Published:Updated:

ஞானாலயா!

ஞானாலயா!
பிரீமியம் ஸ்டோரி
ஞானாலயா!

நூலகம்: எம். பரக்கத் அலி, படங்கள் /சு.குமரேசன்

ஞானாலயா!

நூலகம்: எம். பரக்கத் அலி, படங்கள் /சு.குமரேசன்

Published:Updated:
ஞானாலயா!
பிரீமியம் ஸ்டோரி
ஞானாலயா!

ர் அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ஒரு தம்பதி சந்தோஷமாக செய்து வருகிறார்கள். ஆம், வீட்டையே நூலகம் ஆக்கி... அதை ஆலயம் போல காத்து வருகிறார்கள், கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியர். 

புதுக்கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்ததுமே வரவேற்கிறது, திருக்கோகர்ணம் ஊர். மெயின் ரோட்டில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து போனால் பழனியப்பா நகரில் அமைந்திருக்கிறது 'ஞானாலயா'! கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியின் வீட்டுக்குப் பக்கத்திலேயே நூலகத்துக்காக இந்தப் பிரத்யேக கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது. 50 ஆண்டுகளாக தேடித் தேடி சேர்த்த புத்தகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஞானாலயா, தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய தனியார் நூலகம். 1,800 சதுர அடியில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொக்கிஷமாக நிரம்பி இருக்கின்றன.  

எப்படித் தொடங்கியது ஞானாலயா? கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் -

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞானாலயா!

கிருஷ்ணமூர்த்தி-டோரதி

''பெற்றோருக்கு நான் எட்டாவது மகன். என் தந்தை பாலசுப்பிரமணியம் மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்தவர். அவர் புத்தகப் பிரியர் அல்ல, வெறியர்! புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தார். 85 வரையில் வாழ்ந்த அவர், மறைவதற்கு முதல் நாள் வரையில்கூட புத்தகம் படிப்பதில்தான் அதிக நேரம் செலவிட்டார். தந்தையார் மூலம்தான் எனக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது.  உறவுக்காரர்கள் கொடுக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். அரசியல், இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது பலரின் நட்பு கிடைத்தது. 1959-ல் நூறு புத்தகங்களுடன் ஆரம்பமானது நூலகம். அரிதான அபூர்வமான புத்தகங்களை எல்லாம் திருச்சியில் இருக்கும் பழைய புத்தகக் கடைகளில் 15 ஆண்டுகளாகத் தேடித்தேடிச் சேர்த்தேன்!'' என்றார்.  

கல்லூரிப் படிப்பு முடித்த கிருஷ்ண மூர்த்தி மணச்சநல்லூர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியபோது, அதே பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் டோரதி. பள்ளி இலக்கியக் கூட்டங்களிலும் கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவிலும் டோரதி சொக்கிப் போனார். புத்தகங்களைப் படிப்பதிலும் அதைப் பற்றி விவாதிப்பதிலும் இருவரும் ஒரே தடத்தில் பயணித்தார்கள். டோரதி கிறித்துவர் என்றாலும் மதத்தை மீறி இவர்களின் காதலை இணைத்தது இலக்கியம். 1965-ல் பழகத் தொடங்கியவர்கள், 1971-ல் மணவாழ்க்கையில் இணைந்தார்கள்.

அடுத்து பேசிய டோரதி, ''ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு வி.ஆர்.எம்.செட்டியார், ஏ.கே.செட்டியார், முறையூர் சொக்கலிங்கம் செட்டியார் ஆகிய மூன்று பதிப்பாளர்களின் நட்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த நட்பு எங்களைப் புத்தகத் தேடலுக்குள் இழுத்துப் போனது. திருமணத்துக்கு பிறகு எங்களுக்கு தேனிலவு இல்லை. அதற்கு பதில் புத்தக உலாதான். ஊர் ஊராக அலைந்து புத்தகங்களைத் தேடி உலா போனோம். செட்டிநாட்டில் பெரும்பாலானவர்கள் வீட்டில் புத்த கங்கள் இருக்கும் என்றாலும், கேட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் தரமாட்டார்கள். ஒருவரை பலமுறை போய் பார்த்து, காத்திருந்து புத்தகங்களை வாங்கி வருவோம். எங்கள் நீண்ட தேடலில் வீட்டு நூலகம் ஆய்வு நூலகமாக எழுந்து நிற்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, அலைச்சல், பணம், ஆர்வம் என்று எதற்குமே இப்போது விலை நிர்ணயிக்க முடியாது!'' என்கிறார்.

ஞானாலயா!

ஞானாலயாவின் வளர்ச்சி குறித்து இருவரும் சேர்ந்தே பேசினார்கள். ''ஒரு புத்தகம் எழுதப்பட்ட சூழல், முன்னுரை, எழுத்தாளரின் குறிப்புகள் முதல் பதிப்பில் மட்டுமே இருக்கும். அடுத்தடுத்த பதிப்புகளில் அநேகமாகக் காணாமல் போய்விடும். அதனால் முதல் பதிப்பு நூல்களாக தேடிப்பிடிக்க ஆரம்பித்தோம். 1908-ல் வெளிவந்த பாரதியாரின் சுதேச கீதங்கள் புத்தகம் பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. அந்த புத்தகத்தில், 'என் மகனே’ என்ற தலைப்பில் மதுரை புலவர் முத்துக்குமரன் என்பவரின் பாடல் இடம் பெற்றிருந்தது. பாரதியாரின் புத்தகத்தில் எப்படி இன்னொருவரின் பாடல் இடம் பெறும் என்று எங்களுக்கு ஆச்சர்யம். 'நாட்டுப்பற்றை விளக்கி அற்புதமான பாடல் எழுதி அனுப்பினால் அதை என் புத்தகத்தில் வெளியிடத் தயார்’ என்று சுதேசமித்திரன் பத்திரிகையில் பாரதியார் சொல்லியிருக்கிறார். அதன்படிதான் முத்துக்குமரனின் பாடல் சுதேச கீதங்கள் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது என்பது பின்னால் தெரிந்தது. தன்னுடைய கவிதைத் தொகுப்பில் இன்னொருவரின் கவிதையை வெளியிடும் அளவுக்கு பாரதியார் மனம் பரந்திருந்தது.

முதல் பதிப்பில் வெளியான அந்த  முத்துக்குமரனின் பாடல் அடுத்த பதிப்பு களில் நீக்கப்பட்டிருந்தது. இப்படி பதிப்புகளுக்கு இடையே நிறைய வேறு பாடுகள் இருப்பதைப் புத்தகத் தேடலில் புரிந்து கொண்டோம்!'' என்றவர்கள்,  ஞானாலயாவை சுற்றிக் காட்டினார்கள்.

புத்தகங்கள் மட்டுமல்ல... பழைமையான பத்திரிகைகளும் ஞானாலயாவை அலங்கரிக்கின்றன. ''பாரதி முதல் சுஜாதா வரையில் பத்திரிகைகளில் படைப்புகள் எழுதிய பிறகுதான் அது பிறகு புத்தகமாக வெளிவந்தது. பத்திரிகைகளில் இருந்து புத்தகங்களாக மாறும்போது என்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வசதியாகவே பத்திரிகைகளையும் சேகரிக்கத் தொடங்கினோம். இப்படி 2,000 பத்திரிகைகள் ஞானாலயாவில்..!

செட்டிநாட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் புத்தகங்களைத்தான் பரிசாக வழங்குவார்கள். செட்டிநாட்டில்தான் பதிப் பகங்கள் அதிகம் இருந்தன. கிட்டத்தட்ட இங்கே ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருக்கும். புத்தகங்களைத் தேடுவதும் பழைய புத்தகங்களை வாங்குவதும் எளிதாக இருந்த தால்தான் புதுக்கோட்டைக்கு நாங்கள் வந்தோம். சேகரித்த புத்தகங்களை எல்லாம் தூக்கிக்கொண்டு ஐந்து மாவட்டங்கள் மாறிவிட்டோம். இனியும் புத்தகங்களை தூக்கிக்கொண்டு அலையக்கூடாது என்று முடிவு எடுத்து வீட்டின் பக்கத்திலேயே இடம் வாங்கினோம். ஓய்வு பெற்றதும்  கிடைத்த 11 லட்சம் ரூபாயில் ஞானாலயாவுக்கு கட்டடம் எழுப்பினோம். ஞானாலயாவில் இருக்கும் 80 ஆயிரம் புத்தகங்களில் 3 ஆயிரம் புத்தகங்கள் இங்கிருந்து போய் மறு பதிப்புகளாக வெளிவந்து இருக்கிறது. பிள்ளைகளை வளர்ப்பதைவிட புத்தகங்களைக் காப்பது பெரிய வேலை. வீடுகளுக்கு இருப்பது போல நூலகத்துக்கு ஜன்னல்கள் வைக்க முடியாது. தூசி படியும். பூச்சிகள் வரும். உயரத்தில்தான் காற்று வருவதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. பூச்சிகள் வராமல் இருப்பதற்காக 'நாப்தலின் பால்ஸ்' வாங்குவதற்கு மட்டுமே வருடத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறோம்...'' என்று பிரமிக்க வைத்தார்கள்.  

ஜெயகாந்தன், பொன்னீலன், சா.கந்தசாமி, அசோகமித்ரன், சிலம்பொலி செல்லப்பன், பழ.நெடுமாறன், பேராசிரியர் அன்பழகன், டிராட்ஸ்கி மருது, ஆர்.எம்.வீரப்பன், தா.பாண்டியன், தங்கம் தென்னரசு, கனிமொழி, துரைமுருகன் என்று இந்த 'ஞானாலயா’ நூலகத்துக்கு வந்து வியந்த வி.ஐ.பி-கள் பட்டியல் பெரிது.

வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப நூலகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது இந்த தம்பதியினரின் ஆசை. மிகப் பழைய புத்தகங்களை எல்லாம் மைக்ரோ ஃபிலிமுக்கு மாற்ற வேண்டும். நூலகத்தை விரிவுபடுத்த விசாலமான கட்டடம் வேண்டும். இணைய தளத்தில் அட்டவணைப்படுத்த வேண்டும். டிஜிட்டல் லைப்ரரியாக மாற்ற வேண்டும் என்று ஞானாலயா வளர்ச்சிக்கென நிறைய லட்சியங்கள் உண்டு... ஆனால் வசதிதான் இப்போதைக்கு இல்லை!

இந்தத் தம்பதிகளுக்கு சின்ன விருது கொடுத்துப் பாராட்டி உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை. இனியாவது அரசு கடமையை செய்யட்டும்!

ஞானாலயா!

துளிகள்!

ஞானாலயாவுக்கு வருகிறவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிப்பது இல்லை. வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. ஞானாலயாவின் பராமரிப்பு செலவுக்கு வருகிறவர்களே மனமுவந்து நிதியுதவி செய்கிறார்கள்.

பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் வெளிவராத படைப்புகளை ஞானாலயா வெளிக் கொண்டுவந்திருக்கிறது.

துணிகளில் அச்சிடப்பட்ட பகவத் கீதை, தமிழ்தாத்தா உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல்கள், ஜி.யூ.போப் எழுதிய தமிழ் இலக்கண நூல், தமிழில் வெளியான முதல் புத்தகம் தம்பிரான் வணக்கம் எல்லாமே கிடைக்கிறது.

இந்த நூலகத்தை பயன்படுத்தி இதுவரை 100 பேருக்கு மேல் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறார்கள்.

  அரிய புத்தகங்கள் இருப்பதாக போனில் தகவல் சொன்னாலே, வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.

பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதி, பாரதிதாசன், வையாபுரி பிள்ளை, ராஜாஜி, வல்லிக்கண்ணன், கு.அழகிரிசாமி ஆகியோரின் பிரசுரமாகாத கடிதங்களும் முக்கிய ஆவணங்களும் அரிய புகைப்படங்களும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

ஆனந்த விகடனின் ஆரம்பகால இதழ்கள் கூட ஞானாலயாவில் இருக்கின்றன. வாசன் வாங்குவதற்கு முன்பு பூதூர் வைத்தியநாதையர் நடத்திய ஆனந்த விகடன் இதழ்கள்கூட ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism