சேலத்திலிருந்து 30 நிமிடப் பயணத்தில் இருக்கிறது ஆட்டையாம்பட்டி. சாலையின் இரண்டு புறங்களிலும் புளியமரங்கள் அடர்ந்து நின்று சாமரம் வீசும் கிராமம். விவசாய பூமியும் கால்நடைகளும் நம் கண்களை நலம் விசாரிக்கும். முகவரி கேட்டால், வீடுவரை கரம்பிடித்து வழிகாட்டும் வெள்ளந்தி மக்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கைமுறுக்கு பிசினஸில் வெற்றிக்கொடி கட்டிவரும் சாம்ராஜ்ஜியம்.

ஆட்டையாம்பட்டியின் வழியில் எந்த வாகனத்தில் பயணிப்பவராக இருந்தாலும், இங்கு முறுக்கு வாங்காமல் கடப்பதில்லை. இன்றைக்கும்கூட இங்கு விற்பனையாகும் கைமுறுக்கின் விலை ரூபாய் ஒன்றுதான் என்பது, ஆச்சர்யம். உற்பத்தியாளர்களிடம், உற்பத்தியிடத்திலேயே வாங்குவதால் இந்த விலை, கட்டுப்படியாகிறது. ஆட்டையாம்பட்டியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகளில் குடிசைத்தொழிலாக கைமுறுக்கு, தட்டுவடை மற்றும் அதிரசம் ஆகியவை தயாராகின்றன. எந்தப் பதப்படுத்தும் பொருள்களும் பயன்படுத்தப்படாத நொறுக்குத்தீனிகள். அன்றன்றைக்குத் தயாராகும் ஸ்நாக்ஸ் அன்றைக்கே விற்பனையாகிவிடும். ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிட்டாலும் சுவை மாறாது.

ஆட்டையாம்பட்டியின் இந்தப் பிரபலமான முறுக்குத் தயாரிப்புப் பணியில், 95 சதவிகிதம் பெண்களே ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி தொடங்கி பேத்தி வரை தங்களின் அயராத உழைப்பில் சுவையான முறுக்குகளைத் தயார்செய்கிறார்கள். முறுக்குச் சுற்ற கூலி வேலைக்குச் செல்லும் பெண்களும் அதிகம். இப்படி ஆண்டு முழுவதும் முறுக்குச் சுற்றும் வேலையில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்தப் பெண்களிடம் பேசினோம். ஆட்டையாம்பட்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருளையம்பாளையம். வீட்டுக்கு வீடு எண்ணெயில் வெந்த முறுக்கு வாசனை கரம்பிடித்து இழுத்தது. சின்னதாக ஒரு பெட்டிக்கடையும் டீஸ்டாலும் வைத்திருக்கும் தனபாக்கியத்துக்கு வயது 60. சணல் சாக்கில் காலை 9 மணிக்கே கைமுறுக்குச் சுற்ற ஆரம்பித்திருந்தார். ஒரு நாளைக்கு 150 ரூபாய் வரை சம்பாதிப்பாராம். தனது பத்து வயதில் இருந்தே முறுக்குச் சுற்றிவரும் தனபாக்கியம், தன் வாழ்வாதாரமே இதுதான் என்கிறார். ``நாங்கல்லாம் பள்ளிக்கூடத்தைப் பார்த்ததே இல்லை. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து முறுக்குச் சுத்தப் பழகிட்டோம். மாவுப் பதத்தைப் பார்த்துக்கிட்டு சாக்குல மாவை வட்ட வட்டமா சுத்திவைப்போம். மாவு உலர உலர எண்ணெயில போட்டு பொரிச்சி எடுப்பாங்க. நாங்க சுடுற முறுக்கை வீட்டுக்கே வந்து வாங்கிட்டுப் போவாங்க. இன்னிக்கும் அப்படித்தான்'' என்கிறார் தனபாக்கியம்.

ஆட்டையாம்பட்டி கைமுறுக்கில் அப்படி என்னதான் சேர்க்கிறார்கள்?! அதன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும், பி.இ மெக்கானிக்கல் பட்டதாரிப் பெண் மீனா சொல்கிறார்... ``இயற்கையான முறையில தயாரிக்கிறதுதான் அந்த ருசி மந்திரம். புழுங்கல் அரிசி, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, நிலக்கடலை மாவு சேர்க்கறோம். மாவை கிரைண்டர்ல ஆட்டிடுவோம். அதைச் சணல் சாக்குல கொட்டி, சரியான பதத்துக்கு வந்தப்புறம் கையிலதான் முறுக்கைச் சுத்துறோம். சென்டர் ரவுண்டுக்கு மட்டும் ஒரு பிளாஸ்டிக் மூடி வச்சுக்குவோம். அதை மையமா வச்சுக்கிட்டு அதைச் சுற்றிலும் ரெண்டு சரம் முறுக்கு மாவை சணல் சாக்குல வரிசையா சுத்திடுவோம். அது உலர்ந்த பின்னால எண்ணெயில பொரிச்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். விறகு அடுப்பையும் இரும்பு வாணலியையும்தான் முறுக்குசுடப் பயன்படுத்துறோம். வீடுகள்லயே முறுக்குத் தயாராகிறதால போர்டு எதுவும் வைக்கிறதில்லை. எங்க முறுக்கோட சுவைதான் எங்களுக்கான விளம்பரம்.

இது எங்களோட சொந்தக் கடை. அண்ணன், நான், அப்பா, அம்மா எல்லாரும் இதுல வேலை பார்க்கிறோம். கூலிக்கும் ஆள் போட்டிருக்கோம். பி.இ முடிச்சிருந்தாலும், வெளிய போய் வேலை பார்க்கணும்னு தோணலை. கடையை பெருசாக்கணும், நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்கணும்'' என்கிறார் மீனா.

சத்யா ப்ளஸ் ஒன் மாணவி. விடுமுறை நாள்களில் பிஸியாக முறுக்குச் சுற்றுகிறார். ``சின்ன வயசுலேயே முறுக்குச் சுற்றப் பழகிக்குவோம். ஒரு சாக்கு முழுக்கச் சுத்தினா 10 ரூபாய் கிடைக்கும். நான் ஒரு நாளைக்கு நூறு ரூபாய்க்குச் சுத்திடுவேன். அப்படிச் சம்பாதிக்கிற காசை அம்மாகிட்ட கொடுத்துடுவேன். எனக்கு நோட்டுப் புத்தகம் வாங்குறது, டிரஸ் வாங்குறது எல்லாம் இந்தக் காசுலதான். எனக்காக அம்மா எந்தக் கஷ்டமும்படக் கூடாது'' என்கிறார் சத்யா.

முறுக்குடன், அதிரசம், தட்டுவடை போன்ற ஸ்நாக்ஸும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. முறுக்கு ஒரு ரூபாய்க்கும், அதிரசம் 2.50 ரூபாய்க்கும், தட்டுவடை 1.50 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. அதிரசத்தில் கார் அரிசியும், இனிப்புக்கு வெல்லமும் பயன்படுத்துகின்றனர். வாயில் போட்டு ருசித்தால், `இவ்வளவு சுவைக்கு இதுதானா விலை?’ என்று தோணுகிறது.

மார்க்கெட்டிங் டெக்னிக்குகள் எதுவும் இல்லாமலேயே இந்த முறுக்குகள் எப்படி விற்பனையாகின்றன? கோகிலா சொல்கிறார்... ``திருமணம், சீமந்தம் மாதிரி தட்டுவைக்கிற விழாக்களுக்கு மொத்தமா வந்து வாங்கிட்டுப் போவாங்க. முகூர்த்த மாதங்கள்ல வியாபாரம் அதிகம் இருக்கும். வருஷம் முழுக்க, மக்கள் தங்களுக்கும்,அவங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் கொடுக்கறதுக்காக வாங்கிட்டுப் போறதுதான் எங்களுக்கு முக்கிய வியாபாரம். தீபாவளி, பொங்கல் பண்டிகைக் கால பலகாரச் சீட்டு நடத்துறவங்க எங்களைத் தேடி வருவாங்க. மொத்தமா ஆர்டர் கொடுத்தும் வாங்கிட்டுப் போவாங்க. தட்டு சைஸுக்கு பெரிய முறுக்கு கேட்டா அதையும் பண்ணித் தருவோம். வருஷம் முழுக்க வேலையும் வியாபாரமும் இருக்கும்.''

வீட்டு வேலைகள் முடிந்து, குழந்தைகள் பள்ளி சென்ற பின் முறுக்குச் சுற்றும் வேலையில் இறங்கிவிடுகின்றனர் இந்தப் பெண்கள். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் வரை பரபரப்பாக இயங்குகின்றனர். மாவைக் கையில் பிடித்து மணிக்கணக்கில் சுற்றுவது எளிய வேலையல்ல. 10 வயதிலேயே முறுக்குச் சுற்றப் பழகிவிடுவது இவர்கள் வேகத்துக்குக் காரணம். வீட்டின் அருகிலேயே வேலை கிடைக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் இதையே வேலையாக்கிக்கொண்டால், சொந்தமாக கடையே நடத்தலாம். ஆட்டையாம்பட்டி முறுக்குத் தொழிலில் பெண்கள் அதிகளவில் கால் பதிப்பதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். குடிசைத் தொழிலாகச் செய்வதால் பெரிய முதலீடு தேவையில்லை. கடன், வட்டி போன்ற தொல்லையிலும் பெண்கள் சிக்கிக்கொள்வதில்லை.

கோகிலாவின் சகோதரி தாமரைச்செல்வியும், மகள் கீதாவும் இணைந்து முறுக்குச் சுற்றும் பணியைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தாமரைச்செல்வி, ``உழைப்புக்கு ஏத்த காசு கிடைக்கும். வாரக் கூலியா கிடைக்கிற காசுல குடும்பச் செலவுகளைப் பார்த்துக்குவோம். இதுல சம்பாதிக்கிற காசைவெச்சுத்தான் குழந்தைகளுக்குத் திருமணம் பண்ணிக் கொடுக்கிறோம். மழை வந்தாலும், வெயில் அடிச்சாலும் முறுக்குச் சுத்துற வேலை எப்பவும் இருக்கும்'' என்கிறார்.

ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மருளையம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளிவீச உதவுவது இந்த கைமுறுக்குதான். தற்பொழுது வெளிநாடுகளுக்கும் ஆட்டையாம்பட்டி முறுக்குகள் பார்சல் ஆகின்றன என்கிறார் தேவராஜன். ``டேஸ்ட்டுக்காக அஜினோமோட்டோ போன்ற உடல்நலனுக்கு எதிரான பொருள்கள் எதையும் பயன்படுத்துறதில்லை. இந்த வழியாப்போற கல்லூரிப் பேருந்துகளை மாணவர்கள் நிறுத்தி, இங்கே முறுக்கு வாங்கிட்டுத்தான் போவாங்க. எங்க கஸ்டமர்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள்னு தங்களோட உறவினர்களைப் பார்க்கப்போகும்போது, தமிழ்நாட்டு ஸ்பெஷலா ஆட்டையாம்பட்டி கைமுறுக்கு வாங்கிட்டுப் போவாங்க. இப்போகூட, சிங்கப்பூர்ல இருக்கிற தன் உறவினர்களைப் பார்க்கப்போற ஒரு கஸ்டமர், எங்ககிட்ட ஆர்டர் கொடுத்து முறுக்கு வாங்கிட்டுப் போனார். இது எங்க ஊருக்கான பெருமை'' என்கிறார் தேவராஜன். இந்தத் தீபாவளிக்கும் ஆட்டையாம்பட்டிக்கு டபுள் தமாக்காதான்!