Published:Updated:

பணமழை முதல் மரணம் வரை... - உலகிற்கு சேதி சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள்! #PrankGoneWrong

Damascus Time PRANK
Damascus Time PRANK ( TWITTER )

தன்னுடைய ட்விட்டர் அக்கவுன்டில் "நானும் பெட்ரோவும் இணைந்து இதுவரை செய்யாத அபாயகரமான ஒரு வீடியோவைப் பதிவு செய்ய இருக்கிறோம். இந்த ஐடியா என்னுடையது அல்ல” என்று பதிவேற்றினார். உலகமே நம்மைப் பார்த்து வியக்கப் போகிறது, வைரலாகப் போகிறோம் எனக் கனவு கண்டார்கள்.

`சிலர் தமாஷாக நினைத்து செய்கிற காரியங்கள் நமக்கு சீரியஸ் விஷயங்களாகத் தெரியும், சிலர் சீரியஸாக செய்கிற விஷயங்கள் தமாஷாகத் தெரியும்’. இதில் ப்ராங்க் வீடியோக்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தது. ப்ராங்க் வீடியோக்கள் செய்ய முரட்டுத்தனமான தைரியம் வேண்டும், முட்டாள்தனமான ஐடியாக்கள் வேண்டும். இது இரண்டும் இருந்து ப்ராங்க் வீடியோக்கள் செய்தவர்களை இந்த உலகம் பாராட்டியிருக்கிறது, சிலரை போட்டு குமுறியிருக்கிறது.

JALAL BROTHERS
JALAL BROTHERS
Facebook

ப்ராங்க் வீடியோ விரும்பி பார்க்கிறவர்களுக்குப் பரிச்சயமான பெயர் `ஜலால் ப்ரதர்ஸ்’ . அரபி நாட்டு ஷேக்குகள்போல உடையணிந்து, மக்கள் இருக்கிற இடங்களில் ப்ராங்க் வீடியோக்கள் செய்வது இவர்களது பொழுதுபோக்கு. பல மில்லியன் பார்வையாளர்கள் இவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு வீடியோவின் கமென்டுகளிலும் பார்வையாளர்கள் ஏகத்துக்கும் `உசுப்பேற்றி' விட ப்ரதர்ஸ் ஜெயிலுக்குப் போன கதையெல்லாம் நடந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மூன்று பேரும் சேர்ந்து வரலாற்றுச் சம்பவம் ஒன்றைச் செய்தனர். அரபிகள் போல உடையணிந்து சாலையில் போகிறவர்களிடம் ஒரு பையைத் தூக்கி வீசிவிட்டு ஓடிவிடுவார்கள். பார்ப்பவர்களுக்கு வெடிகுண்டை போடுவதுபோல இருக்கும். சம்பவத்தைப் பார்க்கிறவர்கள் பையைப் பார்த்ததும் அலறி அடித்து ஓட வேண்டும். பயம்தான் இவர்களின் கான்செப்ட். அதில்தான் புகழும், பணமும் கிடைத்தது. பிளான் போட்டு சம்பவத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்கள். பையைப் பார்த்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். சிலர் பயத்தில் கீழே விழுந்து எழுந்து ஓடினார்கள். பிரதர்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பார்வையாளர்கள் எண்ணிக்கை தாறுமாறாக உயர ஆரம்பித்தது.

இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஜலால் பிரதர்ஸ் அடுத்தகட்ட பரவசத்துக்குத் தயாரானார்கள். அதாவது ஒரு காரையும் போலியான AK 47 துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். சாலையில் போகிறவர்களைப் பார்த்துச் சுடுவது போலப் பயமுறுத்தினார்கள். பாதசாரிகள் பயந்து ஓடினார்கள். இதைப் பார்த்த பிரதர்ஸ் இன்னும் உற்சாகமானார்கள். ஒரு குழந்தையுடன் போன் பூத்தில் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்துச் சுட ஆரம்பித்தார்கள். அவர் பயத்தில் தன்னுடைய மகளைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அதை வீடியோவாக எடுத்து உலகத்துக்குக் காட்டினார்கள். காலம் நடக்கிற எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருந்தது.

JALAAL BROTHERS PRANK
JALAAL BROTHERS PRANK
YOUTUBE SCREEN SHOT

விதி முடிந்தால்தான் விரியன் கடிக்கும் என்று சொல்லுவார்கள், ப்ரதர்ஸ் விஷயத்தில் அதுதான் நடந்தது. எல்லை மீறுகிறார்கள் என்பது உலகத்துக்குப் புரிந்தது. விக்டோரியா போலீஸார் மூவரையும் தூக்கி உள்ளே வைத்தார்கள். வழக்கு பாய்ந்தது. தவறு செய்துவிட்டோம் மன்னித்துவிடுங்கள் என மூவரும் காலில் விழ மன்னித்து அனுப்பியிருக்கிறது நீதிமன்றம்.

தமாசு எல்லா நாளும் தமாஷாக இருக்காது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இரானில் நடந்தது. இரான் நாட்டின் டெக்ரான் என்கிற இடத்தில் இருக்கிற ஒரு சினிமா மாலுக்குள் திடீரென நான்கு பேர் கையில் துப்பாக்கிகளுடன் நுழைந்து விடுவார்கள். அதிலும் ஒருவர் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு மாலுக்குள் வந்திருப்பார். மாலுக்குள் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடுவார்கள். அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. 2017-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் இறந்திருக்கிறார்கள்.

Damascus Time MOVIE PRANK
Damascus Time MOVIE PRANK

இதுவும் அதைப் போன்ற நிகழ்வாக இருக்குமென நினைத்த மக்கள் பயந்து ஓடி ஒளிவார்கள். அதற்குள் செய்தி காட்டு தீ போலப் பரவ ஆரம்பித்தது. துப்பாக்கியோடு இருந்தவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த பிறகுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் நடிகர்கள். தீவிர விசாரணையில் இதற்குப் பின்னணியில் இருப்பது ஒரு திரைப்பட இயக்குநர் என்று தெரிய வருகிறது.

அவருடைய Damascus Time என்கிற திரைப்படத்தைப் பிரபலமாக்க விபரீதமாக யோசித்தது தெரியவந்தது. செய்தி வெளியாகி பல்வேறு பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப இயக்குநர் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அதோடு பிரச்னை முடிந்தது.

NELK
NELK
SCREEN SHOT YOUTUBE

டொரண்டோ நகரைச் சார்ந்த NELK என்கிற யூடியூப் சேனலை சேர்ந்த நான்கு பேர் மக்கள் நடமாட்டம் இருக்கிற இடத்தில் காரை நிறுத்தி, வருகிறவர்களிடம் `கோக்’ இருக்கு வேணுமா என ரகசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். கோக் என்பது கொக்கைனின் `கோட் வேர்ட்’. அமெரிக்காவில் கொக்கைன் விற்பனை செய்வது மிகப் பெரிய குற்றம். இதைப் பார்க்கிற சாதாரண ஆள் ஒருவர் டொரண்டோ போலீஸாருக்கு தகவல் சொல்லிவிடுகிறார். போலீஸும் சம்பவ இடத்துக்கு வந்து விடுகிறார்கள். கொக்கைன் விற்பனை செய்கிற நான்கு பேரும் காரில் ஏறித் தப்பிச் செல்ல முயற்சி செய்வார்கள். அதற்குள் போலீஸார் நான்கு பேரையும் சுற்றி வளைத்துவிடுவார்கள்.

தீவிரவாதிகளைக் கைது செய்வதுபோல நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்வார்கள். காரின் டிக்கியை திறந்து பார்த்தால் உள்ளே கொக்கோ கோலா டின் பாட்டில்கள் இருக்கும். ப்ராங்க் செய்தோம் என்கிற உண்மையை அப்போதுதான் சொல்லுவார்கள். போலீஸார் ஜோக்கை ஜோக்காக எடுத்துக்கொண்டதால் சிரித்துவிட்டு எல்லோரையும் விடுவித்தார்கள். நடந்த அனைத்து சம்பவங்களும் அடுத்த நாள் அவர்களுடைய இணையப் பக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

NELK
NELK

இது விதியோடு விளையாடிய சம்பவம். 1.5 இன்ச் கொண்ட என்சைக்கிளோபீடியா புத்தகத்தை மையமாக வைத்து நடந்த `ப்ராங்க்’. மோனலிசா பெரேஸ் (Monalisa Perez) புகழ்பெற்ற யூடியூப் ஸ்டார். அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். பல வீடியோக்களை அவரின் ஆண் நண்பரான பெட்ரோ என்பவருடன் சேர்ந்து பதிவேற்றியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பேசும்படியாக ஒரு வீடியோ பதிவேற்றவே ண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை. அதற்காகப் பல முயற்சிகள் எடுத்தார்கள். அதன்படி 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி தன்னுடைய ட்விட்டர் அக்கவுன்டில் ``நானும் பெட்ரோவும் இணைந்து இதுவரை செய்யாத அபாயகரமான ஒரு வீடியோவை பதிவுசெய்ய இருக்கிறோம். இந்த ஐடியா என்னுடையது அல்ல” என்று பதிவேற்றினார்.

உலகமே நம்மைப் பார்த்து வியக்கப் போகிறது, வைரலாகப் போகிறோம் எனக் கனவு கண்டார்கள். அப்பொழுது மோனலிசா கர்ப்பமாக இருந்தார். நடக்க இருக்கிற சம்பவம் இதுவரை யாரும் செய்யாதது. விஷயம் இதுதான், என்சைக்குளோபீடியா புத்தகத்தை பெட்ரோ மார்புக்கு நேராக வைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்தப் புத்தகம் 1.5 இன்ச் அகலம் கொண்டது. மோனலிசா .50 desert eagle என்றழைக்கக் கூடிய துப்பாக்கியை வைத்து புத்தகத்தை நோக்கிச் சுட வேண்டும்.

MONISHA AND PETRO
MONISHA AND PETRO
GOOGLE

எல்லாம் சரிபார்த்து மோனலிசா புத்தகத்தை நோக்கிச் சுடுவார். அவ்வளவுதான் புத்தகத்தைத் துளைத்துக்கொண்டு குண்டு பெட்ரோவின் இதயத்தைப் பதம் பார்த்தது. பெட்ரோ அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதில் இன்னொரு வேதனையான விஷயம் மோனாலிசாவின் மூன்று வயதுக் குழந்தை சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்தது. உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மோனலிஸா ``தவறு நிகழ்ந்துவிட்டது, உடனடியாக வாருங்கள் என சொல்லிவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். போலீஸார் மோனாலிசாவை தூக்கி உள்ளே வைத்தார்கள். சில வருடங்கள் சிறைத் தண்டனையும், அடுத்த பத்து வருடங்களுக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ளக் கூடாது எனவும், யூடியூபில் இருந்து வருகிற பணத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தீர்ப்பளித்தது. தமாஷு எப்பவும் தமாஷாக இருக்காது என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் மோனலிசா.

நம்மூரில் கூட ப்ராங்க் வீடியோக்கள் பற்றி சமீபத்தில் விமர்சனம் வைத்திருந்தது நீதிமன்றம். எல்லை மீறினால் எல்லாமே ஆபத்து என்பதற்கு ப்ராங்க் வீடியோக்கள் விதிவிலக்கில்லை.

அடுத்த கட்டுரைக்கு