Published:Updated:

மூன்றாம் கலைஞர்,இரண்டாம் தளபதி, முதல் உதய்னா! - உதயநிதியின் கலாய்பீடியா

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் சாதனைகளும் வேதனைகளும்.

பெயர் : உதயநிதி ஸ்டாலின்

பிறப்பு : 27 நவம்பர், 1977

வயது : 41

இருப்பிடம் : சென்னை

காலரைத் தூக்கிவிடும் உதயநிதி
காலரைத் தூக்கிவிடும் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் என்பவர், நடிகரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் ஆவார். இவர், `மூன்றாம் கலைஞரே', `ஐந்தாம் தலைமுறையே' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

திரைப்படத் துறையில் சாதனைகள் :

உதயநிதி ஸ்டாலின், கேமியோவுக்கே பெயர்போன கே.எஸ்.ரவிக்குமாருடனே கேமியோ ரோலில் அறிமுகமான சாதனையைக் கொண்டவர். ஹாலிவுட்டின் `டார்க் நைட்', `பேக் டு தி ஃப்யூச்சர்', `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' போல கோலிவுட்டின் முதல் ட்ரையாலஜியான `ஓகே ஓகே' டிரையாலஜியின் நாயகன் இவர்தான்.

மூன்றில் ஏதோவொரு படத்தில் உதயநிதி
மூன்றில் ஏதோவொரு படத்தில் உதயநிதி

`ஒரு கல் ஒரு கண்ணாடி', `இது கதிர்வேலன் காதல்' மற்றும் `நண்பேன்டா' எனும் அம்மூன்று படங்களிலும் சரிசமமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எந்தக் காட்சி, எந்தப் படத்தினுடையது என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிறுமூளை குழம்பும்! இவர், தொடர்ந்து நான்கு படங்கள் ஹாரிஸ் ஜெயராஜுடன் பணியாற்றிருக்கிறார். இவர் நடிப்பைப் போலவே, ஹாரிஸின் பாடல்களும் எந்தப் பாடல் எந்தப் படத்தினுடையது என பெருமூளையைக் குழப்பும்!

``எனக்கு அரசியலில் எப்போதும் ஈடுபாடு இருந்தது கிடையாது. சொல்லப்போனால், எனக்கு அரசியலே வேண்டாம். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்!"
உதயநிதி ஸ்டாலின்

`ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துடன் இணைந்து `வேணாம் மச்சான் வேணாம்' பாடலுக்கு அழகாய் நடனமாடியிருப்பார். இவர், `கெத்து' என்ற படத்தில் கெட்-அப் சேஞ்ச் செய்து நடித்தார். அந்த கெட்-அப்பைதான் `ஜில்லா' படத்தில் விஜய் காப்பியடித்திருப்பார். ஆனால், `ஜில்லா' படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், `கெத்து' வெளியானது குறிப்பிடத்தக்கது. `மனிதன்', `சரவணன் இருக்க பயமேன்', `பொதுவாக எம்மனசு தங்கம்', `இப்படை வெல்லும்', `நிமிர்' எனத் தனது படத் தலைப்புகளின்மூலம் இத்தமிழ் கூறும் நல்லுலகுக்கு எதையோ குறியீடாய் உணர்த்திவருகிறார் இவர். மிஷ்கினின் இயக்கத்தில் `சைக்கோ' என்ற படத்தில் நடித்துவருகிறார்.

`மனிதன்' படத்தில் உதயநிதி
`மனிதன்' படத்தில் உதயநிதி

`லாலா கடை சாந்தி... உன்னால் ஆனானே நான் பூந்தி' என்கிற இவரது பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு பூந்தி சாப்பிடும் ஆசை வரும். `பாகுபலி-2' உடன் போட்டி போட்டுக்கொண்டு வெளியான ஒரே படம், எனது `சரவணன் இருக்க பயமேன்'தான் என்கிற கர்வம் இவரிடம் இருக்கிறது. ஆனால், `பாகுபலி -2 'வெளியாகி 14-15 நாள்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் வெளியானது. ப்ச்ச்... அரக்கோணம் தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, உதயநிதி ரசிகர்களை ஜெகத்ரட்சகன் களமிறக்கினார். இதன்மூலம், இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதை நம்மால் உணரமுடிகிறது.

அரசியலில் சாதனைகள் :

இவர் 27 நவம்பர், 1977-ம் ஆண்டு பிறந்தார். இதுவும் இவரது அரசியல் சாதனையாக, அரசியலில் கடந்துவந்த பாதையாக உடன்பிறப்புகளால் உரக்கச்சொல்லப்படுகிறது. "பிறந்தது முதல் நான் தி.மு.க-காரன்தான்" என இவரும் சொல்லியிருக்கிறார். "என்னைக்கூட அடுத்த இளைஞரணித் தலைவர்னு சொன்னாங்க. அதைக் கேட்டப்போ சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக்காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்குத்தான் பதவிகள் போகணும்... போகும்! " என்று தனக்கு அரசியலிலும் நடிக்கத் தெரியாதென கெத்து காட்டியவர். சமீபத்தில்தான், தி.மு.க-வின் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.

கெத்து கெட்டப்பில் உதயநிதி
கெத்து கெட்டப்பில் உதயநிதி

திருவாரூரில் உதயநிதி வேட்புமனு தாக்கல் செய்யப்போகிறார் என யாரோ கொளுத்திப்போட, கொதித்தனர் உடன்பிறப்புகள். காலை 10 மணிக்கு, "உதயநிதி நிற்ககூடாது" என பேசிக்கொண்டிருந்தவர்கள், இரவு 10 மணிக்கு "அவரது ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஜெயிச்சுரலாம்டா. உதயநிதிதான் நிற்கணும்" என அந்நியனாய் மாறினார்கள். இதுபற்றிய ஒரு ஆய்வை முகநூலில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் டிமிட்ரி.

வேதனைகள் :

உதயநிதி கடந்துவந்த பாதை என்ற பெயரில், இவர் நடித்த `கெத்து', `இ.க.கா', `ச.இ.ப', `பொ.எ.த' போன்ற படங்களை எல்லாம் போட்டு கலாய்க்கிறார்கள். இது இவருக்கு மட்டுமல்லாது, அந்தப் படங்களைத் தெரியாத்தனமாய்ப் பார்த்த எல்லோரையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகிறது. அதுமட்டுல்லாது, `டுர்ர்ர்ர்...' என்கிற கேப்ஷனோடு, மாடி கைப்பிடியில் சறுக்கி விளையாடும் புலிகேசியின் படத்தைப் போட்டும், `கடந்து வந்த பாதை' என கலாய்த்துக் கதறவிடுகிறார்கள். ஒருமுறை, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த மு.க.அழகிரி, `அரசியல் ஒரு சாக்கடை; அதில் யார் வந்தால் எனக்கென்ன' என்று காட்டமாகக் கூறினார். `மகேந்திர பாகுபலி-பல்வாள்தேவனு'க்குப் பிறகு, `அருள்' படத்துல வர்ற வடிவேலு-விணுசக்கரவர்த்திக்குப் பிறகு பயங்கரமான பெரியப்பா-மகன் காம்போ என்றால், அது உதயநிதி-மு.க.அழகிரி காம்போதான் என பரவலாகப் பேசப்பட்டது.

உதயநிதி
உதயநிதி

ஒருமுறை, கூட்டணி உடன்படிக்கைக்காக அறிவாலயம் வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இவரைப் பார்த்து "ஹே வூ இஸ் உதயநிதி?" எனக் கேட்டுவிட்டார். "இதுக்காக தலைவர் பையனை இந்திப் படத்துலயா நடிக்க வைக்க முடியும்?’’ என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை, `லாலா கட சாந்தி' இந்தியைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுக்க ஃபேமஸ் என்று. அதைச் சொல்லியிருந்தாலே முகுலுக்குத் தெரிந்திருக்கும்.

`` 'கிராம சபை கூட்டத்தை நான்தான் கண்டுபிடிச்சேன்' என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்" என ஸ்டாலின் கிராம சபை நடத்திய சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு, தக் லைஃப் காட்டினார் உதயநிதி. இது சாதனையில்தானே வரும் என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள், `நமக்கு நாமே' நேரத்தில் எடுக்கப்பட்டது என்பதுதான் இதை வேதனையில் சேர்த்துவிடுகிறது.

"குடும்பம் என ஒன்று இருந்தால் அரசியல் செய்வார்கள்தான்"
கருணாநிதி

`மனிதன்' என்கிற படத்திற்கு, தலைப்பு தமிழில் இல்லை என்கிற காரணத்தால், இவருக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. மனிதன் என்கிற வார்த்தையே தமிழ் கிடையாது என தமிழ் பேசும் மனிதர்களுக்கு அன்றுதான் தெரிந்திருக்கும்.

மேலும் பார்க்க :

இளைஞரணி தலைவராக உதயநிதி
இளைஞரணி தலைவராக உதயநிதி

இது, 'கதிர்வேலன் காதல்'தில்லு முல்லு பண்ணலை பாடல் கெத்து கெட் அப் சேஞ்சு டுடோரியல்

மேலும் படிக்க :

மூன்றாம் கலைஞரும் மூன்றாம் உலகப்போரும், லாலா கடை சாந்தி! - காட்சியலின் உச்சம் 'மனிதன்' எனும் தமிழ்ச்சொல்.

அடுத்த கட்டுரைக்கு