உள்ள படிகளில் அமர்ந்து மன அமைதி பெறுகிறார்கள்!'' என்கிறார்.

வருடம் முழுவதும் காமாக்யா கோயிலில் முக்கியப் பூஜைகளுடன் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், சில பாரம்பரியப் பண்டிகைகள்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் கொண்டாட்ட நாட்கள். அம்புபாச்சி எனும் பண்டிகை காமாக்யா கோயிலின் மகுடம் எனலாம். இந்தத் திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் கோயில் முழுவதும் மூடப்பட்டுவிடும் ஆனால், ஆடு பலி போன்ற ஒரு சில அத்தியாவசியப் பராமரிப்புப் பணியாளர்கள் மட்டுமே உள்ளே

சென்று வருவார்கள். சக்தியின் மாதவிடாய் காலமாகக் கருதப்படும் இந்த மூன்று நாட்களில் பண்டிதர்கள் உட்பட எவருமே கோயிலினுள் செல்ல மாட்டார்கள். அந்த சமயத்தில் சக்தியை யாராவது தொட்டு விட்டால், அவளது சாபத்துக்கு ஆளாகி, ஆயுள் குறைந்து விடும் என்பது நம்பிக்கை. இந்த மூன்று நாட்களில் அஸ்ஸாமியர்கள் நகம் வெட்டுதல், முடி மழித்தல் போன்றவை முதல் கல்யாணம் போன்ற சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள்.

இந்தப் பண்டிகையை கடந்த 14 வருடங்களாகப் பார்த்து பரவசம் அடைந்து வரும் தமிழரான மீனாட்சி ராஜ்கோவா, ''இந்தப் பண்டிகையில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இவர்களுக்கு காமாக்யாவின் சக்தியைக் காட்டும் வகையில் சித்தர்கள், சாதுக்கள் மற்றும் மந்திரவாதிகள் பலரும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி பல்வேறு வித்தைகளை செய் வார்கள். அஸ்ஸாமின் ஆதிவாசிப் பெண்கள் காளி, துர்க்கை என சக்தியின் பல்வேறு உருவங்களில் வேடமிட்டு, காமாக்யாவை தரிசனம் செய்ய வருவார்கள். தமிழகத்தைக் காஞ்சி காமாட்சியும், மகராஷ்டிராவை மகாலட்சுமியும் காப்பதைப்போல் அஸ்ஸாமை காமாக்யா காப்பதாக மக்கள் நம்புகிறார்கள்!'' எனக் கூறும் இவர் கவுகாத்தியின் மருமகள்.

காமாக்யா

விஸ்வகர்மா, சீதா மாதா

தாந்திரீகர்கள் காமாக்யா கோயிலுக்கு வர முக்கியக் காரணம் உள்ளது. அவர்கள், இதைக் கற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்றாலும், பயிற்சியின் ஆரம்பமும், முடிவும் இங்குதானாம். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக பயபக்தியோடு மதிக்கப்படுகிறது கோயில் மற்றும் நீலாச்சல் மலை. இவர்களுக்காக துர்கா பூஜை சமயங்களில் இரவு நேரத்தில் தாந்திரீக பூஜை, திரிசூலணி பூஜை போன்றவைகள் நடக்கின்றன. இந்தப் பூஜைகளின்போது, கோதுமை மாவில் செய்யப்பட்ட மனித உருவம் காமாக்யாவுக்கு பலியாக்கப்படும். இந்தக் கோயிலுக்கு சற்று மேல் மலையில் சக்தியின் சகோதரி என பொக்லா தேவிக்கும் ஒரு கோயில் உள்ளது. அங்கு நாள்தோறும் மாந்திரீகர்களுக்காக நள்ளிரவு பூஜைகள் நடைபெறுகிறது.

நவராத்திரி பண்டிகையின்போது வரும் துர்கா பூஜையும் இங்கே ரொம்பப் பிரபலமானது. இங்கும் கொல்கத்தாவைப் போல் ஆங்காங்கே துர்க்கையின் மண் சிலைகளை வைத்து பிரமாண்டமான பந்தல்களை அமைக்கிறார்கள். இந்த நாட்களில் சுமார் 12 வயதுள்ள பெண் குழந்தைகளுக்குக் கன்னிப் பூஜைகள் நடைபெறும்.

தீபாவளியிலும் காமாக்யா கோயிலின் காளி பூஜை விஷேசமான பண்டிகைதான். அப்போதும் கூட்டம் அள்ளும்!

அம்மன் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய, வீரத்துக்குரிய திருத்தலம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism