மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், சாதிய ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்காரர்களும் கண்ணியத்தோடு அணுகும், மதிக்கும் மாண்புமிகு மனிதர். ஒரு மாலைப்பொழுதில் அவருடன் உரையாடினோம்...

``தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலை, தமிழக ஆட்சி நிர்வாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஏற்படாத துயரமான அரசியல்நிலை, தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆளும்கட்சியினுடைய அரசியல்நிலை, மத்திய ஆட்சியினுடைய சூழ்ச்சி என எல்லாமும் சேர்ந்து நெருக்கடியான, சோதனையான காலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கையான வறட்சி ஒரு பக்கம் மக்களை வாட்டுகிறது; மாநில சர்க்காரும் மத்திய சர்க்காரும் அதில் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காததால் ஏற்பட்ட செயற்கையான வறட்சி, மற்றொருபக்கம் மக்களை நெருக்குகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில், தமிழகத்தின் செல்வாக்கை மத்திய அரசிடம் பயன்படுத்த முடியவில்லை; உரிமைகளைக் கேட்டு வாங்க முடியவில்லை. மத்திய அரசும் சரியான முறையில் நமக்குள்ள உரிமைகளை வழங்குவதில்லை. மாறாக, இங்கிருக்கும் அதிகாரத்தைப் பங்கு போடவும், புறவாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றுவதிலும்தான் அக்கறை காட்டுகிறது. அதைத் தடுத்து, மாநிலத்தின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் தமிழகத்துக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கும் உரிய நிதியைப் பெற்றுத் தருவதற்கும் தகுதியான ஆட்சி நம் மாநிலத்தில் இப்போது இல்லை. ஒருவேளை இங்கே ஆட்சி நல்லமுறையில் இருந்து, மத்திய அரசு புறக்கணித்தாலும், மக்களைத் திரட்டிப் போராடி உரிமைகளைப் பெறலாம்; அப்படிப்பட்ட சூழ்நிலையும் இங்கே இல்லை. ஆட்சிதான் உறுதியாக இல்லை... சரி, நிர்வாகத்திறன் இருக்கிறதா என்றால், அதுவுமில்லை. அது இருந்தால், அதை வைத்து உரிமைகளைப் பெற்று, மாநிலத்தைக் காக்கலாம். அதுவும் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.’’

``இயற்கை வறட்சி என்பது சரி... செயற்கை வறட்சி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?’’

`` `140 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பஞ்சத்தில் ஏற்பட்டதைப்போன்ற பாதிப்புகளை மாநிலம் சந்தித்துள்ளது' எனத் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசு சொல்லும் 140 ஆண்டு களுக்கு முந்தைய பஞ்சம் என்பது, தாது வருஷப் பஞ்சம். அப்போது குடிக்கத் தண்ணீரும் இருக்காது; உணவும் இருக்காது. மக்களின் வாழ்க்கையே மிகக் கடினமாக இருந்த கொடுமையான பஞ்சம் அது. அந்தத் தாது வருஷப் பஞ்சத்தின் நிலைதான் இன்று இருக்கிறது என அரசாங்கம் சொல்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் கிடைக்கிற தண்ணீரைச் சேமித்துவைக்கிற நீர் நிலைகள் அதிகம். ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவிதங்களில் சேமித்துவைக்கும் பழக்கம் நம்முடைய மூதாதையர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது அவையெல்லாம் வறண்டுவிட்டன. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் விவசாயம் முறையாக நடக்கவில்லை. காவிரி இதுவரை இவ்வளவு மோசமாக வறண்டது கிடையாது. மற்ற ஆறுகளும் வறண்டு விட்டன. குளங்கள் வறண்டுவிட்டன. ஓடை களும் இல்லை. நிலத்தடி நீரும் இல்லை.

தமிழ் நாட்டில் ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை என்றாலும், நிலத்தடி நீர் இருக்கும். இப்போது அதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், செம்பரம்பாக்கமும் புழலும் வறண்டுவிட்டன. கடைசியில் பாறையை உடைத்து, அதில் தேங்கியிருக்கும் தண்ணீரைத் தான் எடுத்து விநியோகித்துக்கொண்டிருந்தோம். இப்போது அதுவும் இல்லை. இவை எல்லாம் இயற்கையான வறட்சி. செயற்கையான வறட்சி என்பது, 27 ஆண்டு களாகப் போராடிப் பெற்ற காவிரி உரிமையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானது. அதில் `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பு வந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அது மத்திய அரசின் கெஸட்டிலும் பதிப்பிக்கப் பட்டுவிட்டது. அப்படிச் செய்து விட்டால், அது நிறைவேற்றப்படக்கூடிய ஒன்று. அதை சுப்ரீம் கோர்ட்டிலும் போய் உறுதி செய்தாகிவிட்டது. ஆனால், இன்னும் காவிரியிலிருந்து தண்ணீர் வந்தபாடில்லை. சட்டப்படியான தண்ணீரை விட்டாலே, காவிரி டெல்டாவில் ஒழுங்காக விளையும். அதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் வந்தால், ரெண்டு பக்கமும் நிலத்தடி நீர் உயரும். ஆனால், அந்தக் காவிரி வறண்டு கிடக்கிறது. இந்த நேரத்தில்கூட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதனால், ஏற்பட்ட பாதிப்புகள்தான் செயற்கையான பஞ்சம். இந்தச் செயற்கையான பஞ்சத்துக்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு!’’

``மக்கள் போராட்டங்களைச் செறிவாக நடத்தும் இடதுசாரிகள் இன்னும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கவில்லையே?’’

``மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கிறோம். போராடும் கட்சியாக அவர்கள் எங்களுக்கு இடம்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மற்ற பல காரணங்களால் அதிகாரத்துக்கு வர முடியவில்லை. எங்களிடம் வலுவான கொள்கை இருக்கிறது. அதனால், தேர்தல் நேரங்களில்கூட பல விஷயங்களில் எங்களால் சமரசம் செய்ய முடியாது. உதாரணமாகச் சொன்னால், விவசாயக் கூலித் தொழிலாளர் போராட்டங் களை தீவிரமாக முன்னெடுத்தோம். அதில் நாங்கள் சமரசமே செய்துகொள்ளவில்லை. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கக் கூடியவர்களில் பெரும்பான்மை மக்கள் யார்? தலித்துகள். நாங்கள் அவர்கள் பக்கம் நின்றதால், ஆதிக்கச் சாதிகளிடம் இருந்து நாங்கள் விலக்கி வைக்கப்படும் சூழல் உருவானது. அவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாங்கள் போட்டி யிட்டால், `இவன் நம்ம சாதிக்காரன் இல்லை' என்றோ, `நம் சாதிக்கு எதிரான கட்சிக்காரன்' என்றோ சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இப்படிப்பட்ட சமரசங்கள் இல்லாதபோக்கு, தேர்தல் அரசியலில் எங்களுக்குக் கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.’’

``சமரசம் செய்துகொள்ளாத இந்தத் தன்மை முதல் பொதுத் தேர்தலிலும் கம்யூனிஸ்டுகளிடம் இருந்தது. அப்போது உங்களுக்கு மக்கள் அந்த வாய்ப்பைக் கொடுத்தார்களே... அதன் பிறகு ஏன் அதுபோன்ற ஒரு வாய்ப்பை நெருங்கக்கூட முடியவில்லை?’’

``நீங்கள் தமிழ்நாட்டுச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். 52-ம் ஆண்டு பொதுத் தேர்தல் சென்னை மாகாணத்துக்கு நடந்தது. அதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளும் இருந்தன. அந்தத் தேர்தலில் முக்கியமான கட்சியாகக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. `வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற குடியரசின் அரசியல் சட்டப்படி, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பான்மை இடங்களை இடதுசாரிகள் பெற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில்தான் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைவதாக இருந்தது. சுதந்திரம் பெற்று முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அப்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜியை அழைத்துவந்து பிரதமராக (அப்போது முதலமைச்சர் பதவி கிடையாது. பிரதமர் பதவிதான் இருந்தது) ஆக்கினார் அன்றைய கவர்னர். அதுவும் ஐக்கிய முன்னணியை ஆதரித்த உழைப்பாளர் கட்சியையே உடைத்து, அவர்கள் ஆதரவோடு ராஜாஜி பிரதமரானார். முதல் தேர்தலிலேயே குதிரை பேரத்தை நடத்தி, தவறான அரசியல் முன்னுதாரணத்தை ராஜாஜி ஏற்படுத்தினார். அதன்பிறகு, அந்தத் தோல்வியையும் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கையும் அறிந்த காங்கிரஸ் கட்சி, இனி இவர்கள் வரவே கூடாது என்று பல நெருக்கடிகளைக் கொடுத்தது. அடுத்த பொதுத் தேர்தல் வந்தபோது, தி.மு.க தலையெடுத்தது. அவர்கள் தீயைப்போல் பரவிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். அது எல்லாப் பகுதி மக்களையும் ஈர்க்கக்கூடிய போராட்டமாக மாறியது. அதில் எங்களுக்குக் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு தி.மு.க, அ.தி.மு.க வலுவான கட்சிகளாக வளர்ந்துவிட்டன. அதனால், எங்களால் அதிகாரத்துக்கு வர முடியவில்லை.’’

``அதிகாரத்துக்கு வரவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பணிகளில் குறிப்பிடத்தகுந்த பணிகளாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?’’

``நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு நலச் சட்டங்கள் நாங்கள் முன்மொழிந்து, எங்கள் போராட்டங்களால் நிறைவேற்றப்பட்டவைதான். அதற்கு உதாரண மாகப் பல சட்டங்களைச் சொல்லலாம். குறிப்பாக, பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம். அதற்கு முன்பாக, ஒரு வீட்டில் ஒருவர் பண்ணையாளாகச் சேர்ந்துவிட்டால், அவருக்கு எந்தக் கூலியும் இல்லாமல் அவர் வாழ்க்கை முழுவதும் அந்த வீட்டில் உழைக்க வேண்டும். மிகக் கொடுமையான Attached labour-ஆக அந்தப் பண்ணையாள் இருப்பார். நாங்கள் அதை எதிர்த்து, லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடினோம். அந்தப் போராட்டத்தின் காரணமாகப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்தது. அதன் பிறகுதான், `யாரையும் கட்டாயப்படுத்தி வீட்டில் வேலைக்கு வைக்கக் கூடாது; வீட்டில் வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கு நிரந்தரக் கூலி கொடுக்க வேண்டும்; அவர் விரும்பினால் வேலை செய்யலாம். விரும்பாதபோது, வேலையை விட்டுவிடலாம்' என அந்தச் சட்டம் உறுதிப்படுத்தியது. பிறகு, சவுக்கடி, சாணிப்பால் கொடுமையை எதிர்த்து, ‘சவுக்கால் அடித்தால், திருப்பி அடிப்போம்’ என்று சொல்லி, மக்களைத் திரட்டிப் போராடி வெற்றி பெற்றோம். அப்போது சுதந்திரம் பெற வில்லை. சட்டம் கிடையாது. அப்படி இருக்கும் போதே நாங்கள்தான் வெற்றி பெற்றோம். இதெல்லாம் எங்களுக்குப் பெருமைதான்.’’

``சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய உங்கள் கட்சியிலும் மேல் மட்டப் பதவிகளுக்கு தலித்துகள் வர முடியவில்லை என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?’’

``எங்கள் தேசியச் செயற்குழுவில் மேல் பதவிகளில் எப்போதும் தலித்துகள் இருந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் அதை வெளியில் சொல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பொதுத் தொகுதிகளில் தலித்துகளைப் போட்டியிடவைத்து வெற்றிபெறச் செய்வது கம்யூனிஸ்டுகள்தான். அந்தத் துணிச்சல் எங்களுக்குத்தான் உண்டு. 450 பஞ்சாயத்து ஒன்றியங்களில், முதலில் நடைபெற்ற தேர்தலில், கோட்டூரில் வெற்றிபெற்ற ஒரே தலித் பஞ்சாயத்துத் தலைவரும் எங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டவர்தான்.’’

``நீங்கள் கம்யூனிஸ்ட்டாக மாறியது எப்போது?’’

``நான் சிறு வயதில் தீவிரமான காங்கிரஸ்காரன். என் ஊர் ஸ்ரீவைகுண்டம். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருந்த தூத்துக்குடி, அரசியல் விழிப்பு உணர்வு மிக்க ஊராகத் திகழ்ந்தது. அங்கு நடக்கும் போராட்டங்களின் வீச்சு, எங்கள் ஊரிலும் இருக்கும். அதற்குக் காரணம் வ.உ.சி போன்றவர்கள். அவருடைய போராட்டங்கள் எல்லாம் எங்களுக்கு ஆதர்சமாக இருந்தன. மாணவராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சிப் போராட்டங்கள், கூட்டங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். 1937 பொதுத் தேர்தலில் காங்கிரஸின் சின்னம், மஞ்சள் பெட்டி. அப்போது ‘மங்கலகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்’ என்று கோஷம் போட்டுக்கொண்டு போவேன். அதன் பிறகு `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டேன். அதுபோல ஐ.என்.ஏ போராட்டத்தில் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, ஸ்டிரைக் நடத்தினோம். அதன் பிறகு, 1943, 44-களில் கம்யூனிஸ்டுகளின் பணிகள் தீவிரமடைந்தன. அது தொடர்பான நூல்களைப் படித்தது, பிரசுரங்கள் வாசிப்பது, சோவியத் யூனியனின் பெருமை, இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனின் செஞ்சேனை ஹிட்லரை வீழ்த்தியது, நம் நாட்டின் விடுதலைப் போராட்டம், பாரதி, ஜீவானந்தம்... இந்த வீச்சுகள் எல்லாம் என்னைக் கம்யூனிஸ்ட்டாக்கியன. அப்போது எனக்கு வயது 18. எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, நெல்லை இந்துக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தேன். ஆனால், அப்போதே நான் கட்சி வேலைதான் அதிகம் பார்த்தேன். அதனால், படிப்பை முடிக்க முடியவில்லை. விவசாயிகள் இயக்கத்துக்கு வந்துவிட்டேன்.’’

``கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளான ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் பற்றிய உங்கள் நினைவுகள்...’’

``ஜீவானந்தத்தின் வாழ்க்கை வரலாறு எல்லோருக்குமானது. பொது வாழ்க்கைக்கு வர நினைப்பவர்களுக்கு ஜீவானந்தத்தின் வாழ்க்கை ஒரு பாடம். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தமிழகத்தின் பொதுவான அரசியல், சமூகம், மொழி, சுயமரியாதை இயக்கம் என அத்தனைக்கு மான பிம்பமாக ஜீவானந்தம் திகழ்ந்தார்; திகழ்கிறார். அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபோது, காந்தி `ஹரிஜன்' பத்திரிகையில் வருணாசிரமம் பற்றி ஒரு கட்டுரையை எழுதி யிருந்தார். அந்தக் கட்டுரை பற்றி காந்தியிடம் ஜீவா ஒரு கேள்வி கேட்டிருந்தார். ‘பிராமணன் தவறு செய்தால், அவன் பிராமணனாக இருக்க முடியுமா?’ என்பது கேள்வி. அந்தக் கேள்வி, காந்தியை உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால், அவர் காரைக்குடிக்கு வந்தபோது, ஜீவா பெயரைச் சொல்லி `அவரைப் பார்க்கணுமே' எனச் சொல்லியிருக்கிறார். அருகில் இருந்த ராஜாஜி, ‘வரச் சொன்னால் வந்துவிடுவார்’ எனச் சொல்ல, அதை மறுத்த காந்தி, ‘வரச் சொல்லிச் சந்திக்க வேண்டாம். நானே போய்ச் சந்திக்க வேண்டும்’ என்று சொல்லி, ஜீவாவைப் போய்ப் பார்த்தார். அப்போதுதான் காந்தி, `நீதான் இந்தியாவின் சொத்து' என ஜீவானந்தத்தைக் குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவம் நடந்தது. ஜீவானந்தம் குற்றாலத்துக்கு வருவார். அவர் வந்திருப்பது தெரிந்தால், நான் எங்கள் ஊரிலிருந்து கிளம்பிப் போய் அவருடன் பேசிக்கொண்டே இருப்பேன். அவரைப் பார்க்க பெரிய தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம், `தம்பி ரொம்பக் கெட்டிக்காரன். அரசியல்ல ஆர்வமா இருக்கான். நிறைய பொஸ்தகம்லாம் படிக்கான்' என என்னை அறிமுகப்படுத்துவார். அவரைப் பார்க்க வருகிறவர்கள் விரும்பி ஏதாவது கொடுக்க ஆசைப்படுவார்கள். அவர்களிடம் `பணம் எல்லாம் வேண்டாம்... ஏதாவது பொஸ்தகத்தைக் கொடு' என்பார். சிறியவர், பெரியவர் என்று பார்க்காமல் அப்படிப் பெருந்தன்மையோடு நேசிக்கக்கூடியவர். தலைமைக்குள்ள எல்லாப் பண்புகளும் நிறைந்தவர் ஜீவானந்தம்.

சீனிவாச ராவ்வும் அவரைப்போலத்தான். அவரும் சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சி அந்நியத் துணிகளை பகிஷ்காரம் செய்யும் போராட்டத்தை அறிவித்திருந்தது. லண்டன் மில் துணிகளைப் பூக்கடை பஜார் அருகில் எரித்த போது, போலீஸ் கடுமையான தாக்குதலை நடத்தியது. அதில் அடி வாங்கி மயங்கிய சீனிவாச ராவ்வை, செத்துப்போய்விட்டதாக நினைத்து அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டது போலீஸ். அதன்பிறகு, பக்கத்தில் இருந்த வீட்டுக்காரர்கள்தான் அவரைக் காப்பாற்றி அனுப்பிவைத்தனர். நில உச்ச வரம்புச் சட்டப் போராட்டத்துக்காக அவர் சங்கரன்கோவில் வந்தபோது, அவர் கூடவே நான் இருந்தேன். அது 1963-ம் வருடம். அப்போது அவர் தலைமையில் நடந்த மறியல் போராட்டத் தில் நானும் கைதானேன். போராட்டமே அவர் வாழ்க்கை.’’

``நெல்லை சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த அனுபவங்கள் எப்படி இருந்தன?’’

``1947, ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு விடுதலை அடைந்தது. 1948, ஜனவரி 30-ம் தேதி காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி அமைந்து, நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பல மாகாணங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. காங்கிரஸ் அரசாங்கத்தோடு மன்னர்கள் இணைந்தனர். ஆனால், பல மாகாணங்களில் மக்கள் அதை ஏற்கவில்லை. ஹைதராபாத் நிஜாம் இணைந்ததை எதிர்த்து தெலுங்கானா மக்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். அப்போது கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் அகிலம் கூடியது. அதில், `தெலுங்கானாவில் நடப்பதுபோல், ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும். அதன்மூலம் காங்கிரஸ் அரசாங்கத்தை அகற்றிவிட்டு, கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைக்க வேண்டும்’ என முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தெரிந்ததுமே, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தி லும் கம்யூனிஸ்டுகள் மீது சதி வழக்குகள் போடப் பட்டன. சதி வழக்கு என்றால், `ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஆயுதம் தாங்கி சதி செய்கிறார்கள்' என்ற அர்த்தத்தில், அந்த வழக்குகளுக்கு ‘சதி வழக்குகள்’ என்று பெயரிடப்பட்டன. `மதுரை சதி வழக்கு’, `நெல்லை சதி வழக்கு’, `ராமநாதபுரம் சதி வழக்கு’... என ஒவ்வொரு மாவட்டத்திலும் சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நெல்லை சதி வழக்கில் நானும் கைது செய்யப்பட்டேன். ஆயுள் தண்டனை கிடைத்து ஏழு ஆண்டுகள் வரை சிறையில் இருந்தேன். அது மிகக் கொடுமையான அனுபவம். கைது செய்யப்படும்போதே கடுமையான அடி, உதைகள் இருக்கும். அதையெல்லாம் வார்த்தை களால் சொல்ல முடியாது. அந்த அடியில் பல தோழர்களுக்கு ‘பிரெயின் ட்யூமர்’ வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு, பல நோய்கள் வந்தன. அப்படி நோய்வாய்ப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 20 நாள்களுக்கும் மேலாக நாங்கள் உண்ணா விரதம் இருந்தோம். சிறையில் எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று அதற்கும் 20 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அதுபோன்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றுக்கு எங்களுக்குத் தலைமை தாங்கியவர் பால தண்டாயுதம். அந்தப் போராட்டம் சிறைக்குள் தீவிரம் அடைவதைப் பார்த்த போலீஸ், இரவோடு இரவாக பாலதண்டாயுதத்தை ஸ்ட்ரெச்சரில் தூக்கிப்போட்டு நாக்பூருக்கு கொண்டு சென்றுவிட்டனர். மாநிலம்விட்டு மாநிலத்துக்கு அவரைக் கடத்திப் போனார்கள். அதன் பிறகுதான் கட்சியின் மேலிடத்திலிருந்து தலையிட்டு எங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொன்னார்கள். அப்படிச் சிறைகளில் எங்கள் காலத்தில்தான் கைதிகளுக்குச் சில உரிமைகள் கிடைத்தன. உறவுகளைச் சந்திக்கும் உரிமை, கடிதம் எழுதும் உரிமை போன்றவை கிடைத்தன. சிறைக்குள் படிப்பது, வகுப்பெடுப்பது, போராடுவது என்று அந்த நாள்களையும் ஓர் அரசியல் பாடம் கற்கும் பயிலரங்கமாகவே வைத்திருந்தோம்.’’

``கைதாகும்போது, நீங்களும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி இருப்பீர்களே?’’

``நெல்லை சதி வழக்கில் தேடப்பட்டபோது, நான் புலியூர்குறிச்சி என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன். அங்கு வைத்து, இரவு 11 மணிக்கு மேல் என்னைக் கைது செய்தனர். அப்போது பின் கையைக் கட்டி அடித்தனர். மறுநாள் இரவு வரை அந்தக் கட்டை அவிழ்க்கவே இல்லை. இரவு 2 மணிக்கு ஒரு மலையடிவாரத்துக்கு அழைத்துப் போனார்கள். அங்கு போனதும், `உன்னோடு சேர்ந்து சதி செய்தவர்களை எல்லாம், இந்த மலை உச்சியில் இருந்துதான் உருட்டிவிட்டோம். உன்னையும் அங்கிருந்து உருட்டிக் கொல்லப் போகிறோம்' என்று இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சொன்னார். அப்போதும் நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அதில் கோபமானவர், தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை வைத்து என் கன்னம், மேல் உதட்டில் எல்லாம் சூடு வைத்தார். அந்த அதிகாரி பின்னாள்களில் கட்சி வழக்கறிஞர்களை ஏதோ ஒரு விவகாரத்தின்போது சந்தித்தபோது, என்னிடம் மோசமாக நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்ததாகச் சொன்னாராம். அதை எங்கள் தோழர்கள் என்னிடம் சொன்னார்கள்.’’

``தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் பழகிய அனுபவம் எப்படிப்பட்டது?’’

``கருணாநிதி, ஜெயலலிதாவோடு நமக்குத் தனிப்பட்ட கோபம், உறவுகள் கிடையாது. உறவும் மோதலும் அரசியல்ரீதியாகத்தான். கருணாநிதியிடம் மாற்றுக் கருத்தைப் பேசலாம். அவர் அதை ஏற்றுக்கொள்வார். என்னை `நல்ல கண்ணு...’ என்றுதான் அழைப்பார். ஜெயலலிதாவோடு மாற்றுக் கருத்து எதையும் பேச முடியாது. பொதுவான அரசியல் விஷயங்கள் கேட்பார். கடைசியாக ஒரு தேர்தலில் கூட்டணி அமையும் என்று இருந்த நேரத்தில், எங்களை நேரில் அழைத்து, `இதுக்கு மேல் நமக்குள் அரசியல் உறவு கிடையாது' என்றார். அதன் பிறகு அவரைச் சந்திக்கவில்லை.’’

``உலகம் முழுவதுமே இடதுசாரிகள் பலவீனம் அடைந்ததுபோல் தெரிகிறதே?’’

``சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு பல நாடுகளில் இடதுசாரி சக்திகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது உண்மை. 1990-களில் உலகமயமாக்கல் கொள்கை என்று வந்தபோது, கார்ப்பரேட் முதலாளிகளும், நிதி மூலதனத்தை வைத்திருப்பவர்களும், பன்னாட்டு வங்கிகளும் சேர்ந்து தனி நாட்டின் உரிமை-நலன்களை மாற்றி, உலகப் பொருளாதாரம் என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சி செய்தன. கடந்த 30 ஆண்டுகளில் அது உச்சம் அடைந்துவிட்டது. இதற்குமேல் அவர்களால் போக முடியாது. ஆனாலும் இப்போதும்கூட கம்யூனிஸ்ட் கருத்துகளும் மார்க்ஸியக் கருத்துகளும்தான் வெற்றிபெற்றுள்ளன. அது அதிகாரத்தை அடையும் தூரம் வெகு தொலைவில் இல்லை.’’

``இடதுசாரிகள் எப்போதும் தங்கள் கொள்கைகளுக்குச் சம்பந்தமில்லாத எம்.ஜி.ஆரை வளர்த்துவிட்டனர். விஜயகாந்த்தை ஸ்திரப்படுத்தினார்கள். அதனாலேயே அவர்கள் வளராமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?’’

``அன்றைய அரசியல் சூழலில் பொது எதிரியை வீழ்த்த, மிகப் பெரிய எதிரியை வீழ்த்த எடுக்கும் முடிவுகள்; தேர்தல் உடன்பாடுகள். அவ்வளவே! அதன் காரணமாக அவர்கள் செய்த தவறுகளை நாங்கள் விமர்சிக்
காமல் இருந்தோமா அல்லது அவர்களை எதிர்த்துப் போராடாமல் இருந்தோமா? எங்களைப் பொறுத்தவரை, மக்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்துவிடமாட்டார்கள்.’’

``முதலாளி-தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடுகளை எதிர்த்துச் செயல்பட்ட அளவுக்கு கம்யூனிஸ்டுகள் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை என்பது உண்மையா?’’

``சாதி என்பதை எதிர்த்து, தொடர்ந்து நாங்கள் முன்னெடுத்த போராட்டங்கள்தான் இன்றைக்கு ஓரளவேனும் தமிழகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. சாதி என்பது மட்டுமல்ல... கம்யூனிஸ்ட் கட்சி அடிப்படையாக எந்த மக்களுக்கானது? இன்றைக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருப்பவர்களில் மிகப் பெரும்பாலான மக்கள் யார்? தலித் மக்கள்தானே? 1956-ல் இருந்து `தமிழ்நாடு விவசாயத் தொழிலாளி சங்கம்’ என்று வைத்திருந்தோம். சவுக்கடி, பண்ணையாள் பாதுகாப்புத் திட்டம் என்பதெல்லாம் சாதி எதிர்ப்பு தானே? மற்ற அரசியல்கட்சிகள் தீண்டாமை என்பதை பிராமண எதிர்ப்புக்குச் சொன்னார்களே தவிர, சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை. நாங்கள் சாதியை ஒழிக்கும் வேலைகளைத்தான் வர்க்கப் போராட்டங்களின் வடிவத்தில் செய்தோம். அம்பேத்கர் அதைத்தான் `Grade and Equalities’ என்பார். மேலே உள்ளவனை எதிர்ப்பது, கீழே உள்ளவனை ஆதரிக்காமல் இருப்பது. அதைச் செய்தவர்கள் மற்ற கட்சிகள். நாங்கள் மேலே உள்ளவனை எதிர்க்கவும் செய்தோம். கீழே உள்ளவனை ஆதரிக்கவும் செய்தோம்.’’

``மத்திய அரசின் ஆட்சி, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

`` ‘மன் கி பாத்’ என்றால், மனதின் குரல். மத்திய அரசாங்கத்தின் மனதின் குரல் மர்மமாக இருக்கிறது. அவர்கள் நாக்கிலிருந்து வரும் குரல் வேறு மாதிரியாக இருக்கிறது. நடைமுறைகள் அதற்கு எதிராக இருக்கின்றன. மோடி தேர்தல் பிரசாரத்தின்போதே, `கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்; சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்துவருவேன்; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வேன்' என்றார். ஆனால், இதில் ஒன்றாவது நடந்துள்ளதா? ஆட்சி மட்டும் மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டது. சுதந்திர தினத்தில் பிரதமர் பேசும்போது, `மதம்-சாதி இல்லாத சமுதாயம் 2022-ல் வர வேண்டும்' என்கிறார். இதை அவர் நாவின் குரலாகச் சொல்கிறார். அவர் மனதின் குரல்படி, செயல்பாடுகள் அதற்கு விரோதமாக நடக்கின்றன. பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்து, மாட்டை விற்கிறவர், வாங்குகிறவர் என எல்லாரையும் போட்டு அடிக்கிறார்கள்; மாட்டையும் அடிக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தைத் தனியாருக்குக் கொடுத்துவிட்டனர். அதனால், தினமும் பெட்ரோல், டீசல் விலை கூடுகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, ஜி.எஸ்.டி, நீட் என்று எல்லாமே மக்கள் விரோதமாக இருக்கின்றன. அதன் பாதிப்புக்கு தமிழகமே உதாரணம். வறட்சி நிவாரணக் குழு வந்து பார்த்துவிட்டுப் போனது. ஆனால், நிதியை முழுமையாகக் கொடுக்கவில்லை. `மன் கி பாத்’தில் விவசாயிகள் வாழ வேண்டும் என்கிறார். ஆனால், நிஜத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். பிரதமர், டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பார்க்க மறுக்கிறார். ஜக்கி வாசுதேவைத்தான் பார்க்கிறார். விவசாயக் கடன் ரத்து கிடையாது. அதானி, அம்பானி உள்ளிட்ட வெறும் 100 முதலாளிகள் வாங்கிவைத்துள்ள ஆறு லட்சம் கோடி வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்கிறார். முழுமையான மக்கள் எதிர்ப்பு அரசாங்கமாக மோடியின் அரசாங்கம் இருக்கிறது.’’

``அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு நீங்கள் வாழ்த்துச் சொல்லப்போனது சரியா?’’

``சசிகலாவுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு நான் அங்கு போகவில்லை. ஜெயலலிதா மரணத்துக்கு என்னால் போக முடியவில்லை. டிசம்பர் 1-ம் தேதி என் மனைவி ரஞ்சிதம் இறந்தார். டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதா இறந்தார். அதற்கிடையில் நான் வெளியூர் போயிருந்தேன். அதனால், ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. ஊரிலிருந்து திரும்பியதும் அவருக்கு அஞ்சலி செலுத்த போயஸ் கார்டன் இல்லத்துக்குப் போனேன். அப்போது சசிகலாவைச் சந்தித்தேன். அவ்வளவுதான்.’’

``நீங்கள் ஒருமுறைகூட தேர்தலில் வெற்றி பெறவில்லையே... அதனால், மக்கள் மீது எப்போதாவது உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?’’

``அப்படி வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை. நான் தேர்தலில் வெற்றி பெற்றதே இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. கலைஞர் 12 தேர்தல்களில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். கட்சிகள் தோற்றுப்போனாலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்குச் சில தனிப்பட்ட ஆளுமைகள் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். அப்படிப் பல்வேறு சூழ்நிலைகள், பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்தப் புரிதல் எல்லாம் உள்ளவன்தான் கம்யூனிஸ்ட். அதற்காக நான் ஒருநாள்கூட வருத்தப்பட்டதில்லை. எங்கள் தோழர்களும் வருத்தப்பட மாட்டார்கள். ஏனென்றால், நாங்கள் கம்யூனிஸ்டுகள்!’’