Published:Updated:

“ இது உங்கள் சொத்து..!“ ஊழலுக்கு எதிராகப் போராடிய 'தோழர்' வடிவேலு #EndCorruption

விஷ்ணுராஜ் சௌ

“காலையில் 9.10-க்கு வேலைக்கு வருவது ஈட்டியை நீட்டிப் பிடித்தபடி பல்லியைப்போல சுவரோடு சுவராக ஒட்டி இருந்துவிட்டு மாலையில் 5 மணியானால் வீட்டுக்கு ஓடிவிடுவது. இதில் மதியம் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு" - இது, இம்சை அரசன் 23-ம் புலிகேசி வசனம்.

வடிவேலு
வடிவேலு

மோடி பதவியேற்ற ஐம்பதாவது நாள் அவருடைய சாதனைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர், பி.ஜே.பி-யினர். அதேநேரத்தில், நேசமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐம்பதாம் நாள் என நினைவுகூர ஆரம்பித்தனர், நெட்டிசன்கள். அடப்பாவிகளா... திரும்பவும் முதலில் இருந்தா எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டது, ஆளும்கட்சி. அதற்குக் காரணம், மத்திய அரசு பதவியேற்பு விழாவின்போது நேசமணி நிகழ்த்திக் காட்டிய வித்தைதான். 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேல் ஈடுபட்டதற்குப் பிறகு, புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும், ஏற்கெனவே அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் தமிழக அரசியலைக் கலாய்த்துத் தள்ளும் மீம் கருப்பொருளாக உருமாறின.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு என்ற தனிமனிதனுக்கு வேண்டுமென்றால், எல்லைகள் உண்டு. ஆனால், வடிவேலு உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு என்றென்றைக்கும் எல்லைகள் கிடையாது. காரணம் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜனரஞ்சகமானவை. அது, கான்ட்ராக்டர் நேசமணியாக இருந்தாலும் சரி, வட்டச் செயலாளர் வண்டுமுருகனாக இருந்தாலும் சரி... அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் இருந்து பிறந்தவை. இதைச் சொன்னதும்கூட வடிவேலுதான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், "இவ்வளவு கதாபாத்திரங்களையும் நீங்கள் எங்கிருந்து உருவாக்குகிறீர்கள்" எனக் கேட்க... அதற்கு அவர் சொன்ன பதில், “வேற எங்கிருந்து அண்ணே… நம்ப மக்களிடம் இருந்துதான்“ என்றார். ஆம், ஒரு நல்ல கலைஞன் முதலில் கவனம் செலுத்த வேண்டியது சமூகத்தின் மீதுதான். ஆனால், சிலர் ஆன்லைனில் கட்சியை வளர்த்து, பி.கேக்களுடன் கைகோத்து ஆட்சியமைக்க ஆசைப்படுகிறார்கள்.

வடிவேலு தன்னுடைய படங்களில் பேசிய வசனங்கள் எல்லாம், சாதாரண கைதட்டலுக்காக எழுதப்பட்டவை மட்டுமானதல்ல... மாபெரும் அரசியல் சித்தாந்தக் கருத்துகளையும் முன்வைத்திருக்கின்றன. குறிப்பாக, ஊழல் ஒழிப்பு குறித்த கருத்துகள் கொஞ்சம் அதிகமாகத்தான் ஒலித்திருக்கின்றன. தமிழக அரசியலில் 2019-ம் ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக்கூட பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்துச் சொன்ன அரசியல் தீர்க்கதரிசி வைகைப்புயல். இதை வேண்டுமென்றால் உறுதிப்படுத்திக்கொள்ள அடுத்த ஒப்பீட்டை கொஞ்சம் சிரிக்காமல் படித்துவிட்டு வாருங்கள்.

ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்
விகடன்

2010-ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படம், ‘ நகரம் மறுபக்கம்’. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரமான ‘ஸ்டைல் பாண்டி’ பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் ஒரு பயங்கரமான காட்சி இடம்பெற்றிருக்கும். திருடச் செல்வதற்கு முன்னால், “அண்ணன் 'ஸ்டைல் பாண்டி'யின் 100-வது திருட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகள்” என போஸ்டர் ஒட்டித் திருடச் செல்லும் காட்சி தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

கிட்டத்தட்ட இதேபோல ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னால், மதுரைக்கு அருகில் உள்ள தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அரங்கேறியது. குச்சனூரில் உள்ள காசி ஶ்ரீ அன்னபூரணி ஆலயத்துக்கு உதவி செய்ததற்காக வைக்கப்பட்ட கல்வெட்டில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் எனப் போட்டுக்கொண்டார், தற்போது மக்களவையில் ஜனநாயகத்துக்கு புதிய விளக்கத்தைச் சொல்லி வரும் ஓ.பி.எஸ்ஸின் மகனான ரவீந்திரநாத் குமார்.

இதை இங்கே சொல்லிக்கொள்வது எங்களுடைய கடமை. இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல... கொஞ்சம் சிரிக்கவும், நிறையச் சிந்திக்கவும் மட்டுமே.

வடிவேலு
வடிவேலு

அதேபோல், 2008-ம் ஆண்டு வெளியான படம், ‘கண்ணும் கண்ணும்’ இந்த படத்துப் பெயரைச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஆனால் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் சபாஷ் போடவைத்தன. அதிலும் குறிப்பாக, “வெட்டுன கிணத்தைக் காணோம் ஐயா. இத சுத்தி இருக்கிற பல ஊருக்கு இந்தக் கிணத்துல இருந்துதானே தண்ணி எடுப்பாங்க… எங்கிட்ட கிணறு வெட்டின ரசீது இருக்குடா" “ என வடிவேலு பேசிய வசனங்கள் தமிழக அரசியலில் நடந்துவரும் ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்தெறிந்தன.

இந்தக் காட்சியைத் தமிழகத்தில் நடந்துவரும் பல ஊழல் நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழகத்தில் கிணறுகள் என்ன, பல ஆறுகளே காணாமல் போகியுள்ளன. உதாரணத்திற்குச் சொல்வதென்றால், சென்னை என்பது மூன்று நதிகள் சூழ் நகரம். அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய மூன்றில் கூவமும், அடையாறும் சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடங்களின் பலபகுதிகள் காணாமல் போகியுள்ளன.

வடிவேலு
வடிவேலு

2008 என்பது வடிவேலு உச்சத்தில் இருந்த காலம். அதே காலகட்டத்தில்தான் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தின் வாயிலாக வட்டச்செயலாளர் வண்டுமுருகன் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமானது. அந்த படத்தில் வண்டுமுருகன் வட்டச் செயலாளராக உருமாறிய பிறகு, இடம்பெறும் காட்சிகள் எல்லாம் அதிரடிதான். “ஹலோ, நான் வட்டச்செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்” என வடிவேலின் குரல்களை இப்போது கேட்டாலும் தமிழ்ச்சினிமா ரசிகர்களால் சிரிக்காமல் இருந்துவிட முடியாது.

வட்டச்செயலாளர் என்பதுதான் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் குறைந்தபட்ச அதிகாரம் நிறைந்த பதவி. அதில், சமீபத்தில் 170-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 40 பேர் வட்டச் செயலாளர்கள். அதைத் தொடர்ந்து புதிதாக வட்டச்செயலாளர் பதவியை வழங்குவதற்கு அ.தி.மு.க-வைச் சார்ந்த சத்தியா பல லட்சம் பணம் கேட்டதாகச் சர்ச்சைகளும் எழுந்தன. இந்த வட்டச்செயலாளர்களின் கைகளில்தான் தற்போது பெருவாரியான டெண்டர்கள் இருக்கின்றன. இப்போது பசை உயர்ந்து போகியுள்ள வட்டச்செயலாளர் பதவியைச் சல்லி சல்லியாய் நொறுக்கிய ஒருவர், தோழர் வட்டச் செயலாளர் வண்டுமுருகன்தான்.

வடிவேலு
வடிவேலு

2002-ம் ஆண்டு பட்டையைக் கிளப்பிக்கொண்டு வெளிவந்த படம் பகவதி. நடிகர் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாகிய காலம் அது. எப்போதும் விஜய்யுடன் வடிவேலு கூட்டணி அமைக்கும்போது எல்லாம் சிக்ஸர் மழைதான். அந்த வரிசையில் உள்ள முக்கியமான படங்களில் பகவதியும் ஒன்று. அந்தப் படத்தில் தன்னுடைய சொந்தப்பெயரிலேயே நடித்தார் வடிவேலு. அதில் இடம்பெற்ற தரமான நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று, 'இது உங்கள் சொத்து' என அரசுப் பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரை காட்டி, பேருந்தைப் பேரம் பேசும் காட்சி.

இது, தமிழக அரசியல் களத்துக்கு ஒன்றும் புதிதானதல்ல. ‘பகவதி’ படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இது அரங்கேறியதுதான். 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார், ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது. அந்த நிலங்களானது, சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரராக இருந்த ‘சசி என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு விற்கப்பட்டதுதான். இது, அடுத்தடுத்து சர்ச்சைகளை உருவாக்கியது.

வடிவேலு
வடிவேலு

உலகமே ஹிட்லரின் செயல்களை எண்ணிப் பயந்து கொண்டிருக்க, திரைவடிவத்தைக் கையில் எடுத்து ஹிட்லர் எனும் மாபெரும் பிம்பத்தைச் சிதைத்துத் தள்ளியவர், நடிகர் சார்லி சாப்லின். அவரின் ‘டிக்டேட்டர்’ உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதேபோல், சாப்ளினுக்கு ‘டிக்டேட்டர்’ என்றால், வடிவேலுக்கு ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம்தான் புகழைப் பெற்றுத் தந்தது. 2006-ம் ஆண்டு மந்திரி மங்குனி பாண்டியன், தளபதி அகண்டமுத்து, மொக்கையப்பர் ராஜா, அரண்மனை ஜோதிடன் என அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சிதில்சிதிலாகக் கிழித்தெறிந்த திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

“காலையில் 9.10-க்கு வேலைக்கு வருவது; ஈட்டியை நீட்டிப் பிடித்தபடி பல்லியைப்போலச் சுவரோடு சுவராக ஒட்டி இருந்துவிட்டு மாலையில் 5 மணியானால் வீட்டுக்கு ஓடிவிடுவது; இதில், மதியம் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. ஐந்தறிவு ஜீவன்போல் உங்களுக்கெல்லாம் ஒரு வாழ்க்கை; கேட்டால் அரசாங்க உத்தியோகம் என வெளியே பிதற்றிக்கொள்வது; ஒழுங்காய் வேலை பார்ப்பவர்கள்கூட உன்னைப் பார்த்துக் கெட்டுவிடுவார்களடா” என அரசு அலுவலகங்களின் நடைமுறைகளைப் பொதுவெளிகளில் சிம்புதேவன் வசனங்கள் மூலம் பேசுபொருளாக்கி இருப்பார், வடிவேலு.

வடிவேலு
வடிவேலு

கடைசியாய் நினைவுக்கு வரும் படம் 'தலைநகரம்'. அந்தப் படத்தில் இடம்பெறும், ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தில், “ நானும் ஜெயிலுக்குப் போறேன்… நானும் ஜெயிலுக்குப் போறேன்….” என்பதுபோல தமிழகத்தில் பல நடிகர்கள் நானும் அரசியலுக்கு வர்றேன் என வசனம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதில் ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு’ என்பார் வடிவேலு. ஒரு விதத்தில் தமிழக அரசின் இன்றைய நிலையும் கூட அதுதான். ஆக, இன்று நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களையும், அன்றைக்கே வசனங்களாய் வாரியிறைத்து விட்டார் வடிவேலு. அந்த வகையில் அவர் வெறும் காமெடி நடிகன் மட்டுமில்லை... காலத்தைப் பிரதிபலித்த கண்ணாடி என்றால் அது மிகையாகாது 😉 😉 😉