Published:Updated:

படுகொலை... சர்.சி.வி.ராமன் சில வித்தியாசமான பெயர்களும் மனிதர்களும்!

பெயர்
பெயர்

''நமக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு இது தெரியவாபோகிறது? வரலாறு முக்கியம் அமைச்சரே!'' என 'இம்சை அரசன் 23 -ம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலு ஒரு டயலாக் பேசுவார். அது என்னவோ உண்மைதான்.

பின்னால் வருபவர்களுக்கு ஏதும் தெரியப்போவதில்லை என்பதால், இங்கே பல தகிடுதத்தங்கள் நடந்தேறியிருக்கின்றன. அவரவர் விருப்பத்துக்கு வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. நாமும் அதுதான் வரலாறு எனப் படித்தும் நம்பிக்கொண்டும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், உண்மையிலேயே வரலாற்றைச் சொல்லும் பொக்கிஷங்களாக இருப்பவை என்னவோ பெயர்கள்தான். உதாரணமாக, 'பாண்டி' என்று யாராவது ஒருவர் தன் பெயரைச் சொன்னால், ஊரு மதுரையா என அடுத்த கேள்வி வரும். மதுரையாக இல்லாவிட்டாலும், ராம்நாடு, சிவகங்கை, திருநெல்வேலி என தென்மாவட்டங்களைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என யூகித்திட முடியும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் பரவலாக இருக்கும்.

மதுரை
மதுரை

குடும்பத்தை, ஊரை என ஏதாவது அடையாளத்தை ஒட்டியே பெயர்கள் வைக்கப்படும் பழக்கம் தற்போது மலையேறிவிட்டது . ஆனால், கேட்டவுடனே நம்மை தூக்கிவாரிப் போடும் சில பெயர்களும் உண்டு. அப்படி, அதிர்ச்சிக்குள்ளாக்கும் சிலரின் பெயர்களையும் வைக்கப்பட்டதற்கான காரணங்களையும் கேட்டறிந்தோம்.

படுகொலை (40)

சத்தியமா இது பேருதான் பாஸ். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை பூர்விகமாகக் கொண்டவர் படுகொலை. முதுகலை பொறியியல் முடித்து, தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார். அவரிடம் பேசினோம்...

படுகொலை
படுகொலை

''இது, எங்க குலசாமி பேரு. வத்திராயிருப்புக்குப் பக்கத்துல அஸ்தினாபுரத்துல இருக்கிற நல்லதங்காள் - நல்லதம்பிதான் எங்க குலதெய்வம். நல்லதம்பிங்கிறவரு மனுஷனா வாழ்ந்து தெய்வமானவரு. மக்களைக் காப்பாத்துறதுக்காக சாமி பல கொலைகள் பண்ணியிருக்கிறதா சொல்லுவாங்க. அதனால அவருக்கு, 'படுகொலை'னு ஒரு பேரு இருக்கு. அந்தப் பேரதான் எனக்கு வச்சுட்டாங்க!'' என்றவரிடம், உங்கள் பேரைக் கேட்டதும் மற்றவர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் எனக் கேட்க,

''முதல்ல கொஞ்சம் டெரராத்தான் பார்ப்பாங்க, பத்து அடி தூரம் விலகித்தான் நிப்பாங்க, பழக ஆரம்பிச்ச உடனே நம்ம ஒரு சாஃப்ட் பீஸுணு தெரிஞ்சுடும். அப்புறம் நல்லா பழக ஆரம்பிச்சுடுவாங்க'' என்கிறார் படுகொலை.

சர்.சி.வி. ராமன்
சர்.சி.வி. ராமன்

சர்.சி.வி. ராமன் (45)

நமக்குப் பிடிச்சவங்க பெயரை வைக்கிற பழக்கம் பலபேருக்கு இருக்கும். அதில் மன்னர்களின் பெயர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள், புரட்சியாளர்களின் பெயர்கள், ஆபத்துல உதவி செஞ்ச நண்பர்களின் பெயர்கள் வரை பலபேரு வச்சுப் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம்தான் இங்கயும் நடந்திருக்கு. ஆனா, தன்னோட மகன் ஒரு மிகப்பெரிய சயின்டிஸ்ட்டா வரணும்னு முடிவு பண்ணின ஒரு கிராமத்து அப்பா, சயின்டிஸ்ட் பெயரை மட்டும் வைக்காம, அவருக்குக் கொடுத்த சர் பட்டத்தையும் சேர்த்து வச்சதுதான் சுவாரஸ்யம்.

சிவகங்கை மாவட்டம் மாவிடுதிக்கோட்டையைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். ஒரு அரசுப் பள்ளியில் கம்ப்யூட்டர் டீச்சராகப் பணிபுரிந்துவருகிறார். அவரிடம் பேசினோம்...

கம்யூட்டர் லேப்
கம்யூட்டர் லேப்

''நான் பிறந்தவுடனே எங்க அம்மா, எங்க குலசாமி கருப்பு பேரைத்தான் வைக்கணும்னு சொன்னாங்க. ஆனா, அப்பாதான் நல்லா படிச்சு பெரிய அளவுல பேரும் புகழுமா இருக்குற ஒருத்தர் பெயரை வைக்கணும்னு முடிவுபண்ணியிருக்கார். அப்பதான் சர்.சி.வி.ராமன் பெயரை வைக்கலாம்ணு முடிவுபண்ணி வச்சுட்டாரு. 'சர்' ங்குறது ஒரு பட்டம்னுலாம் அவருக்குத் தெரியாது.

என்ன, பேரைக் கேட்டவுடனே முதல்ல சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. 'சர்ஸ்', 'சர்.சி.வி', 'ராமா' என ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு விதமா கூப்டுவாங்க. சில பேரு டே சயின்டிஸ்ட்டுனெல்லாம் கூப்!டுவாங்க. அவர் பேர காப்பாத்தலைன்னாலும் பரவாயில்ல, டேமேஜ் பண்ணாம இருந்துட்டாலும் போதும் '' என்கிறார் சர்.சி.வி.ராமன்.

சர்.சி.வி. ராமன்
சர்.சி.வி. ராமன்

அவுலியா (47)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலின் பெயர்தான் இது. இந்தப் பெயரை வைத்திருப்பவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். அவுலியாவின் தாத்தாதான் அவருக்கு இந்தப் பெயரை வைத்திருக்கிறார். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள அவரிடம் பேசினோம்...

''எங்கள் ஊர் பாளையங்கோட்டைக்குப் பக்கத்துல குலமாணிக்கபுரம்ணு ஒரு ஊர் இருக்கு. அங்க, 'காதர் அவுலியா'னு ஒரு பள்ளிவாசல் இருக்கு. அந்தப் பள்ளிவாசலுக்கு இடம் கொடுத்தவரும், எங்க தாத்தா அய்யாக்குட்டியும் நெருங்கிய நண்பர்கள். அவரோட ஞாபகமா எனக்கு அந்தப் பள்ளிவாசல் பெயரையே வச்சுட்டாரு எங்க தாத்தா.

அவுலியா
அவுலியா

எங்க அண்ணன் பேரு, 'சிந்தாமதர்'. அதுவும் ஒரு பள்ளிவாசல் பேருதான். ஒவ்வொரு வருஷமும் கார்த்திகையில பள்ளிவாசலுக்குப் போய் கும்பிட்டுட்டு வருவோம். பள்ளிவாசல் பராமரிக்கிற செலவுக்கும், கஞ்சிக்கும் நாங்க வரி கொடுப்போம். இப்ப வரைக்கும் நம்ம வூட்டுல குழந்தை பிறந்துச்சுனா குலசாமிக்கு படையல் வைச்சு சாமி கும்புடுறது போல 'பட்டாணி சாமி'க்கும் பன், பூந்தி, கருவாடு சுட்டு வைச்சு கும்பிடுவோம்!" என்கிறார் அவுலியா.

இப்படி உங்களுக்குத் தெரிந்து விநோதமான பெயர் வைத்திருப்பவர்கள் யாரேனும் இருந்தால் கமென்ட் செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு