Published:Updated:

`கலெக்டரிடம் மனு கொடுத்தா நீ பெரிய ஆளா?' - ஊர் நாட்டாமைகளால் வாலிபர் குடும்பத்துக்கு நடந்த துயரம்

எங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கூறி கலெக்டரிடம் மனு கொடுத்த குடும்பத்தினரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் `கலெக்டர் ஆபீஸுக்குப் போனா நீ என்ன பெரிய ஆளா, அதிகாரிகள் எப்பவும் உன் பக்கத்திலேயே இருப்பார்களா’ எனக் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`கலெக்டரிடம் மனு கொடுத்தா நீ பெரிய ஆளா?' - ஊர் நாட்டாமைகளால் வாலிபர் குடும்பத்துக்கு நடந்த துயரம்
`கலெக்டரிடம் மனு கொடுத்தா நீ பெரிய ஆளா?' - ஊர் நாட்டாமைகளால் வாலிபர் குடும்பத்துக்கு நடந்த துயரம்

எங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கூறி கலெக்டரிடம் மனு கொடுத்த குடும்பத்தினரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், `கலெக்டர் ஆபீஸுக்குப் போனா நீ என்ன பெரிய ஆளா, அதிகாரிகள் எப்பவும் உன் பக்கத்திலேயே இருப்பார்களா?' எனக் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவையாறு அருகே உள்ளது நடுக்காவேரி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ஃபிரான்ஸிஸ். இவரின் சகோதரி சந்தனமேரி மாற்று சாதியைச் சேர்ந்தவரை 15 வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். அன்றே சந்தனமேரிக்கும் இந்த ஊருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று எழுதி வாங்கிக்கொண்டதோடு, அவர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது என நாட்டாமைகள் தரப்பில் கூறியுள்ளார்கள்.

காலம் கடந்தது, சந்தனமேரிக்கு குழந்தைகள் பிறக்க, பிறந்த வீட்டின் அன்பு கிடைக்கிறது. மீண்டும் பழையபடி தன் குடும்பத்தினருடன் பேசுகிறார். வீட்டுக்கும் வந்து சென்றபடி இருக்கிறார். இது அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு அப்போதைக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், காலங்கள் வேகமாக ஓடின. சந்தனமேரியின் மகள் பெரியவள் ஆகிறார். அவருக்கு கடந்த 6-ம் தேதி பூப்பு நீராட்டு விழா நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டன என்கிறார் ஃபிரான்சிஸ். ''தாய் மாமனான நான் என் அம்மா அப்பாவோடு சென்று எங்க ஊரான நடுக்காவேரி முழுவதும் விழாவுக்கு அழைத்தோம். `ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டவள். அவ வீட்டு தேவைக்கு நாங்க வர மாட்டோம்' என்றதோடு ஊர் மக்கள் யாரும் செல்லவும் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தனர் ஊரின் முக்கியஸ்தர்கள்.

என்ன செய்வதென புரியாமல் தவித்த நான் வேறு வழியில்லாமல் தன் குடும்பத்தினரை மட்டும் அழைத்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்திவிட்டு திரும்பினேன். இதை வெளியே காட்டிக்கொள்ளாமல் என்மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர் ஒரு சிலர். அவர்கள் எங்க ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையிலேயே என்னைக் கடுமையாகத் தாக்கினர். அப்போது காவல்துறையினர் வந்து பாதிக்கப்பட்ட என்னைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். தாக்கியவர்கள்மீது நான் புகார் கொடுக்க சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர் போலீஸார். காவல் நிலையத்தில் சமாதான பேச்சு நடக்கிறது. என்னை அடித்தவர்கள். `இனிமேல் அப்படி செய்ய மாட்டோம்' என்று மன்னிப்புக் கேட்டு எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றேன். அதன்படியே அவர்களும் செய்ய போலீஸார் அவர்களை விடுவித்தனர்.
சில நாள்கள் கழித்து சம்பந்தபட்டவர்கள் ஊர் பெரியவர்கள், 'எங்களைக் காவல் நிலையத்தில் வைத்து மன்னிப்புக் கேட்கச் சொல்கிறாயா, நேரம் வரும்போது உன்னைப் பார்த்துக்கொள்கிறோம்' என என்னை மிரட்டினர். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நான் வேலைக்காக சென்னைக்குச் சென்றுவிட்டேன்.

எங்க ஊர் மாதா கோயில் திருவிழா நடக்க இருக்கிறது. இதற்காக ஊர் முழுவதும் வரி வசூல் செய்தார்கள் முக்கியஸ்தர்கள். எங்க வீட்டில் மட்டும் வரி வாங்கவே இல்லை. என் அம்மா சாந்தம்மாள், திருவிழா நெருங்கிடுச்சி. என்னங்கய்யா எங்க வீட்டுல மட்டும் வரி வாங்க வர மாட்டேங்கிறீங்க. அதோடு யாரும் என்னிடம் பேசவும் மாட்டேங்கிறாங்க' எனக் கேட்டார். 'ஊர் பெரியவர்களை அவமானப்படுத்திய குடும்பத்தில் வரி வசூலிக்க மாட்டோம். இனிமேல் இப்படிதான்' எனச் சொல்லியிருக்கின்றனர்.

உடனே என் அம்மா எனக்கு போன் போட்டு குலுங்கி அழுதபடி நடந்ததை சொன்னதும், உடனே நான் சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு வந்து பெரியவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் உங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்திருக்கிறோம். உங்க வரி பணம் ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை என்றனர். அக்கா விஷயத்தை மனதில் வைத்தே இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட நான் இனி இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என, நான் அம்மா மற்றும் அப்பா செல்வநாயகத்தோடு சேர்ந்து நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாத்துரையிடம் மனு கொடுத்தேன். நேற்று மாலை எங்க வீட்டிலும் ஊர்க்காரர்களிடமும் ஆர்.ஐ, வி.ஏ.ஓ வந்து விசாரித்தனர்.

அதன் பிறகு, எங்க வரி பணம் 1,000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டனர் நாட்டாமைகள். பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; என் அம்மாவின் அழுகையும் நின்றுவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட்டேன். இன்று காலை வழக்கம்போல் நான் கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போது சிலர் என்னை வழி மறித்துக்கொண்டு, கலெக்டர் ஆபீஸ்ல போய் மனு கொடுத்தா பெரிய ஆளா, எப்போதும் அதிகாரிகள் உன் பக்கத்திலேயேவா இருப்பார்கள் என நினைப்பா' என்று என்னை மிரட்டினர். நம்மால் ஏதும் நம் ஊருக்கும் திருவிழாவுக்கும் பிரச்னை வரக் கூடாது என ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும், திருவிழா முடிவதற்குள் என்ன வம்பு பண்ண போகிறார்களோ என நினைத்தால் பயமாக இருக்கிறது'' என்றார்.

ஊரில் சிலரிடம் கேட்டோம். ''ஃபிரான்சிஸ் குடும்பத்துக்கும் அவருடைய உறவினர் குடும்பத்துக்கும் சண்டை. இதை விலக்கிவிடச் சென்றவர்கள் மீதும் புகார் கொடுத்தார் ஃபிரான்சிஸ். இப்போது ஊரைவிட்டே விலக்கி வைத்துவிட்டோம் எனத் தவறாக மனு கொடுத்தார். நாங்கள் அவரிடம் வரி வாங்கிவிட்டோம் பிரச்னை முடிந்தது'' என்றனர்.