Published:Updated:

உங்களிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறதா? - சுஜாதா ஸ்டைலில் ஒரு ஜாலி டெஸ்ட்! #MyVikatan

Laughter
Laughter ( Pixabay )

உங்களது நகைச்சுவை உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என வேடிக்கையாக சுஜாதா ஸ்டைல் ஒரு ஜாலி கேலி டெஸ்ட் இதோ!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மனிதர்கள் தங்களது கவலைகளை மறக்கவும், கவலைகளைப் பிறரிடமிருந்து மறைக்கவும் மிகச்சிறந்த ஆயுதமாகச் சிரிப்பு பயன்படுகிறது. நகைச்சுவை உணர்வு இல்லாத மனித வாழ்க்கை சிறகுகள் இல்லாத பறவைக்குச் சமமானதாகவே கருதப்படுகிறது!

நகைச்சுவை, மனிதர்களுக்கு மட்டுமே உண்டான ஒரு தனித்துவமான உணர்வாகும். வலிமையான மனநிலை கொண்ட மனிதர்களால் மட்டுமே தன்னைத் தானே பகடி செய்துகொள்ள முடியும்!

அந்த வகையில் உங்களது நகைச்சுவை உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என வேடிக்கையாக சுஜாதா ஸ்டைல் ஒரு ஜாலி கேலி டெஸ்ட் இதோ!

Laughing
Laughing
Pixabay

கீழ்க்காணும் ஒவ்வொரு கேள்விக்கும் "ஆம்/இல்லை" என்று பதில் அளியுங்கள்.

முடிவுகள் இறுதியில்!

1. லாஜிக்கே இல்லாத விஷயங்களுக்கு வாய்விட்டு சிரித்து இருக்கிறீர்களா?

* காலை நேரத்தில் நீங்கள் வாக்கிங் அல்லது ஜாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டு அங்கிள் டூவீலரில் வந்து நீங்கள் போக வேண்டிய இடத்தில் கொண்டு போய் விடுகிறேன் என உதவிக்கு வரும்போது!

2. அசாதாரணமான சூழ்நிலைகளில் உங்களுக்குப் புன்னகை அரும்புமா?

* நீங்கள் நீட்டாக ட்ரஸ் செய்து வெளியே கிளம்பும்போது, அவசரமாகக் கைகளில் தூக்கிக் கொஞ்சும் குழந்தைகள் உங்கள் மீது பன்னீரைத் தெளித்துவிடும் சூழ்நிலைகளில்!

3. ஏற்கனவே பார்த்து சலித்த கிளாசிக் காமெடிகளை மறுபடியும் பார்க்கும்போது உங்களுக்கு சிரிப்பு வருகிறதா?

* "நீ புடுங்குறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்" ரீதியிலான வடிவேல் டயலாக்குகள்!

Cracking joke
Cracking joke
Priscilla Du Preez on Unsplash

4. விளம்பர வசனங்களை உங்களால் நகைச்சுவையாக மாற்ற முடியுமா?

* ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்லை, மாமியார்-மருமகள் சண்டைகளில்!

5. பேருந்துப் பயணங்களில் வெள்ளந்தியான உரையாடல்களை உங்களால் ரசிக்க முடிகிறதா?

* குரங்குச் சாமியாரின் சாபமே கொரோனோ வந்ததற்குக் காரணம் என்பது போன்ற பேருந்துப் பேச்சுகள்!

6. நீங்கள் பல்பு வாங்க நேர்கையில் மெலிதாக உதட்டில் புன்னகை தோன்றுமா?

* கையில் வைத்துள்ள போனை பாக்கெட்டுகளில் தேடிக் காணாமல், அவசரமாக வீட்டுக்குப் போன் செய்து என் போன் எங்கே எனக் கேட்கும்போது!

7. உங்களை நீங்களே பகடி செய்து கொள்வீர்களா?

* ஒரு முக்கியமான பதிவு என நினைத்து நீங்கள் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவுக்கு ஒருநாள் ஆகியும் உங்கள் நண்பர்களில் ஒரு பயலும் லைக் செய்யாதபோது!

Weird
Weird
Franck V. on Unsplash

8. குழந்தைகளிடம் அடிவாங்கும்போது உங்களுக்கு சிரிப்பு வருகிறதா?

* குழந்தைகளுடன் ஒளிந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது ரிங்கான போனை எடுத்து, பின்பு விளையாட்டை மறந்து நீங்கள் போனிலேயே மூழ்கி முத்தெடுக்கையில் - மணிக்கணக்கில் ஒளிந்து கடுப்பான குழந்தை கோபத்துடன் வந்து புரொபசனல் பாக்ஸராக உங்களை அடித்துத் துவைக்கும்போது!

வெரி ஹுயூமரஸ் மேன்! - சுஜாதா எழுத்தில் எனக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் #MyVikatan

9. நடப்பு நிகழ்வுகள் குறித்து இரண்டு வரிகளில் உங்களால் காமெடி செய்ய முடிகிறதா?

* பசுபிக் கடலில் ராட்சத அலைகள் எழுந்து அடங்கின. "ஒருவேளை 'சுனாமி லைட்டா' இருக்குமோ!"

10. நீங்கள் நீண்ட நேரம் கஷ்டப்பட்டு செய்த ஒரு வேலை பயனளிக்காமல் போகும்போது உங்களுக்கு சிரிப்பு வருமா?

* அரைமணி நேரம் கைவலிக்கத் தொட்டிலை ஆட்டி விட்டு, குழந்தை தூங்கியிருக்கும் என மகிழ்ச்சியுடன் தொட்டிலுக்குள் எட்டிப்பார்த்தால், ஞானி போன்று எதையோ சிந்தித்தபடி விழித்தபடியே குழந்தை படுத்துக்கொண்டு இருக்கும்போது!

11. அபத்தக் காட்சிகளைப் பார்த்தவுடனே உங்களுக்கச் சிரிப்பு வந்துவிடுமா?

* புவியீர்ப்பு விசையை மீறிய தெலுங்குப் பட சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது!

Laughing
Laughing
Tyler Nix on Unsplash

12. சமையலில் சொதப்பி விட்டு உங்களால் புன்னகைக்க முடியுமா?

* பாயசத்தில் அவசரத்தில் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் போட்டு விட்டு அதைக் குடும்பத்தோடு அமர்ந்து குடிக்க நேர்கையில்!

13. நீங்கள் சொல்லக்கூடிய ஜோக்குகளை, உங்களுடைய சமூக வலைதளப் பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா?

* போற போக்க பாத்த இந்த தீபாவளிக்கு விதவிதமான டிரஸ் எல்லாம் வாங்க முடியாது, மாஸ்க்தான் வாங்கணும் போல...

14. நீங்கள் அறியாமல் செய்த கோமாளித்தனம் உங்களுக்குப் புன்னகையை வரவைக்குமா?

* இரு வெவ்வேறு வகை செருப்புகளை மாற்றிப் போட்டுக் கொண்டு வெளியே சென்று, அதனைப் பிறர் அறியாமல் மறைக்க முற்படும்போது!

15. வரிசைகளில் நிற்கும் போது எரிச்சல் அடையாமல் உரையாடல்களைக் கேட்டு சிரிக்க முடிகிறதா?

* நோட்டு கிழிந்துள்ளது என்னும் கேஷியரிடம், என் அக்கவுன்ட்ல தானே போடறேன் சார் என்னும் கஸ்டமர்!

16. பழைய சினிமா நடனங்களை உங்களால் கலாய்க்க முடியுமா?

* காதல் காட்சி என்று வைத்துவிட்டால் பாவம் கதையில் இயக்குநர் என்னதான் செய்ய முடியும்?

17. உறவினர்கள் அங்கலாய்ப்புகளைக் கேட்டு உங்களுக்கு புன்னகை வருகிறதா?

* பெட்ரோல் தீர்ந்த வண்டியை நாக்குக் தள்ள தள்ளிக்கொண்டு போகும்போது "உனக்கு என்ன ஜாலியா ஏசி யில வேலை செய்யுற" என்ற உறவினரின் போன் கால்!

18. வளர்ப்பு விலங்குகளின் சேட்டைகளைப் பார்த்து உங்களால் சிரிக்க முடியுமா?

* நல்ல பசியோடு நள்ளிரவு நேரத்தில் கிச்சனுக்குள் நுழையும் போது, உங்களுடைய நாயோ, பூனையோ நீங்கள் ஆவலாக உண்ண விரும்பிய பிஸ்கட்டைத் தின்றுவிட்டு கெத்தாக போஸ் கொடுக்கும்போது!

Laughing
Laughing
Brooke Cagle on Unsplash

19. பதில் கூறமுடியாத குழந்தைகளின் கேள்விகளுக்கு உங்களால் புன்னகைக்க முடிகிறதா?

* சொர்க்கத்தில் ஸ்கூல் இருக்குமா, இருக்காதா?

20. பிளாக் அவுட் ஆகும்போது உங்களுக்கு சிரிப்பு வருகிறதா?

* பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் என்ன தேடுகிறோம் என்று மறந்து போய் விடும்போது!

உங்களுடைய பதில்கள் அடிப்படையில் நகைச்சுவை உணர்வு டெஸ்ட் முடிவுகள்:

கேள்விகளின் அளவு (Quantity) அடிப்படையில்.

# இதில் 16 கேள்விகளுக்கு மேல் உங்கள் பதில் 'ஆம்' எனில் நீங்கள் நகைச்சுவை உணர்வு ததும்பி வழியும் கவலைகள் அற்ற மனிதர்!

#11 கேள்விகளுக்கு மேல் 15 கேள்விகள் வரை உங்கள் பதில் 'ஆம்' எனில் நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

# 6 கேள்விகளுக்கு மேல் 10 கேள்விகள் வரை உங்கள் பதில் 'ஆம்' எனில் உங்களிடம் ஓரளவு நகைச்சுவை உணர்வு இருக்கிறது.

# ஒரு கேள்வி முதல் 5 கேள்விகள் வரை மட்டுமே உங்கள் பதில் 'ஆம்' எனில், உங்கள் நகைச்சுவை உணர்வு மிக மிகக் குறைவாக உள்ளது.

# எல்லாக் கேள்விகளுக்குமே உங்கள் பதில் 'இல்லை' என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு