ஜோ டி குரூஸ். ‘கொற்கை’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். `கொற்கை', ‘ஆழி சூழ் உலகு’ ஆகிய இரண்டும் கடல் மற்றும் கடல் சார்ந்த பரதவர்களின் வாழ்க்கையை, ரத்தமும் சதையுமாக அறிமுகம் செய்த தமிழின் மிக முக்கியமான படைப்புகள். நெல்லை மாவட்டம், உவரி எனும் கடற்கரை கிராமத்தில் பிறந்த ஜோ டி குரூஸ், பொருளாதாரத்தில் எம்.பில் முடித்தவர். மீனவர்களின் வாழ்வியலைக் குறுக்கும் நெடுக்குமாகத் தொடர்ந்து ஆய்வு செய்துவருபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜோ டி குரூஸை அவருடைய சொந்த ஊரான உவரியில் சந்தித்தோம்.

“பரதவர் சமூகத்தில் பிறந்ததால், அந்தச் சமூகத்தை மிக ஆழமாக உங்கள் படைப்புகளில் விவரணை செய்திருந்தீர்கள். இன்றைய சூழலில் பரதவர்களின் மிகப் பெரிய பிரச்னையாகவும், அதற்கான தீர்வாகவும் எதைப் பார்க்கிறீர்கள்?”

“பரதவர்கள் இன்றும் அரசியல் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் அவர்களின் இன்றைய மிகப் பெரிய பிரச்னையாகப் பார்க்கிறேன். இன்றைக்கு முன்னேற்றம் கண்டிருக்கும் எந்தச் சமூகமாக இருந்தாலும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை எப்படிப் பிடித்தார்கள் என்று பார்த்தீர்களானால், அவர்களுக்குள் இருந்த சாதி உட்பிரிவுகளைத் தள்ளிவைத்து இணைந்ததன் மூலம் அதைப் பிடித்திருப்பார்கள். ஆனால், பரதவர்கள் என்ற இந்த மீனவர்கள் - அவர்கள் கடற்கரைகளில் இருந்தாலும், சமவெளியில் இருந்தாலும் - இன்னும் அப்படி ஓர் இனமாக இணையவில்லை. அவர்கள் ஓர் இனமாக இணையவேண்டியது காலத்தின் கட்டாயம். பட்டினவரில் இருந்து முக்குவர் வரை... அதாவது, சிறிய பட்டினவர், பெரிய பட்டினவர், கரையர், கடையர், செம்படவர், ஓடக்காரர், வருணகுல முதலி, முத்திரையர், பர்வத ராஜகுலம், வலைஞர், வலையர், நாட்டார், பள்ளி, செட்டி, செம்படவர், பரவர், இந்து பரதர், முக்குவர் ஆகிய ஒட்டுமொத்த மீனவச் சாதிகளும் ஒன்றாக இணைய வேண்டும். அது ஒரு மாபெரும் சக்தி. தமிழகத்தின் மக்கள்தொகை சுமாராக எட்டுக் கோடி எனக் கணக்கில் கொண்டால், பரதவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தொடும். அந்த எண்ணிக்கை தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கும். அது அரசியல் அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தரும்.”

“பரதவர்களின் இந்த இணைப்புக்கு முயற்சி எதுவும் நடக்கிறதா? நீங்கள் அப்படி ஏதாவது முயற்சியை முன்னெடுத்துள்ளீர்களா?”

“பரதவர்களின் இணைப்புக்கான எந்த முயற்சியும் இதுவரை நடந்ததாக நான் உணரவில்லை. அது நடக்க வேண்டும் என்றால், முதலில் மீனவ இளைஞர்கள், இணைப்பின் அவசியத்தை உணர வேண்டும். அதன்மூலம் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் அரசியல் நன்மைகளை உணர வேண்டும். அரசியல் பிரதிநிதித்துவம் பெறாததால், நம்மிடம் அதிகாரம் இல்லை; அதிகாரம் இல்லாததால், கடற்கரையிலும் கடலிலும் கஷ்டப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலே போதும்; அந்த இணைப்பு சாத்தியமாகிவிடும். அந்தப் புரிதலை என்னால் முடிந்தவரை, என்னுடைய களத்திலும் தளத்திலும் இருந்து நான் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறேன்.”

“இணைப்பைத் தடுக்கும் சக்தி எது?”

“கடற்கரை ஊர்கள் பெரும்பாலும் சமவெளிப் பகுதியில் உள்ள அரசியல் சக்திகளால் சிறை வைக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில்வெளி கடலாக இருப்பதால், கரையில் நடக்கும் விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதும், அதற்கேற்ப எதிர்வினை ஆற்றவதும் இயலாத ஒன்றாகப் போய்விடுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பரதவர்களின் பிரதிநிதிகளாக போலித் தலைமைகளும், மத பீடங்களும் செயல்படுகின்றன. அவர்கள்தாம் பரதவர்களுக்குள் இணைப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கும் மிகப் பெரிய சக்தியாக உள்ளனர். தென் மாவட்டங்களில் இருக்கும் மத பீடங்கள், வட மாவட்டங்களில் மீனவ ஊர்களில் இருக்கும் நாட்டாமைகள்தாம் அந்தப் போலித் தலைமைகள். மீனவர்களுக்கான தலைவர்களாக, பிரதிநிதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் போலித் தலைமைகள், மீனவர்களுக்கான உண்மையான, நேர்மையான தலைமைகளாக இல்லை. இவர்கள் தங்களுடைய சுயநலம் சார்ந்தே, சிற்றரசியல், பிராந்திய அரசியல் செய்கிறார்கள். தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும், அதைத் தங்களுடைய சந்ததிகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கவும் மட்டுமே சிந்திக்கின்றனர். ஆனால், நடைமுறையை மீறி இளைய தலைமுறையால் மீனவர்கள் வலுவான சக்தியாக இணைந்துவிடும்
போது, இவர்கள் தோல்வியடைவார்கள்.”

``பரதவர்களின் இன்றைய அரசியல் எப்படி உள்ளது?’’

மிகப் பலவீனமானதாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் கிழக்குக் கடற்கரையில் கொண்டுவரப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டம், பிராந்திய அரசியல் தலையீட்டால், கடற்கரை கிராமங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டன. அதனால், கிழக்குக் கடற்கரைச் சாலை என்று பெயர் இருந்தாலும்கூட, அவை கடற்கரை கிராமங்களை இணைக்கும் சாலைகளாக இல்லை. கடற்கரை ஊர்களில் உள்ள போலித் தலைமைகளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை: எதிர்க்கவும் முடியவில்லை; எதையும் சாதிக்கவும் முடியவில்லை. முடியாவிட்டால் ஒதுங்கிவிட வேண்டும்தானே... வடக்கே இருந்து தெற்கே வரை உள்ள கடற்கரைப் பிரதேசங்கள் ஒரு சட்டமன்றத் தொகுதியாகவோ, நாடாளுமன்றத் தொகுதியாகவோ இல்லை. அது சமவெளிப் பகுதியின் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் சிறிய அங்கமாக இருக்கும்படி, திட்டமிட்டு உடைக்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் சார்பில் ஒரு எம்.எல்.ஏ., எம்.பி உருவாவதில்லை. இந்தச் சதி கடற்கரையோரங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது. இது பஞ்சாயத்துகளுக்கும் பொருந்துகிறது. மீனவ ஊர்களுக்கும், மீனவப் பிரதிநிதிகளுக்கும் அரசியல் அதிகாரம் போய்விடக் கூடாது என்பதற்காகவே இந்தச் சதி நடந்திருக்கிறது. இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

``நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், எல்லா ஆட்சியிலும் பரதவ இனத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாக் கட்சியிலும் அவர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்களே?’’

``கட்சிகளில், சில முக்கியப் பொறுப்புகளில் சில பரதவர்கள் இருக்கலாம். ஆட்சியில் சில அமைச்சர்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் மீனவர்களின் பிரதிநிதிகளாக இல்லை. மாறாக, அவர்கள் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, எங்களுக்கான சலுகைகள் கோயில் பிரசாதங்களைப்போலக் கொடுக்கப்படுகின்றன. அப்படி எங்களுக்குச் சலுகைகளாகத் தூக்கிப்போடப்படும் சூழல் இனி இருக்கக் கூடாது. எங்களுடைய உரிமைகள் நாங்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். வாழும் இடமாக இருந்தாலும், வாழ்வாதாரமாக இருந்தாலும் நீர், சாலை, சுகாதாரம், மின்சாரம், வங்கி, சந்தை போன்ற அடிப்படை உரிமைகளாக இருந்தாலும், நாங்கள் எங்களின் உரிமைகளை, முழு உரிமைகளாகப் பெற வேண்டும் என விரும்புகிறோம். அப்படிப் பெறுவதற்கு, மீனவர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கூப்பாடு போடுகிற தலைமை எதற்கு? அரசியல், பொருளாதார, சமூக அறிவோடு உரிமைகளை மீட்டெடுக்கும் அக்கறையான தலைமை இளையோரிடமிருந்து வரவேண்டும்.''

``அரசதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டும் அது சாத்தியமாகிவிடும் எனக் கருதுகிறீர்களா?''

``இல்லை. அரசுக் கட்டமைப்புகளுக்குள் இருக்கும் அதிகாரத்தையும் மீனவர்கள் கைப்பற்ற வேண்டும். பரதவர்களில் கல்வியறிவு பெறாதவர்கள் வலைக்குப் போவது, கடல் சார்ந்த தொழில்களை மட்டும் செய்வது என்று இருக்கின்றனர். படித்தவர்களில் அதிகம் பேர் ஆசிரியர் வேலை, கப்பல் வேலை, வெளிநாடுகளில் போய் கூலியாக இருப்பது என தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். மாறாக, அரசின் பல்வேறு துறைகளான காவல்துறை, நீதித்துறை, ஆட்சி நிர்வாகத் துறைகளில் மீனவர்கள் அரிதாகத்தான் இருக்கின்றனர். இதை மாற்றி, அந்தத் துறைகளுக்குள்ளும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். அதற்குத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். இது ஒரே நாளில் சாத்தியம் அல்ல. ஆனால், இதற்கான முயற்சியை இப்போதே தொடங்க வேண்டும் என்கிறேன்.''

``உங்களுடைய படைப்புகளில் கத்தோலிக்கத்தின் மீதான விமர்சனம் கடுமையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு மீனவ கிராமங்கள் ஓரளவுக்கு கல்வியறிவும் வளர்ச்சியும் பெற்றுள்ளதற்கு அந்த மதத்தின் தொண்டும் மிக முக்கியக் காரணம் அல்லவா?''

``நானே கிறிஸ்தவப் பள்ளியில் படித்துதான் இன்று உங்களிடம் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், அந்தக் கத்தோலிக்கப் பள்ளிகள் மீனவர்களின் கல்விக்காக மட்டும் தொடங்கப்பட்டவை அல்ல. அது எல்லாச் சமூகத்துக்குமான பொதுப்பள்ளி. அந்தப் பள்ளியில் பரதவர்களும் படித்தார்கள். அப்படித்தான் அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, கடற்கரையின் முரட்டுப் பரதவர்களின் உதவி கத்தோலிக்கத்துக்கு மிக அவசியத் தேவையாக இருந்தது. அவர்களின் உதவி இருந்தால்தான் இங்கு வியாபாரம் செய்ய முடியும் என்பதை போர்த்துக்கீசியர்கள் புரிந்து வைத்திருந்தனர். அந்த உதவியைப் பரதவர்களிடம் இருந்து பெறுவதற்கு, போர்த்துக்கீசியர்கள் உபயோகப்படுத்திய கருவிதான் மதம். அதைச் சரியாகப் பயன்படுத்தி, பரதவர்களை கத்தோலிக்க மத நம்பிக்கைக்குள் கொண்டுபோனார்கள்.''

``கத்தோலிக்க மதத்தின் வழிபாட்டு முறைகளும், அவர்கள் அளித்த சில சலுகைகளும் பரவலான பரதவர்களை அங்கு கொண்டுபோய்ச் சேர்த்திருக்கலாம் அல்லது இந்து மதத்தில் இருந்த சாதிக் கொடுமைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் வெறுத்தும்கூட பரதவர்கள் கத்தோலிக்க நம்பிக்கைக்குள் தங்களைக் கரைத்திருக்கலாம் அல்லவா?''

``நிச்சயமாக இல்லை. கத்தோலிக்கத்தை நாடி பரதவ மக்கள் போகவில்லை. பரதவர்கள் அவர்களுடைய தொன்மங்கள் சார்ந்து, நம்பிக்கை சார்ந்து ஏற்கெனவே இங்கு தங்கள் மூதாதையரை வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அவர்களோடு கத்தோலிக்கம் வந்து இணைந்துகொண்டது.

எங்களிடம் தாய் வழிபாடு இருந்தது; எங்களுக்கு சப்பரம் தூக்கும் வழக்கம் இருக்கிறது; எங்களுக்குப் பொட்டு வைக்கும் வழக்கம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதில் அவர்கள் கை வைக்கவில்லை. மாறாக, எங்கள் சப்பரத்தில் எங்கள் கடவுளுக்குப் பதில், அவர்கள் கடவுளை உட்காரவைத்தனர். முன்னர், முருகனைத் தேரில்வைத்து இழுத்துக்கொண்டிருந்தோம். இன்று, மாதாவை வைத்து இழுத்துக்கொண்டிருக்கிறோம். அதாவது, சடங்கு, சம்பிரதாயங்களில் கை வைக்காமல், மூலவரையும் உற்சவரையும் மட்டும் மாற்றிவிட்டனர். இந்த மாற்றத்தின் மூலம் அவர்கள்தாம் பரதவர்களோடு வந்து இணைந்துகொண்டனர். அதுவும் எப்படி என்றால், ஏற்கெனவே இங்கே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தார்கள். அவர்களோடு கூடுதலாக கத்தோலிக்கம் அறிமுகம் செய்த புதிய தேவர்களையும் பரதவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இது பரதவர்களான எங்களிடம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நம்பிக்கை. அதனால், என் தெய்வத்தை, என் தொன்மத்தை, என் நம்பிக்கையை, புதிதாக வரும் ஒரு நம்பிக்கை அழித்துவிடும் என நாங்கள் நினைக்கவில்லை. அது ஓர் அதிபக்குவம். அந்தப் பக்குவம் எதைப் போன்றது என்றால், ஓர் இந்துச் சகோதரனை அந்தோணியார் கோயிலுக்கு அழைத்துப் போகும்போது, அந்தச் சகோதரன் அந்தோணியாரையும் தன்னுடைய கடவுளை வணங்குவதுபோல் வணங்கும் பக்குவத்தைப் போன்றது. ஏனென்றால், இங்கு அப்படிப்பட்ட மிகச் சிறந்த பண்பாடு இருந்தது; இன்றும் இருக்கிறது.''

``கத்தோலிக்கத்தின் மீதான இந்தக் கடுமையான விமர்சனங்கள், இந்து மத விழுமியங்கள்மீதான மதிப்பு போன்றவைதான் பி.ஜே.பி-யை ஆதரிக்கும் முடிவை நோக்கி உங்களைத் தள்ளியதா?''

``2014 நாடாளுமன்றத் தேர்தலில் நான் மோடியை ஆதரித்ததற்கும் என் மத நம்பிக்கைக்கும், விமர்சனங்களுக்கும் துளியளவுகூட சம்பந்தம் கிடையாது. ஆனால், நானும் மனிதன்தானே! மனிதனாக இருக்கும் நம்மைச் சில ஆளுமைகளால் மயக்க முடியும் என்பது உண்மைதானே! அந்தக் காலத்தில் கலைஞரின் பேச்சைக் கேட்க நான் பல மைல்கள் நடந்துபோயிருக்கிறேன். வைகோ பேசுகிற கூட்டங்களைத் தேடித் தேடிப் போய்க் கேட்டிருக்கிறேன். அதனால், அவர்களுடைய கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் நான் ஏற்றுக்கொண்டவன் அல்ல. அதைப்போலத்தான் என்னுடைய மோடி ஆதரவும்.

குறிப்பாக, 2014-க்கு முன்பு இந்தியா சர்வதேச அளவில் அனைத்துத் துறைகளிலும் அதாவது விளையாட்டு, தொழில், ஆய்வு, மருத்துவம், விண்வெளி என அனைத்திலும் தலைக்குனிவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அது கொடுத்த அவமானம், ஏற்படுத்திய வலி, இந்தியா முழுவதிலும் பரவியிருந்தது. தேசபக்தி உள்ளவர்களுக்கு அது அதிகமாக வலித்தது. அந்த நேரத்தில், ‘ஒரு வலிமையான தலைவர்’ தலைமைப் பொறுப்புக்கு உடனடித் தேவையாக இருந்தார். ஆனால், தலைமைப் பொறுப்புக்கான போட்டியில் இருந்தவர்களில் இவர் ஒருவரைத் தவிர, மற்ற யாரும் அவ்வளவு தகுதியோடு இல்லை. அவரை நான் கை காட்டினேன். அந்தப் பதவி அவருக்கு வரும்போது பணிவு வந்துவிடும், துணிவு வந்துவிடும் என நான் நினைத்தேன். அந்த நேரத்தில் ‘குஜராத் மாடல்’ என்ற ஒரு பிம்பமும் என் முன்னால் இருந்தது. அதை நான் இன்று பிம்பம் என்றே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால், நான் சமீபத்தில் குஜராத்தின் உள்ளே போய்ப் பார்த்தபோது, அது உண்மையான வளர்ச்சி அல்ல; ஒரு மாயத்தோற்றம்; ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பம் என்பதை உணர்ந்துகொண்டேன். கப்பல் துறையில் இந்தியாவில் உள்ள மற்ற எந்த மாநிலத்தைவிடவும் குஜராத் துறைமுகங்கள் அதிகம் சாதித்துக் காட்டியிருக்கின்றன. ஆனால், அதே அக்கறை அடித்தள மக்களை முன்னேற்றுவதில் இருந்ததா என்றால், இல்லை. அவர்களுடைய கவனம் எல்லாம் சர்வதேச நிறுவனங்களை நோக்கியும், மிகப் பெரிய பணக்காரர்களை நோக்கியும்தான் இருந்திருக்கிறது. மோடியை ஆதரித்த மேடையில், நான், `வலிமையான தலைமை வேண்டும்’ என்று சொன்னேன்; அது எந்தச் சித்தாந்தம் சார்ந்தும் அல்ல. `ஒன் அண்டு ஒன்லி’ மோடிக்கு மட்டுமே ஆதரவு தெரிவித்தேன்.''

``பிரதமர் மோடி மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்ததற்கான காரணம் என்ன?''

``குஜராத் மாடல் என்று நம் கண்முன் வைக்கப்பட்ட மாடல், எப்படிப் போலியான மாடலோ... அதுபோல், `வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்' என்று இவர்கள் தந்த வாக்குறுதிகளும், திட்டங்களும் போலியாக உள்ளன. அடித்தளத்தில் அவை செயல்படுகின்றனவா என்ற அடிப்படைக் கண்காணிப்புகூட இவர்களிடம் இல்லை. வளர்ச்சியடைந்த மற்ற எந்த நாடுகளைவிடவும் அதிக `ஸ்கில்டு யூத்' பட்டாளத்தை வைத்திருக்கிறோம் என்று இவர்கள் ஊளையிடுவதெல்லாம் பெரிய அபத்தம். இதற்காகவே மத்திய அரசின் சலுகை பெற்று நடத்தப்படும் பயிற்சிப் பட்டறைகளிலிருந்து சான்றிதழோடு வெளிவந்தவர்கள் யாரும் தகுதியோடு இல்லை. இவர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது என்பது மட்டுமல்ல, சான்றிதழ் கொடுக்கும் அரசு நிறுவனங்களே வேலை கொடுக்காது என்பதுதான் யதார்த்தம். இது என்ன பித்தலாட்டம்? ஆக, மத்தியில் உள்ள அரசாங்கம் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே குற்றேவல் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் குற்றேவல் யாருக்குச் செய்கிறார்களோ, அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடிக்கவில்லை. தேவையற்ற திட்டங்களால், சட்டங்களால் நாளும் அவதிப்படும் அடித்தள மக்கள், இந்த நாட்டின் பொருளாதாரத்தை எல்லைச் சாமியாகப் பாதுகாக்கிறார்கள். இந்த அடிப்படை தெரியாத அரசு என்ன அரசு?''

`` `மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டும் குற்றேவல் செய்கிறது மத்திய அரசு’ என நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு, பொருளாதாரம் சார்ந்தது. ஆக, இந்தியப் பொருளாதாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?''

``நிச்சயமாக. இன்றைக்கு இருக்கக்கூடிய இந்தியப் பொருளாதாரம், மற்ற நாடுகளில் உள்ள பொருளாதாரத்தைப் போன்றது அல்ல. சந்தையும் அப்படித்தான். கன்னியாகுமரியில் மீன் என்றால், காஷ்மீரில் ஆப்பிள்; மேற்கு வங்கத்தில் சணல் என்றால், குஜராத்தில் பாக்சைட்; மைசூரில் காபி, நாக்பூரில் ஆரஞ்சு; தூத்துக்குடியில் உப்பு. இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் தங்கள் திறமை சார்ந்து, தொழில் சார்ந்து, ஆலை உற்பத்தி சார்ந்து, விவசாயம் சார்ந்து, கனிம வளம் சார்ந்து பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த நாடு பரந்து விரிந்த சந்தை மட்டுமல்ல... மிகப் பெரிய உருவாக்குதளமாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட உருவாக்குதளமாக இருக்கக்கூடிய இந்த நிலத்தில், இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கிப்பிடிக்கும் தூண்கள் 80 சதவிகிதம் எளிய மக்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால், மத்தியில் நடக்கும் ஆட்சி இந்த 80 சதவிகித மக்களுக்கானதாக இல்லை. பெரிய தனவந்தர்களை நோக்கித்தான் இருக்கிறது.

எனக்குக் கடற்கரை தெரியும். கடற்கரை என்பது மிகப் பெரிய பொருளாதார மண்டலம். கடல் சார்ந்து, கரையோரம் சார்ந்து எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. அது புரியாமல், கன்னியாகுமரி மேடையில் பேசிய மோடி, `அலங்கார மீன் வளர்ப்பை வளர்த்தெடுப்போம்... வளர்த்தெடுப்போம்’ என முழங்கினார். சரி, தெரியாமல் பேசுகிறார். `இது எப்படிப்பட்ட பொருளாதார மையம், வேலைவாய்ப்பு உருவாக்குதளம்' என்பதை `கோஸ்டல் கவர்னென்ஸ்’ என்ற அறிக்கையாகக் கொடுத்தேன். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.''

``நீங்கள் பிரதமர் மோடியிடம் கொடுத்த `கோஸ்டல் கவர்னென்ஸ்' அறிக்கையை மத்திய அரசு ஏதாவது ஓர் வழியில் பயன்படுத்தியதா?''

``இல்லை. மாறாக, கருவாட்டுக்கு ஐந்து சதவிதம், தூண்டில் போன்ற சாதனங்களுக்கு 18 சதவிகிதம், வலைகளுக்கு 12 சதவிகிதம், மிதவைகளுக்கு 28 சதவிகிதம்... என ஜி.எஸ்.டி வரி போட்டுள்ளது. கருவாடு எப்படி உருவாகிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?! பிடிக்கப்படும் புதிய மீன்கள் அன்று விற்பனையாகவில்லை என்றால், அது பெரும் சுமை. ஏனென்றால், விற்காத மீன்களில் மீனவனின் உழைப்பும் முதலீடும் தொங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது அதைப் பாதுகாக்கவேண்டிய கடமையும் மீனவனைச் சேர்கிறது. அது அவனுடைய கூடுதல் உழைப்பையும் செலவையும் கோருகிறது. இதை ஐஸ் அடித்துப் பாதுகாக்கலாம் அல்லது அவர்களுடைய பாரம்பர்ய முறைப்படி உப்படித்து, வெயிலில் உலர்த்தி, கழுவி, காயவைத்து கருவாடாக்கலாம். மீனவனின் அதிக நேரத்தையும், அதிக உழைப்பையும், கூடுதல் செலவையும் வாங்கிய கருவாடு, மீனைவிடக் குறைவான விலைக்குத்தான் விற்பனையாகிறது. அதற்கு இந்த அரசாங்கம் ஐந்து சதவிகிதம் வரி போடுகிறது என்றால், அரசுக்குக் கடற்கரைப் பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை என்றுதானே அர்த்தம்?

ஆட்சியில் இருப்போருக்கு, `கோஸ்டல் கவர்னென்ஸ்’ என்றால், என்னவென்றே தெரியாது என்பதுதான் காரணம் என்கிறேன். கரைக்கடல், அண்மைக் கடல், ஆழ்கடல் பற்றிய அறிவு இருந்தால்தான் மீனவப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள முடியும். 8,118 கி.மீ நீளக் கடற்கரையையும் அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களையும் கொண்டுள்ள நம் நாட்டில், மீன்துறைக்குத் தனி அமைச்சர் இல்லை. அப்படியானால், அந்த வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் நீங்கள் தயாராக இல்லை. அப்படியிருக்கும்போது, அங்குள்ள பொருளாதாரத்தை நீங்கள் எப்படிக் கணக்கிட முடியும்? ஆனால், வரி போடுவதற்கு மட்டும் முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள்.''

``பி.ஜே.பி-யின் ஆதரவுக்குப் பிறகு, உங்களோடு நெருக்கமாக இருந்த இடதுசாரிகள் உங்களை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் செய்தார்களே?''

``அதை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவர்கள் இடதுசாரிகளாக இருப்பதால் என் நண்பர்களோ, விரோதிகளோ இல்லை. நான் என் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை எடுத்துவைப்பதற்காக, சக்கர வியூகங்களுக்குள்ளும் சென்றுவந்தேன் என்பதே என்னளவில் மகிழ்ச்சி. அடித்தள மக்களின் வாழ்க்கை புரியாத அதிகார பீடங்களிலும் என் மக்களின் வாழ்வியலைப் புரியவைக்க முடிந்ததே... போதாதா எனக்கு?!''

``கச்சத்தீவு விவகாரத்தில் நடந்த வரலாற்றுப் பிழை என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?''

``1974 காலகட்டத்தில் இந்திராகாந்தியின் தலைமையில் கச்சத் தீவு கொடுக்கப்பட்டது. அப்போது, ஒரு ஷரத்தைச் சேர்க்கின்றனர். அந்த ஷரத்து, `கச்சத் தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட, இந்தப் பகுதி மக்களின் பாரம்பர்ய உரிமை மீட்டுக் கொடுக்கப்படுகிறது' எனச் சொன்னது. ‘Heriditary Right of the People of the Region is Protected there’- என அந்த ஷரத்து தெளிவாகச் சொன்னது. நன்றாகக் கவனியுங்கள்... அது, `மீனவர்களின் பாரம்பர்ய உரிமை’ என்று சொல்லவில்லை. `அந்தப் பகுதியில் வாழும் அனைத்து மக்களின் பாரம்பர்ய உரிமை’ என்று சொன்னது. அது வழிபாட்டு உரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்றில்லை. பாரம்பர்ய உரிமைகள் அனைத்தும் அதில் அடக்கம். அவை அனைத்தும் மீட்டுக் கொடுக்கப்படுகின்றன எனச் சொன்னது. ஷிப்பிங், செயிலிங், பில்கிரிமேஜ் என எல்லா உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தது.

1976-லும் பிரச்னை தொடர்ந்தது. அப்போதும் இந்தியா-இலங்கைத் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இலங்கை, `நீ எங்கள் பகுதிக்கு வரக் கூடாது’ என்றது. இந்தியா, `நீ எங்கள் பகுதிக்கு வரக் கூடாது’ என இலங்கையை எச்சரித்தது. அப்படி இலங்கையை வரக் கூடாது என இந்தியா சொன்ன பகுதி எது? அதுபற்றி இப்போது வரை யாருக்கும் தெரியாது. அதுதான் ‘வெட்ஜ் பேங்க்’ (Wedge Bank). கன்னியாகுமரிக்குத் தெற்கே 50 நாட்டிக்கல் மைல் தொலைவில், உலக மீன்வளத்தின் தங்க வயலென்று போற்றப்படும் இந்த வெட்ஜ் பேங்க் இருக்கிறது. அதுவும் நமது பிரத்யேகப் பொருளாதார மண்டலத்துக்குள்ளேயே அது இருக்கிறது.

அந்தப் பகுதி இந்தியாவின் மீன் சுரங்கம் மட்டுமல்ல; அது உலகத்தின் மிகப் பெரிய மீன் சுரங்கம். அதில், இன்றும் இலங்கை மீனவர்கள் அத்துமீறி நம் வளத்தை அள்ளிக்கொண்டு போகின்றனர். ஆனால், அத்துமீறிய இலங்கை மீனவர்களாக நமக்குக் காட்டப்படுவர்கள், மிக எளிய, சமீபத்தில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட, சாதாரண பாரம்பர்ய இலங்கை மீனவர்களே. ஆனால், உண்மையில் அந்தப் பிரதேசத்தில் அத்துமீறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கும் வசதி படைத்த இலங்கை மீனவர்கள்தான். அந்தப் பகுதிக்குள் இலங்கை மீனவர்கள் வரக் கூடாது என்றுதான், 1976-ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்பட்டது.

1974-ம் ஆண்டில் `பாரம்பர்ய உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படுகின்றன’ என்று போடப்பட்ட ஷரத்து 1976-ல் ரத்தாகிவிடுகிறது. இலங்கை அரசியல்வாதிகள் அதை நுட்பமாகச் சாதித்துக்கொண்டனர். ஆனால், இந்திய அரசியல்வாதிகள் அந்த இடத்தில் மாபெரும் தவறிழைத்தனர்; துரோகம் இழைத்தனர். அதன் பிறகு, `1981 வரை எனக்கு அனுமதி கொடு' என்று இலங்கை கேட்டது. அதுவும் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்தப் பகுதியில் இலங்கை கோடீஸ்வர மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டார்களா? அதை நீங்கள் கண்காணித்தீர்களா? இல்லை. இதுவரை இல்லை. இந்த நிமிஷம் வரை கோடீஸ்வர இலங்கை மீனவன் அங்கு வேட்டையாடிக்கொண்டிருக்கிறான். அவன் அங்கு பிடிக்கும் மீன் என்ன தெரியுமா? நீலத் தூவி சூறை மீன்கள் (Bluefin Tuna), மஞ்சள் தூவி சூறை மீன்கள் (Yellowfin Tuna). அதன் விலை ஒரு கிலோ 70 டாலர். இது எப்படிச் சாத்தியம்? இங்கிருக்கும் அரசாங்கமும் அதிகாரிகளும், தெரிந்தும் அதைப் பற்றி மூச்சுவிடாமலிருப்பது மட்டுமல்ல... `லெட்டர் ஆஃப் பெர்மிஷன்' கொடுத்து பல நாட்டு வணிக மீனவர்களையும் அங்கு தொழில் செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு. இது தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகமல்லாமல் வேறென்ன?

`நம்மிடம் இப்படிப்பட்ட ஒரு வளம்மிக்க வெட்ஜ் பேங்க் இருக்கிறது. அங்கு வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கும் மீன்கள் கிடைக்கின்றன' என்ற விஷயத்தைப் பற்றிக்கூட நம் மீனவர்களுக்கு இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் சொல்லவில்லை. அந்தப் பகுதியில் போய் மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லை. அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தெரிந்த அதிகாரிகள், தெரியாததுபோல் நடிக்கிறார்கள்.''

``இப்போது கச்சத் தீவு மீட்கப்பட்டால், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று சொல்லலாமா?''

``கச்சத்தீவு மீட்பு என்பது ஓர் அரசியல் கூப்பாடு. கச்சத்தீவை மீட்டு எடுத்துவிட்டால், எந்தப் பிரச்னையும் தீராது. அதற்காக, `ஜோ டி குரூஸ் கச்சத் தீவை வேண்டாம் என்று சொல்கிறான்’ என்று அர்த்தம் இல்லை. கச்சத் தீவை மீட்டெடுத்தால், காய்ந்து கிடக்கும் ஒரு செத்த நிலம் உங்களுக்குக் கிடைக்கும்; அவ்வளவுதான். கச்சத் தீவைச் சுற்றி மீன் கிடையாது. மீன் கிடைக்கக்கூடிய இடம் கச்சத் தீவைத் தாண்டி, 35 முதல் 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் கிழக்கில் இருக்கிறது. அங்கு இந்திய மீனவர்கள் பாரம்பர்ய முறைப்படி மீன் பிடிக்கும் உரிமை மீட்கப்பட வேண்டும். அதுதான் இன்றைய தேவை.''

`` `ராமேஸ்வரம் மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாவதற்கு மீனவர்களின் பேராசையும் ஒரு காரணம்’ என்ற கருத்தும் இருக்கிறதே..?''

``மீனவர்களில் மூன்று வகையினர் உள்ளனர். பாரம்பர்ய மீனவர்கள், தொழில்முறை மீனவர்கள், வணிக மீனவர்கள். பாரம்பர்ய மீனவர்கள், கடலையும் கடற்கரையையும் தன் தாய்மடியாக நேசிப்பவர்கள். இவர்கள் கடலையும், காலநிலைகளையும் அறிந்தவர்கள். பாரம்பர்ய முறைப்படி மேலெழுந்து வரக்கூடிய மீன்களை மட்டும் பிடிப்பவர்கள்.

தொழில்முறை மீனவனுக்கோ, கடலோடும் கடற்கரையோடும் எந்த பந்தமும் கிடையாது. ஆனால், அவனும்கூட கடலைக் கபளீகரம் செய்ய மாட்டான். தனக்கு ஒரு தொழில் கிடைக்கிறது என்பதற்காக, வேற்று நிலத்திலிருந்து வந்திருப்பான்.

வணிகமுறை மீனவனோ, பாரம்பர்ய மீனவரில் இருந்து உடைமை வர்க்கமாக மாறியவன். கொழுத்த பணத்தோடு முதலீடு செய்து, லாபநோக்கில் தொழில்செய்பவன். `எவன் செத்தால் எனக்கென்ன… வள்ளத்தை எடுத்துப்போய் மீனை அள்ளிக் கொண்டுவா... முதலீடும் லாபமும்தான் என் நோக்கம். கடலை எப்படி வேண்டுமானாலும் அரித்து எடு்; அழித்து எடு’ என்று இரக்கம் இல்லாமல் செயல்படுபவன். இந்த வித்தியாசம் புரிய வேண்டும்.''

``கடலோர பாதுகாப்புப் படை, இந்தியக் கப்பல் படையின் உதவிகள் மீனவர்களுக்கு இக்கட்டான சூழலில் - குறிப்பாக துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களின்போது எந்த வகையிலாவது கிடைக்கின்றனவா?''
``கோஸ்ட் கார்டு, கோஸ்டல் செக்யூரிட்டி, மெரைன் போலீஸ் உதவிகள் மீனவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் அரிதிலும் அரிதான செயல். மீனவர்கள்தாம் அவர்களுக்குப் பலமுறை உதவுகிறார்கள். மீனவர்கள் ஆபத்தில் சிக்கும்போது, கோஸ்ட் கார்டை அழைத்தால், `கடலில் காற்று பலமாக இருக்கிறது, அலை பெரிதாக இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். காற்று மோசமாக இருக்கிறது; அலை பெரியதாக இருக்கிறது; அதனால்தான் மீனவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இவர்களை நியமித்து, சம்பளம் கொடுத்து, ஆயுதங்களும் கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களே ‘கடலில் எங்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனச் சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்? கடலையும் காற்றையும் அறிந்தவர்கள், கடற்புறம் தெரிந்தவர்கள் அந்த வேலைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.''

``மாநில அரசாங்கம் மீனவர்களுக்கான வசதிகளை, அதன் எல்லைக்குள் இருந்து எப்படிச் செய்கிறது?''

``தமிழ்நாட்டு மீன்வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக குளிர்பதனக் கிடங்குகள் ஆரம்பித்தார்கள். 1,500 படகுகள் இருக்கக்கூடிய ராமேஸ்வரத்தில் அந்தப் பதனக் கிடங்கு, 10-க்கு 11 அடியில் உள்ளது. அதில், ஒரு வேனில் ஏற்றக்கூடிய மீன்களைக்கூட வைக்க முடியாது. மீனவர்களை மீட்பதற்காக 1998-ம் ஆண்டில் படகுகள் வாங்கினார்கள். அப்போது கலைஞர் அரசு. அந்தப் படகுகளுக்கு `கயல்’, `முத்து’, `பவளம்’ என அவர் பெயர் வைத்தார். ஆனால், இப்போது அந்தப் படகுகளைப் போய்ப் பாருங்கள்... ராமேஸ்வரத்தில் அவை மணல் மூடிக் கிடக்கின்றன. ஆனால், அதற்கு இப்போது வரை வாட்ச்மேன், டீசல், கண்காணிப்பு, பராமரிப்பு எனச் செலவுகள் போய்க் கொண்டிருக்கின்றனவாம்.''

``கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நீங்களும் எதிர்க்கிறீர்கள் அல்லவா?''

''கண்டிப்பாக... அதன் அடிப்படையைப் புரிந்துகொண்டவர்கள் அதை எதிர்க்கத்தான் செய்வார்கள். கதிரியக்கம் சார்ந்த ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் அங்கு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர், கதிரியக்கத்தையும் சுமந்துகொண்டுதானே வெளியாகும்? அதோடு கதிரியக்கத்தைச் சுமந்துகொண்டு வெளியாகும் அந்தக் கழிவு நீர், அதிகபட்ச கொதிநிலையுடன் வெளியாகிறது. அது இயல்பிலேயே, இயல்பான டெம்ப்பரேச்சர் இல்லாமல், கூடுதல் கொதிநிலையான டெம்ப்பரேச்சருடன் வரும்போது, அது கடல் வளங்களை அழித்துவிடும். அதோடு, அதில் இருக்கும் கதிரியக்கம், அந்த நீரில் பரவி, மீன்களில் பரவி, அதை உண்ணும் மக்களிடமும் பரவும். அது ஆபத்தான ஒன்றுதான். அது தவிர, விபத்துக் காலங்களில் அணு உலையைச் சுற்றி வாழும் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் இழப்பீடு போன்றவை இன்றுவரை தெளிவுபடுத்தப் படவில்லை.''

``மீனவ சமூகத்திலிருந்து பொது அரசியலுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என யாரை அடையாளம் காட்டுவீர்கள்?''

``சிங்காரவேலர், எங்கள் சமூகம் பொது அரசியலுக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை. கொட்டில்பாடு துரைசாமி, லூர்து அம்மாள் சைமன், சின்னாண்டி பத்தர், ஜீவரத்தினம், மண்டல் கமிஷன் சுப்ரமணியம், மாரிமுத்து பக்தர், ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா, குரூஸ் பர்னாந்து, பொன்னுச்சாமி வில்லவராயர் போன்றவர்களைச் சொல்வேன்.''

``மீனவர் சமூகத்தில் இருந்து - குறிப்பாக உங்களுடைய சொந்த ஊரான உவரியில் இருந்து - பரதவர்கள் வாழ்க்கை, கடற்கரைகள் பற்றி தமிழில் வெளியான நூல்களையும், அதை எழுதியவர்களையும் நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?''

`` `அலை வாய்க்கரையில்' எழுதிய ராஜம் கிருஷ்ணனை, `கடலோர கிராமத்தின் கதை' எழுதிய தோப்பில் முகமது மீரானை, `கடல்புரத்தில்' எழுதிய வண்ணநிலவனை, நன்றியோடு நினைக்கிறோம். `சிப்பியின் முத்து' எழுதிய ஆசிரியர் ஒரு வங்காளி. இவர்கள் எல்லாம் மிகப் பெரிய பணியைச் செய்துள்ளார்கள். அவர்களோடு நானும் இணைந்து ஒரு பணியைச் செய்துள்ளேன்.''

``உங்களின் அடுத்த படைப்பு எப்போது?''

``தெரியாது. அது ஒரு வெடிப்பு. எப்படி வெளிப்படும், எப்போது வெளிப்படும் என்று தெரியாது. அது புத்தகமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. அது ஒரு போராட்டமாகவும் இருக்கலாம்; திரைப்படமாகவும் இருக்கலாம்; எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.''

``மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்தவர் வலம்புரிஜான். அவரைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?''

``வலம்புரிஜான், நடமாடும் பல்கலைக்கழகம். எங்களுக்கு எல்லாம் அவர் முன்னோடி. அவர் எங்களுடைய சொத்து. அந்தச் சொத்தை நாங்கள் இழந்துவிட்டோம். மீனவர்களுக்கு ஒரு புத்தி இருக்கும். ‘அடுத்தவனின் வெற்றியைத் தன்னுடைய தோல்வியாக உணரும் புத்தி.’ அந்தப் புத்திதான், அவரைக் காவு வாங்கியது. அவர் வாழ்ந்த காலத்தில், அவர் ஊரைச் சேர்ந்தவர்களே, அவர் காலைப் பிடித்துக் கீழே இழுத்து குப்புறத் தள்ளிவிட்டனர். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், அந்தத் தவற்றை இழைத்தனர்.

வலம்புரிஜானுக்கு நேர்ந்த அந்த விபத்து, இனிமேல் வரக்கூடிய இளைய தலைமுறைக்கு நேரக் கூடாது.''

``சாகித்ய அகாடமி விருதுவரை பெற்றுவிட்ட எழுத்தாளர் ஜோ டி குருஸ், எழுத்தாளர்களின் உலகத்திலிருந்து மிகத் தள்ளியே இருக்கிறாரே?''

``ஜோ டி குரூஸ் இலக்கியவாதியே இல்லை.''