Published:Updated:

சின்ன கஜூராஹோ!

சின்ன கஜூராஹோ!
பிரீமியம் ஸ்டோரி
சின்ன கஜூராஹோ!

பழைமை: மு.ஸ்ரீனிவாஸன்

சின்ன கஜூராஹோ!

பழைமை: மு.ஸ்ரீனிவாஸன்

Published:Updated:
சின்ன கஜூராஹோ!
பிரீமியம் ஸ்டோரி
சின்ன கஜூராஹோ!

“ராஜஸ்தானில் நாக்டா எனும் கிராமத்தில் இருக்கிறது 'சாஸ் - பஹு’ எனப்படும் இரட்டைக் கோயில்கள். இது சற்றே விசித்திரமான, வித்தியாசமான பெயர். சாஸ் - பஹு என்றால் மாமியார் - மருமகள் என்று அர்த்தம். மாமியாரும் அவரின் மருமகளும் சேர்ந்து இந்தக் கோயில்களைக் கட்டினார்களா என்றால்... இல்லை! இரட்டைக் கோயில்களும் அடுத்தடுத்து இருப்பதால் மட்டுமே இப்படி அழைக்கிறார்கள். இதற்கு வேறு எந்தக் காரணமும் வரலாற்றில் பதிவாகவில்லை.

சின்ன கஜூராஹோ!

தோரணவாயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குக்கிராமமாக உள்ள நாக்டா, ஒரு காலத்தில் மேவார் ராணாக்களின் முன்னோர்களான குஹிய வம்சத்து மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. உதய்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, ஏக்லிங்ஜி ஆலயம். இந்த ஆலயத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்பாகவே பகேலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது, சாஸ் - பஹு கோயில்கள். கி.பி. 9-ம் நூற்றாண்டில் மேவார் சேனைத் தலைவனின் மனைவி யசோமதியால் இரு கோயில்கள் கட்டப்பட்டன என்றும், பிறகு அவை எதிரிகளால் அழிக்கப்பட்டன என்றும், அதே இடத்தில் 10-ம் நூற்றாண்டில் மகாபாலன் என்ற கச்சவா அரசன் மீண்டும் கோயில்களைக் கட்டினான் என்றும் வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. நாக்டாவைச் சுற்றி ஏராளமான கோயில்கள் இருந்தன வென்றும், அவற்றுள் பலவும் மத விரோத அரசர்களால் தகர்க்கப்பட்டன என்றும் தெரியவருகிறது. இதற்குச் சான்றாக இன்றைக்கும் நடுவில் உடைக்கப்பட்டும், கோபுரங்களை இழந்தும் பல கோயில்களைக் காணமுடிகின்றது.

எப்படியோ தப்பிப் பிழைத்த சாஸ் - பஹு இரண்டுமே விஷ்ணு ஆலயங்கள். திராவிடப் பாணிக் கோயில்களைப் போல் விண்ணை முட்டும் வியப்பூட்டும் கோபுரங்கள் இல்லை. தொல்பொருள் இலாகா சீராக அமைத்துள்ள கம்பி வேலிக்குள் கோயில்கள், தரை மட்டத்தில் இருந்து சற்று உயர்ந்த ஒரு முற்றத்தில் அருகருகே கட்டப்பட்டு உள்ளன. நான்கு தூண்டுகளோடு தனித்து நிற்கும் பெரிய மகாதோரண வாயில் வழியாகக் கோயில்களுக்குள் நுழைகிறோம். அளவில் பெரிய கோவில் சாஸ். எண் கோண வடிவில் கூரை உடையது பஹு. கருவறை, முகமண்டபம், வெளியில் இருந்து முகமண்டபத்துக்குப் போகும் தாழ்வாரம், மண்டபத் தூண்கள், பாதி உயரச் சுவர்கள், சுவரிலேயே சிறு சிறு பலகணிகள் முதலியன அடிப்படை அமைப்பிலுள்ள ஒற்றுமை. ஆனால், அங்குமிங்கும் செய்யப்பட்டுள்ள சிறு சிறு மாற்றங்கள், அலங்கார வேலைகள் இவற்றால் இரண்டும் வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கின்றன. கருவறையைச் சுற்றியுள்ள வெளிச் சுவர்களில் எந்த விதமான வேலைப்பாடுகளும் இல்லை. ஆனால், மண்டபச் சுவர்களிலும், தூண்களிலும், கருவறையின் உள்ளும், உட்கூரையிலும் எங்கு பார்த்தாலும் சிற்பங்கள். அந்தச் சிற்பங்களைப் பார்க்கும்போதுதான் சாஸ் - பஹு ஆலயங்களின் சிறப்பை உணர முடிகிறது. சாஸ் கோயிலையொட்டி 10 சின்னச் சின்ன சந்நிதிகள். கோயில்களுக்குள் மூலவரான மகாவிஷ்ணுவுக்கு உருவச் சிலையோ, வேறு சிலைகளோ காணப்படவில்லை. பெரிய கோயில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இரண்டு பெரிய மகா தோரணங்கள் உள்ளன.

சின்ன கஜூராஹோ!

சமண தீர்த்தங்கரர் சாந்திநாதர்

சாஸ் - பஹு கோயில்களில் நாம் காணும் சிற்பங்கள் பெரும்பாலும் திரிமூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவன், அரசவை, ராமாயணம், தசாவதாரச் சிற்பங்கள், சுந்தரிகள், நடன மங்கையர், வீரர்கள், மலர் வரிசைகள், யானை, விலங்கு வரிசைகள், நவமணிவரிசைகள் முதலியன. இங்குள்ள சிற்பங்களில் ஏராளமாகப் பாலுறவு அல்லது காம கலைச் சிற்பங்கள் காணப் படுகின்றன. எனவே சாஸ் - பஹு கோயில்கள், சின்ன கஜுராஹோ என்றும் அழைக்கப் படுகின்றன.

இங்கே தனிச் சிற்ப உருவங்கள் அல்லது முழுச் சிலைகள் இல்லை. அனைத்துமே சுவர்களிலும் தூண்களிலும் செதுக்கப்பட்ட குவிச் சிற்பங்கள்தான். விஷ்ணுவின் ஆலயத்தில் சிவனது வடிவங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று - நிற்கின்ற தனி சிவ வடிவம். மற்றொன்று சிவ - பார்வதி சிற்பம்.

அதிக உயரம் இல்லாத தனி சிவன் சற்றே கால்களைச் சாய்ந்த வண்ணம் நிற்கிறார். தலையில் கிரீடம். உடலில் ஆபரணங்கள். கழுத்தில் ஹாரம். முப்புரி, அரைஞாண், கைகளில் கங்கணம், ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் தானியக் கதிர் (மங்கலத்தைக் குறிப்பதாக இருக்கலாம்), காலடியில் இடப் பக்கம் சிவனை நிமிர்ந்து பார்க்கும் நந்தி, மறுபுறம் காலடியில் வழிபடும் மங்கை, தலைக்கு மேல் பெரிய மகாதோரணம்.

தமிழ் நாட்டில் சிவபெருமானோடு காணப் படும் பிறைச் சந்திரன், முடியில் கங்கை, பாம் புகள் போன்றவை எதுவுமில்லை.

மற்றொரு சிற்பம் விஷ்ணு. சங்கு, சக்கரம், கதாயுத பாணியாக, தலையில் கிரீடம், காதணிகள், கழுத்தில் வடம் பூண்டு பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம். இப்படி ராமன், பலராமன், பரசுராமன் மற்றும் பல தெய்வ சிற்பங்கள் நிறைந்து உள்ளன. சாஸ் கோயிலின் கருவறை நுழைவாயிலின் மேல் உத்தரத்திலும் இரண்டு பக்கங் களிலும் மேல் இருந்து கீழ் வரை சிற்பமயம்.

சின்ன கஜூராஹோ!

ஆலய சிற்ப வரிசை

நுழைவாயில் தூண்களில் சின்னஞ்சிறிய இடங்களிலும் ஆண்களும் பெண்களும் அழகுச் சிற்பங்களாக ஜொலிக்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சிற்பங்களின் அழகை வார்த்தைகளில் வர்ணிப்பது இயலாத காரியமே.

இந்த நாக்டாவின் கூப்பிடு தூரத்தி லேயே இருக்கிறது, அத்புத்ஜி மந்திர் எனப்படும் சமணக் கோயில். கறுப்பு பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட ஒன்பது அடி உயரம் உள்ள சாந்திநாதர் என்ற தீர்த்தங்கரரின் சிலையின் செய்நேர்த்தி பார்ப்பவரை சுண்டி இழுக்கக் கூடியது.

எத்தனை அழகு இருந்தாலும், பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஆட்கள் குறைவாகவே வருகிறார்களாம் பழைமையின் சிறப்பு மீது நம்மவர்களுக்கு இருக்கும் அலட்சியத்தின் வருந்தத்தக்க அடையாளம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism