Published:Updated:

இரண்டாம் கரிகால்சோழன், மூன்றாம் சுந்தரபாண்டியன் - கல்வெட்டுகளையே கதறவிடும் எடப்பாடி விசுவாசிகள்!

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

''யாரு பேருக்கு அர்ச்சனை?'' என்று, அர்ச்சகர் கேட்டதும், ''சாமி பேருக்கு'' என்று ஒரு பெண் சொல்வார். 'எந்த சாமிக்கு..' என்று மீண்டும் கேட்க, ''நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு...'' என்பார் அந்தப் பெண். கேட்பவர்களுக்கு கண் காதில் எல்லாம் ரத்தம் வடியும்.

முதலமைச்சர் எடப்பாடியாரை வேற லெவலுக்கு கொண்டு சென்ற அந்த அரசு விளம்பரத்தை திரையரங்குகளில் பார்த்து நம் மக்கள் விக்கித்து சோறு தண்ணி இறங்காமல் நின்றதும், நம் நெட்டிசன்கள் தொடர்ந்து தூற்றிப் பாடிய பின், சில நாள்களில் அந்த விளம்பரத்தைத் தூக்கியது அரசு.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடியாருக்கு தன்னுடைய விசுவாசம், வேதாளம், வீரத்தைக் காட்ட (ஸாரி....ஒரு ரைமிங்கில் வந்து விட்டது) செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் ஏற்பாடுதான் அது. ஆனால், அந்த விளம்பரத்துக்குக் கிடைத்த எதிர்வினையைப் பார்த்து, ''இனி இப்படியெல்லாம் என்னை ஓவராப் புகழ்ந்து, விளம்பரம்ங்கிற பெயர்ல எனக்கு செய்வினையை வச்சிடாதீங்க....'' என்று, அமைச்சர்களிடம் நிச்சயம் கெஞ்சிக் கேட்டிருப்பார்.

ஆனாலும், பச்சை மண்ணான திண்டுக்கல் சீனிவாசன் போன்ற அமைச்சர்கள், அப்படியெல்லாம் கட்டுப்படுகிறவர்களா? மனதில் பட்டதை அப்படியே கொட்டி விடும் சுபாவமுள்ளவர். அப்போலோவில் இட்லி சாப்பிட்டது யாரு, சட்னி அரைச்சது யாரு என்று புட்டுப் புட்டு வைத்தவராயிற்றே.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

கடந்த வருடம் சேலத்தில் நடந்த விழாவில் 'ஜெயலலிதாவைவிட அதிகமாக மக்கள் பணி ஆற்றுகிறார் எடப்பாடியார், அதுவும் எப்படியென்றால், மனு கொடுத்தால் ஜெயலலிதா அதை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். எடப்பாடியாரோ அவரே அதை தன் கையால் எடுத்து, தன் வாயால் படித்து பின் ஒவ்வொரு எண்ணாக போனில் அமுக்கி அதிகாரிகளை அழைத்து தீர்த்து வைக்கிறார்'' என்று போகிற போக்கில் ஜெயலலிதாவின் பிம்பத்தைக் கீழே உருட்டி விட்டு, எடப்பாடியை உச்சி மோந்தார். கட்சியினரே 'இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?' என முகம் சுளித்தார்கள்.

அமைச்சர் மணிகண்டன் கடந்த வருடம் ஒரு விழாவில் பேசும்போது, ''ஜெயலலிதாவைச் சந்திக்க அதிகாரிகளிடம் சீட்டு எழுதிக் கொடுத்துதான் பார்க்க முடியும். ஆனால், எடப்பாடியாரை எப்போது வேண்டுமானாலும் நேரடியாகப் பார்த்து கோரிக்கைகளை வைக்கலாம். அந்தளவுக்கு மக்கள் சேவகர் எடப்பாடி'' என்றார். 'ஏன் அவர் சும்மா இருக்காரா?' என கேட்டார் ஃப்ரண்ட்ஸ் பட லேபர் கோபால்.

மூன்றாம் கலைஞர்,இரண்டாம் தளபதி, முதல் உதய்னா! - உதயநிதியின் கலாய்பீடியா

சமீபத்தில் மானியக்கோரிக்கையில் பேசிய அமைச்சர் தங்கமணி, ''ஜெயலலிதாவைவிட எடப்பாடியார் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அதிகம் கொண்டு வந்திருக்கிறார்'' என 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்' ரேஞ்சுக்கு கூவல் திலகமாகி கட்சிக்காரர்களையே அலறவிட்டார்.

ஆரம்பத்தில் கொங்கு நாட்டுத் தங்கம், சேலம் தந்த சிங்கம், இரும்பு நகரின் கரும்பு மனிதர், புரட்சிப் பெருந்தகை என அடைமொழியே அதிர்ந்து போகும் அளவுக்கு புகழ்ந்து வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சமீபத்தில் சோழவந்தானில் குடிமராமத்துப் பணியைத் தொடங்கி வைத்தபோது, ''கரிகால்சோழனுக்குப் பிறகு இத்திட்டத்தை எடப்பாடியார்தான் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.'' என்றவர், 'நமது அம்மா' விளம்பரத்தில், 'இரண்டாம் கரிகால்சோழன்' என்று புகழ்ந்தார். இதைக் கேட்டு தஞ்சாவூர்ப் பக்கம் இருந்த கல்வெட்டுகள் எல்லாம் கதறியபடி கல்லறைக்குள் புகுந்தன.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஆர்.பி.உதயகுமார் புகழ்ந்தால் செல்லூர்ராஜு சும்மா இருப்பாரா, உடனே அவரும் ஒரு விழாவில் ''பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு வைகை அணையைக் காக்க திட்டம் கொண்டு வந்தது எடப்பாடியார்தான்.'' என்றார். 'என்னைய வச்சு இன்னும் என்னவெல்லாம் பண்ணுவீங்களோ? என அந்த இரவே வைகை அணை விரிசல்விட்டது. என்னய்யா இது மன்னர்களுக்கு வந்த சோதனை என்று சமூக ஊடகங்களில் இப்போது கழுவி ஊற்றி வருகிறார்கள். அடுத்து இவர்களின் புகழாரத்தில் நம்மளையும் இழுத்து விடுவார்களோ என்ற பயத்தில் பல்லவர், சேர மன்னர்கள் மட்டுமல்லாமல் 24-ம் புலிகேசியின் ஆன்மாக்களும் பதறிக் கொண்டிருப்பதாக தகவல். வேணாம்ங்க! ப்ளீஜ்!

அடுத்த கட்டுரைக்கு