Published:Updated:

''மதுவாசனை இல்லாமல், மல்லிகைப்பூ வாசனையில் இருந்ததனால்...'' - மதுகுடிப்போர் சங்க அட்ராசிட்டீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன்
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன்

''பாருக்குள் நுழையும் முன் மருத்துவ வசதி, வீட்டுக்கு கொண்டுபோய்விட பேருந்து வசதி... ரஜினி, கமல் அணுகினால் கூட்டணி போட்டுக்கலாம்!''

எத்தனையோ லெட்டர்பேட் கட்சிகளும் சங்கங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதில் முக்கியமானது மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கம். இதன் தலைவர் செல்லப்பாண்டியன் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு அளவேயில்லை. 144 நாள்களாக மூடியிருந்த மதுக்கடைகள் திறந்ததையொட்டி அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம்.

டாஸ்மாக் வரிசையில் நிற்கும் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் கொடுத்து முடித்த கையுடன் சாதனைத் தொனியில் பேசத்தொடங்கினார். "கட்சி கொடியில்லாமல் கிராமங்கள் இருக்கலாம். கட்டிங் போடாத கிராமங்கள் கிடையாது. நாங்க குவாட்டரில் கை வைத்தால்தான் யாரும் கோட்டையில் கொடியேற்ற முடியும். அந்த வகையில, அரசியல், ஆன்மீகம், ஐடி கம்பெனினு மூணுலயும் ஆதிக்கம் செலுத்திக்கிட்டிருக்கோம். தமிழக அரசாங்கத்துடைய பட்ஜெட்ல ஐந்தில் ஒரு பங்கு நாங்க கொடுத்தது (மார் தட்டிக்கொள்கிறார்). நாங்க தள்ளாடி கிடக்கும்போது எங்களை யாரும் தூக்கிவிடலை. ஆனா, தமிழ்நாட்டுடைய பட்ஜெட்டை தூக்கணும்னா நாங்க தேவைப்படுறோம்.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

இந்த நிலைமையில எங்களை குடிகாரங்க, வேலை வெட்டி இல்லாவங்கனு சொல்றாங்க. அதை மாத்தி எங்களுக்கான மரியாதையைக் கொடுத்து மதுப்பிரியர்கள் அப்படிங்கிற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். இன்னிக்கு எல்லோரும் அப்படி சொல்ல ஆரம்பிச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. தமிழ்நாட்டுடைய அரசியல்வாதிகள் வெளியே மது கூடாதுனு சொல்வாங்க. ஆனா, உள்ளுக்குள்ள எங்க மேல அதீத அன்பு வெச்சிருக்காங்க. தமிழ்நாட்டுடைய எதிர்காலமே எங்களை வெச்சுதான் இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

61.4% மதுப்பிரியர்கள் தமிழ்நாட்டுல இருக்கோம். தமிழ்நாட்டுல எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். அத்தனை கட்சியிலும் எங்க ஆள்கள் ஸ்லீப்பர்செல்களா இருக்காங்க. மதுபாட்டிலின் மூடியைத் திறந்த எல்லோரும் எங்க உறுப்பினர்கள்தான். ஆனா, நிர்வாகிகள் ஆகணும்னா குறைந்தது பதினைஞ்சு பிராண்ட் பெயர்களைச் சொல்லணும். அப்போதான் எங்க சங்கத்துடைய துண்டை தோளில் சுமக்கும் பெருமை கிடைக்கும். 18-ம் தேதி டாஸ்மாக்கை திறந்திருக்காங்க. பாட்டிலுக்கு மேல 30 ரூபாய் கேட்குறாங்க. இதுபோக, போலியான மதுபானங்கள் இருக்கு. மதுபான ஆலைகள் வெச்சிருக்கிறவங்க, சில்லறை விற்பனை செய்றவங்களோட சங்கமும் சேர்ந்து கூட்டு கொள்ளை அடிக்குறாங்க. இந்தக் கொடுமை எல்லாம் பார்த்துதான் அரசியல் மாற்றம் தேவைனு களத்துல குதிச்சுட்டோம். தமிழ்நாட்டுல போதைக்கு அடிமையாகிவிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களைச் சுரண்ட நினைக்கிறாங்க. இது பத்தி உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுது தெரியுமா?'' என்று அவர் சொன்னதும் நமக்கு பக்கென ஆகிறது.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

"2016 தேர்தல் அறிக்கையில படிப்படியாக மதுவிலக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிபோதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா சொல்லியிருந்தாங்க. ஆனா, அதை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ரெண்டு பேரும் செய்யலை. அதனால, டாஸ்மாக்கை மூடியவுடன் குக்கரில் காய்ச்சுறது, சானிடைசர் குடிக்கிறதுனு மதுப்பிரியர்கள் பரிட்சார்த்த முயற்சிகள் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 61.4% மதுப்பரியர்களில் 40% பேர் லாக்டெளன்ல மதுவை மறந்து இருந்திருக்காங்க. அப்படி மதுவாசனை இல்லாமல் மல்லிகைப்பூ வாசனையில் இருந்ததனால எங்க உறுப்பினர்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைச்சிருக்கு. எல்லாருடைய வீட்டிலயும் 'குவா குவா' சத்தம் கேட்க காரணமா இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நாங்க நன்றிக் கடன்பட்டிருக்கோம். எங்க உறுப்பினர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பேரையே வைக்கலாம்னு இருக்கோம்" என்றவரிடம் பொம்பளை குழந்தை பிறந்தாலும் பழனிசாமிதானா என்றதற்கு, யோசித்தபடி, "அட ஆமா... சரி வள்ளி, தெய்வானைனு வெச்சுக்குறோம்" என்று சிரிக்கிறார்.

"மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட டவுசர் மாடல் ஜட்டியை போடுங்கன்னு இன்றைய இளைஞர்கள்கிட்ட சொல்லியிருக்கேன். அதை ஏத்துக்கிட்டாங்க. தவிர, உடம்புக்கு நல்லதுனு கொய்யாப்பழம் சாப்பிட சொல்லிருக்கேன். சிறந்த சைட்டிஷும் அதுதான்" என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னவர் திடீரென, "சரக்கு எப்படி தயாராகுது தெரியுமா?'' என்று எதிர் ஆல்கஹால், மொலாசஸ், காஸ்டிக் சோடா, நியூட்ரலைஸ், எக்ஸ்ட்ராக்‌ஷன் என சயின்ஸ் பேசுகிறார். பிறகு, விசாரிக்கும்போதுதான் தெரிந்தது செல்லபாண்டியன் விலங்கியல் பட்டதாரியாம்.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

அவரை சினிமா பக்கம் அழைத்து வந்து பிடித்த பாடல் கேட்டால், "'சிங்காரி சரக்கு', 'தண்ணியை போட்டா சந்தோஷம் பிறக்கும்', 'பங்கி அடிச்சேன்டி பான் பீடா போட்டேன்டி', 'ஓ ஓ கிக்கு ஏறுதே'" என்று பாடி காட்டுகிறார். ''ரஜினியும் கமலும் எங்களைத் தேடிவந்தால் 2021 தேர்தலை எப்படி சந்திக்கலாம்னு யோசிப்போம்" என்றவரிடம் இப்போ உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார் எனக் கேட்டோம். "எனக்கு எப்போவும் விஜய்தான். அவருடைய அப்பா சமூக மாற்று சிந்தனையாளர். 'சட்டம் ஒரு இருட்டறை' எல்லாம் அருமையான படம். நாளைய தலைமுறைக்கு வழிகாட்டி செல்வதற்கு தகுதியான நபர்" என ஷாக் கொடுக்கிறார்.

"நாங்க சரக்கு அடிக்கும்போது எங்க கூட இருந்து சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டு எங்களுக்கு ஊத்திக்கொடுத்த ஆள்கள்தான் இன்னிக்கு அரசியல்வாதிகளாக இருக்காங்க. அதெல்லாம் இப்போதான் எங்களுக்கு புரியுது. 2021 தேர்தல்ல நாங்க உஷாராகிடுவோம். பார்தான் எங்களுக்கு அரசியல் பயிற்சி மையமா இருக்கு. நான் முதல்வரானால் மதுப்பிரியர்களுக்கு உல்லாச நகரம் ஏற்பாடு பண்ணிடுவேன். அதுக்கு பெயர் கூட வெச்சாச்சு 'பேரடைஸ் சிட்டி'. எந்த சரக்கை எந்த அளவோடு குடிக்கலாம்னு மருத்துவர் ஆலோசனையோடுதான் உள்ளேயே போக முடியும்.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

பிரியமான மதுவகைகளை சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது அவங்களை வீட்டில் கொண்டுபோய்விட பேருந்து வசதி, மதுப்பிரியர்களின் குடும்பங்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகைனு நிறைய திட்டங்கள் இருக்கு. 'குடிப்போருக்கு புணரமைப்பு, குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு' - இதுதான் எங்க கொள்கை. எல்லாம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். கொரோனாவா, குடிமகன்களானு பார்க்கும்போது குடிமகன்கள்தான்னு முடிவு பண்ணித்தான் டாஸ்மாக் திறந்துவிட்டார், எடப்பாடி பழனிசாமி. மதுப்பிரியர்களுக்கு சாதகமாக இருக்கார். அதேசமயம், பாட்டிலுக்கு மேல் காசு வாங்குறது தொடர்ந்தால் எங்களுக்கு கெட்ட கோபம் வந்திடும்" என்றதும் மூக்குடன் சேர்ந்து அவரின் காதுகளும் சிவக்கின்றன.

Sunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை?

"கடைசியா எல்லோரும் பேசுற விஷயத்துக்கு நானும் கருத்து சொல்லிடுறேன்" என்றவர் தோனி ஓய்வு குறித்து பேசுகிறார். "தோனியைப் போன்ற திறமையான இளைஞர்கள் பயற்சி களத்தில் இருக்காங்க. மிகச்சிறந்த வீரரான தோனி ரிட்டயரானது ரசிகனா எனக்கு மிகப்பெரிய வருத்தம். ஆனால், பல தோனிகள் உருவாகிட்டு இருக்காங்க அப்படிங்கிறதை மத்த நாட்டு வீரர்கள் மனசுல வெச்சுக்கோங்க'' என சவால் விட்டவர், "நேரமாச்சு. எங்க சங்க உறுப்பினர்கள் எனக்காக காத்திருப்பாங்க. நான் சீக்கிரம் போகணும்" என கழுத்திலிருந்த துண்டை சரிசெய்தபடி கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு