Published:Updated:

``ஒரு பொய்யாவது சொல் கண்ணே... கண்ணே" - வடிவேலு ரிலேஷன்ஷிப் பரிதாபங்கள்! #RelationshipGoals

வடிவேலு
வடிவேலு

ஜாதகத்துக்கும் ரேஷன் கார்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மொரட்டு சிங்கிள் அவர்.

"வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும்" என்று கஷ்டங்களை எளிதாகக் கடந்துபோகும் வாழ்க்கை தத்துவத்தை, ஒரு வரியில் சொன்னவர் வடிவேலு. தான் நடித்த படங்களில், வாழ்வின் அனைத்துத் தருணங்களுக்கும் இதுபோன்று ஏதேனும் ஒரு வசனமோ, கதாபாத்திரமோ வைத்திருப்பார் வடிவேலு. தற்போது 90'ஸ் மற்றும் 2 k கிட்ஸ் மத்தியில் டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தை 'ரிலேசன்ஷிப் கோல்ஸ்.' ரிலேஷன்ஷிப் கோல்ஸ் என்பது எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைப் பல கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார் வடிவேலு. அதில் சில கதாபாத்திரங்கள் இங்கே அடிவரை இறங்கி அலசுவோம்...

நம்மல வச்சு என்ன சொல்லப்போறாய்ங்க
நம்மல வச்சு என்ன சொல்லப்போறாய்ங்க

முதலில், உங்கள் காதல் உறவுகளை எப்படியெல்லாம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்...

கல்யாண சுந்தரம்

கல்யாண சுந்தரம் பெரிய சொம்பு கேட்டதாக திரித்துக் கூறப்பட்ட காட்சி
கல்யாண சுந்தரம் பெரிய சொம்பு கேட்டதாக திரித்துக் கூறப்பட்ட காட்சி

மொரட்டு சிங்கிள்ஸுக்கெல்லாம் முதன்மையானவர் கல்யாண சுந்தரம். ஜாதகத்துக்கும் ரேஷன் கார்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மொரட்டு சிங்கிள் அவர். லோக்கல் பெண்களிலிருந்து ஃபாரின் பெண்கள் வரை அனைவராலும் ரிஜெக்ட் செய்யப்பட்டு மன வருத்தத்திலிருந்து கல்யாண சுந்தரத்துக்குக் கடைசியாக ஒரு பெண் கிடைத்தார். 'ஒரு ரூபாய்கூட வரதட்சணை வாங்க மாட்டேன்' என்ற சபதம் ஏற்றபின் கிடைத்த பெண் அவர். கல்யாணத்தில், தாலி கட்டுவதற்குமுன் காசு கேட்டு வந்த கல்யாண புரோக்கரை 'காசு கொடுக்க முடியாது' என்று பகைத்துக் கொண்டார் கல்யாண சுந்தரம். இதன் விளைவாக, 'சொம்பில் தண்ணீர் வேண்டும்' என்று கல்யாண சுந்தரம் கேட்க, அதை 'மாப்பிள்ளை சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம்' என புரோக்கர் திரித்துக் கூற தாலி வரை வந்த அந்தக் கல்யாணமும் தடைப்பட்டுப் போனது.

நீதி : காதலோ கல்யாணமோ, இரண்டிலும் காசு கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டினால் உறவுகள் கைகூடாது என்பதையே நமக்கு உணர்த்துகிறார் கல்யாண சுந்தரம்.

வக்கீல் வெடிமுத்து

வக்கீல் வெடிமுத்து மனைவியிடம் ஜூஸ் 'ஜக்'கோடு மாட்டிக் கொண்ட காட்சி
வக்கீல் வெடிமுத்து மனைவியிடம் ஜூஸ் 'ஜக்'கோடு மாட்டிக் கொண்ட காட்சி

வாதாடவே தெரியாமல் வக்கீல் கோட்டைப் போட்டுக்கொண்டு லண்டன் நீதிமன்றத்தையே ஏமாற்றிய பலே கில்லாடி, வக்கீல் வெடிமுத்து. ஒவ்வொரு வழக்குக்கு முன்பும் "இந்த கேஸ நான் ஜெயிக்கலைனா, வெடிமுத்துங்குற என் பேர சொரிமுத்துனு மாத்திக்கிறேன்டா" என்று சக வக்கீல்களிடம் சவால்விட்டு அசிங்கப்பட்டுக்கொண்டிருந்தார். அப்படி வெட்டி நியாயம் பேசிக் கொண்டிருந்தவருக்கு கோர்ட் வாசலிலேயே அடித்தது யோகம் (யோகமா இல்லையா என்பதை பிறகு பார்ப்போம்). அழகான பெண் ஒருவர், "நான் உங்க ஃபேன் சார், நீங்க கோர்ட்ல ஆர்கியூ பண்றது ரொம்ப ஃபேமஸ் தெரியுமா" என்று வான்ட்டடாக வந்து பேச, "அப்படியெல்லாம் சான்ஸ் இல்லையே" என்று முதலில் இழுத்தவர், கடைசியில் அவர் வலையில் விழுந்துவிடுவார். மனைவி தியேட்டருக்குப் போன கேப்பில், தன் ஃபேன் என்று கூறிய பெண்ணை வீட்டுக்கு வரவைத்திருப்பார் வெடிமுத்து. தன் ஃபேன் கேர்ள்க்கு ஜூஸ் போட்டுக்கொண்டு வரும்போது, தியேட்டருக்குப்போன மனைவி கார் ரிப்பேர் என்று பாதியிலேயே வந்துவிடுவார். ஜூஸ் யாருக்கு, புது செயின் யாருக்கு என்று அவரை கடித்துக் காயப்படுத்திவிடுவார் வெடிமுத்துவின் மனைவி. பின்னர் செயின் உன் பர்த்டே கிஃப்ட் என்று கூறி, கரும்பு மிஷினில் மாட்டிக் கொண்டதுபோல மனைவியிடம் கட்டிப்பிடி வைத்தியம் பெற்றுத் தப்பிப்பார் வெடிமுத்து.

நீதி : இதிலிருந்து நமக்கு வெடிமுத்து உணர்த்த வரும் விஷயம், திருமணத்துக்கு வெளியிலான உறவு கூடவே கூடாது. மீறி அவ்வாறு உறவு வைத்துக்கொண்டால் உங்கள் மனைவியிடம் மாட்டிக்கொள்வீர்கள் என்பதுதான்.

ஸ்டைல்' பாண்டி

ஸ்டைல் பாண்டி பாடகராக மாறிய தருணம்
ஸ்டைல் பாண்டி பாடகராக மாறிய தருணம்

'ஸ்டைல்' பாண்டியின் ஸ்டைலே தனி. யார் அவரை அடிக்க வந்தாலும் "வாடா வா என் ஏரியாவுக்கு வா" என்று கூறி தப்பித்து விடுவார். ஜாலியாக வாழ்ந்து வந்த அவருக்கு, 3 ரவுடிகளின் வற்புறுத்தலால் ஒரு பெண்ணைக் காதலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் பெண் தன்னை காதலிக்க வேண்டும் என்பதற்காகப் பல சேட்டைகள் செய்வார். "ஒரு பொய்யாவது சொல் கண்ணே... கண்ணே" என்று கட்டைக் குரலில் பாடி அந்தப் பெண்ணை கடுப்பேற்றுவார் மனிதர். இவர் பாடிய பாடலுக்கு அந்தப் பெண் மயங்கவில்லை என்பதால் அந்தப் பெண்ணின் அம்மாவை கைக்குள் போட்டுக்கொண்டால் காதல் கைகூடும் என்று நம்பினார் பாண்டி. அந்தப் பெண்ணின் அம்மாவை ஆன்ட்டி என்று அழைத்து பாசமாகப் பேசினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஆன்ட்டிக்காக ஆண்டனாவை கரெக்ட் செய்ய மேலே ஏறி வொயர்களில் தொங்கி என்னென்னமோ செய்து பார்த்தார். பாவம், பாண்டிக்கு அடிபட்டதுதான் மிச்சம். அந்தப் பெண் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

நீதி : அடுத்தவர் சபதத்துக்காகக் காதல் செய்யக் கூடாது என்பதையும் தனக்கு வராத ஒரு விஷயத்தைச் செய்து பெண்களைக் கடுப்பேற்றக் கூடாது என்பதையும் உணர்த்துகிறது ஸ்டைல் பாண்டியின் கதை.

நாய் சேகர்

டான் கெட்டப்பில்  நாய் சேகர்
டான் கெட்டப்பில் நாய் சேகர்

பெரிய ரவுடி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தவர், 'ஸ்டைல்' பாண்டியின் அண்ணன் 'நாய்' சேகர். பெண்ணைக் காதல் வலையில் விழ வைக்க வேண்டும் என்று லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு டான் கெட்டப்பில், ஓவர் மேக்கப் செய்திருப்பார் நாய் சேகர். மேலும், கதை சொல்கிறேன் என்ற பெயரில் பேசிப் பேசி அவரின் காதலி திவ்யாவை மட்டுமல்லாமல் சுற்றி இருக்கும் அனைவரையும் வெறுப்பேற்றுவார்.

நீதி : பெண்களைப் பேசியே கரெக்ட் பண்ணிடலாம் என்று நண்பர்களின் பேச்சைக் கேட்டு நாய் சேகர் போல பேசி பெண்களை டார்ச்சர் செய்யக் கூடாது. அதே நேரத்தில் ஓவர் மேக்கப்பும் பெண்களுக்குப் பிடிக்காது என்பதையும் உணர்த்துகிறார் நாய் சேகர்.

அடுத்து, உறவுகள் கைவிட்டுப் போகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்...

தீப்பொறி திருமுகம்

கற்பூரம் ஏற்றும் தீப்பொறி திருமுகம்
கற்பூரம் ஏற்றும் தீப்பொறி திருமுகம்

தீக்குச்சியை விரல் நெகத்திலும், தீக்குச்சி பட்டையை நெற்றியிலும் வைத்துக்கொண்டு கோயில் கற்பூரத்திலிருந்து டீக்கடை சிகெரட் வரை பற்ற வைத்து மாஸ் காட்டுவார் 'தீப்பொறி' திருமுகம். தன் கிரையினை (திருமுகம் மொழியில் கிரையென் என்றால் Brain) பயன்படுத்தி வித விதமாக யோசித்துப் பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து, கெத்தாக வாழும், வில்லேஜ் விஞ்ஞானி தீப்பொறி திருமுகம். அக்கா மகள் காதுகுத்து விழாவைச் சிறப்பிக்க வந்தவர், அங்கேயே 15 வருடங்கள் தங்கி ஓசி சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். திருமுகத்தின் அக்கா மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் முடிவெடுத்திருந்தனர். ஆனால், அக்கா மகளுக்கு அந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை. இதைத் தெரிந்துகொண்ட தாய் மாமன் திருமுகம், தன் அக்கா மகளை மாப்பிள்ளை பார்க்க வந்த வாலிபரை அரிவாளின் மூலம் கோட்டைக் கிழித்து, "உன் நெஞ்சில முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா, இந்தக் கோட்ட தாண்டி வீட்டுக்குள்ள போ" என்று சொல்வார். அந்த வாலிபரோ, கிழித்த கோட்டை அழித்துவிட்டு உள்ளே சென்று திருமுகத்தை அவமானப்படுத்திவிடுவார். பல ஆயுதங்களைக் காட்டி அவரை மிரட்டிப் பார்த்தார் திருமுகம், இவர் காட்டும் ஒவ்வொரு ஆயுதத்துக்கும் எதிர் ஆயுதம் காட்டுவார் அந்த வாலிபர். கடைசியில் காட்ட ஆயுதம் இல்லாததால், தன் காலி பாக்கெட்டை காட்டி மீம் டெம்ப்ளேட்டாக உருவெடுத்தார் திருமுகம். இறுதியாக, கல்யாண நாள் அன்று கல்யாணத்தை நிறுத்த மாப்பிள்ளைக்கு வெடி வைத்து, அந்த வெடியில் தானே சிக்கிச் சின்னா பின்னமாகித் தோற்றுப்போவார் திருமுகம்.

நீதி : நம் உறவுகளுக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் ஒதுங்கிப்போகாமல் கடைசி வரை நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். நாம் அந்த முயற்சியில் தோற்றுப்போனாலும், அவர்களுக்கு உதவியாக இருப்பதே உறவுகளுக்குள் விரிசல் விழாமல் இருக்க வழி செய்யும் என்பதையே தீப்பொறி திருமுகத்தின் கதை உணர்த்துகிறது.

சலூன் கடை சண்முகம்

சூப்பர் ஸ்டாருடன் புகைப்படம் எடுத்த குஷியில் சலூன் கடை சண்முகம்
சூப்பர் ஸ்டாருடன் புகைப்படம் எடுத்த குஷியில் சலூன் கடை சண்முகம்

முன்பு வேலை பார்த்த கடையில் முடி வெட்டத் தெரியாததால் நிராகரிக்கப்படுகிறார் சண்முகம். போலீஸ் கெட்டப்பில் தன் ஆள்களை அனுப்பி, வெட்டியாக நிற்பவர்களைத் தூக்கி வந்து மயக்க மருந்து கொடுத்து மொட்டை அடித்துவிடுவார் சண்முகம். முடி வெட்டத் தெரியாததால் மொட்டை அடித்து அவர்களின் பையிலிருந்து காசை எடுத்துக்கொள்வார். இதையே தொழிலாகச் செய்து, வெறும் சண்முகமாக இருந்தவர் சலூன் கடை சண்முகமாக மாறினார். திருப்பதிக்கு வைத்திருந்த முடி என்பவர்களுக்கு லட்டையும் பழனிக்கு வைத்திருந்த முடி என்பவர்களுக்கு பேரீச்சம்பழத்தையும் (அதை நீங்களே பஞ்சாமிர்தம் ஆக்கிக் கொள்ளுங்கள் என்பார்) காம்ப்ளிமென்ட்டாக கொடுப்பது சலூன் கடை சண்முகத்தின் வழக்கம். இப்படிச் சென்று கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர்கள் வசிக்கும் ஊருக்கு 'சூப்பர் ஸ்டார்' சூட்டிங்க்காக வந்திருப்பார். சூப்பர் ஸ்டாருடன் போட்டோ எடுத்தால்தான் மட்டுமே நீங்கள் வீட்டுக்கு வரலாம் என்று மனைவி சொல்லிவிடுவார். 'அவர் படத்துக்கு டிக்கெட் எடுக்குறதே கஷ்டம் இதில் அவரோட போட்டோவா' என்று ஷாக் ஆகி நின்றவர், பின்னர் மனைவிக்காக ரிஸ்க் எடுக்கக் களத்தில் இறங்கிவிட்டார். சூப்பர் ஸ்டாருடன் போட்டோ எடுக்க அவர் எடுத்த முதல் முயற்சியில், சூட்டிங் சுவரைத் தாண்டிக் குதித்து கிணற்றுக்குள் விழுந்துவிடுவார். இரண்டாவது முயற்சியில், சூட்டிங் வேனில் ஏறி நடிகர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவார். அங்கே எதற்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டு நயன்தாராவை சைட் அடித்துக்கொண்டிருப்பார் மனிதர். பிறகு, அங்கே சூப்பர் ஸ்டார் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு, சூட்டிங் ஸ்பாட்டிற்குத்தான் சூட்டிங் வேன் செல்கிறது என்று நினைத்து, மீண்டும் அந்த வேனில் ஏறி, தான் ஏறிய இடத்துக்கே வந்து பல்ப் வாங்கிவிடுவார். மூன்றாவது முயற்சியில் ஸ்டன்ட் மாஸ்டர்களிடம் அடி வாங்கி மிதி வாங்கி ஒரு வழியாக சூப்பர் ஸ்டாரை சந்தித்துவிடுவார் சண்முகம். பின்னர், மனைவியை அழைத்து வந்து சூப்பர் ஸ்டாருடன் போட்டோவும் எடுத்து மனைவியுடன் கைகோப்பார் சண்முகம்.

நீதி : இந்தக் கதையிலிருந்து சலூன் கடை சண்முகம் நமக்குச் சொல்ல வருவது, உங்கள் மனைவியுடனான ரிஷன்ஷிப் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அவர் வேண்டுமென்று எதைக் கேட்டாலும், உயிரைப் பணயம் வைத்தாவது அதைச் செய்து முடித்துவிட வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்கிறது சண்முகத்தின் கதை.

வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்த்தும் விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்றுங்கள், உங்கள் ரிலேஷன்ஷிப்பை ஸ்ட்ராங் ஆக்கிக்கொள்ளுங்கள்! க.க.க.போ..!

பின் செல்ல