Published:Updated:

`தோட்டத்துக்கு வா, தோசை சாப்பிடலாம்' ஒரு துரோகத்தின் கதை! - ஜெ.தீபா கலாய்பீடியா

பிரியாணி செய்ய பட்டை, கிராம்பு வாங்கச்சென்ற மாதவன், அந்தக் காசில் ரஸ்னா வாங்கிக் குடித்துவிட்டதால், பிரியாணி செய்யமுடியாமல், காசும் கொடுக்கமுடியாமல் சோகத்தில் இருக்கிறார் தீபா. ஏன், ```எனக்கு அரசியலே வேண்டாம்" என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்.

ஜெ.தீபா
ஜெ.தீபா

பெயர் : ஜெ.தீபா

பிறப்பு : நவம்பர் 10, 1974

வயது : 44

இருப்பிடம் : தி.நகர், சென்னை

(`கேட்டை ஆட்ட வேண்டாம். வீட்டில் ஆள் இல்லை' என்கிற போர்டு எப்போதும் மாட்டியிருக்கும்)

ஜெ.தீபா
ஜெ.தீபா

ஜெ.தீபா என்பவர் தனது அதிரடி அணுகுமுறைகள் மூலம் உலகப்புகழ் பெற்ற அரசியல்வாதி ஆவார். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார். இவர் பேபிம்மா, தீபாம்மா, குட்டிம்மா மற்றும் மக்கள் தலைவி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சாதனைகள் :

திடுதிப்பென ஒரு நடுராத்திரியில் எழுந்து, ``தமிழக மக்களையும் அ.தி.மு.க-வையும் காப்பாற்றியே தீருவேன்" என அலறியவர், ஒருநொடி யோசித்துவிட்டு ``ஓ கனவா..." என மாதவனிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி அருந்தினார். மறுநாளே, கனவை நினைவாக்கும் முயற்சியில் `எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்கிற அமைப்பையும் தொடங்கினார். ஏதோ பேங்க் அக்கவுன்ட்டைப்போல கட்சியையே தன் பெயரில் தொடங்கியது தீபாவின் தன்னம்பிக்கையை பறைசாற்றுகிறது.

அரசியல் அத்தியாயத்தின் ஆரம்பப்புள்ளி
அரசியல் அத்தியாயத்தின் ஆரம்பப்புள்ளி

``தீபாவின் கட்சியில் தீபா மட்டும்தான் டீ ஆற்றிக்கொண்டிருக்கிறார்" என எத்தனையோ பேர் கிண்டல் கணைகளை எய்திருக்கிறார்கள். `அப்படி எல்லாம் இல்லை' என பதிலடி கொடுக்க, கட்சியில் இருக்கின்ற பத்து பேரும் மூன்று குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டார்கள். பத்து பேரை சரிபாதியாய் மூன்று குழுக்களாகப் பிரித்த சாதனையும் தீபாம்மாவை சேரும். `ஜெ’ தீபா பேரவையின் விழுப்புரம் மாவட்ட செயலாளரான மணிகண்டன், கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட சம்பவம், உண்மையிலேயே ஜெ தீபா பேரவையில் ஆட்கள் இருப்பதை மேலும் உறுதிசெய்தது.

இளைய புரட்சித் தலைவர், பேபிப்பா, தீபாவின் கணவர் என பல ரூபங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாதவன், எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என எதிரிலேயே புதுக்கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கட்சியின் தாய்க்கழகமாக தீபாவின் பேரவை கருதப்படுகிறது. `டிஜிட்டல் இந்தியா' திட்டம் வருவதற்கு முன்னரே, ஒரு கட்சியை டிஜிட்டல்மயமாக நடத்தியது தீபாம்மாதான்.

பால்கனியில் பேபிம்மா
பால்கனியில் பேபிம்மா

பேரவையின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குரூப்புக்கு தீபாதான் அட்மின். யாரெல்லாம் கட்சியின் கொள்கைக்கும் கோட்பாடுக்கும் விதிகளுக்கும் எதிராக மீம்ஸ் மற்றும் ஃபார்வார்டு மெசேஜ்களை அதில் ஷேர் செய்கிறார்களோ, அவர்களை கட்சியிலிருந்து, அதாவது குரூப்பிலிருந்து நீக்கிவிடுவார் அட்மின் தீபா. அதுதான் கட்டளை, கட்டளையே சாசனம்! ஜெயலலிதாவின் கர்சீஃப்புக்குக்கூட உரிமையாளர் இந்த தீபாதான். யார் சொன்னது, அவரே சொல்லிக்கொண்டார்!

வேதனைகள்

பஞ்சு மிட்டாய் கலர் உடையில் தீபாம்மா
பஞ்சு மிட்டாய் கலர் உடையில் தீபாம்மா

`அரசனூர் சிறுவர்கள் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி' டைப்பில் அரைகுயர் லாங் சைஸ் நோட் ஒன்றைத் தூக்கிக்கொண்டு, கட்சி ஆட்களிடம் விருப்பமனு கட்டணத்தை வாங்கியிருந்தார் தீபா. கடைசியில், தேர்தலிலேயே நிற்காமல் கட்சிக்காரர்களுக்கு `கல்தா' கொடுத்தார். ``நான் கல்தா கொடுத்ததுபோல, காசையும் திருப்பிக் கொடுத்துவிடுவேன். வெறும் காசு மட்டுமல்ல, பயணப்படி, பிரியாணிபடி எல்லாம் சேர்த்துக்கொடுப்பேன்" என சொல்லியிருந்தார்.

பிரியாணி செய்ய பட்டை, கிராம்பு வாங்கச்சென்ற மாதவன், அந்தக் காசில் ரஸ்னா வாங்கிக் குடித்துவிட்டதால், பிரியாணி செய்யமுடியாமல், காசும் கொடுக்கமுடியாமல் சோகத்தில் இருக்கிறார் தீபா. ஏன், ``எனக்கு அரசியலே வேண்டாம்" என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர். இதைக் கேட்டு மக்கள் சோகத்திலும் தொண்டர்கள் மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள்.

2017 டிசம்பரில் நடந்த இடைத்தேர்தலில் கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் தீபா. ஆனால், சொத்து ஆவணம் தொடர்பான குளறுபடியைக் காரணம்காட்டி வேட்புமனுவை நிராகரித்து, வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சியது தேர்தல் ஆணையம். ஒருமுறை, `தோட்டத்துக்கு வா, தோசை சாப்பிடலாம்’ என்று தம்பி தீபக் அழைக்க, கிளம்பினார் அக்கா தீபா. அங்கே தீபக்கைத் தீபா திட்ட, மாதவனும் தீபக்கைத் திட்ட, சம்பந்தமேயில்லாமல் டென்ஷன் ஆன டிரைவர் ராஜாவோ, மாதவனைத் திட்ட, யார், யாரைத் திட்டுகிறார்கள் எனப் புரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு வேதனையில் துடித்தது தமிழகம்.

கையெடுத்துக் கும்பிடும் மக்கள் தலைவி
கையெடுத்துக் கும்பிடும் மக்கள் தலைவி

2017 மார்ச் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தலில் தீபாவுக்கு `படகு' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. படகை சாலையில் ஓட்டிவந்து பிரசாரம் செய்யமுடியாது என்ற காரணத்தினாலும், அந்தத் தேர்தலே நடக்கவில்லை என்ற காரணத்தினாலும் தீபாவின் பிரகாசமான வெற்றிவாய்ப்பு விதியின் சதியால் பறிக்கப்பட்டது.

குழப்பங்கள் :

முதல் நாள் நண்பர் ராஜா நீக்கம், இரண்டாவது நாள் கணவர் மாதவன் நீக்கம், மூன்றாவது நாள் ராஜா சேர்ப்பு என வாட்ஸ்அப் குரூப்பில் சேர்ப்பதும் நீக்குவதுமாக குழப்ப கும்மியடிப்பதில் தீபாவுக்கு நிகர் தீபாதான். ஒருமுறை, ``அ.தி.மு.க-வும் டி.டி.வி-யும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளார்கள்' என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க, டி.டி.வி எங்கள் பேரவை என அனைத்திலும் சேர்த்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்" என்றார் தீபா. ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா!

குழப்பத்தில் தீபா
குழப்பத்தில் தீபா

`எந்தவொரு தீய சக்தியாலும் என் லட்சியப் பயணத்தை தடுக்கமுடியாது.’, `துரோகிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என வாட்ஸ்அப்பில் மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் வைப்பதைப்போல அடிக்கடி எதையாவது சொல்லிக்கொண்டிருப்பார் தீபா. இன்றுவரை, அந்தத் துரோகிகள் யார் எனச் சொல்லாமலேயே `அதெல்லாம் சொல்றதுக்கில்ல' என கோடை இடி குமாராய் குழப்பிக்கொண்டிருக்கிறார்.

தனக்கும் ஜெயலலிதாவுக்கும் 70% உருவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார் தீபா. அதே நேரம், ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க என்னிடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும் என்றும் கொந்தளித்திருக்கிறார். அரசியலே வேணாம் என தீவிர அரசியலில் இருந்தும் விலகியிருக்கிறார். இம்மூன்றையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்துப் பார்க்கையில்... ஆமாம். அதேதான்!

மேலும் படிக்க :

பால்கனி பேபிம்மா - குறுநாவல்

மாதவனாய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை - கொள்கைளும் கோட்பாடுகளும்

அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்! - சுயசரிதை

தீபா எனும் சகாப்தம்
தீபா எனும் சகாப்தம்

மேலும் பார்க்க :

தானா சேர்ந்த கூட்டம்

தீபாம்மா எங்கள் பேபிம்மா