“நமது வாழ்க்கையின் ஆதாரமும் நம்பிக்கையும் குழந்தைகள்தானே” எனப் புன்னகைபூக்கச் சொல்லும் யூமா வாசுகி, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் வடிவங்களில் தன் ஆளுமையை வலுவாக நிறுவியவர். இவருடைய படைப்புகளில் வெளிப்படும் அன்பும் கனிவும் வாசிப்பவரை நெகிழச் செய்யும். மலையாளத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறந்த சிறார் இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். குழந்தைகளின் நலன் சார்ந்தும், அவர்களின் படைப்பூக்கம் தொடர்பாகவும் தொடர்ந்து அக்கறையுடன் பணியாற்றிவருபவர். மழை கசிந்துகொண்டிருந்த மாலைப் பொழுதொன்றில் நிகழ்ந்த யூமா வாசுகியுடனான உரையாடலிலிருந்து…

“குழந்தைகளைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றாலும் சிறார் படைப்புகள் மீதான ஈர்ப்பு உங்களுக்கு எப்போது தொடங்கியது?”

“உலகின் ஆன்மக் களிப்பு குழந்தைகளால்தான் சாத்தியமாகிறது. நமது வாழ்க்கையின் ஆதாரமும் நம்பிக்கையும் குழந்தைகள்தான். குழந்தைமையில்தானே ஆகப் பெரிய தரிசனங்களையும் ஆன்மிகத்தையும் கண்டடைகிறோம்? எதிர்காலத்தின் சுடர் முகம் அவர்களல்லவா. நம் வாழ்க்கை அவர்களிடத்தில் கட்டுண்டு கிடக்கிறது; அவர்களாலேயே விடுபட்டுப் பறந்து பரவுகிறது. அவர்கள் பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்களாக நிலவுகிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு இதயம் தராதவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் குழந்தைகளை அணுகுவதில், கவித்துவத்தின் ஆதிக்கம் வெவ்வேறு வகையில் இருக்கிறது. எளிய மனிதர்கள் சாலையில் எதிர்ப்படும் அறிமுகமற்ற குழந்தைகளைக்கூடக் கனிந்து பார்த்து, வாஞ்சைப் புன்னகையொன்றை ஆசியளித்துப் போகிறார்கள். அன்னை வயலின் சேற்று ஈரத்துடனும் பசுங் கதிர்ப்பால் மணத்துடனும் ஒரு விவசாயப் பெண்மணி தன் குழந்தைகளைச் சீராட்டுவார். என்னால் இயன்ற வகையில் நான் இலக்கியத்தின் மூலம் குழந்தைகளை மகிமை செய்ய விரும்புகிறேன். அவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட முனைகிறேன். அவர்களிடம் சில விஷயங்களைக் கடத்திவிட முடியாதா என்று பிரயாசைகொள்கிறேன்.

“உங்களின் இளைய வயதில் சிறார் நூல்கள் வாசிக்கக் கிடைத்தனவா?”

“இளம் பருவத்தில் சிறார் இலக்கிய நூல்களை வெகுவாக வாசித்திருக்கிறேன். அதில் ஆர்வமுடைய சமவயதுக்காரர்களெல்லாம் ஒன்றுசேர்ந்தோம். ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் புத்தகங்கள் இருக்கும். படக்கதைகள், மாயாஜால நாவல்கள், துப்பறியும் கதைகள், சிறார் கதைப் புத்தகங்களெல்லாம் படித்தோம். ஒவ்வொருவரும் சில புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்போம். ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, அதற்கு மாற்றாக மற்றொரு புத்தகத்தை வாங்கிப் படிப்போம். முப்பத்து இரண்டு பக்க சிறார் நூலின் விலை அப்போது 50 பைசா. இப்போது பெட்டிக்கடைகளில் ஷாம்பூ பாக்கெட்டுகளைத் தொங்கவிட்டிருப்பதுபோல அந்தக் காலத்தில் பேருந்து நிலையக் கடைகளில் 50 பைசா நூல்களையெல்லாம் சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். நூறு, நூற்றைம்பது பக்க நூல்கள் ஐந்து ரூபாய் விலைக்குள்தான் இருக்கும். பாடப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் படிப்பதை வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். அப்படிப் படிப்பது கொடுஞ்செயலாகக் கருதப்பட்டது. அதனால் ஒளித்து மறைத்துப் படித்தோம். பள்ளி விட்ட பிறகு கடைகளுக்குச் சென்று அந்த நூல்களின் வண்ண அட்டைப் படங்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பதே பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அவற்றைப் படிப்பது, ஆழ்நிலையல்ல, படுபாதாள நிலை தியானமேதான். அப்போது பசி, தாகம் தெரியாது. என் இலக்கிய வாசிப்பும் எழுத்தும் இப்படித்தான் தொடங்கின.’’

``மலையாளத்திலிருந்து தமிழுக்கு சிறார் நூல்களை மொழிபெயர்ப்பதற்குப் பிரத்தியேகக் காரணம் உண்டா?”

“அமரர், குரு நித்ய சைதன்ய யதி கேரளத்துப் பேராளுமைகளுள் ஒருவர். தத்துவத்திலும் கலை இலக்கியங்களிலும் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஆர்வமும்கொண்ட துறவி. ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக அவர் ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய சிறார் நூல்தான் ‘இத்திரி காரியம்’ (சின்ன காரியம்). அவரது ஊட்டி ஆசிரமத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஜெயமோகன் மூலம் கிடைத்தது. நான் அந்தப் புத்தகத்தின் வடிவாக்கத்திலும் அதில் உள்ள சித்திரங்களிலும் மிகவும் கவரப்பட்டு, அந்த நூலை ஆசையுடன் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஜெயமோகன், “மலையாளம் கற்றுக்கொண்டு இதைப் படித்துப் பாருங்கள்” என்றார். அதுதான் தூண்டுதல். பிறகு பல நாள்கள் மலையாள எழுத்துகளை எழுதிப் பழகினேன். அந்த மொழியில் நுழைவதற்கு அதிலுள்ள எளிமையான இலக்கியங்கள் உதவக்கூடும் என்று தோன்றியது. எனவே, நான் மலையாளச் சிறார் இலக்கிய நூல்களைத் தட்டுத்தடுமாறிப் படிக்க ஆரம்பித்தேன். அங்குள்ள சிறார் இலக்கியச் சூழல் மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. மலையாள இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளான காரூர் நீலகண்டப்பிள்ளை, ஜி.சங்கரப்பிள்ளை, லலிதாம்பிகா அந்தர்ஜனம், பொன்குன்னம் வர்க்கி, உரூப் உள்ளிட்ட பலர் பெரியோர்களுக்காக எழுதும் எழுத்தாளர்களாக இருந்தாலும், குழந்தைகளுக்கான சிறந்த இலக்கியப் படைப்புகளையும் உருவாக்கி அளித்திருக்கிறார்கள்.

மலையாளச் சிறார் இலக்கியப் படைப்பாளி களான டி.மான் நம்பூதிரி, பிரசன்னன், ஜி.முல்லச்சேரி, சுமங்களா, வி.பி.முகமத், பன்மன ராமச்சந்திரன் நாயர், கே.வி.ராமநாதன், பேரா.சிவதாஸ், குஞ்ஞுண்ணிமாஷ் உள்ளிட்ட இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்டோர் தமது சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளால் அந்தத் துறையை வளப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு மொழியை அணுகுவதன் பகுதியாக நான் படித்த மலையாளச் சிறார் இலக்கியத்தின் நல்ல படைப்புகளைத் தமிழில் தரும்போது, அது இங்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று நம்பியும் விரும்பியும் அவற்றை மொழிபெயர்க்கிறேன்.

முன்பு சோவியத் சிறார் இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறேன். அவற்றைப் படைத்த எழுத்தாளர்களின் மனதோடு மனதாக ஒன்றி, பேரனுபவத்தைப் பெறக்கூடிய அமர இலக்கியங்கள் அவை. அவை எனக்குக் கொடுத்திருந்த அகமலர்ச்சியை நான் மலையாளச் சிறார் இலக்கியத்திலிருந்து மீட்டுக்கொண்டேன். அந்தச் சூழலுடன் நம் தற்போதைய சூழலை ஒப்பிடுகையில் இங்கே கடும் வறட்சியும் மெத்தனமும் பாராமுகமும் அறியாமையும் நிலவுகின்றன.

தமிழ்ச் சிறார் இலக்கியமும் ஒரு காலத்தில் ஓங்கியிருந்ததுதான். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பான காலம் அது. அப்போது குழந்தைகளுக்காக பாலியர் நேசன், பாலவிநோதினி, பாலதீபிகை, பாலியர் சஞ்சாரி, பாரிஜாதம், பாலர் பூங்கா, பாலர் முரசு, பாப்பா மலர், அணில் உள்ளிட்ட ஏராளமான சிறார் பத்திரிகைகள் சிறந்த தரத்துடன் வந்து, விற்பனையிலும் சாதனை படைத்திருக்கின்றன. அவற்றில் சில பத்திரிகைகள் 25,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருப்பதாக சுகுமாரன் தன் ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

1950-ம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா இதை நிறுவினார். தன் சக்தி காரியாலயத்தின் மூலம் தமிழ்ப் பதிப்புலகில் பெரும் புரட்சி செய்த சக்தி வை.கோவிந்தன் இதன் முதல் தலைவர். அதன் பிறகு அழ.வள்ளியப்பா சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். குழந்தைகளுக்கான புத்தகம் வெளியிடல், மாநாடு நடத்துவது, நாடக விழாக்கள் நடத்துவது என்பதாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறார் இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்பட்டது. இந்தக் காலகட்டத்தைத்தான் `சிறார் இலக்கியத்தின் வளமான பகுதி’ என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுவிட்டது. மக்கள், இலக்கியவாதிகள், ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகைகள், பதிப்பகத்தார்கள், பெற்றோர்களிடமெல்லாம் சிறார் இலக்கியம் குறித்த பிரக்ஞை முற்றிலும் இல்லாதுபோய் விட்டது. இது நமது மிகப் பெரிய சாபமாகும். நமக்கு நாமே கல்லறையாவதற்கு ஒப்பாகும்.

தற்காலத்தில், சிறார் இலக்கியத்தில் சிம்மாசனங்கள் காலியாகக் கிடக்கின்றன என்று சிலர் கண்டுகொண்டார்கள். பெரியவர்கள் இலக்கியத்தில் போய்ப் பெயர் வாங்குவதைவிட சிறார் இலக்கியத்தில் வாள் சுழற்றுவது எளிது. ஏனென்றால், அங்கே ஆட்கள் இல்லை என்று அவர்கள் தவறாகக் கணித்து சிம்மாசனத்தைக் கைப்பற்ற மிகப்பெரிய பிரயத்தனங்கள் செய்கிறார்கள். அவர்களில் பலரின் நோக்கம் ஆதாயம்தான். சிறார் எழுத்துக்கான மனநிலையோ, அர்ப்பணிப்போ அவர்களிடத்தில் இல்லை. குழந்தைகளின் அறிவையும் ரசனையையும் குறைவாக மதிப்பிட்டு, வறண்ட கற்பனைகளையே தப்பும் தவறுமாக எழுதிவைக்கிறார்கள். `நீங்கள் இருக்குமிடத்திலிருந்து துள்ளித் துள்ளிக் குதித்து, பறப்பதாக நினைத்துக்கொள்ளாதீர்கள், பறவையாகவே மாறுங்கள்’ என்று நான் அன்புடன் வேண்டுகிறேன். எனவே, இந்தச் சூழலில், மலையாளச் சிறார் இலக்கியத்தின் சில முக்கியமான நூல்களை முன்மாதிரியாகக் காட்டவும், தமிழ்ச் சிறார்களின் வாசிப்புக்காகவும் நான் மொழிபெயர்த்துவருகிறேன்."

"சிறுவர்களுக்காக எழுதுபவர்கள் என்ன மாதிரியான முயற்சிகளைக் கையாள வேண்டும்?"

"சிறார் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள் நமக்கு நிறைய நிறைய தேவைப்படுகின்றன. அந்த வகையில் நான் மலையாளச் சிறார் படைப்பாளர் பேரா. சிவதாஸ் எழுதிய ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு’ எனும் நூலை முக்கியமாகக் குறிப்பிடுவேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. அந்த நூலில் சிறார்மீதான பேரன்பும் எழுத்தின் கவித்துவமும் பிணைந்திருக்கின்றன. ‘நான் மண்ணில் நிறைய உழைத்துவிட்டேன். எனக்கு ஓய்வு தேவை. ஆகவே, எனக்கு ஓய்வூதியம் கொடுங்கள்’ என்று கேட்டு ஒரு மண்புழு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறது. மண்புழுவுக்கு ஆதரவாகவும் எதிராவும் நீண்ட நாள்கள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் சமூகத்தில் பல்வேறு நிலையிலுள்ளவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த சுவாரஸ்யமான விவாதங்கள் வழியாக சிவதாஸ் குழந்தைகளின் மனதைப் பூவால் வருடுவதுபோன்று வருடி, மண்புழு பற்றிய விஷயங்களை ஆழப் பதித்துவிடுகிறார். இதுபோன்ற படைப்பு முயற்சிகள் தமிழில் மிக மிகக் குறைவு. நல்ல மாற்றம், சிறார்க்கான நல்ல கலை இலக்கியத்திலிருந்து ஆரம்பிக்கும் என்பது என் நம்பிக்கை. சகலமும் சித்தித்த பேராகிருதியாக மனிதனை அது சாத்தியமாக்கும். இளம்பிராய சிறார் இலக்கிய வாசிப்பு, வளரும் பருவத்திலெல்லாம் இந்த உலகத்தின் அற்புதங்களை இனங்கண்டு தோய்ந்துபோக, பேரரிய நுண் அழகுகளை அறிந்து ஆழ்ந்துபோக, அதி உன்னதமானதொரு பார்வையை வழங்குகிறது. சிறாரின் தொடர்ந்த நூல் நட்பு அறிவை விரிவு செய்கிறது, மனதை எல்லையற்று விரிக்கிறது. கற்பனைக்குச் சிறகுகளையும் வானத்தையும் சமைக்கிறது. புதிய உருவாக்கங்களுக்கான முனைப்பை ஏற்படுத்துகிறது. இயற்கைமீதும் மனிதர்களின் மீதும் கனிந்த உறவை உருவாக்குகிறது."

``சிறார் இலக்கியப் படைப்புகளுக்கான வரையறைகள் என்னென்ன?’’

``நல்ல சிறார் இலக்கியங்களைப் பெரியவர்களும் விரும்பிப் படிக்கிறார்கள். அதுபோன்று, பெரியவர்களுக்கான நல்ல இலக்கியப் படைப்புகளையெல்லாம் நாம் சிறார்களிடத்திலும் கொண்டுசெல்ல முடியும். 100 பக்கங்கள் கொண்ட ஒரு நல்ல நாவலை சிறார்க்காகத் தழுவி, அதன் சாராம்சம் சிதையாமல் கடத்துவது என்பது மிகப் பொறுப்பும் திறமையும் தேவைப்படும் பணி. `கலிவரின் பயணங்கள்’ உண்மையில் பெரியவர்களுக்கானது. அதன் சில பகுதிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பிரசுரித்து அது சிறுவர் நாவல் என்றே ஆகிவிட்டது. அந்தக் காலகட்டச் சூழலைக் கடுமையாக விமர்சிக்கும் நாவல் அது. அதன் சில காட்சிகளை ‘நாசூக்காக’ அல்லது ‘சாமர்த்தியமாக’க் குறிப்பிட்டுக் கடந்தால் அல்லது தவிர்க்க நேர்ந்த பகுதிகளைப் பள்ளம் தெரியாமல் நிரவி முழு நாவலையுமே சிறார்க்காகத் தழுவிச் செய்யலாம். அந்த நாசூக்கு அல்லது சாமர்த்தியத்தை எப்படிக் கையாள்வது என்பது, அதைச் செய்பவரின் நுண்ணுணர்வையும் கலைத் தேர்ச்சியையும் மொழி ஆளுமையையும் பொறுத்தது. ஆங்கிலத்தில் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. மார்க்வெஸ் எழுதிய ‘சிறகுகளுடைய முதியவர்’ பற்றிய கதையைச் சிறார் கதை வடிவில் மலையாளச் சிறார் இதழில் படித்தேன். குழந்தைகளுக்கு மரணத்தைப் புரியவைப்பதற்காக பேரா.சிவதாஸ் ‘உமாக்குட்டியின் அம்மாயி’ என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். குரு நித்ய சைதன்ய யதி, `மரணம் என்றால் என்ன?’ என்று கேட்ட குழந்தைக்கு தான் சொன்ன பதிலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சிறார்க்கு எதுவும் அந்நியமல்ல. அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுப்பதில் உள்ள சவால்களைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் சிறார்க்காக எழுத வேண்டும் என்பதோடு, எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைச் சிறார்களிடத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம்தானே.’’

``சிறார் இலக்கியம் வகைபிரித்து எழுதப்பட வேண்டும் என்பதைப் பற்றி...’’

``அது நம் வசதிக்காகப் பிரித்துக்கொள்வது. அந்த வகைபிரித்தலின் எல்லைகள் மிக மிக பலவீனமானவை. சில பயன்பாடுகளுக்காக மேற்தளத்தில் நாம் சில வரையறைக் கோடுகளைப் போட்டுக்கொண்டாலும் கீழே எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்துகிடக்கின்றன. சிறார் இலக்கியத்தின் அடிப்படையாக நான் நினைப்பது கவித்துவமும் எளிமையும்தான். இவற்றின் தீவிர செல்வாக்கு பெரியவர்களுக்கான இலக்கியத்திலும் உண்டு. ஆயினும், சிறார் இலக்கியத்தில் இவை தவிர்க்க முடியாத முக்கியத்துவம் பெறுகின்றன. நான்காம் வகுப்புச் சிறுமி படிக்கும் ஒரு நல்ல கதையை 40 வயதுடையவரும் ரசிக்கிறார். குழந்தைகள் அனுபவிக்கும் ஒரு நல்ல கதை, கடைசி வரை அவர்களை விட்டுப் பிரியாதிருக்கும். ‘குட்டி இளவரசன்’ நாவலை சிறாரும் படிக்கலாம், பெரியவர்களும் படிக்கலாம். பருவத்தின் காரணமாக சில நேரங்களில் அதிலிருந்து கிடைக்கும் பார்வை வேறுபடக்கூடும். கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ எந்த மாற்றமும் இல்லாமல் சிறார் புத்தகமாக வந்திருக்கிறது.’’

“உங்கள் கவிதையில் மீனா எனும் சிறுமியைப் பற்றிய கவிதை புகழ்பெற்றது. அது உருவான சூழல் பற்றி…”

``மீனா கவிதை உண்மையில் நடந்ததுதான். மீனா எனும் சின்னஞ்சிறுமியை வளர்க்க முடியாமல் அவள் தாய், தந்தை ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். ஒருநாள் இரவு அவள் கேட்டுக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். வீட்டுக்காரர்கள் திட்டியிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. வீட்டு வேலைகளைத் தவிர ஸ்கூட்டர் துடைப்பது, பெரிய தார்ப்பாயை இழுத்து அதை மூடுவது, குடம் குடமாகத் தண்ணீர் சுமந்து வருவது போன்று, அவள் வயதுக்கும் உருவத்துக்கும் பொருத்தமற்ற நிறைய வேலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. நான் அவளைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். நான் ஒன்றிரண்டு வார்த்தை பேசினாலும், அவள் பேசப் பயப்படுவாள். வேறு யாருடனும் பேசக் கூடாது என்று அவள் எச்சரிக்கப்பட்டிருக்கலாம். சில நாள்களாக அவளைப் பார்க்க முடியவில்லையே என்று விசாரித்தபோதுதான் அவள் அங்கிருந்து போய்விட்டாள் என்று தெரிந்தது. இதற்குப் பிறகு பல நாள்கள் கழித்து அந்தக் கவிதையை எழுதினேன். அந்த நிராதரவான சிறுமிக்கான எளிய மனிதன் ஒருவனின் பிரார்த்தனைதான் அந்தக் கவிதை.”

“சிறார்க்காக நீங்கள் மொழிபெயர்த்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படைப்புகள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?”

``நான் மொழிபெயர்த்த எல்லாப் புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்தவைதான். ரஷ்ய நாடகாசிரியர் என்.துபொவ், குழந்தைகளின்மீது ஆர்வம்கொண்டு சிறார் இலக்கியத் துறைக்கு வந்தார். இவர் எழுதிய சிறார் நாவல்களில் ‘நதியிலே விளக்குகள்’ ‘கடலோரத்தில் ஒரு சிறுவன்’ ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். `கடலோரத்தில் ஒரு சிறுவன்’ என்பது, ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்துக்கு இடம்பெயரும் ஒரு மீனவச் சிறுவனைப் பற்றிய கதை. குழந்தைகளின் பாற்பட்ட எழுத்தாளருடைய மாசற்ற பரிவின் கண்ணீர் வெம்மையை இதில் நாம் உணர முடியும். கப்பல் போக்குவரத்து நடக்கும் நதியின் மண்திட்டுகளில் இரவில் அரிக்கேன் விளக்கு ஏற்றிவைப்பது அந்தக் காலத்து வழக்கம். விளக்கு அடையாளம் இல்லையென்றால், இரவில் கப்பல் பாதை விலகி திட்டில் கரைதட்டி நின்றுவிடக்கூடும். ஒரு சிறுவன் விடுமுறைக் காலத்தில், தீவில் இருக்கும் தன் மாமா வீட்டுக்கு வருவான். அவர் மணல் திட்டுக் கம்புகளில் விளக்குகள் தொங்கவிடும் பணி செய்பவர். இவனும் அவ்வப்போது மாமாவுடன் விளக்கு தொங்கவிடச் செல்வதுண்டு. ஒருநாள் இரவில் வீசிய பலத்த காற்றில் ஓர் இடத்தில் வைத்த விளக்கு, கம்புடன் சாய்ந்து அணைந்துவிடுகிறது. இதை மாமா அறிந்துகொள்கிறார். கப்பல் வரும் நேரம். மாமாவும் அவனும் உடனடியாகப் படகில் ஏறி அந்த இடத்துக்குச் செல்கிறார்கள். கடுமையாகப் போராடி, கப்பல் வருவதற்குள் அந்த இடத்தில் விளக்கேற்றிவிடுவார்கள். கப்பல் அருகே வரும்போது, கேப்டனிடம் மாமா கம்பீரமாகச் சொல்வார்: “ஒன்றும் பிரச்னை இல்லை. நீங்கள் போகலாம்!” கப்பல் சென்ற பிறகு மருமகனிடம், “நாம் மிகப்பெரிய வேலை செய்திருக்கிறோம். இதைக் கொண்டாடுவதற்கு நமக்குத் தகுதி உண்டு!” என்று சொல்வார். கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும். அருமையான கதை!”

“தமிழகச் சூழலில் சிறார் இலக்கியம் வளம்பெற வேண்டுமெனில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?”

``பெரியவர்களுக்கான இலக்கியத்தில் நடக்கும் அத்தனை தீவிர முயற்சிகளும் சிறார் இலக்கியத்திலும் நடக்க வேண்டும். சிறார் கலை இலக்கியங்களில் பரிசோதனை முயற்சிகள் வேண்டும். அரசுக்கு இது குறித்து தொடர்ந்த அக்கறை இருந்தால், மாற்றங்கள் விரைவாக நடக்கும். அதற்கான அடையாளமும் சமீப காலத்தில் தெரிகிறது. வர்த்தகச் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு, குழந்தைகளுக்கான மிகச் சிறந்த படைப்புகளை மட்டுமே தாங்கிவரும் சிறார் பத்திரிகைகள் நமக்கு நிறைய தேவைப் படுகின்றன. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணனைப் போன்று பெரியவர்களுக்கான எழுத்தாளர்கள் அனைவரும் சிறார் இலக்கியத்திலும் பங்களிக்க வேண்டும். அதிகம் ஏன், ஐம்பதுகளின் குழந்தை எழுத்தாளர் சங்கச் செயல்பாடுகளைப் பின்தொடர்ந்தாலே போதுமானது. கேரளத்தில் ‘பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்’ எனும் பெரியதொரு அரசு நிறுவனம் இருக்கிறது. இது குழந்தைகளுக்கான மலையாளப் படைப்புகளையும், உலகச் சிறார் இலக்கியங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தும் மிகச் சிறந்த தயாரிப்பு நேர்த்தியுடன் வெளியிடுகிறது. சிறார் இலக்கியத்துக்கான இதுபோன்ற அரசு அமைப்பு நமக்கு சாத்தியமாகாதா? சி.சு.செல்லப்பா, க.நா.சு., வை.கோவிந்தன் போன்றோரின் இடையறா தனிநபர் செயல்பாடுகள் காலத்தின் போக்கில் ஏற்படுத்திய தாக்கங்களும் விளைவுகளும் மிகவும் முக்கியமானவை. அவ்வகையில், ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களின் தொடர்ந்த முயற்சிகளும் மாற்றத்துக்கான பெருஞ்சக்தியாக இருக்கின்றன.”