பொது அறிவு
Published:Updated:

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

கிங் விஸ்வா

திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் அசத்திவரும் காமிக்ஸ் ஹீரோக்கள் எல்லோரும், சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? நிச்சயமாக நம் அனைவருக்குமே இதுபோன்ற கற்பனைகள் வருவதுண்டு. அதனால்தான், கார்ட்டூன் சேனல்களில் கிருஷ்ணர், பீமன் போன்ற இதிகாசத் தொடர்களின் கதாபாத்திரங்களை குழந்தைகளை வைத்தே உருவாக்குகிறார்கள். இதைப் போலவே, அமெரிக்காவிலும் பல சுட்டிக் குழந்தைகளை காமிக்ஸ் ஹீரோக்களாக்கி, பல புதிய தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு, விற்பனையிலும் சாதனை படைத்துவருகின்றன.     

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

பேட்மேன், சூப்பர் மேன், மார்வல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் குழு எனப் பல ஹீரோக்கள், அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது செய்த சேட்டைகளைப் பற்றிய காமிக்ஸ் தொடர்ந்து ஹிட் ஆகவே, பல புதிய தொடர்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. அப்படி ஒரு புதிய படைப்புதான், ஷெர்லாக் ஹோம்ஸ். சர் ஆர்தர் கானன் டாய்ல் உருவாக்கிய இந்த அமர கதாபாத்திரம், இன்றளவும் சிலாகித்துப் பேசப்படும் ஒரு சூப்பர் ஸ்டார். இவரை சுட்டிப் பையனாக வைத்து ஆக்‌ஷன் லேப் காமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காமிக்ஸ் தொடர்தான், சுட்டி ஷெர்லாக்.

ஷெர்லாக் ஹோம்ஸ்:

லண்டனில் 221 B, பேக்கர் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் வசித்துவந்ததாகக் கதைகளில் இருக்கும். மிகக் கூர்மையான சிந்திக்கும் திறன்பெற்ற இந்தத் துப்பறிவாளரின் நண்பர், டாக்டர் வாட்ஸன். இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட் மற்றும் மிஸஸ் ஆகியோரும் கதையில் வரும் இதர பிரதான கதாபாத்திரங்கள். கதையில் மர்மமான சம்பவங்கள் நடக்க, அதைக் கூர்ந்துகவனித்துத் துப்பறிவதுதான் ஷெர்லாக்கின் வேலை. ஷெர்லாக்கிற்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இவருடன் அடிக்கடி மோதும் வில்லனின் பெயர், புரொஃபசர் மோரியார்ட்டி. உலகம் முழுவதும் பிரபலமான ஒரு துப்பறிவாளர் என்று ஷெர்லாக் ஹோம்ஸைக் கூறலாம்.      

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

சுட்டி ஷெர்லாக்:

சூப்பர்மேனின் நண்பரான போட்டோகிராஃபர் ஜிம்மி ஓல்செனை வைத்து இதுபோல ஒரு சுட்டித் தொடரைத் தயாரிக்கத்தான் முதலில் ஜஸ்டினிடம் வந்தார்கள். ஆனால், அந்தத் தொடர் விவாதத்துடனேயே நின்றுவிட, அதன்பிறகு ஓவியர் ஷான் மில்லரைச் சந்தித்து, ஆன்லைனில் ஒரு காமிக்ஸ் தொடரை வெளியிடத் திட்டமிட்டார், எழுத்தாளர் ஜஸ்டின். மில்லர் சம்மதிக்க, உடனடியாக சுட்டி ஷெர்லாக்கைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார், ஜஸ்டின்.

நாய்க்குட்டியாக, வாட்ஸன்:

மற்ற சுட்டி ஹீரோக்களின் தொடருக்கும் நமது தொடருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜஸ்டின், கதையின் மிக முக்கிய பாத்திரமான டாக்டர் வாட்ஸனை ஒரு நாயாக மாற்றினார். அதுவும் சாதாரண நாயல்ல. பேசும் சக்திபெற்ற, மற்ற மாணவர்களைப் போல ஸ்கூலுக்குப் போய்ப் படிக்கும் ஒரு நாயாக மாற்றினார். இப்படி மாற்றியதற்கு, அவர் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்.

• சுட்டிகளுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

• ‘ஜஸ்டின் கால்வின் & ஹாப்ஸ்’ தொடருக்கு மரியாதை செய்யும் விதமாக.    

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

பள்ளி மாணவர்களின் பிரச்னைகள்:

இப்போதைய பள்ளி மாணவர்களுக்கு, தனித்திருப்பதும் மற்றவர்களால் கிண்டல்செய்யப்படுவதுமே மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதை மனதில்கொண்டே, வாட்ஸனை ஒரு நாயாகப் படைத்தார் ஜஸ்டின். அனைவரும் மனிதர்களாக இருக்கும் ஒரு பள்ளியில், வாட்ஸன் மட்டுமே ஒரு நாயாக இருப்பதால், அவரிடம் யாருமே பழகத் தயங்குகிறார்கள். அதைப் போலவே, வாட்ஸனுக்கு நண்பர்கள் இல்லாததால், வகுப்பில் இருக்கும் முரட்டு மாணவனான கைல், வாட்ஸனைக் கிண்டல்செய்கிறான்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இப்போது வகுப்பறையில் சர்வசாதாரணமாக நடக்கின்றன என்பதால், அதைக் கதையில் புகுத்தி, வாட்ஸன் இதையெல்லாம் கடந்து எப்படி நண்பர்களைப் பெறுகிறார் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். ஜூலை மாதம் வரவிருக்கும் கதையில், நண்பர்களுக்கிடையில் இருக்கவேண்டிய நம்பிக்கையையும், ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் மூன்றாவது இதழில், வயதில் முதிர்ந்த மாணவர்கள் சுட்டிகளைக் கிண்டல் செய்வதைப் பற்றியும் கதையாக வடிவமைத்திருக்கிறார்கள்.   

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

துணைக் கதாபாத்திரங்கள்:

ஷெர்லாக்கின் வீட்டு உரிமையாளரான மிஸஸ் ஹட்ஸனை ஆசிரியராகவும், இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட் பாத்திரத்தை ஸ்கூல் பிரின்சிபலாகவும் மாற்றி, அவர்களையும் கதையோட்டத்தில் இணைத்திருக்கிறார்கள்.

முதல் சாகசம் – மர்ம வாசனை:

சுட்டி ஷெர்லாக்கின் வகுப்பறையில் தினமும் ஒரு கெட்ட வாசனை அடிக்கிறது. மாணவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, அறை முழுவதும் சோதனை செய்தாலும் அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதே வாசனை வருகிறது.

• இந்த வாசனை எங்கிருந்து வருகிறது?

• இதற்குக் காரணம் யார்?

• அது எப்படி, என்ன சோதனை செய்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?    

இதை, சுட்டி ஷெர்லாக்கால் மட்டும் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?

இப்படியாக, முதல் இதழ் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற இதழ்களைப் படிக்கக்கொடுத்தால், வகுப்பறையில் நடக்கும் பல பிரச்னைகளை அவர்கள் எளிதில் எதிர்கொள்வார்கள்.

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

ஷான் மில்லர் (ஓவியர்)

தீவிரமான கதாபாத்திரங்களைக் கொண்ட காமிக்ஸ் கதைகளைத்தான் மில்லர் வரைந்துவந்தார். ஒருமுறை அவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த ஜஸ்டின், நாம் இணைந்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். பின்னர், இருவரும் ஷெர்லாக் ஹோம்ஸை ஒரு சுட்டிப் பையனாக வைத்து, ஒரு ஆன்லைன் காமிக்ஸ் தொடரை உருவாக்க முடிவெடுத்தார்கள். அந்தக் காமிக்ஸ் தொடரின் முதல் இரண்டு பக்கங்களை இணையத்தில் வெளியிட்டார்கள். அது வைரலானது. ஆக்‌ஷன் லேப் காமிக்ஸ் பதிப்பாளர் இவர்களைத் தொடர்பு கொண்டு, இந்தக் கான்செப்ட்டை ஒரு முழுநீள காமிக்ஸாகத் தயாரிக்க முன்வந்தார்.

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

ஜஸ்டின் பிலிப்ஸ் (கதாசிரியர்):

மெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின், பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்டார். நண்பர்கள் இல்லாமல், தனிமையாக இருந்தார். ஆகவே, அவருடைய படைப்புகளில் இது போன்ற சம்பவங்களைக் கண்டித்துக் காட்சிகள் அமைப்பதை வழக்கமாகக்கொண்டவர் ஜஸ்டின். மார்வல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் திரைப்பட வரிசை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அந்த சூப்பர் ஹீரோக்களை எல்லாம் சுட்டிக் குழந்தைகளாக வைத்து, ‘பேபி அவெஞ்சர்ஸ்’ என்ற காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டது. ஜஸ்டினின் நான்கு வயது மகள் இந்தத் தொடரை விரும்பிப் படித்துவந்தாள். சிறுவயதில் ‘கால்வின் & ஹாப்ஸ் காமிக்ஸ்’ தொடரை விரும்பிப் படித்த ஜஸ்டினுக்கு, இதுபோல குழந்தைகளுக்கான ஒரு காமிக்ஸ் தொடரை ஆரம்பிக்க வேண்டுமென்று எண்ணி, குட்டி ஷெர்லாக்கை உருவாக்கினார்.

புத்தக உலகம் - சுட்டி ஷெர்லாக்!

கதை:  சுட்டி ஷெர்லாக் (Kid Sherlock).

கதாசிரியர்: ஜஸ்டின் பிலிப்ஸ் (Justin Philips).

ஓவியர்:
ஷான் மில்லர் (Sean Miller).

மொழி: ஆங்கிலம்.

வயது: 5 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.

வெளியீடு: ஜூன் 14, 2017 (முதல் இதழ்).

பதிப்பாளர்: ஆக்‌ஷன் லேப் காமிக்ஸ், அமெரிக்கா.

புத்தக அளவு:
16.8 x 25.9 CM

பக்கங்கள்:
32

விலை: 2.99 $

கதை: துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸின் ஆரம்பம்.

கதை வரிசை:
மாதம் ஒன்று. என மொத்தம் எட்டுப் புத்தகங்கள் வரவுள்ளன.

சிறப்பு:
ஆன்லைன் புத்தக விற்பனையில் சாதனை படைத்துவருகிறது.

சிறப்பு அம்சம்:
சிறுவர்களுக்கிடையேயான படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்களின் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கவும், திட்டமிடப்பட்டுள்ள புத்தக வரிசை இது. ஷெர்லாக் ஹோம்ஸை வரையக் கற்றுக்கொடுப்பது, வண்ணம் தீட்டும் போட்டிகள் போன்ற விஷயங்கள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.